Friday, 14 February 2014

காதலர் தினம் கொண்டாட்டம் யாருக்கு?


இன்று காதலர் தினம். இளம் ஆண், பெண்கள் ஒருவருக்கொருவர் தங்கள் காதலைத் தெரிவித்துக்கொள்ளவும், ஏற்கனவே அறிவித்த காதலர்கள் கடற்கரை, பூங்கா, சினிமா என்று சுதந்திரமாகச் சுற்றுவதற்கும் உருவாக்கப்பட்ட தினம்தான் இந்தக் காதலர் தினம்.

இந்தக் கலாச்சாரம் இன்று முஸ்லிம்களிடமும் பரவியிருப்பதுதான் ஆச்சரியம். இஸ்லாத்திற்கு ஒவ்வாத, அன்னியக் கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் பலவற்றில் இந்தக் காதலர் தினத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

‘வேலன்டைன்ஸ் டே’ (Valentines Day) என்பதுதான் இதன் மூலப் பெயர். அதனை அப்படியே மொழிபெயர்த்தால் ‘வேலன்டைன் தினம்’ என்றுதான் வரும். ஆனால் தங்கள் வசதிக்காக யாரோ காதலர் தினம் என்று வைத்துவிட்டார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இந்தத் தினம் எப்பொழுதோ செத்து மடிந்து விட்டது. அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் மட்டுமே தற்பொழுது உயிரோடிருக்கும் இந்தத் தினம், இப்பொழுது ஆசிய நாடுகளில், அதிலும் குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் முளைத்திருக்கிறது.

யார் இந்த வேலன்டைன்?

வேலன்டைன் என்றால் யார்? ஏன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது? அதனை ஆராயப் போனால் பல கதைகள் பவனி வருகின்றன. அந்தக் கதைகளெல்லாம் என்னவோ சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன.

நான்காவது நூற்றாண்டின் ரோமர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மதச் சடங்குதான் இந்த ‘வேலன்டைன்’ கொண்டாட்டம். ஆட்டு மந்தைகள் மற்றும் பொருள் வளத்திற்கான கடவுளான லூப்பர்கஸ் என்ற கடவுளைக் கௌரவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இது.

இந்தத் தினக் கொண்டாட்டத்தில் ஒரு குலுக்கல் நடைபெறும். பரிசுச் சீட்டுக் குலுக்கல் அல்ல. இளம் பெண்ணுக்கான குலுக்கல். ஆம்! இளம் பெண்ணை ஆண்களுக்கு இன்பத்திற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் தாரை வார்த்துத் தர நடக்கும் குலுக்கல்தான் இது.

எந்த இளம் பெண் எந்த ஆணுக்கு என்பதைக் குலுக்கலில் எடுக்கப்படும் துண்டுச் சீட்டு தீர்மானிக்கும். அடுத்த வருடம் இதே தினத்தில் புதிய குலுக்கல் நடைபெறும் வரை இந்த இளம் பெண்கள் அவரவருக்குரிய ஆண்களுடனேயே காலம் தள்ள வேண்டும். அந்த ஆண்களுக்கு இவர்கள் இன்பம் தந்து கொண்டிருக்க வேண்டும்.

இந்தத் தினத்தில் இன்னொரு இழிவான காரியமும் அரங்கேற்றப்படும். இரண்டு இளம் ஆண்கள் ஓர் இளம் பெண்ணை இடுப்பில் அணியப்படும் தோலினால் ஆன வாரால் அடிப்பார்கள். இந்த ஈன இரக்கமற்ற செயலைச் செய்யும் அந்த இரண்டு ஆண்களும் ஒரு சிறிய ஆட்டுத் தோலைத்தான் ஆடையாக அணிந்திருப்பார்கள். அந்தச் சிறிய ஆடையும் பலி கொடுக்கப்பட்ட ஆடுகள் மற்றும் நாய்களின் இரத்தங்களால் கறைப்படுத்தப்பட்டிருக்கும். இந்தச் சாட்டையடியை ‘புனிதமானதாக’ அவர்கள் கருதினார்கள். அந்த இளம் ஆண்கள் ‘புனிதப் புருஷர்களாக’ மதிக்கப்பட்டார்கள். இப்படி சாட்டையடித்தால் அந்தப் பெண்கள் நல்ல இல்லத்தரசிகளாக மாறுவார்களாம். அழகிய முறையில் குழந்தைகளை வளர்த்தெடுப்பார்களாம். இந்தக் கொடுமையான, மடத்தனமான கொண்டாட்டத்தை நிறுத்துவதற்கு கிறிஸ்தவ மதம் பல முயற்சிகளை எடுத்தது; வழக்கம் போல் தோல்வி கண்டது. ஆதலால் குறைந்தபட்ச நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்தது.

குலுக்கல் சீட்டுகளில் பெண்களின் பெயர்களுக்குப் பதிலாக புனிதத் துறவிகளின் பெயர்களை வைத்தது. இப்பொழுது குலுக்கலில் எந்த ஆண் எந்தத் துறவியின் சீட்டை எடுக்கிறானோ அவன் அடுத்த ஆண்டு இதே தினம் வரைக்கும் அந்தத் துறவியை மாதிரி வாழ வேண்டும். இந்தச் சிறு மாற்றத்தைக் கிறிஸ்தவ மதம் கொண்டு வந்தது.

‘லூப்பர்காலியா’ என்றழைக்கப்பட்ட இந்தக் கொண்டாட்டம் துறவி குலுக்கல் மாற்றத்திற்குப் பிறகு, சிறிது காலத்தில் ‘துறவி வேலன்டைன் தினம்’ என மாறியது.

கி.பி 496-ல் போப் கிலாசியஸ் என்பவரால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது. துறவி வேலன்டைன் என்பவரைக் கண்ணியப்படுத்தும் விதமாக இந்த மாற்றத்தை அவர் கொண்டு வந்தார்.

இருப்பினும், கிறிஸ்தவக் கதைகளில் 50 விதவிதமான வேலன்டைன்கள் இருக்கின்றனர். அவர்களில் இரண்டு வேலன்டைன்கள் மிகவும் பிரபலமானவர்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை, பண்புகள் அனைத்தும் மர்மமாகவே உள்ளன. ஒரு கதைப்படி, துறவி வேலன்டைன் என்பவர் ஒரு ‘காதல் துறவி’யாக இருந்துள்ளார். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையின் சிறைக் காவலரின் மகளை இவர் காதலித்தார்.

இந்தக் காதலர் தினத்தில் நடைபெறும் குலுக்கல்களால் குழப்பங்களும், தகராறுகளும் தலை தூக்க ஆரம்பித்தன. இந்தக் குழப்பங்களையும் தகராறுகளையும் சமாளிக்க முடியாத பிரெஞ்சு அரசு, கி.பி. 1776ல் இந்தச் சடங்கைத் தடை செய்தது.

அதே 1776ம் ஆண்டு இறுதிக்குள்ளாகவே இத்தாலி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இது ஒழிந்தது. இங்கிலாந்தில் ‘புரித்தான்கள்’ என்ற இனத்தார் பலமாக இருந்தபொழுது இது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் 1660ல் மன்னர் இரண்டாம் சார்லஸ் இதனைக் கொண்டாட ஆரம்பித்தார்.

இங்கிலாந்திலிருந்து இந்தச் சடங்கு ஏனைய உலகுக்கு அறிமுகமாகியது. வியாபார சிந்தனையுடையவர்கள் இதனை வைத்து பணம் பண்ண திட்டம் போட்டனர்.

கி.பி. 1840ல் எஸ்தர் A. ஹவ்லண்ட் என்பவரின் வியாபார மூளையில் ஒன்று உதித்தது. ஏன் இதனைக் காசாக்கக் கூடாது? மண்டையைக் கசக்கினார். அதில் முகிழ்ந்ததுதான் வேலண்டைன் அட்டைகள். அவர்தான் முதல் அமெரிக்க காதலர் தின அட்டையை அச்சடித்தார். இது அந்த முதல் வருடத்திலேயே 5000 அமெரிக்க டாலருக்கு விற்றுத் தீர்ந்தது. (அன்று 5000 டாலர் என்பது மிகப் பெரிய தொகை!) இதன் பிறகு இந்த ‘வேலன்டைன் தினம்’ எனும் பணம் பண்ணும் தொழிற்சாலை அமோக வளர்ச்சி பெற்றது. அதாவது வேலன்டைன் தினம் என்பது வேலன்டைன் தொழிற்சாலை என்றாகிப் போனது.

இன்று கோடிக்கணக்கான ரூபாய் புரளும் தினமாக காதலர் தினம் மாறியிருக்கிறது. இன்றைய ஒரு தினத்தில் மட்டும் லட்சக்கணக்கான வாழ்த்து அட்டைகளும், அன்பளிப்புப் பொருட்களும் விற்றுத் தீர்ந்து விடும். நாட்டுச் சரக்கு முதல் சீமைச் சரக்கு வரை அமோகமாக கல்லா களை கட்டும். ஆக, காதலர் தினத்தால் காதலர்களுக்குக் கொண்டாட்டமோ இல்லையோ வியாபாரிகளுக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம். கொட்டோ கொட்டென்று பணம் கொட்டும் கொண்டாட்டம்.

இஸ்லாத்திற்கெதிரான இந்தக் கொண்டாட்டத்தை ஒரு முஸ்லிம் எப்படி சரி என்று ஏற்றுக் கொள்ள முடியும்?

அறியாமைக்கால மடமைத்தனத்தை மண் தோண்டிப் புதைத்திடவே இஸ்லாம் இந்த அவனிக்கு வந்தது. அந்த மடமைத்தனம் எந்த உருவத்தில் வந்தாலும் இஸ்லாம் அதனை ஏற்றுக் கொள்ளாது.

அறியாமைக்கால மடமைத்தனத்தின் சிறு அரிச்சுவடி முஸ்லிம்களிடம் இருந்தாலும் இஸ்லாம் அதனைக் கண்டு சகித்துக் கொள்ளாது. மேலும் இஸ்லாம் அதனைப் பின்பற்றும் விசுவாசிகளிடம் இஸ்லாம் என்ற தனித்த அடையாளத்தையும், தூய மார்க்கத்தைப் பின்பற்றும் தன்மையையும் மிகக் கவனமாக எதிர்பார்க்கிறது. இஸ்லாமியச் சட்டங்கள் இதனைத்தான் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன.

சூரியன் உதயமாகும்பொழுதும், நடு உச்சியில் இருக்கும்பொழுதும், மறையும் பொழுதும் தொழுகையை இஸ்லாம் தடை செய்துள்ளது ஏன்? சூரிய வழிபாடு என்பது பிற மதங்களில் உள்ளது. நாளடைவில் அந்த நேரங்களில் தொழும் தொழுகைகளும், இந்தச் சூரிய வழிபாடு என்னும் பிறமதச் சடங்கும் கலந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்தச் சமயங்களில் தொழுவதையே இஸ்லாம் முற்றிலும் தடை செய்கிறது.

முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்பது ஒரு நபிவழியாகும். யூதர்களும் இந்த முஹர்ரம் 10 அன்பு நோன்பு நோற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆதலால் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் முஹர்ரம் 9 அன்றோ அல்லது முஹர்ரம் 11 அன்றோ ஒரு நாள் சேர்த்து நோன்பு நோற்குமாறு அண்ணலார் பணித்தார்கள்.

அதேபோல் ஒரு முஸ்லிம் முஸ்லிமல்லாதாரின் தோற்றம் மாதிரி தோற்றமளிக்கக்கூட இஸ்லாம் தடை செய்துள்ளது. ஒரு முஸ்லிம் வாழ்நாள் முழுவதும் அவன் முஸ்லிமாகவே வாழ வேண்டும். இன்பத்திலும், துன்பத்திலும், கொண்டாட்டங்களிலும், திண்டாட்டங்களிலும் நாம் ஒரே நேரான பாதையைத்தான் பின்பற்ற வேண்டும். பல பாதைகளை அல்ல.

இன்று ஜாஹில்லியாவின் பலம் எங்கும் வியாபித்திருக்கிறது. கலாச்சாரத்தில், அன்றாட மனித வாழ்வில் அது தனது பிடியை இறுக்கியுள்ளது. மீடியாவும் அதன் பிடிக்குள்ளேதான் சிக்கிக் கிடக்கிறது. இதனால்தான் முஸ்லிம்கள் வேலன்டைன்களை வரவேற்று, அரவணைத்துக் கொள்கின்றனர். ஸாந்தா கிளாஸ் என்ற கொண்டாட்டத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

முஸ்லிம்களாகிய நாம் இவற்றின் பிடியிலிருந்து வெளியில் வர வேண்டும். அன்னிய, அறியாமைக்கால சிறு கறை கூட நமது வாழ்வில் படியாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதுதான் இஸ்லாம் நம்மிடம் எதிர்பார்ப்பது.

MSAH

www.kayalpatnam.com

Tuesday, 11 February 2014

யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு வந்தால் யாருக்கு லாபம்?


ஒரு தீவிர ஹிந்து பக்தரான இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் இஸ்லாம் புகுந்துள்ளது.

அவருடைய இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை ஏற்றுள்ளார். யாரும் எதிர்பார்க்காத ஒன்று இது. இதுதான் இஸ்லாத்தின் சக்தி என்பது. அது யாரை வேண்டுமானாலும் ஊடுருவும். நாளை இளயராஜாவே இஸ்லாத்தில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

“இது ஏதோ திடீரென்று எடுத்த முடிவல்ல. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக ஆய்ந்தறிந்து, ஆழ்ந்து சிந்தித்து எடுத்த முடிவு” என்று டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் யுவன் கூறியுள்ளார்.

சில கனவுகள் தனக்கு அவ்வப்பொழுது வர ஆரம்பித்ததாகவும், பின்னர் அவை அடிக்கடி வந்ததாகவும், இஸ்லாத்தை அறிந்த பிறகுதான் அந்தக் கனவுகளுக்கு அர்த்தம் தனக்குப் புரிந்ததாகவும், அதன்பிறகே இஸ்லாம் மார்க்கத்தைத் தான் தழுவியதாகவும் அவர் கூறுகிறார்.

முதல் மனைவி விவாகரத்து முடிந்து, இரண்டாவது மனைவியுடன் வாழ்க்கை. பின்னர் அதிலும் மனக்கசப்பு வரவே மனைவி பிரிந்து போனார். இந்த மனக்கஷடத்தில் இருந்தபொழுதுதான் இன்னொரு பேரிடி. அதுதான் அவருடைய அம்மாவின் மறைவு.

ஆறுதல் தந்த அம்மாவும் இறந்ததால் அமைதியற்று அலைந்த யுவனுக்கு ஆன்மீகத் தேட்டங்கள் அதிகமாகியிருக்கின்றது. மனஅமைதி தேடி மருகியவருக்கு மறையோனின் திருக்குர்ஆன் திசை காட்டியிருக்கிறது. உடனே எந்தத் தயக்கமும் இன்றி இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டார்.

ஊடகங்கள் வழக்கம் போல் சேற்றை வாரி வீசின. மலேசியா, சிங்கப்பூரில் யுவன் ஒரு முஸ்லிம் பெண்ணைப் பார்த்ததாகவும், அவரைப் பிடித்துப் போகவே, அவரை மூன்றாம் திருமணம் செய்துகொள்ளத்தான் யுவன் இஸ்லாத்தைத் தழுவினார் என்று அவர் இஸ்லாத்தை ஏற்றதைக் கொச்சைப்படுத்த முயற்சித்தன. இதனைத் தனது பேட்டியில் தெளிவாக மறுக்கிறார் யுவன்.

யுவன் இஸ்லாத்திற்கு வந்தது குறித்து முஸ்லிம்கள் தரப்பிலுள்ள மனோநிலையைப் பார்க்க வேண்டும். பலர் அவரை வரவேற்றாலும், எடுத்த எடுப்பிலேயே சிலர் இசை என்னும் ஹராமில் மூழ்கியிருக்கும் இவர் இஸ்லாத்திற்குள் வந்து என்ன பிரயோஜனம், இசையை இவர் விடுவாரா என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஒரு மனிதர் இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவினார் என்றால் முதலில் அவரை ஆரத் தழுவி வரவேற்கவேண்டும். நரக நெருப்பிலிருந்து மீண்டு சுவர்க்கம் நோக்கி ஒரு ஜீவன் வந்துள்ளது என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

இவர் வருகையால் இஸ்லாத்திற்குப் பெருமை ஒன்றும் இல்லை என்று வாதம் வேறு நடக்கிறது. யார் வருகையாலும் இஸ்லாத்திற்குப் பெருமை சேர்க்கவும் முடியாது. யார் சென்றாலும் இஸ்லாத்தை இழிவு படுத்தவும் முடியாது என்பதுதான் உண்மை.

இஸ்லாத்தை ஏற்று ஒரு சில நாட்களே ஆன ஒரு மனிதர் இஸ்லாத்தைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்திருப்பார்? இஸ்லாம் என்பது ஒரு கடல் போன்றது. ஆரம்பத்திலேயே யுவன் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

போகப் போக அவர் இஸ்லாத்தின் விவரங்களை அறிந்து கொள்வார். அது, இஸ்லாத்தின் மீதுள்ள அவரது பிடிப்பையும், ஆர்வத்தையும் பொறுத்தது.

இஸ்லாத்தின் உண்மையான விஷயங்களை இவர் அறிந்துகொண்டு, அதில் உண்மையாக நடந்துகொள்வாரானால் தானாக அவர் பாவங்களிலிருந்து விலகிக்கொள்ள வாய்ப்புண்டு. இது அவருக்கு மட்டுமல்ல. எல்லோருக்கும் இதே அளவுகோல்தான்.

எடுத்த எடுப்பிலேயே அதனை எதிர்பார்ப்பதைத்தான் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இப்படி எதிர்மறையாக பிரதிபலிப்பதை விட்டு விட்டு நேர்மறையாக சிந்திக்கலாமே...

செய்தி மற்றும் மின்னணு ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வரும்பொழுது யுவனுக்கு ஆதரவாக கமெண்டுகள் இட வேண்டும். எதிரிகள் இதிலும் உஷாராக இருக்கிறார்கள். யுவன் குறித்து வரும் செய்திகள் அனைத்திலும் எதிர்மறை கமெண்டுகளை அள்ளித் தெளிக்கின்றனர்.

அந்த இடங்களிலெல்லாம் நாம் யுவனுக்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்லாத்திற்கு வரவேற்பளித்தும் கமெண்டுகள் இட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

இப்படி ஆக்கபூர்வமாக செயல்பட்டால் அது இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் பலனுள்ளதாக அமையும்.

MSAH

Sunday, 9 February 2014

பெண்ணாய்ப் பிறந்தது வீணல்ல!


இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (சூரா அத்தாரியாத் 51:56)

அல்லாஹ் மனிதர்களைப் படைத்ததன் நோக்கம் அவர்கள் அவனுக்கு வழிபட வேண்டும், ஷைத்தானிய வழியிலிருந்து விலக வேண்டும், அவனுக்குக் கட்டுப்பட்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

இந்த ஆன்மீக வழித்தேடலில் இஸ்லாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எந்த வித்தியாசமும் காட்டிடவில்லை. ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே ஆத்மாவே கொடுக்கப்பட்டுள்ளது என்று இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது.

இரு பாலருக்கும் தன்னை வணங்குவதில் அல்லாஹ் ஒரே போலவே கடமையை ஆக்கியிருக்கிறான். அதேபோல் நாளை மறுமையிலும் இரு பாலரையும் ஒரே போலவே அல்லாஹ் எழுப்புவான்; கேள்வி கேட்பான். அவரவர் செய்த செயல்களுக்குத் தக்க அவர்களுக்கு அல்லாஹ் கூலிகளை வழங்குவான். இதில் எந்தப் பேதத்தையும் அவன் கற்பிக்கப் போவதில்லை.

ஆண்களுக்குத் தண்டனையை அதிகப்படுத்தி, பெண்களுக்குத் தண்டனையைக் குறைக்கப் போவதில்லை. அதேபோல் பெண்களுக்குத் தண்டனையை அதிகப்படுத்தி, ஆண்களுக்குக் குறைக்கப் போவதில்லை.

திருக்குர்ஆன் முழுவதும் நாம் இந்த உண்மையைக் காணலாம். யாரெல்லாம் கீழே ஆறுகள் ஒலித்தோடிக்கொண்டிருக்கும் சுவனத்தினுள் நுழைவார்கள் என்று எங்கெல்லாம் சொல்கிறானோ அங்கெல்லாம் ஆணையும், பெண்ணையும் சேர்த்துத்தான் சொல்கிறான்.

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (சூரா அன்னிசா 4:124)

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (சூரா அந்நஹ்ல் 16:97)

ஆக, நாளை மறுமையில் அவரவர் சுமையை அவரவர் சுமந்து வருவர். அவரவருக்கான கூலிகள் அங்கே ஆண், பெண் வித்தியாசமின்றி நீதமாக வழங்கப்படும்.

ஆன்மீக ரீதியாக ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்தப் பேதமும் இல்லை என்று பறை சாற்றும் இஸ்லாம்தான் இன்னபிற கடமைகளில், உரிமைகளில் வித்தியாசங்களைப் போதிக்கிறது.

முஸ்லிம் ஆண்களை வெளியிடங்களுக்கு சென்று சம்பாதிக்கச் சொல்லும் இஸ்லாம், ஏன் பெண்களை வீட்டிலேயே இல்லத்தரசிகளாக இருக்க ஊக்குவிக்கிறது என்று முஸ்லிம்களில் சிலரும் கேட்கிறார்கள். முஸ்லிம் அல்லாதாரும் கேட்கிறார்கள்.

ஏன் ஒரு பெண் பர்தா அணிய வேண்டும், ஏன் ஒரு சகோதரனுக்கு சொத்தில் தன் சகோதரியை விட அதிக பங்கு கிடைக்கிறது, ஏன் ஒரு ஆண் ஆட்சியாளராக முடியும், ஏன் ஒரு முஸ்லிம் பெண் ஆட்சியாளராக முடியாது,... இப்படி பலர் பல கேள்விகளைக் கேட்டுவிட்டு, இஸ்லாம் பெண்களை தாழ்வாக மதிக்கிறது என்று அவர்களாகவே முடிவுக்கும் வந்து விடுகிறார்கள்.

சட்டங்களை முதலில் விளக்கிக் கூறாமல் அவற்றைப் பற்றி விவாதிக்கவே முடியாது. ஆணும், பெண்ணும் உடற்கூறு ரீதியாக முற்றிலும் மாறு பட்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மருத்துவ ரீதியாகவும் அது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

நம்மை விட ஆணையும், பெண்ணையும் படைத்த அல்லாஹ் இரு பாலருக்குமுள்ள வித்தியாசத்தை நன்கு அறிந்தவன். ஆதலால்தான் ஒவ்வொரு பாலரும் அவர்கள் எவற்றை சிறப்பாக செய்ய முடியுமோ அந்தந்தப் பணிகளை அவர்களுக்கு ஒதுக்கினான். இதனால் ஒரு பாலர் மறு பாலரை விட சிறந்தவர் என்று அர்த்தம் இல்லை.

மாறாக, ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல் சமூகத்திற்கு அவர்கள் இரு பாலரின் பங்களிப்பும் இருக்கிறது. ஆக, யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதுதான் உண்மை.

அன்றாட வாழ்க்கையில் நாம் பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்வது போல் மனிதர்களும் பல விதமாக இருக்கிறார்கள். பல குணங்களைக் கொண்ட, பல திறமைகளைக் கொண்ட, பல வல்லமைகளைக் கொண்ட மனிதர்களைப் பார்க்கிறோம். சிலர் சகலகலாவல்லவர்களாக, சாதனையாளர்களாக இருப்பதையும் பார்க்கிறோம்.

எல்லோரும் அவரவர் பங்களிப்பை சமூகத்திற்கு செய்கிறார்கள். ஒரு விவசாயியும், ஒரு மருத்துவரும் வேறு வேறு பங்களிப்புகளை சமூகத்திற்கு செய்கின்றனர். ஆனால் இருவருமே சமூகத்தில் முக்கியமானவர்கள். இருவருமே தங்கள் துறைகளில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

அதேபோல்தான் ஆணும், பெண்ணும் வேறு வேறு படைப்புகளாக இருந்தாலும் தங்கள் பங்களிப்பைச் செய்கின்றனர்.

பெண்கள் இஸ்லாத்தின் கண்கள்

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) ஒரு முறை கூறினார்கள்:
“இந்த உலகமும், அதிலுள்ள அனைத்துப் பொருட்களும் முக்கியமானவை. உலகிலேயே எல்லாவற்றையும் விட அதிக முக்கியமான படைப்பு ஒரு நல்ல பெண்.” (அஹ்மத், முஸ்லிம்)

இந்த நல்ல பெண் யார் என்று இவ்வாறு விளக்கம் சொல்கிறார்கள்:
“ஒரு மனிதன் கொண்டிருக்கும் நல்ல புதையல் எது என்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா? தன்னைப் பார்க்கும்பொழுது கணவனை மகிழ்விக்கிற, கணவனுக்குக் கட்டுப்பட்டு கடமையாற்றுகிற, கணவன் இல்லாத பொழுது அவனது பொருட்களைப் பாதுகாக்கிற பெண்தான் அந்தப் புதையல்” என்று எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தாய்மை என்ற பெருமை

தாய்மை என்னும் பெரும் பேற்றை இஸ்லாம் பெண்களுக்கே வழங்கியுள்ளது. ஆண்களுக்கு அந்தப் பாக்கியம் வழங்கப்படவில்லை.

ஒரு மனிதர் உத்தம நபியிடம் வந்து வினவினார்:
“அல்லாஹ்வின் தூதரே, வேறு யாரையும் விட என் மீது அன்பும், அரவணைப்பும் (கனிவும், கவனமும்) மிகச் சிறந்த முறையில் தருகிற நபர் யார்?” என்று வினவினார். “உன் தாய்” என்று எம்பெருமானார் (ஸல்) கூறினார்கள். “அதற்குப் பிறகு யார்?” என்று அவர் கேட்டார். “உன் தாய்” என்றார்கள். “பின்னர் யார்?” என்று அவர் கேட்டார். “உன் தாய்” என்றார்கள். “பின்னர் யார்?” என்று அவர் கேட்டார். “உன் தந்தை” என்றார்கள்.

இந்த உலகில் ஒரு மனிதனுக்கு அன்பிலும், அரவணைப்பிலும், அனைத்து வகையிலும் நெருங்கியிருப்பவர்களில் முதல் மூன்று இடங்களை இஸ்லாம் பெண்ணுக்கே கொடுத்திருக்கின்றது. இந்தப் பெரும் பேறு ஆணுக்குக் கிட்டவில்லை.

தாய்மையின் பெருமையை திருக்குர்ஆனும் இப்படி சிலாகித்துக் கூறுகின்றது: நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (சூரா லுக்மான் 31:14)

ஒரு காலம் இருந்தது. பெண் பிள்ளைகள் பிறந்தாலே முகம் கருத்து, அவமானப்பட்டு, கூனிக் குறுகி அந்தப் பிஞ்சுக் குழந்தைகளை உயிரோடு புதைத்தார்கள். அந்த மக்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். பெண் பிள்ளைகளைப் பெற்றதற்கு அவமானப்பட்டவர்கள் பெருமை கொண்டார்கள் அவர்களைப் பெற்றதற்காக.

பெண் பிள்ளைகளை சீரும் சிறப்போடும் வளர்ப்பதை இபாதத்தாக மாற்றிக் காட்டினார்கள் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள். அவர்கள் கூறினார்கள்: “யார் தங்கள் இரண்டு பெண் குழந்தைகளை அவர்கள் பருவம் எய்தும் வரை நல்ல முறையில் வளர்த்தெடுக்கிறார்களோ அவர்களும் நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் (இரண்டு விரல்களைச் சேர்த்துக் காட்டினார்கள்).” (முஸ்லிம், திர்மிதீ)

இப்படி பெண்களுக்கு எல்லா வகையிலும் சிறப்புகளைக் கொடுத்த மார்க்கம்தான் இஸ்லாம். ஆதலால் ஒரு முஸ்லிம் பெண்ணாகப் பிறந்தால் மகிழ்ச்சி கொள்ளலாம். பெண்ணைப் பெற்றெடுத்தால் பேருவகை கொள்ளலாம்.

MSAH

விடியல் வெள்ளி,  ஜனவரி 2014 (மங்கையர் பக்கம்)

Saturday, 8 February 2014

பிரார்த்தனை யாருக்கு? எதற்கு?


அன்றி, “எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மையளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ காப்பாயாக!” எனக் கோருவோரும் அவர்களிலுண்டு. தங்கள் (நல்) வினையின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு, தவிர, அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் மிகத் தீவிரமானவன். (அல்குர்ஆன் 2:201-202)

“பிரார்த்தனை என்பது வணக்கத்தின் சாரம் ஆகும்.” (ஹதீஸ்)

இறைவனோடு பேசுவதுதான் பிரார்த்தனை. கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் எப்படி பிரார்த்தனை செய்வது, எதற்கு பிரார்த்திக்க வெண்டும் என்பதெல்லாம் அவரவர் கொண்டுள்ள கடவுள் கொள்கையைப் பொறுத்தது.

அன்றைய அரேபியாவின் இருண்டகால மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதைத்தான் மேலே உள்ள வசனம் சுட்டிக்காட்டுகிறது.

நியூஸ்வீக் என்ற ஆங்கில வார ஏடு ஒர் ஆய்வை மேற்கொண்டது. பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. அதில் நிறைய பேர் தினமும் பிரார்த்திக்கிறார்ளாம். அவர்கள் ஆரோக்கியத்திற்காகவும், பாதுகாப்புக்காகவும், அன்புக்காகவும், மனிதப் பிரச்னைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் பிரார்த்திக்கிறார்களாம்.

நேரான பாதைக்கு வழிகாட்டுதல், நரகத்திலிருந்து பாதுகாப்பு, மறுமையில் வெற்றி - இம்மாதிரி விஷயங்கள் அமெரிக்கர்களின் பிரார்த்தனையில் இடம் பெறவில்லை என்பதை அந்த ஆய்வு தெளிவுபடுத்துகின்றது.

நியூஸ்வீக் அத்தோடு ஓர் ஓட்டெடுப்பை நடத்தியது. அவர்கள் செய்யும் பிரார்த்தனையை இறைவன் நிறைவேற்றுகின்றானா என்பதே அந்த வாக்கெடுப்பு.

வானத்தில் சஞ்சாரமிடும் ஒரு புத்திசாலிக் கிழவன்தான் இறைவன் என்று இலக்கியங்கள் கூறும் ஒரு நாட்டில், மனிதர்கள் செய்யும் பிரார்த்தனைகள் இறைவனுக்குப் போடும் “மனுக்கள்” என்றும், அந்த மனுக்களைக் கவனித்து பிரச்னைகளைத் தீர்த்து வைக்க வேண்டியது இறைவனது “கடமை” என்றும் கருதிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இந்த ஓட்டெடுப்பு நடக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆதலால் இந்த ஓட்டெடுப்பின் முடிவுகளைக் கண்டு நாம் வியப்படைய வேண்டிய அவசியம் இல்லை. 85 சதவிகித அமெரிக்கர்கள் தங்களது பிரார்த்தனையை கடவுள் நிறைவேற்றவில்லை என்றும், கடவுள் தோற்றுப் போய்விட்டார் என்றும் கூறினார்காள் என்பதே அந்த ஆய்வின் முடிவு.

ஆம்! கடவுள் அநீதமாக நடந்து கொள்கிறாரா? அல்லது அவர் அப்படித்தான் இருப்பாரா? காரல் சாகன் போன்ற கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கேட்கிறார்கள்: “மனிதர்களுக்கு நோய் என்பதை ஒவ்வொரு தடவையும் கடவுளுக்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டுமா? அவருக்கு அது தெரியாதா?”

அஞ்ஞான காலத்தில் அரேபியர்கள் வைத்திருந்த கடவுள்  நம்பிக்கையை விட மோசமான கடவுள் நம்பிக்கை இது.

விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் மனிதன் முன்னேறி விட்டதன் அறிகுறி இதில் தெரிகிறது. உண்மையில், அமெரிக்காவில் விஞ்ஞானிகள் ஒரு சிலர் பிரார்த்தனையின் “பயன்பாடுகள்” குறித்து ஒரு “சோதனையை” நிகழ்த்தினர்.

ஃபுளோரிடாவில் மூட்டுவலி சிகிச்சை மையம் ஒன்று உள்ளது. அங்கு சிகிச்சைக்காக வருபவர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது. அங்குள்ள நோயாளிகளை இரு பிரிவாகப் பிரித்தனர். ஒரு பிரிவினருக்கு மருத்துவ சிகிச்சையும் நடைபெற்றது. அத்தோடு அவர்கள் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனையும் நடைபெற்றது.

இன்னொரு பிரிவினருக்கு வெறும் மருத்துவ சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டது. இதன் முடிவு என்னவாயிற்று என்பது தெரியவில்லை. ஆனால் மனிதர்களின் குரூர மனங்களை நாம் இதிலிருந்து அறிய முடிகிறது.

பிரார்த்தனை என்பது நமது உரிமைகளைக் கோருவதற்கான ஒரு வழியல்ல. இறைவன் நமக்கு வாழ்வளித்திருக்கிறான். அவனே நமக்கு அனைத்து அம்சங்களையும் தந்தான். இது அவனது நாட்டம். இது அவனது விருப்பம்.

ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. நமது ஆரோக்கியம் - சுகவீனம், செழிப்பு - வறுமை, மகிழ்ச்சி - துக்கம், வெற்றி - தோல்வி, லாபம் - நஷ்டம் இவையனைத்துமே சோதனைகள்தான்.

உங்களில் எவர் செயல்களில் மிக்க அழகானவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டே, அவன், வாழ்வையும் மரணத்தையும் படைத்திருக்கிறான். அவன் (யாவரையும்) மிகைத்தோன்: மிக்க மன்னிப்புடையோன்.   (அல்குர்ஆன் 67:2)

மறுமையில் நாம் அடையப் போகும் வெற்றி அல்லது தோல்வி என்பது இவ்வுலகில் விதவிதமான சூழ்நிலைகளில் நாம் எவ்வாறு செயல்பட்டோம்  என்பதைப் பொருத்தே அமையும்.

உண்மையிலேயே நமக்கு உதவி தேவைப்பட்டபொழுது. நாம் இறைவனது உதவியைக் கோரினோமா? அல்லது திமிர் பிடித்து உதவி கோராமல் இருந்தோமா?

நாம் நினைப்பது நடக்காமல் அவன் விரும்பியதே நடக்கும் பொழுது நாம் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டோமா? அவன் நமக்கு  செய்துள்ள பேருபகாரங்களுக்காக நாம் அவனுக்கு நன்றி செலுத்தினோமா? அல்லது நாம் அடைந்த வெற்றிகளுக்கு நாம்தான் காரணம் என்று இறுமாப்போடு இருந்தோமா?

எல்லா சமயத்திலும், எல்லா சூழ்நிலைகளிலும் நாம் அவனது கட்டளைகளை ஏற்று நடந்தோமா? அல்லது நமது மனம் போன போக்கின்படி நடந்தோமா?

இறைநம்பிக்கையாளர்கள் இறைவனிடமே பிரார்த்திக்கிறார்கள். ஏன்? அவன் மட்டுமே கொடுக்க முடியும். அவன் யாருக்கும் பதிலளிக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் அனைவரும் அவனுக்கு பதிலளிக்க வேண்டியவர்கள்.

அவனுக்கு அனைவரையும் ஆட்டிப் படைக்கும் ஆற்றல் இருக்கிறது. நமக்கோ ஓர் இம்மியளவு சக்தியும் இல்லை.

அவனது அறிவு அணை போட முடியாதது; எல்லையற்றது. நமது அறிவோ மிகக் குறுகியது.

அவனே பிரபு. அவனே அனைவருக்கும் மேலானவன். நாமெல்லாம் அவனது அடிமைகள். நமது பிரார்த்தனைகளை இம்மையில் அவன் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது நமது பிரார்த்தனைகளுக்கான கூலியை அவன் மறுமையில் தரலாம் அல்லது நாம் கோரியவற்றை விட நல்லதை அவன் இங்கு தரலாம்.

எப்படியிருந்தாலும் நாம் பிரார்த்தனை செய்தது வீண்  போகாது. பிரார்த்தனைதான் இறைவனை அடி பணிவதில் உயர்ந்த தரம்.

மெளலானா மன்ஸூர்  நுஃமானி அவர்கள் கூறினார்கள்: “இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் மனித குலத்திலேயே மிகச் சிறந்தவர்கள். ஏனெனில் அவர்கள் இறைவனை அடிபணிவதில் மிகச் சிறந்தவராக இருந்தார்கள்.”

நபி பெருமானார் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்திற்குச் சென்ற நாள். அன்னாரின் கசப்பான நாட்களில் ஒரு நாள்.

தாயிஃப் நகர்வாசிகள் ஏக இறைவனின் பால் அழைப்பு கொடுத்த அன்னாரின் அழைப்பை நிராகரித்தது மட்டுமல்ல, சிறுவர்களையும், தெருப் பொறுக்கிகளையும் ஏவி விட்டு கல்லால் அடிக்கச் செய்தனர். அன்னாரது பாத அணிகள் முழுவதும் ரத்தத்தால் தோயும் அளவுக்கு கல்லால் அடித்தனர்.

உடல் வலியாலும், மன வலியாலும் சொர்வுற்ற நபிகளார் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் பக்கம் தனது முகம் திருப்பி இப்படி கேட்டார்கள்: “யா அல்லாஹ்! உன்னிடமே எனது இயலாமையை முறையிடுகிறேன். உன்னிடமே எனக்கு ஏற்பட்டுள்ள உதவியின்மையை, மனிதர்கள் முன் நான் தாழ்ந்துள்ள நிலைமையை முறையிடுகிறேன். கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனே! நீ பலஹீனர்களை இரட்சிப்பவன். மேலும் நீயே என் ரப்பு. யாருடைய கரங்களில் நீ என்னை ஒப்படைக்க இருக்கிறாய்? என்னை மோசமாக நடத்தும் அன்னியர்களிடத்திலா? அல்லது என்னை மேலாதிக்கம் செய்யும் எதிரிகளிடத்திலா?

என் மீது உனக்கு கோபம் இல்லையெனில் நான் இதைப் பற்றியெல்லாம்  கவலைப்பட மாட்டேன். ஆனால் நீ எனக்கு உபகாரம் செய்தால் அது எனது பணிக்கும் எளிதாக இருக்கும். நான் உனது சமுகத்திலேயே எனது ஆதரவை வைக்கின்றேன். உனது ஆதரவில் அனைத்து இருள்களும் ஒளிமயமாகிவிடும். இம்மை, மறுமையில் நடக்கும் விஷயங்கள் அனத்தும் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். நான் உனது கோபத்திற்கு ஆளாகாமல் உன்னிடம் ஆதரவு வைக்கிறேன். கண்டிப்பதற்குள்ள உரிமை உன்னிடமே உள்ளது. தண்டிப்பதற்குள்ள உரிமையும் உன்னிடமே உள்ளது. உன்னிடமே தவிர வேறு ஆற்றல் இல்லை. வேறு பலம் இல்லை.”

என்னே அருமையான வார்த்தைகள்…! உள்ளத்தை ஊடுருவும் வார்த்தைகள்….!

ஆனால் 13 வருடங்கள் கழித்து நிலைமை தலைகீழாக மாறியது. அரேபியாவின் பெரும் பகுதிகள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டன. அஞ்ஞானம் அறவே ஒழிக்கப்பட்டது. நபிகளாரின் இறுதி ஹஜ்ஜின் போது அவர்களோடு 1,24,000 நபித்தோழர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றினர். அரஃபாப் பெருவெளியில் அன்னார் கோரிய பிரார்த்தனை இவ்வாறாக இருந்தது:

“யா அல்லாஹ்! நீ நான் சொல்வதைக் கேட்கிறாய். என்னைப் பார்க்கின்றாய். நான் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் நீ அறிகின்றாய். எனது எந்த நடவடிக்கையும் உன்னிடமிருந்து மறைவதில்லை. நான் துயரத்தில் இருக்கும் ஒரு மனிதன். யாசகன். அச்சமுள்ள ஒரு மனிதன். எனது குறைகளை நான் ஒப்புக்கொள்கிறேன். அடக்கமுள்ள, தேவையுள்ள ஒரு மனிதனாக நான் உன்னிடம் யாசிக்கிறேன். பெருஞ்சோதனயிலிருக்கும் ஒரு மனிதன், அவனது  தலை உன் பக்கம் சாய்ந்துள்ளது, அவன் உன் முன்னால் அழுகிறான், அவனது முழு உடலும் உன் முன்னால் வீழ்ந்து கிடக்கின்றது. அப்படிப்பட்ட மனிதனாக நான் உன்னிடம் கேட்கிறேன். யா அல்லாஹ்! எனது பிரார்த்தனையால் என்னை விரக்தியடையும்படி விட்டு விடாதே. பெருங்கருணையாளனாகவும், பெருங்கிருபையாளனாகவும் நீ எனக்கு இரு. யாசிப்பவர்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுப்பவனே… கொடுப்பவர்களிலெல்லாம் மிகச் சிறந்த முறையில் கொடுப்பவனே….!”

நல்ல நிலையிலும், மோசமான நிலையிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையாக, ஒரே மாதிரியாக நடந்து கொண்டார்கள்.

அவர்களது இந்தப் பிரார்த்தனை ஒரு வாழும் அற்புதமாக திகழ்கிறது. திறந்த மனதுள்ள அனைத்து மக்களையும் அறிவொளியின் மூல ஊற்றின் பக்கம் அழைப்பதாக இருக்கிறது.

அவர்களது பிரார்த்தனைகள் மனித குலத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. இந்தப் பிரார்த்தனைகளை அறிந்துகொள்ளாத  நம்மவர்கள் எவ்வளவு துர்ப்பாக்கியசாலிகள்!

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH

நன்றி : விடியல் வெள்ளி, ஜூலை 2002 (இம்பாக்ட் பக்கம்)

Saturday, 1 February 2014

அல்லாஹ்வின் பால் அற்புதப் பெண்மணி மரியம் ஜமீலா!


பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும், சிந்தனையாளரும், எழுத்தாளருமான மரியம் ஜமீலா அவர்கள் கடந்த அக்டோபர் 31ம் தேதி லாகூரில் மரணம் அடைந்தார். சில காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவருக்கு வயது 78.

அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கில் நியூ ரோசெல்லியில் ஒரு நடுத்தர யூதக் குடும்பத்தில் 1934ம் ஆண்டு மே 23ம் தேதி மார்கரட் மார்கஸ் பிறந்தார். யூதப் பெண்மணியாக வளர்ந்த மார்கரட் மார்கஸ், பள்ளிப் பருவத்தில் அரபுக் கலாச்சாரத்திலும், வரலாறிலும் மிகுந்த ஆர்வம் கொண்டார். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் இஸ்ரேலை ஆதரிக்கும்பொழுது அதனை எதிர்க்கும் குணமுடையவராக இருந்தார். பொதுவாக ஃபலஸ்தீனிகளும், அரபுகளும் படும் சொல்லொணா துயரங்களைக் கண்டு கழிவிரக்கம் கொண்டார்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபொழுது தனது 19வது வயதில் மதங்கள் குறித்து அதிக ஆர்வம் கொண்டார். நவீன ஜுடாயிசம், பழங்கால ஜுடாயிசம், பஹாய் மதம் போன்றவற்றை அவர் ஆராய்ந்தார். எதுவுமே அவருக்குத் திருப்தி தரவில்லை. குறிப்பாக இவையனைத்தும் ஸியோனிசத்திற்கு ஆதரவாக நிற்பது அவருக்குப் பிடிக்கவில்லை.

அவரது ஆன்மீகத் தேடலுக்கு அவரைச் சுற்றியுள்ள சூழல் விடை தரவில்லை. எனினும் அவர் தனது ஆன்மீக ஆராய்ச்சியைக் கைவிடவில்லை. 1954 வருட அளவில் அவருக்கு இஸ்லாம் அறிமுகமானது. திருக்குர்ஆனைப் படிக்கத் துவங்கினார். இறுதியில் 1961ம் ஆண்டு மே 24ம் தேதி தனது 27வது வயதில் மார்கரட் இஸ்லாமைத் தழுவினார். தன் பெயரை மரியம் ஜமீலாவாக மாற்றினார்.

குர்ஆனைக் கண்டுகொள்ளும் பாதையில் நான் பெரும் கஷ்டங்களைச் சந்தித்தேன். பல கரடுமுரடுகளுக்குப் பின் இறுதியில் பாதையின் முடிவுக்கு வந்தேன். அந்தப் பாதையின் முடிவு (இஸ்லாமைத் தழுவுதல்) மிக உன்னதமானது என்பதால் நான் ஒருபொழுதும் என் கஷ்ட அனுபவங்களுக்காக வருந்தியதில்லைஎன்றார் மரியம் ஜமீலா.

முஹம்மத் அஸதின் மக்காவுக்குச் செல்லும் பாதை” (The Road to Makkah), “குறுக்குச்சாலைகளில் இஸ்லாம்” (Islam at the Crossroads) ஆகிய இரு நூல்கள் தான் முஸ்லிமாவதற்குப் பெரிதும் தூண்டுதலாக அமைந்ததாக மரியம் கூறுகிறார். முஹம்மத் அஸதும் தன்னைப் போலவே ஒரு யூதராகப் பிறந்து, இஸ்லாமால் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் தழுவியது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மரியம் ஜமீலா இஸ்லாம் தழுவியது முஸ்லிம்களுக்குப் பெரும் பலத்தையும், ஊக்கத்தையும் ஊட்டியது. இஸ்லாமை ஏற்றவுடன் மரியம் தென் ஆப்ரிக்காவின் டர்பனிலிருந்து வெளியாகும் முஸ்லிம் டைஜஸ்ட் என்ற பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்தார். அதில் இடம் பெற்ற மரியமின் கட்டுரைகள் இஸ்லாம் குறித்த விமர்சனங்களுக்கு விடை சொல்வதாக அமைந்தது. அந்தப் பத்திரிகை மூலமே அவருக்கு ஜமாஅத்தே இஸ்லாமியின் நிறுவனர் மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி அவர்களின் தொடர்பு ஏற்பட்டது.

மௌலானா மௌதூதியின் வேண்டுகோளுக்கிணங்க 1962ம் ஆண்டு மரியம் லாகூர் வந்தார். மௌதூதி அவர்கள் மரியம் ஜமீலாவை தன் வளர்ப்பு மகளாகத் தத்தெடுத்தார். அதன் பின் மரியம் ஜமீலா அமெரிக்காவுக்குத் திரும்பவே இல்லை. லாகூரிலேயே தங்கி விட்டார். சிறிது காலம் மௌலானாவின் வீட்டில் அவருடைய குடும்பத்தாருடன் தங்கியிருந்தார் மரியம்.

பின்னர் முஹம்மத் யூசுஃப் கான் என்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் ஊழியருக்கு இரண்டாவது மனைவியானார். யூசுஃப் கானின் முதல் மனைவியும், இரண்டாவது மனைவியான மரியம் ஜமீலாவும் ஒரே வீட்டிலேயே குடியிருந்தனர்.

இரண்டு மனைவிகள் ஒரே வீட்டில் இருந்தால் சாதாரணமாக சக்களத்திச் சண்டைகள் நடப்பது இயல்பு. ஆனால் அந்த இயல்பு இங்கே மாற்றி எழுதப்பட்டது. இரண்டு மனைவிகளும் அன்பையும், பாசத்தையும் பொழிந்தனர். முதல் மனைவியின் மக்கள் மரியமை அக்கா என்று அன்போடு அழைத்தனர். இந்த உறவு எந்த அளவுக்கு உயர்ந்தது என்றால் முதல் மனைவியின் அடக்கத்தலத்திற்கு அருகில்தான் தன்னை அடக்க வேண்டும் என்று ஒரு முறை தன் கணவரிடம் மரியம் கூறினார். மரியம் ஜமீலாவுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன.

1960களிலிருந்து 1980களின் நடுப்பகுதி வரை மரியம் ஜமீலா நிறைய நூல்களை எழுதினார். அவை பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

தன் 12வது வயதிலேயே அஹமத் கலீல் : ஒரு ஃபலஸ்தீன அகதியின், அவனது குடும்பத்தின் கதைஎன்ற நாவலை எழுதினார் மரியம் ஜமீலா. சிறு வயதிலேயே அவருக்குள்ளிருந்த அந்த எழுத்தாற்றல் அவர் இஸ்லாமைத் தழுவிய பின் நூல்கள் எழுதுவதற்கு அவருக்கு எளிதாக அமைந்தது. அவர் எழுதிய நூல்கள் இஸ்லாமிய உலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. மேலை நாடுகளுக்கும், இஸ்லாமிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தோலுரித்துக் காட்டும் அவரது எழுத்துகள் பல மேலை நாட்டவரை இஸ்லாம் குறித்து புரிந்துகொள்ள உதவியது. இஸ்லாம் இயம்பும் பலதாரமணம், பர்தா முறை போன்வற்றை வலியுறுத்தி அவரது எழுத்துகள் அமைந்தன.

“இஸ்லாம் எதிர் மேற்குலகம்” (Islam Versus The West), “இஸ்லாமும், நவீனத்துவமும்” (Islam and Modernism), “கொள்கையிலும், நடைமுறையிலும் இஸ்லாம்” (Islam in Theory and Practice), “இஸ்லாமும், கிழக்கத்தியவாதமும்” (Islam and Orientalism), “யார் இந்த மௌதூதி?” (Who is Moududi?), “நான் ஏன் இஸ்லாம் தழுவினேன்?” (Why I embraced Islam?) உட்பட 30க்கும் மேற்பட்ட நூல்களையும், கட்டுரைகளையும் மரியம் ஜமீலா எழுதியுள்ளார்.

இவை உர்து, பார்சி, துருக்கிஷ், பெங்காலி, பஹாசா (இந்தோனேசியா) உட்பட பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, “இஸ்லாம் எதிர் மேற்குலகம்” (Islam Versus The West) என்ற நூல் 12க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நவீன கால முஜாஹித்களின் வரலாறுகளையும் மரியம் ஜமீலா எழுதியுள்ளார். ரஷ்ய ஸார் மன்னனை எதிர்த்துப் போராடிய இமாம் ஷாமில், இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியை எதிர்த்துப் போராடி தூக்கு மரம் ஏறிய லிபியாவின் பாலைவனச் சிங்கம் உமர் முஃக்தார், வட இந்தியாவில் பிறந்து இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்திய செய்யத் அஹமத் ஷஹீத் ஆகியோரின் வரலாறுகள் அடங்கிய நூல் அதில் குறிப்பிடத்தக்கது. தமிழில் மெல்லினம் பதிப்பகத்தார் அதனை “சமீப கால வரலாற்றின் மூன்று முஜத்தித்கள்” என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.

மௌலானா மௌதூதியை முதன் முதலில் தொடர்பு கொண்டபொழுது மரியம் ஜமீலா, ”உலகாதாய மதச்சார்பின்மை, தேசியவாதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட என் வாழ்க்கையைத் தரத் தயாராக இருக்கிறேன்என்று கடிதம் எழுதினார்.

ஐந்து தசாப்தங்கள் கழிந்துவிட்டன. அவர் அன்று அளித்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டார். ஆம்! தன் வாழ்நாள் முழுவதையும் இஸ்லாமை எடுத்தியம்பும் பணியிலேயே செலவழித்தார். அந்த நிலையிலேயே இன்று இறைவன் அவரை அழைத்துக்கொண்டான். அல்லாஹ் அவரது அமல்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் உயர்ந்த சுவனத்தில் அவரை நுழையச் செய்வானாக.


இஸ்லாம் எவரையும் ஈர்க்கும் வல்லமை உடையது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுதான் மரியம் ஜமீலா!

MSAH

விடியல் வெள்ளி 2012