Sunday, 9 February 2014

பெண்ணாய்ப் பிறந்தது வீணல்ல!


இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (சூரா அத்தாரியாத் 51:56)

அல்லாஹ் மனிதர்களைப் படைத்ததன் நோக்கம் அவர்கள் அவனுக்கு வழிபட வேண்டும், ஷைத்தானிய வழியிலிருந்து விலக வேண்டும், அவனுக்குக் கட்டுப்பட்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

இந்த ஆன்மீக வழித்தேடலில் இஸ்லாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எந்த வித்தியாசமும் காட்டிடவில்லை. ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே ஆத்மாவே கொடுக்கப்பட்டுள்ளது என்று இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது.

இரு பாலருக்கும் தன்னை வணங்குவதில் அல்லாஹ் ஒரே போலவே கடமையை ஆக்கியிருக்கிறான். அதேபோல் நாளை மறுமையிலும் இரு பாலரையும் ஒரே போலவே அல்லாஹ் எழுப்புவான்; கேள்வி கேட்பான். அவரவர் செய்த செயல்களுக்குத் தக்க அவர்களுக்கு அல்லாஹ் கூலிகளை வழங்குவான். இதில் எந்தப் பேதத்தையும் அவன் கற்பிக்கப் போவதில்லை.

ஆண்களுக்குத் தண்டனையை அதிகப்படுத்தி, பெண்களுக்குத் தண்டனையைக் குறைக்கப் போவதில்லை. அதேபோல் பெண்களுக்குத் தண்டனையை அதிகப்படுத்தி, ஆண்களுக்குக் குறைக்கப் போவதில்லை.

திருக்குர்ஆன் முழுவதும் நாம் இந்த உண்மையைக் காணலாம். யாரெல்லாம் கீழே ஆறுகள் ஒலித்தோடிக்கொண்டிருக்கும் சுவனத்தினுள் நுழைவார்கள் என்று எங்கெல்லாம் சொல்கிறானோ அங்கெல்லாம் ஆணையும், பெண்ணையும் சேர்த்துத்தான் சொல்கிறான்.

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (சூரா அன்னிசா 4:124)

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (சூரா அந்நஹ்ல் 16:97)

ஆக, நாளை மறுமையில் அவரவர் சுமையை அவரவர் சுமந்து வருவர். அவரவருக்கான கூலிகள் அங்கே ஆண், பெண் வித்தியாசமின்றி நீதமாக வழங்கப்படும்.

ஆன்மீக ரீதியாக ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்தப் பேதமும் இல்லை என்று பறை சாற்றும் இஸ்லாம்தான் இன்னபிற கடமைகளில், உரிமைகளில் வித்தியாசங்களைப் போதிக்கிறது.

முஸ்லிம் ஆண்களை வெளியிடங்களுக்கு சென்று சம்பாதிக்கச் சொல்லும் இஸ்லாம், ஏன் பெண்களை வீட்டிலேயே இல்லத்தரசிகளாக இருக்க ஊக்குவிக்கிறது என்று முஸ்லிம்களில் சிலரும் கேட்கிறார்கள். முஸ்லிம் அல்லாதாரும் கேட்கிறார்கள்.

ஏன் ஒரு பெண் பர்தா அணிய வேண்டும், ஏன் ஒரு சகோதரனுக்கு சொத்தில் தன் சகோதரியை விட அதிக பங்கு கிடைக்கிறது, ஏன் ஒரு ஆண் ஆட்சியாளராக முடியும், ஏன் ஒரு முஸ்லிம் பெண் ஆட்சியாளராக முடியாது,... இப்படி பலர் பல கேள்விகளைக் கேட்டுவிட்டு, இஸ்லாம் பெண்களை தாழ்வாக மதிக்கிறது என்று அவர்களாகவே முடிவுக்கும் வந்து விடுகிறார்கள்.

சட்டங்களை முதலில் விளக்கிக் கூறாமல் அவற்றைப் பற்றி விவாதிக்கவே முடியாது. ஆணும், பெண்ணும் உடற்கூறு ரீதியாக முற்றிலும் மாறு பட்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மருத்துவ ரீதியாகவும் அது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

நம்மை விட ஆணையும், பெண்ணையும் படைத்த அல்லாஹ் இரு பாலருக்குமுள்ள வித்தியாசத்தை நன்கு அறிந்தவன். ஆதலால்தான் ஒவ்வொரு பாலரும் அவர்கள் எவற்றை சிறப்பாக செய்ய முடியுமோ அந்தந்தப் பணிகளை அவர்களுக்கு ஒதுக்கினான். இதனால் ஒரு பாலர் மறு பாலரை விட சிறந்தவர் என்று அர்த்தம் இல்லை.

மாறாக, ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல் சமூகத்திற்கு அவர்கள் இரு பாலரின் பங்களிப்பும் இருக்கிறது. ஆக, யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதுதான் உண்மை.

அன்றாட வாழ்க்கையில் நாம் பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்வது போல் மனிதர்களும் பல விதமாக இருக்கிறார்கள். பல குணங்களைக் கொண்ட, பல திறமைகளைக் கொண்ட, பல வல்லமைகளைக் கொண்ட மனிதர்களைப் பார்க்கிறோம். சிலர் சகலகலாவல்லவர்களாக, சாதனையாளர்களாக இருப்பதையும் பார்க்கிறோம்.

எல்லோரும் அவரவர் பங்களிப்பை சமூகத்திற்கு செய்கிறார்கள். ஒரு விவசாயியும், ஒரு மருத்துவரும் வேறு வேறு பங்களிப்புகளை சமூகத்திற்கு செய்கின்றனர். ஆனால் இருவருமே சமூகத்தில் முக்கியமானவர்கள். இருவருமே தங்கள் துறைகளில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

அதேபோல்தான் ஆணும், பெண்ணும் வேறு வேறு படைப்புகளாக இருந்தாலும் தங்கள் பங்களிப்பைச் செய்கின்றனர்.

பெண்கள் இஸ்லாத்தின் கண்கள்

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) ஒரு முறை கூறினார்கள்:
“இந்த உலகமும், அதிலுள்ள அனைத்துப் பொருட்களும் முக்கியமானவை. உலகிலேயே எல்லாவற்றையும் விட அதிக முக்கியமான படைப்பு ஒரு நல்ல பெண்.” (அஹ்மத், முஸ்லிம்)

இந்த நல்ல பெண் யார் என்று இவ்வாறு விளக்கம் சொல்கிறார்கள்:
“ஒரு மனிதன் கொண்டிருக்கும் நல்ல புதையல் எது என்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா? தன்னைப் பார்க்கும்பொழுது கணவனை மகிழ்விக்கிற, கணவனுக்குக் கட்டுப்பட்டு கடமையாற்றுகிற, கணவன் இல்லாத பொழுது அவனது பொருட்களைப் பாதுகாக்கிற பெண்தான் அந்தப் புதையல்” என்று எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தாய்மை என்ற பெருமை

தாய்மை என்னும் பெரும் பேற்றை இஸ்லாம் பெண்களுக்கே வழங்கியுள்ளது. ஆண்களுக்கு அந்தப் பாக்கியம் வழங்கப்படவில்லை.

ஒரு மனிதர் உத்தம நபியிடம் வந்து வினவினார்:
“அல்லாஹ்வின் தூதரே, வேறு யாரையும் விட என் மீது அன்பும், அரவணைப்பும் (கனிவும், கவனமும்) மிகச் சிறந்த முறையில் தருகிற நபர் யார்?” என்று வினவினார். “உன் தாய்” என்று எம்பெருமானார் (ஸல்) கூறினார்கள். “அதற்குப் பிறகு யார்?” என்று அவர் கேட்டார். “உன் தாய்” என்றார்கள். “பின்னர் யார்?” என்று அவர் கேட்டார். “உன் தாய்” என்றார்கள். “பின்னர் யார்?” என்று அவர் கேட்டார். “உன் தந்தை” என்றார்கள்.

இந்த உலகில் ஒரு மனிதனுக்கு அன்பிலும், அரவணைப்பிலும், அனைத்து வகையிலும் நெருங்கியிருப்பவர்களில் முதல் மூன்று இடங்களை இஸ்லாம் பெண்ணுக்கே கொடுத்திருக்கின்றது. இந்தப் பெரும் பேறு ஆணுக்குக் கிட்டவில்லை.

தாய்மையின் பெருமையை திருக்குர்ஆனும் இப்படி சிலாகித்துக் கூறுகின்றது: நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (சூரா லுக்மான் 31:14)

ஒரு காலம் இருந்தது. பெண் பிள்ளைகள் பிறந்தாலே முகம் கருத்து, அவமானப்பட்டு, கூனிக் குறுகி அந்தப் பிஞ்சுக் குழந்தைகளை உயிரோடு புதைத்தார்கள். அந்த மக்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். பெண் பிள்ளைகளைப் பெற்றதற்கு அவமானப்பட்டவர்கள் பெருமை கொண்டார்கள் அவர்களைப் பெற்றதற்காக.

பெண் பிள்ளைகளை சீரும் சிறப்போடும் வளர்ப்பதை இபாதத்தாக மாற்றிக் காட்டினார்கள் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள். அவர்கள் கூறினார்கள்: “யார் தங்கள் இரண்டு பெண் குழந்தைகளை அவர்கள் பருவம் எய்தும் வரை நல்ல முறையில் வளர்த்தெடுக்கிறார்களோ அவர்களும் நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் (இரண்டு விரல்களைச் சேர்த்துக் காட்டினார்கள்).” (முஸ்லிம், திர்மிதீ)

இப்படி பெண்களுக்கு எல்லா வகையிலும் சிறப்புகளைக் கொடுத்த மார்க்கம்தான் இஸ்லாம். ஆதலால் ஒரு முஸ்லிம் பெண்ணாகப் பிறந்தால் மகிழ்ச்சி கொள்ளலாம். பெண்ணைப் பெற்றெடுத்தால் பேருவகை கொள்ளலாம்.

MSAH

விடியல் வெள்ளி,  ஜனவரி 2014 (மங்கையர் பக்கம்)

Saturday, 8 February 2014

பிரார்த்தனை யாருக்கு? எதற்கு?


அன்றி, “எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மையளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ காப்பாயாக!” எனக் கோருவோரும் அவர்களிலுண்டு. தங்கள் (நல்) வினையின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு, தவிர, அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் மிகத் தீவிரமானவன். (அல்குர்ஆன் 2:201-202)

“பிரார்த்தனை என்பது வணக்கத்தின் சாரம் ஆகும்.” (ஹதீஸ்)

இறைவனோடு பேசுவதுதான் பிரார்த்தனை. கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் எப்படி பிரார்த்தனை செய்வது, எதற்கு பிரார்த்திக்க வெண்டும் என்பதெல்லாம் அவரவர் கொண்டுள்ள கடவுள் கொள்கையைப் பொறுத்தது.

அன்றைய அரேபியாவின் இருண்டகால மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதைத்தான் மேலே உள்ள வசனம் சுட்டிக்காட்டுகிறது.

நியூஸ்வீக் என்ற ஆங்கில வார ஏடு ஒர் ஆய்வை மேற்கொண்டது. பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. அதில் நிறைய பேர் தினமும் பிரார்த்திக்கிறார்ளாம். அவர்கள் ஆரோக்கியத்திற்காகவும், பாதுகாப்புக்காகவும், அன்புக்காகவும், மனிதப் பிரச்னைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் பிரார்த்திக்கிறார்களாம்.

நேரான பாதைக்கு வழிகாட்டுதல், நரகத்திலிருந்து பாதுகாப்பு, மறுமையில் வெற்றி - இம்மாதிரி விஷயங்கள் அமெரிக்கர்களின் பிரார்த்தனையில் இடம் பெறவில்லை என்பதை அந்த ஆய்வு தெளிவுபடுத்துகின்றது.

நியூஸ்வீக் அத்தோடு ஓர் ஓட்டெடுப்பை நடத்தியது. அவர்கள் செய்யும் பிரார்த்தனையை இறைவன் நிறைவேற்றுகின்றானா என்பதே அந்த வாக்கெடுப்பு.

வானத்தில் சஞ்சாரமிடும் ஒரு புத்திசாலிக் கிழவன்தான் இறைவன் என்று இலக்கியங்கள் கூறும் ஒரு நாட்டில், மனிதர்கள் செய்யும் பிரார்த்தனைகள் இறைவனுக்குப் போடும் “மனுக்கள்” என்றும், அந்த மனுக்களைக் கவனித்து பிரச்னைகளைத் தீர்த்து வைக்க வேண்டியது இறைவனது “கடமை” என்றும் கருதிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இந்த ஓட்டெடுப்பு நடக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆதலால் இந்த ஓட்டெடுப்பின் முடிவுகளைக் கண்டு நாம் வியப்படைய வேண்டிய அவசியம் இல்லை. 85 சதவிகித அமெரிக்கர்கள் தங்களது பிரார்த்தனையை கடவுள் நிறைவேற்றவில்லை என்றும், கடவுள் தோற்றுப் போய்விட்டார் என்றும் கூறினார்காள் என்பதே அந்த ஆய்வின் முடிவு.

ஆம்! கடவுள் அநீதமாக நடந்து கொள்கிறாரா? அல்லது அவர் அப்படித்தான் இருப்பாரா? காரல் சாகன் போன்ற கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கேட்கிறார்கள்: “மனிதர்களுக்கு நோய் என்பதை ஒவ்வொரு தடவையும் கடவுளுக்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டுமா? அவருக்கு அது தெரியாதா?”

அஞ்ஞான காலத்தில் அரேபியர்கள் வைத்திருந்த கடவுள்  நம்பிக்கையை விட மோசமான கடவுள் நம்பிக்கை இது.

விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் மனிதன் முன்னேறி விட்டதன் அறிகுறி இதில் தெரிகிறது. உண்மையில், அமெரிக்காவில் விஞ்ஞானிகள் ஒரு சிலர் பிரார்த்தனையின் “பயன்பாடுகள்” குறித்து ஒரு “சோதனையை” நிகழ்த்தினர்.

ஃபுளோரிடாவில் மூட்டுவலி சிகிச்சை மையம் ஒன்று உள்ளது. அங்கு சிகிச்சைக்காக வருபவர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது. அங்குள்ள நோயாளிகளை இரு பிரிவாகப் பிரித்தனர். ஒரு பிரிவினருக்கு மருத்துவ சிகிச்சையும் நடைபெற்றது. அத்தோடு அவர்கள் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனையும் நடைபெற்றது.

இன்னொரு பிரிவினருக்கு வெறும் மருத்துவ சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டது. இதன் முடிவு என்னவாயிற்று என்பது தெரியவில்லை. ஆனால் மனிதர்களின் குரூர மனங்களை நாம் இதிலிருந்து அறிய முடிகிறது.

பிரார்த்தனை என்பது நமது உரிமைகளைக் கோருவதற்கான ஒரு வழியல்ல. இறைவன் நமக்கு வாழ்வளித்திருக்கிறான். அவனே நமக்கு அனைத்து அம்சங்களையும் தந்தான். இது அவனது நாட்டம். இது அவனது விருப்பம்.

ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. நமது ஆரோக்கியம் - சுகவீனம், செழிப்பு - வறுமை, மகிழ்ச்சி - துக்கம், வெற்றி - தோல்வி, லாபம் - நஷ்டம் இவையனைத்துமே சோதனைகள்தான்.

உங்களில் எவர் செயல்களில் மிக்க அழகானவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டே, அவன், வாழ்வையும் மரணத்தையும் படைத்திருக்கிறான். அவன் (யாவரையும்) மிகைத்தோன்: மிக்க மன்னிப்புடையோன்.   (அல்குர்ஆன் 67:2)

மறுமையில் நாம் அடையப் போகும் வெற்றி அல்லது தோல்வி என்பது இவ்வுலகில் விதவிதமான சூழ்நிலைகளில் நாம் எவ்வாறு செயல்பட்டோம்  என்பதைப் பொருத்தே அமையும்.

உண்மையிலேயே நமக்கு உதவி தேவைப்பட்டபொழுது. நாம் இறைவனது உதவியைக் கோரினோமா? அல்லது திமிர் பிடித்து உதவி கோராமல் இருந்தோமா?

நாம் நினைப்பது நடக்காமல் அவன் விரும்பியதே நடக்கும் பொழுது நாம் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டோமா? அவன் நமக்கு  செய்துள்ள பேருபகாரங்களுக்காக நாம் அவனுக்கு நன்றி செலுத்தினோமா? அல்லது நாம் அடைந்த வெற்றிகளுக்கு நாம்தான் காரணம் என்று இறுமாப்போடு இருந்தோமா?

எல்லா சமயத்திலும், எல்லா சூழ்நிலைகளிலும் நாம் அவனது கட்டளைகளை ஏற்று நடந்தோமா? அல்லது நமது மனம் போன போக்கின்படி நடந்தோமா?

இறைநம்பிக்கையாளர்கள் இறைவனிடமே பிரார்த்திக்கிறார்கள். ஏன்? அவன் மட்டுமே கொடுக்க முடியும். அவன் யாருக்கும் பதிலளிக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் அனைவரும் அவனுக்கு பதிலளிக்க வேண்டியவர்கள்.

அவனுக்கு அனைவரையும் ஆட்டிப் படைக்கும் ஆற்றல் இருக்கிறது. நமக்கோ ஓர் இம்மியளவு சக்தியும் இல்லை.

அவனது அறிவு அணை போட முடியாதது; எல்லையற்றது. நமது அறிவோ மிகக் குறுகியது.

அவனே பிரபு. அவனே அனைவருக்கும் மேலானவன். நாமெல்லாம் அவனது அடிமைகள். நமது பிரார்த்தனைகளை இம்மையில் அவன் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது நமது பிரார்த்தனைகளுக்கான கூலியை அவன் மறுமையில் தரலாம் அல்லது நாம் கோரியவற்றை விட நல்லதை அவன் இங்கு தரலாம்.

எப்படியிருந்தாலும் நாம் பிரார்த்தனை செய்தது வீண்  போகாது. பிரார்த்தனைதான் இறைவனை அடி பணிவதில் உயர்ந்த தரம்.

மெளலானா மன்ஸூர்  நுஃமானி அவர்கள் கூறினார்கள்: “இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் மனித குலத்திலேயே மிகச் சிறந்தவர்கள். ஏனெனில் அவர்கள் இறைவனை அடிபணிவதில் மிகச் சிறந்தவராக இருந்தார்கள்.”

நபி பெருமானார் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்திற்குச் சென்ற நாள். அன்னாரின் கசப்பான நாட்களில் ஒரு நாள்.

தாயிஃப் நகர்வாசிகள் ஏக இறைவனின் பால் அழைப்பு கொடுத்த அன்னாரின் அழைப்பை நிராகரித்தது மட்டுமல்ல, சிறுவர்களையும், தெருப் பொறுக்கிகளையும் ஏவி விட்டு கல்லால் அடிக்கச் செய்தனர். அன்னாரது பாத அணிகள் முழுவதும் ரத்தத்தால் தோயும் அளவுக்கு கல்லால் அடித்தனர்.

உடல் வலியாலும், மன வலியாலும் சொர்வுற்ற நபிகளார் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் பக்கம் தனது முகம் திருப்பி இப்படி கேட்டார்கள்: “யா அல்லாஹ்! உன்னிடமே எனது இயலாமையை முறையிடுகிறேன். உன்னிடமே எனக்கு ஏற்பட்டுள்ள உதவியின்மையை, மனிதர்கள் முன் நான் தாழ்ந்துள்ள நிலைமையை முறையிடுகிறேன். கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனே! நீ பலஹீனர்களை இரட்சிப்பவன். மேலும் நீயே என் ரப்பு. யாருடைய கரங்களில் நீ என்னை ஒப்படைக்க இருக்கிறாய்? என்னை மோசமாக நடத்தும் அன்னியர்களிடத்திலா? அல்லது என்னை மேலாதிக்கம் செய்யும் எதிரிகளிடத்திலா?

என் மீது உனக்கு கோபம் இல்லையெனில் நான் இதைப் பற்றியெல்லாம்  கவலைப்பட மாட்டேன். ஆனால் நீ எனக்கு உபகாரம் செய்தால் அது எனது பணிக்கும் எளிதாக இருக்கும். நான் உனது சமுகத்திலேயே எனது ஆதரவை வைக்கின்றேன். உனது ஆதரவில் அனைத்து இருள்களும் ஒளிமயமாகிவிடும். இம்மை, மறுமையில் நடக்கும் விஷயங்கள் அனத்தும் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். நான் உனது கோபத்திற்கு ஆளாகாமல் உன்னிடம் ஆதரவு வைக்கிறேன். கண்டிப்பதற்குள்ள உரிமை உன்னிடமே உள்ளது. தண்டிப்பதற்குள்ள உரிமையும் உன்னிடமே உள்ளது. உன்னிடமே தவிர வேறு ஆற்றல் இல்லை. வேறு பலம் இல்லை.”

என்னே அருமையான வார்த்தைகள்…! உள்ளத்தை ஊடுருவும் வார்த்தைகள்….!

ஆனால் 13 வருடங்கள் கழித்து நிலைமை தலைகீழாக மாறியது. அரேபியாவின் பெரும் பகுதிகள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டன. அஞ்ஞானம் அறவே ஒழிக்கப்பட்டது. நபிகளாரின் இறுதி ஹஜ்ஜின் போது அவர்களோடு 1,24,000 நபித்தோழர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றினர். அரஃபாப் பெருவெளியில் அன்னார் கோரிய பிரார்த்தனை இவ்வாறாக இருந்தது:

“யா அல்லாஹ்! நீ நான் சொல்வதைக் கேட்கிறாய். என்னைப் பார்க்கின்றாய். நான் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் நீ அறிகின்றாய். எனது எந்த நடவடிக்கையும் உன்னிடமிருந்து மறைவதில்லை. நான் துயரத்தில் இருக்கும் ஒரு மனிதன். யாசகன். அச்சமுள்ள ஒரு மனிதன். எனது குறைகளை நான் ஒப்புக்கொள்கிறேன். அடக்கமுள்ள, தேவையுள்ள ஒரு மனிதனாக நான் உன்னிடம் யாசிக்கிறேன். பெருஞ்சோதனயிலிருக்கும் ஒரு மனிதன், அவனது  தலை உன் பக்கம் சாய்ந்துள்ளது, அவன் உன் முன்னால் அழுகிறான், அவனது முழு உடலும் உன் முன்னால் வீழ்ந்து கிடக்கின்றது. அப்படிப்பட்ட மனிதனாக நான் உன்னிடம் கேட்கிறேன். யா அல்லாஹ்! எனது பிரார்த்தனையால் என்னை விரக்தியடையும்படி விட்டு விடாதே. பெருங்கருணையாளனாகவும், பெருங்கிருபையாளனாகவும் நீ எனக்கு இரு. யாசிப்பவர்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுப்பவனே… கொடுப்பவர்களிலெல்லாம் மிகச் சிறந்த முறையில் கொடுப்பவனே….!”

நல்ல நிலையிலும், மோசமான நிலையிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையாக, ஒரே மாதிரியாக நடந்து கொண்டார்கள்.

அவர்களது இந்தப் பிரார்த்தனை ஒரு வாழும் அற்புதமாக திகழ்கிறது. திறந்த மனதுள்ள அனைத்து மக்களையும் அறிவொளியின் மூல ஊற்றின் பக்கம் அழைப்பதாக இருக்கிறது.

அவர்களது பிரார்த்தனைகள் மனித குலத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. இந்தப் பிரார்த்தனைகளை அறிந்துகொள்ளாத  நம்மவர்கள் எவ்வளவு துர்ப்பாக்கியசாலிகள்!

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH

நன்றி : விடியல் வெள்ளி, ஜூலை 2002 (இம்பாக்ட் பக்கம்)

Saturday, 1 February 2014

அல்லாஹ்வின் பால் அற்புதப் பெண்மணி மரியம் ஜமீலா!


பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும், சிந்தனையாளரும், எழுத்தாளருமான மரியம் ஜமீலா அவர்கள் கடந்த அக்டோபர் 31ம் தேதி லாகூரில் மரணம் அடைந்தார். சில காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவருக்கு வயது 78.

அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கில் நியூ ரோசெல்லியில் ஒரு நடுத்தர யூதக் குடும்பத்தில் 1934ம் ஆண்டு மே 23ம் தேதி மார்கரட் மார்கஸ் பிறந்தார். யூதப் பெண்மணியாக வளர்ந்த மார்கரட் மார்கஸ், பள்ளிப் பருவத்தில் அரபுக் கலாச்சாரத்திலும், வரலாறிலும் மிகுந்த ஆர்வம் கொண்டார். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் இஸ்ரேலை ஆதரிக்கும்பொழுது அதனை எதிர்க்கும் குணமுடையவராக இருந்தார். பொதுவாக ஃபலஸ்தீனிகளும், அரபுகளும் படும் சொல்லொணா துயரங்களைக் கண்டு கழிவிரக்கம் கொண்டார்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபொழுது தனது 19வது வயதில் மதங்கள் குறித்து அதிக ஆர்வம் கொண்டார். நவீன ஜுடாயிசம், பழங்கால ஜுடாயிசம், பஹாய் மதம் போன்றவற்றை அவர் ஆராய்ந்தார். எதுவுமே அவருக்குத் திருப்தி தரவில்லை. குறிப்பாக இவையனைத்தும் ஸியோனிசத்திற்கு ஆதரவாக நிற்பது அவருக்குப் பிடிக்கவில்லை.

அவரது ஆன்மீகத் தேடலுக்கு அவரைச் சுற்றியுள்ள சூழல் விடை தரவில்லை. எனினும் அவர் தனது ஆன்மீக ஆராய்ச்சியைக் கைவிடவில்லை. 1954 வருட அளவில் அவருக்கு இஸ்லாம் அறிமுகமானது. திருக்குர்ஆனைப் படிக்கத் துவங்கினார். இறுதியில் 1961ம் ஆண்டு மே 24ம் தேதி தனது 27வது வயதில் மார்கரட் இஸ்லாமைத் தழுவினார். தன் பெயரை மரியம் ஜமீலாவாக மாற்றினார்.

குர்ஆனைக் கண்டுகொள்ளும் பாதையில் நான் பெரும் கஷ்டங்களைச் சந்தித்தேன். பல கரடுமுரடுகளுக்குப் பின் இறுதியில் பாதையின் முடிவுக்கு வந்தேன். அந்தப் பாதையின் முடிவு (இஸ்லாமைத் தழுவுதல்) மிக உன்னதமானது என்பதால் நான் ஒருபொழுதும் என் கஷ்ட அனுபவங்களுக்காக வருந்தியதில்லைஎன்றார் மரியம் ஜமீலா.

முஹம்மத் அஸதின் மக்காவுக்குச் செல்லும் பாதை” (The Road to Makkah), “குறுக்குச்சாலைகளில் இஸ்லாம்” (Islam at the Crossroads) ஆகிய இரு நூல்கள் தான் முஸ்லிமாவதற்குப் பெரிதும் தூண்டுதலாக அமைந்ததாக மரியம் கூறுகிறார். முஹம்மத் அஸதும் தன்னைப் போலவே ஒரு யூதராகப் பிறந்து, இஸ்லாமால் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் தழுவியது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மரியம் ஜமீலா இஸ்லாம் தழுவியது முஸ்லிம்களுக்குப் பெரும் பலத்தையும், ஊக்கத்தையும் ஊட்டியது. இஸ்லாமை ஏற்றவுடன் மரியம் தென் ஆப்ரிக்காவின் டர்பனிலிருந்து வெளியாகும் முஸ்லிம் டைஜஸ்ட் என்ற பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்தார். அதில் இடம் பெற்ற மரியமின் கட்டுரைகள் இஸ்லாம் குறித்த விமர்சனங்களுக்கு விடை சொல்வதாக அமைந்தது. அந்தப் பத்திரிகை மூலமே அவருக்கு ஜமாஅத்தே இஸ்லாமியின் நிறுவனர் மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி அவர்களின் தொடர்பு ஏற்பட்டது.

மௌலானா மௌதூதியின் வேண்டுகோளுக்கிணங்க 1962ம் ஆண்டு மரியம் லாகூர் வந்தார். மௌதூதி அவர்கள் மரியம் ஜமீலாவை தன் வளர்ப்பு மகளாகத் தத்தெடுத்தார். அதன் பின் மரியம் ஜமீலா அமெரிக்காவுக்குத் திரும்பவே இல்லை. லாகூரிலேயே தங்கி விட்டார். சிறிது காலம் மௌலானாவின் வீட்டில் அவருடைய குடும்பத்தாருடன் தங்கியிருந்தார் மரியம்.

பின்னர் முஹம்மத் யூசுஃப் கான் என்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் ஊழியருக்கு இரண்டாவது மனைவியானார். யூசுஃப் கானின் முதல் மனைவியும், இரண்டாவது மனைவியான மரியம் ஜமீலாவும் ஒரே வீட்டிலேயே குடியிருந்தனர்.

இரண்டு மனைவிகள் ஒரே வீட்டில் இருந்தால் சாதாரணமாக சக்களத்திச் சண்டைகள் நடப்பது இயல்பு. ஆனால் அந்த இயல்பு இங்கே மாற்றி எழுதப்பட்டது. இரண்டு மனைவிகளும் அன்பையும், பாசத்தையும் பொழிந்தனர். முதல் மனைவியின் மக்கள் மரியமை அக்கா என்று அன்போடு அழைத்தனர். இந்த உறவு எந்த அளவுக்கு உயர்ந்தது என்றால் முதல் மனைவியின் அடக்கத்தலத்திற்கு அருகில்தான் தன்னை அடக்க வேண்டும் என்று ஒரு முறை தன் கணவரிடம் மரியம் கூறினார். மரியம் ஜமீலாவுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன.

1960களிலிருந்து 1980களின் நடுப்பகுதி வரை மரியம் ஜமீலா நிறைய நூல்களை எழுதினார். அவை பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

தன் 12வது வயதிலேயே அஹமத் கலீல் : ஒரு ஃபலஸ்தீன அகதியின், அவனது குடும்பத்தின் கதைஎன்ற நாவலை எழுதினார் மரியம் ஜமீலா. சிறு வயதிலேயே அவருக்குள்ளிருந்த அந்த எழுத்தாற்றல் அவர் இஸ்லாமைத் தழுவிய பின் நூல்கள் எழுதுவதற்கு அவருக்கு எளிதாக அமைந்தது. அவர் எழுதிய நூல்கள் இஸ்லாமிய உலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. மேலை நாடுகளுக்கும், இஸ்லாமிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தோலுரித்துக் காட்டும் அவரது எழுத்துகள் பல மேலை நாட்டவரை இஸ்லாம் குறித்து புரிந்துகொள்ள உதவியது. இஸ்லாம் இயம்பும் பலதாரமணம், பர்தா முறை போன்வற்றை வலியுறுத்தி அவரது எழுத்துகள் அமைந்தன.

“இஸ்லாம் எதிர் மேற்குலகம்” (Islam Versus The West), “இஸ்லாமும், நவீனத்துவமும்” (Islam and Modernism), “கொள்கையிலும், நடைமுறையிலும் இஸ்லாம்” (Islam in Theory and Practice), “இஸ்லாமும், கிழக்கத்தியவாதமும்” (Islam and Orientalism), “யார் இந்த மௌதூதி?” (Who is Moududi?), “நான் ஏன் இஸ்லாம் தழுவினேன்?” (Why I embraced Islam?) உட்பட 30க்கும் மேற்பட்ட நூல்களையும், கட்டுரைகளையும் மரியம் ஜமீலா எழுதியுள்ளார்.

இவை உர்து, பார்சி, துருக்கிஷ், பெங்காலி, பஹாசா (இந்தோனேசியா) உட்பட பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, “இஸ்லாம் எதிர் மேற்குலகம்” (Islam Versus The West) என்ற நூல் 12க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நவீன கால முஜாஹித்களின் வரலாறுகளையும் மரியம் ஜமீலா எழுதியுள்ளார். ரஷ்ய ஸார் மன்னனை எதிர்த்துப் போராடிய இமாம் ஷாமில், இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியை எதிர்த்துப் போராடி தூக்கு மரம் ஏறிய லிபியாவின் பாலைவனச் சிங்கம் உமர் முஃக்தார், வட இந்தியாவில் பிறந்து இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்திய செய்யத் அஹமத் ஷஹீத் ஆகியோரின் வரலாறுகள் அடங்கிய நூல் அதில் குறிப்பிடத்தக்கது. தமிழில் மெல்லினம் பதிப்பகத்தார் அதனை “சமீப கால வரலாற்றின் மூன்று முஜத்தித்கள்” என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.

மௌலானா மௌதூதியை முதன் முதலில் தொடர்பு கொண்டபொழுது மரியம் ஜமீலா, ”உலகாதாய மதச்சார்பின்மை, தேசியவாதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட என் வாழ்க்கையைத் தரத் தயாராக இருக்கிறேன்என்று கடிதம் எழுதினார்.

ஐந்து தசாப்தங்கள் கழிந்துவிட்டன. அவர் அன்று அளித்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டார். ஆம்! தன் வாழ்நாள் முழுவதையும் இஸ்லாமை எடுத்தியம்பும் பணியிலேயே செலவழித்தார். அந்த நிலையிலேயே இன்று இறைவன் அவரை அழைத்துக்கொண்டான். அல்லாஹ் அவரது அமல்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் உயர்ந்த சுவனத்தில் அவரை நுழையச் செய்வானாக.


இஸ்லாம் எவரையும் ஈர்க்கும் வல்லமை உடையது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுதான் மரியம் ஜமீலா!

MSAH

விடியல் வெள்ளி 2012

Tuesday, 28 January 2014

மதுவில் மதிமயங்கிக் கிடக்கும் பொது சமூகம்!


வீட்டில் குடிப்பதற்காக வைத்திருந்த வெளிநாட்டு மதுவை எடுத்து 8 வயது சிறுவன் குடித்து மரணமான கொடூர சம்பவம் கேரளாவில் பத்மநாமபுரத்துக்கருகில் நடந்துள்ளது. 

தொலைக்காட்சிப் பெட்டி ஸ்டாண்டின் கீழ் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை எடுத்து அந்தச் சிறுவன் குடித்திருக்கிறான். அப்பொழுது அவனின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். 300 மில்லிக்கும் அதிகமாக அவன் உடலில் மது சென்றதால் அவனுக்கு மரணம் ஏற்பட்டுள்ளது.

தங்கள் சுகத்திற்காக அநியாயமாக ஒரு சிறுவனைப் பலியாக்கியிருக்கிறார்கள் வீட்டிலுள்ளவர்கள். இது ஒரு நிகழ்வு மாத்திரமல்ல. மதுவினால் ஏற்படும் கொடூரங்களுக்கு இது ஒரு பானைக்கு ஒரு சோறே!

மது இன்று பொது சமூகத்தில் மிகப் பெரிய விபத்தாக வளர்ந்திருக்கிறது. தினமும் மது அருந்துவது, பண்டிகைக் கொண்டாட்டங்கள், விருந்து நிகழ்ச்சிகள், விசேஷ தினங்களின்போது மது அருந்துவது என்று மது அருந்துவது மிகச் சாதாரணமாக பரவலாகி வருகிறது.

மது விஷம் என்ற கருத்து போய் மதுவை அருந்துவது கண்ணியம் என்ற நிலை சமூகத்தில் வந்துள்ளது. விருந்து நிகழ்ச்சிகளில் மது அருந்தாதவர்களை ஏளனமாகப் பார்க்கும் போக்கே இதற்குச் சான்று.

தமிழகத்தில் டாஸ்மாக் முதற்கொண்டு அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் மாநில அரசுகளே மதுவை விற்கின்றன. அரசு மதுபானக் கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. வெளிநாட்டு மதுக்களுக்கு விற்பனை வரியை அதிகப்படுத்தி மாநில அரசுகள் அறிவிக்கின்றன. இதன் மூலம் மது பயன்பாட்டைக் குறைப்பதுதான் நோக்கம் என்று அரசுகள் கூறினாலும் அது அரசுகளுக்கு வருமானத்தை அதிகரிக்கும் ஒரு வழியே என்பதுதான் நிதர்சனம்.

மது பயன்பாடு அதிகமாகி வருகிறது என்பதை விட கவலைக்குரியது அதிகமான இளைஞர்களும், மாணவர்களும் அதற்கு அடிமையாகி வருவது என்பதுதான். என் மருமகன் கோவையில் பொறியியற் கல்லூரியில் படிக்கிறான். அவனுடன் கூடப் படிக்கும் நல்ல மாணவர்களை இணைத்து ஒரு வீடு எடுத்து தங்கலாம் என்று முனையும்பொழுது, குடிக்காத ஒரு மாணவன் கூட கிடைக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியானது.

அவனுடன் படிக்கும் அனைத்து மாணவர்களும் குடிப்பார்களாம். கொஞ்சம் பணம் குறைவான குடும்பத்திலுள்ள மாணவன் சொன்னது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. “என் தந்தைதான் எனக்கு மது வாங்கித் தருவார். நான் குடிப்பேன்” என்றான் அந்த மாணவன்.

இப்படி கல்லூரிகளில் மது சர்வசாதாரணமாகப் புழங்கப்படுகிறது. அத்தோடு 10 வயதிற்குக் கீழுள்ள சிறுவர்களும் இப்பொழுது மதுவைக் குடிக்கின்றனர் என்று செய்திகள் வருகின்றன.

வீடுகளில் பெற்றோர் மதுவை அருந்துவது அதிகரித்திருப்பதால் பெரும்பாலான வீடுகளில் மது இருப்பு, வெளியிலும் மது சாதாரணமாகக் கிடைப்பது, சினிமா, சீரியல் போன்றவற்றில் மது அருந்துவது சாதாரணமாகக் காட்டப்படுதல் போன்றவை மதுவின் மீது சிறுவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. இப்படி பல காரணங்களைச் சொல்லலாம்.

இது மட்டுமல்ல. போதை மருந்தும், கஞ்சாவும் மாணவர்களிடம் இப்பொழுது அதிகப் புழக்கத்தில் வந்துள்ளன. இவற்றை மாணவர்களிடம் விற்பதற்கு பெரும் மாஃபியா கும்பல்கள் அலைந்து கொண்டிருக்கின்றன.

18 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனை 21 வயதாக அதிகரிக்க ஆலோசனை உண்டு. அதனைச் செயல்படுத்தினால் கொஞ்சமாவது இந்தக் கொடுமை குறைய வாய்ப்பிருக்கிறது.

சமீபத்தில் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் அரசின் மதுபானக் கடைகளிலிருந்து மது வாங்குவது செய்தியாக வந்திருந்தது. இளம் பெண்கள் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கிக்கொண்டிருக்கும் படங்கள் சமீபத்தில் முகநூலில் வந்திருந்தன.

குழந்தைகள் குற்றங்கள் புரிவதின் பின்னணியில் மதுவுக்கும், போதை மருந்துக்கும், கஞ்சாவுக்கும் பெரும் பங்குண்டு. சிறு வயதிலேயே கொலைகளிலும், பாலியல் பலாத்காரங்களிலும் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது.

இன்று இளையோர் சிறைகளில் (Juvenile Jails) அடைக்கப்படும் பெரும்பாலான சிறுவர்கள் செய்த குற்றங்கள் மேற்சொன்னவையே. கடந்த 2012ம் ஆண்டு கேரளாவில் மட்டும் 989 இளையோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே கணக்கு 2013ல் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. அதாவது 2013 செப்டம்பர் 30 வரையுள்ள கணக்குப்படி 1450 பேர் அங்கே கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 16 பேர் கொலைக் குற்றத்திற்காகவும், 30 பேர் பாலியல் பலாத்காரக் குற்றத்திற்காகவும் பிடிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமானோர் 16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடையிலுள்ளவர்களே.

குழந்தைகளிடம் பெற்றோர்கள் இது சம்பந்தமாக அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையே இத்தகைய நிகழ்வுகள் காட்டுகின்றன. குழந்தைகளிடம் நல்ல பழக்கவழங்களைப் புகுத்த பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் நாளைய இந்தியா நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.

MSAH

சமூக வலைத்தளங்கள் வரமா? சாபமா?



முகநூலில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்திடும் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தற்பொழுது ஓர் இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கேரளாவைச் சார்ந்த இந்தப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.01.2014) தூக்கில் தொங்கி பரிதாபமாக உயிர் இழந்தார். தன் 3 வயது குழந்தையையும், கணவரையும் நிர்க்கதியில் நிறுத்தி விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

தன் சொந்த சகோதரனுடன் ஏற்பட்ட சொத்துத் தகராறில் அந்தச் சகோதரனின் நண்பன் அந்தப் பெண்ணைக் கண்ணியக் குறைவாக முகநூலில் விமர்சித்தும், தவறான படங்களை வெளியிட்டும் அவமானப்படுத்தியுள்ளான். போலீசில் இது குறித்து புகார் அளித்தும் பலன் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து மாவட்ட கமிஷனருககு புகார் அளித்துள்ளார் அந்த அபலைப் பெண். ஆனால் மாவட்ட நிர்வாகமோ இந்த வழக்கை மீணடும் அதே காவல்நிலையத்திற்குத் திருப்பி விட்டது.

இரு தரப்பாரையும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த அந்தக் காவல் நிலைய துணை ஆய்வாளர் (எஸ்ஐ) அழைத்துள்ளார். தனக்கு இப்பொழுதாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தன் கவணனுடன் காவல் நிலையம் வந்துள்ளார் அந்தப் பெண்.

ஆனால் காவல் நிலையத்தில் நடந்ததுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. நடுவராக இருந்து மத்தியஸ்தம் பேசவேண்டிய எஸ்ஐ, இந்தப் பெண்ணைத் தவறாகப் பேசியுள்ளார். நெருப்பில்லாமல் புகையுமா, ஏதோ இருக்கப் போய்த்தான் இப்படிப்பட்ட செய்திகள் வெளிவந்துள்ளன என்ற ரீதியில் அவர் அந்தப் பெண்ணை காவல்நிலையத்தில் வைத்து அவமானப்படுத்தியுள்ளார்.

இங்கும் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, மீண்டும் தான் அவமானப்படுத்தப்பட்டதைத் தாங்க முடியாத அந்தப் பெண் வீட்டுக்கு வந்தவுடன் ஆடை மாற்றிக்கொள்ள அறைக்குள் சென்றபொழுது தூக்கில் தொங்கி தன்னை மாய்த்துக்கொண்டார். அந்தச் சமயம் கணவர் தன் மூன்று வயதுக் குழநதையுடன் வெளியே சென்றிருந்தார். மீண்டும் வீட்டுக்கு வந்த கணவர் பார்த்தது தன் மனைவியின் சடலத்தை. கையில் தன் கைக்குழந்தை. கீழே தன் மனைவியின் சடலம். என்ன பாடு பட்டிருப்பார் அந்தப் பரிதாபக் கணவர்?

இதில் பல கோணங்களில் சிந்திக்க வேண்டியுள்ளது. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் இன்று வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது. அதில் ஒரு தனி நபரின் தனித்துவம் சிதைக்கப்படும்பொழுது பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இன்று அதிக விலையிலும், மலிவான விலையிலும் ஸ்மார்ட் போன்கள் கிடைப்பதால் அவை பரவலாகிவிட்ட சூழ்நிலையில் எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருப்பதைப் பார்க்கிறோம்.

பெரும்பாலான  தொலைத்தொடர்பு கம்பெனிகள் மக்கள் வாங்கும் சக்திக்குள் இணையதள இனைப்பையும் கொடுப்பதால் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முகநூல். இன்று முகநூலில் கணக்கு இல்லாதவர்களை வேற்றுக் கிரக ஜந்துகளைப் பார்ப்பது போன்று பார்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

முகநூலும் மற்ற ஊடகங்கள் மாதிரி இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி போன்றதுதான். நல்லவைக்கும் பயன்படுத்தலாம். அல்லவைக்கும் பயன்படுத்தலாம். இந்த வகையில் முகநூலைப் பயன்படுத்துபவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கின்றன.

நல்ல விஷயங்கள் பலவும் முகநூல் மூலம் பரவுவதைப் பார்க்கின்றோம். ஆனால் அதைவிட அதிகமாக தீய விஷயங்கள் அதிகமாகப் பரவுவதுதான் யதார்த்தம். இன்று ஃபாஸிஸ்டுகள், மோடியின் ஆதரவாளர்கள் முகநூலை அதிகம் பயன்படுத்தி இல்லாத பொல்லாத செய்திகளைப் பரப்பி வருவதைப் பார்க்கின்றோம். அதே சமயம் ஃபாசிச எதிர்ப்பாளர்களும் ஃபாசிசத்திற்கு எதிரான செய்திகளைக் கொடுக்கிறார்கள். இருந்தாலும் ஃபாசிசவாதிகளின் வீரியம் இதில் இல்லை என்பதே உண்மை.

இன்று சைபர் கிரைம் என்று சொல்லப்படும் வலைத்தள குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் அதிக மக்களுக்கு இது தெரிவதில்லை. இன்று சைபர் கிரைம்களில் தண்டனை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இன்னும் சிலர் எந்தவித ஆதாரங்களையும் விட்டு வைக்காமல் மிகத் துல்லியமாக அடுத்தவர்களைப் பற்றிய ஆபாசப் படங்களை வெளியிட்டுவிட்டு தப்பித்து விடுகின்றனர். இவர்களைப் பிடிப்பது கொஞ்சம் சிரமம்தான். இவர்களெல்லாம் பெரும்பாலும் இணையத்தைக் கரைத்துக் குடித்தவர்களாக இருப்பார்கள்.

இந்தப் பரிதாபப் பெண்ணின் விஷயத்தில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஏன் மீண்டும் உள்ளூர் காவல் நிலையத்திற்கு இந்த வழக்கை விசாரிக்குமாறு சொன்னது? அது சைபர் கிரைம் துறைக்கல்லவா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்!

அங்கேயே அந்தப் பெண்ணின் இறுதி வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. எதிர்த்தரப்பாரின் செல்வாக்கினால்தான் போலீசார் அப்படி நடந்து கொண்டனர் என்ற செய்தியும் கசிந்துள்ளது. செல்வமும், செல்வாக்கும் இருந்தால் எந்தத் தவறையும் யாரும் செய்யலாம் என்ற் நிலை என்று மாறும் இந்த நாட்டில்?

MSAH