அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: “என் அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக: அவர்கள் சொற்களைச் செவிமடுத்து, அதில் மிகச் சிறந்ததைப் பின்பற்றுகிறார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டியுள்ளான்; அவர்களே அறிவுடையவர்கள்.” (குர்ஆன் 39:17–18)
நபி (ஸல்) அவர்களின் பயணங்களில் ஒன்றின் போது, ஒரு மனிதர் பின்தங்கி அவர்களுடன் சேரவில்லை. அண்ணலார் அவரைப் பற்றி விசாரித்தார்கள். அங்கிருந்தவர்களில் ஒருவர் அவரைப் பற்றித் தவறாகப் பேசினார்.
உடனே முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அவரைத் தடுத்து, அந்த மனிதரின் நல்ல குணங்களைக் குறிப்பிட்டுச் சொன்னார்:
“நீங்கள் சொன்னது மிகவும் கெட்டது! அல்லாஹ்வின் மீதாணையாக, அல்லாஹ்வின் தூதரே, அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை.” (அல்-புகாரி, ஸஹீஹ், எண் 4418; முஸ்லிம், ஸஹீஹ், எண் 2769அ).
மக்களின் நற்குணங்களையும் போற்றுதலுக்குரிய செயல்களையும் குறிப்பிடுவது, அவர்களின் புகழத்தக்க பண்புகளை வெளிப்படுத்துவது, அவர்களின் நற்பண்புகளை எடுத்துரைப்பது, அவர்களின் மேலான தன்மையை அங்கீகரிப்பது ஆகியவை எத்தகைய மகத்தான மதிப்பினைக் கொண்டவை! எத்தகைய உன்னதமான பண்பு!
உன்னத நபிகளாரின் உதாரணத்தை எண்ணிப் பாருங்கள். நற்குணங்களைப் பற்றி இவ்வளவு தாராளமாகப் புகழ்ந்தவரோ அல்லது நற்பண்பு உடையவர்களை இவ்வளவு கனிவாகப் பாராட்டியவரோ வேறு எவரையும் நீங்கள் காண மாட்டீர்கள்.
அப்துல் கைஸின் அல்-அஷாஜ் (ரலி) அவர்களிடம் அவர் கூறினார்கள்: “உன்னிடம் அல்லாஹ் விரும்பும் இரண்டு பண்புகள் உள்ளன: சகிப்புத்தன்மை மற்றும் நிதானம்.” (முஸ்லிம், ஸஹீஹ், எண் 17).
ஒரு மனிதனுக்கு அவனுள் இருக்கும் நன்மையை உணர்த்தி, அதனை அவன் பாதுகாக்கவும் அதிகரிக்கவும் செய்யும் பாராட்டை விடப் பெரிய ஊக்கமளிப்பது எதுவாக இருக்க முடியும்?
இரவு நேரத்தில் தொழுமாறு அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களை அண்ணலார் ஊக்கப்படுத்த விரும்பினார்கள். எனவே, அவரைப் பாராட்டி, அத்துடன் வழிகாட்டுதலையும் இணைத்து இப்படிச் சொன்னார்கள்:
“அப்துல்லாஹ் எத்தகைய சிறந்த மனிதர்! அவர் மட்டும் இரவில் நின்று தொழுபவராக இருந்தால் (எவ்வளவு நன்றாக இருக்கும்!)” (அல்-புகாரி, ஸஹீஹ், எண் 1122; முஸ்லிம், ஸஹீஹ், எண் 2479).
அதன் பிறகு, அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் இரவில் மிகக் குறைவாகவே உறங்கினார். அவர் ஏற்கனவே சிறப்பாகச் செய்து வந்ததைச் சீர்மிகு நபிகளார் எவ்வாறு பாராட்டி, அதை விடச் சிறந்ததை நோக்கி வழிகாட்டினார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
நன்மையை உணர்ந்து அதைப் பாதுகாக்கும் இதயமும், கனிவைக் கண்டு அதைப் போற்றும் பார்வைகளும், அழகானதைக் பேசி அதை வெளிப்படுத்தும் நாக்கும் ஒரு மனிதனிடம் இருப்பது எத்தகைய அழகானது!
ஒரு நற்பண்பு உள்ளவர்தான் மற்றவர்களின் நற்பண்பை அறிவார். நற்குணம் கொண்டவர் மட்டுமே மற்றவர்களின் நன்மையைச் சாட்சி கூற முடியும். இது குணத்தின் உன்னதத்தையும் இதயத்தின் தூய்மையையும் குறிக்கிறது.
இது தூய்மையான இதயமுடையவரின் பண்பாகும், அவரைப் பற்றி அண்ணலார் இவ்வாறு வர்ணித்துள்ளார்கள்:
“இறையச்சமும் தூய்மையும் கொண்டவர்; எத்தகைய பாவமும், வரம்பு மீறலும், பகையும், பொறாமையும் அவரது இதயத்தில் இல்லை.” (சுனன் இப்னு மாஜா, எண் 4216)
அத்தகைய மனிதர் ஒரு தேனீயைப் போன்றவர்: அது தூய்மையானவற்றின் மீது அமர்கிறது, தூய்மையானவற்றை உருவாக்குகிறது, நன்மையைப் பரப்புகிறது.
நோயுற்ற இதயமும் இழிவான இயல்பும் கொண்ட மனிதரைப் பொறுத்தவரை, அவரது உள்நிலையின் மற்றும் எண்ணத்தின் சீர்கேடு, மக்களின் நற்பண்புகளையும் நல்ல குணங்களையும் அவர் கண்டுகொள்ளாமல் இருக்கச் செய்கிறது. அவர் அவர்களின் குறைகளையும் பிழைகளையும் மட்டுமே உற்று நோக்குகிறார். அவர் அவர்களின் நன்மைகளைக் குறிப்பிடுவதில்லை. அவர்களின் குறைகளை மறைப்பதும் இல்லை.
இப்படிப்பட்டவர் மலர்களைக் கடந்து சென்று குப்பையைத் தேடும் ஈயைப் போன்றவர்.
இது எத்தகைய ஆபத்தான பண்பும் அசிங்கமான குறையுமாகும். நபி (ஸல்) அவர்கள், பெண்கள் தங்கள் வீடுகளுக்குள்ளிருந்தும் கேட்கும் அளவிற்கு மேடையில் உரத்த குரலில் இதைக் குறிப்பிட்டார்கள்:
“நாவுகளால் நம்பிக்கை கொண்டு, ஈமான் இன்னும் தங்கள் இதயங்களில் நுழையாத மக்களே, முஸ்லிம்களைப் பற்றிப் புறம் பேசாதீர்கள். அவர்களின் குறைகளைத் தேடாதீர்கள். எவர் தன் சகோதரனின் குறையைத் தேடுகிறாரோ, அவரது குறையை அல்லாஹ் தேடுவான். எவரது குறையை அல்லாஹ் தேடுகிறானோ, அவரை அவரது வீட்டிற்குள்ளேயே இழிவுபடுத்துவான்.” (சுனன் அபூ தாவூத், எண் 4880)
அறிஞர்களில் ஒருவர் கூறினார்:
“எவர் தன் சொந்தக் குறைகளை விடுத்து மக்களின் குறைகளில் மூழ்கி விடுகிறாரோ, அவரது இதயம் குருடாகிவிடும். அவரது உடல் சோர்வடைந்து விடும். தன்னுடைய சொந்தக் குறைகளைக் கைவிடுவது அவருக்குக் கடினமாகிவிடும்.” (இப்னு ஹிப்பான், ரவ்ழத்துல் உகலா வ நுஸ்ஹத்துல் புழலா, ப. 131)
மற்றவர்களின் குறைகளை மறைத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் குறைகளை மறைக்க ஒருவரை அல்லாஹ் நியமிப்பான். இது உன்னத நபிகளாரின் கீழ்க்கண்ட கூற்றை உறுதிப்படுத்துகிறது:
“எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ, உலகத்திலும் மறுமையிலும் அவருடைய குறைகளை அல்லாஹ் மறைப்பான்.” (ஸஹீஹ் முஸ்லிம், எண் 2699)
இமாம் மாலிக் (அவர் மீது இறைவன் கருணை பொழியட்டும்) கூறினார்: “குறைகள் எதுவும் அறியப்படாத சிலரை நான் சந்தித்தேன், ஆனால் அவர்கள் மற்றவர்களின் குறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். எனவே மக்கள் அவர்கள் மீது குறைகளைக் கண்டனர். குறைகளைக் கொண்டிருந்த சிலரையும் நான் சந்தித்தேன். ஆனால் அவர்கள் மற்றவர்களின் குறைகளைப் பற்றி மௌனமாக இருந்தனர். எனவே மக்கள் அவர்கள் மீதும் மௌனமாக இருந்தனர்.”
இருப்பினும், குறைகளை மறைப்பது என்பது அநீதியைக் கண்டிக்காமல் மௌனமாக இருப்பதற்கோ அல்லது நேர்மையான பரஸ்பர அறிவுரைகளைக் கைவிடுவதற்கோ நம்மை அனுமதிக்கக் கூடாது.
மக்களின் நற்குணங்களைப் பற்றிப் பேசுவது என்பது கருத்துவேறுபாடுகளின் போது அதன் உண்மைத்தன்மை வெளிப்படும் மற்றும் கண்டனங்கள் எழும் போது அதன் உண்மையான மதிப்பு புலப்படும் ஓர் உன்னதமான பண்பாகும்.
ஒரு கண நேரத் தவறு பல ஆண்டு நாம் செய்த நன்மைகளை மறக்கடிக்கச் செய்ய வேண்டாம். ஒரு சிறிய தவறு ஏராளமான நற்பண்புகளை அழிக்கவும் விட வேண்டாம்.
பல ஆண்டுகளாக நன்மைகள் பல செய்த எத்தனை எத்தனையோ மனிதர்கள், ஒரே ஒரு தவறு செய்துவிட்டால், “நாங்கள் உங்களிடமிருந்து எந்த நன்மையையும் கண்டதில்லை” என்று கூறப்படுகிறார்கள்!
நற்பண்பு உடையவர்களின் தகுதியை ஏற்றுக்கொள்ளுங்கள். நல்ல குணங்களைப் பற்றிப் பேசுவதை உங்கள் வீடுகளிலும் கூட்டங்களிலும், சமூக வலைத்தளங்கள் மூலம் நீங்கள் பேசும் மற்றும் தொடர்பு கொள்ளும் முறையின் ஒரு பகுதியாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள்.
உங்கள் முன்னிலையில் யாரும் புறம் பேசுவதை அனுமதிக்காதீர்கள். சங்கை நபிகளாரின் கீழ்க்கண்ட சொல்படி செயல்படுங்கள்:
“எவர் தன் சகோதரனின் மானத்தைக் காப்பாற்றுகிறாரோ, மறுமை நாளில் அவரது முகத்திலிருந்து நரக நெருப்பை அல்லாஹ் காப்பாற்றுவான்.” (திர்மிதீ, எண் 1931).
இந்த உலகை விட்டுப் பிரிந்து சென்றவர்களின் நற்பண்புகளை நினைவுகூர்வோம். அவர்களின் நல்ல குணங்களைப் பற்றிப் பேசுவோம்.
ஒரு ஜனாஸா நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, மக்கள் அந்த இறந்தவரைப் பற்றி நல்லவிதமாகப் பேசினர். அப்போது அவர்கள் கூறினார்கள்: “எவரைப் பற்றி நீங்கள் நன்மைகளைப் பாராட்டினீர்களோ அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்.” (புகாரீ, எண் 1367; முஸ்லிம், எண் 949).
தாஹா நபியவர்கள், தம்முடைய மனைவி கதீஜா (ரழி) அவர்கள் காலமான பிறகும் அடிக்கடி அவர்களின் நற்பண்புகளை எடுத்துரைப்பார்கள்.
“மக்கள் என்னை நிராகரித்தபோது அவர் என்னை நம்பினார். மக்கள் என்னைப் பொய்யர் என்று கூறியபோது அவர் என் உண்மையை உறுதிப்படுத்தினார். மக்கள் என்னை வஞ்சித்தபோது அவர் தன் செல்வத்தால் எனக்கு உதவினார்.” ( முஸ்னத் அஹ்மத், எண் 24864).
தன் அன்பு மனைவியாரின் மரணத்திற்குப் பிறகும், அவர் அவர்களுக்குச் செய்த நன்மைகளை அண்ணலார் மறக்கவில்லை. நமது சமூகம் நமக்குச் செய்ய வேண்டிய உரிமைகளில் ஒன்று, அதன் நன்மைகளை வெளிப்படுத்துவதும், அதன் மக்களின் நற்பண்புகளை எடுத்துரைப்பதும், அதன் குடிமக்களின் சாதனைகளைப் பாராட்டுவதும் ஆகும்.
தகுதியான எவருக்கும் கனிவான வார்த்தையைக் கூறத் தவறாதீர்கள். தூய உள்ளமும் நம்பிக்கையும் கொண்டவர்களுக்காக இறைவன் கற்றுத் தந்த துஆவைக் கேறங்கள்:
“எங்கள் இறைவனே, எங்களுக்கும் ஈமானில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பளிப்பாயாக. நம்பிக்கை கொண்டவர்கள் மீது எங்கள் இதயங்களில் எந்தப் பகையையும் ஏற்படுத்த வேண்டாம். எங்கள் இறைவனே, நீயே மிக இரக்கமுள்ளவன், கருணைமிக்கவன்.” (குர்ஆன் 59:10).
No comments:
Post a Comment