Saturday, 5 March 2016

ராஜாதிராஜன்!


“அல் மலிக்” என்று அல்லாஹ்வைக் குறிக்கும் வார்த்தை திருக்குர்ஆனில் 11 இடங்களில் வருகிறது. “மலீக்” என்ற வார்த்தை ஒரு தடவை வருகிறது.

அல் மலிக், அல் மாலிக், மலீக் ஆகிய மூன்று பதங்களுமே ஒரே அர்த்தத்தையே அளிக்கின்றன. அதாவது, ‘முல்க்’கை உடையவன். ‘முல்க்’ என்ற வார்த்தை ஆற்றல், அதிகாரம், உரிமை, சொந்தம், அடக்குதல் என்று பல பொருள்களைக் கொண்டது.

ஆக, அல் மலிக், அல் மாலிக், மலீக் ஆகிய பதங்களுக்கு அரசன், மன்னன், ராஜா, பரமாதிகாரி என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.

இது அத்தனையும் அல்லாஹ்வையே குறிக்கும். அதிகாரம் அத்தனைக்கும் சொந்தக்காரன் அவனே.

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. (அல்குர்ஆன் 2:107)

மலிக் என்பவன் அவன் வசம் உள்ள அதிகாரத்தை செயல்படுத்துபவன்.

இப்னுல் கய்யூம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “மலிக் என்பவன் அவனுடைய சொற்களாலும், கட்டளைகளாலும் ஆட்சி செலுத்தி, தன் விதிமுறையைக் கொடுப்பவன். அல்லாஹ் மட்டும்தான் உண்மையான அரசன். அனைத்துக்கும் சொந்தக்காரன். அறுதியான அதிகாரி.”

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் மறுமை நாளில் பூமியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, வானங்களை தன் வலது கையில் சுருட்டி வைத்துக் கொண்டு, “நான்தான் அரசன். உலகின் அரசர்கள் எங்கே?” எனக் கேட்பான். யாரும் பேச மாட்டார்கள். ஏனென்றால், உயர்ந்தோனான அல்லாஹ்தான் அன்று அரசன். நியாயத் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்வின் அருகில் இருக்கும்போது, உலகின் அரசர்கள் அத்தனை பேரும் அடங்கியிருப்பார்கள். இன்றைய ஆட்சியாளர்கள் அனைவரும் அந்த அற்புதமான நாளில் அவர்களுடைய அதிகாரத்தையெல்லாம் இழந்திருப்பார்கள். (புகாரீ)

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே) நீர் கூறுவீராக. அல்லாஹ்வே, ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே, நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய். நீ நாடியோரை கண்ணிப்படுத்துகிறாய். நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய். நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கிறாய். (அல்குர்ஆன் 3:26)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தன்னை “மாலிகுல் முல்க்” என்று சொல்கிறான். இதற்கு ராஜாதிராஜன், மன்னாதி மன்னன் என்று பொருள் கொள்ளலாம்.

முல்க் என்றால் முழு முற்று அதிகாரம் என்று பொருள். உயிரினங்கள், உலகம் தாண்டி அகிலங்கள், பால்வீதிகள் அனைத்தையும் உள்ளடக்கி பிரபஞ்சம் முழுவதும் எந்த அதிகாரம் செல்லுபடியாகின்றதோ அதற்குச் சொந்தக்காரன் மாலிக்குல் முல்க் (பிரபஞ்சத்தின் அதிபதி).

இந்த உலகிலும் மறு உலகிலும் ஒரே ராஜாதிராஜன் அல்லாஹ் மட்டும்தான். ஆனால் இன்று பலஹீனமான மனிதன் தன்னை ராஜாதி ராஜன் என்று அழைக்கிறான். கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் உலகமே தன் கைக்குள் இருப்பது போல இறுமாப்பு கொள்கிறான்.

ஆட்சியதிகாரம் கைவரப்பெற்ற மக்களோ அல்லாஹ்வை மறந்து வாழ்கிறார்கள். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆட்டம் போடுகிறார்கள். இலஞ்சம் , ஊழல் போன்ற கொடூர செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதிகாரம் அனைத்தும் அவனளவிலேயே உள்ளன என்பதை மறந்து அகங்காரத்துடன் அலைகிறார்கள்.

மாறாக, எப்பொழுதெல்லாம் நம் மனம் சஞ்சலம் அடைகிறதோ, அப்பொழுதெல்லாம் ‘அல்லாஹ்தான் நம் உண்மையான அரசன். நாம் அவனுடைய ஆற்றலுக்குட்பட்ட அடிமைகள்’ என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டும். அவனிடம் மட்டுமே நமது சிரமங்களை மீட்கும் சக்தி உள்ளது என்ற எண்ணத்தைக் கொள்ள வேண்டும்.

நமக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால், இது அரசர்களுக்கெல்லாம் அரசனான அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து வந்திருக்கிறது என்றுணர்ந்து, அவனிடமே மீள வேண்டும்.

எந்த அரசனும், எஜமானனும், நீதிவானும், ராஜாவும், வேறு எந்தக் கொம்பனும் ராஜாதி ராஜனான அல்லாஹ்வின் அடிமைகளே!

நம்மை நாமே அல் மலிக் என்று அழைத்துக் கொள்ளக் கூடாது. நம் அன்றாட வாழ்வில் மாலிகுல் முல்காகிய  ராஜாதிராஜன் விதித்துள்ள வரைமுறைகளுக்குட்பட்டே நமது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

‘ஆகவே உண்மை அரசனான அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்.’ (20:114)

அந்த உண்மையான அரசன் நம் அன்றாட காரியங்களில் நீதியாக நடந்து கொள்ள வழிகாட்டுவானாக. அவன் நியாயத் தீர்ப்பு நாளன்று நம் மீது திருப்தியோடிருப்பானாக!

1 comment:

  1. அனைவருக்கும் வணக்கம்

    சுகந்திர தினத்தை முன்னிட்டு புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

    நன்றி

    நமது தளத்தை பார்க்க Superdealcoupon

    ReplyDelete