Monday, 18 November 2013

உலகை வெல்ல எளிதான வழி!

விடியல் வெள்ளி  அக்டோபர் 2000 இதழில்
‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை


என்வர் ஹோக்ஸா என்ற கம்யூனிஸ சர்வாதிகாரி அல்போனியாவை ஆண்டு கொண்டிருந்தார். மதத்திற்கெதிரானவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதால் அனைத்து மதங்களையும் அந்தச் சர்வாதிகாரி அந்த நாட்டில் தடை செய்தார்.

உதுமானியப் பேரரசின் ஒரு மாகாணாமாக இருந்த அல்போனியாவை ‘நாத்திக நாடு’ என்று அறிவித்தார். 22 வருடங்களுக்கு முன்பு இவரது ஆட்சியில்தான் முஃப்தி ஸப்ரி கோச்சி என்ற மார்க்க அறிஞர் சிறையில் தள்ளப்பட்டார்.

இப்பொழுது 75 வயதுக்கு மேல் ஆன அவர் சிறையில் தள்ளப்படும்பொழுது இனி உயிருடன் வெளியில் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் சிறையிலிருந்து விடுதலையான பின் தனது சிறை அனுபவங்களைப் பதிர்ந்து கொண்டார்.

“நான் உள்ளே சென்ற அந்த நிமிடம், எனது மனம் வெறுமை கொண்டது. எல்லாமே இருளாக இருந்தது. என்னைச் சுற்றி ஒரே இருள்மயம். சூனியமான எதிர்காலம்!” – ஷேக் ஸப்ரி அவர்களிடம் எப்படி அந்த நாட்களைக் கடத்தினீர்கள் என்று கேட்டபொழுது அவர் கொடுத்த பதில் இது.

“திடீரென்று எனது மூளையில் ‘யூசுஃப் (அலை)’ என்ற பெயர் மின்னியது. எகிப்திலுள்ள போட்டிஃபர் சிறையில் நீண்ட காலம் அவர்கள் வாழ்ந்தது என் நினைவுக்கு வந்தது. நான் என்னையே கேட்டுக் கொண்டேன்: “நான் யூசுஃப் (அலை) அவர்களை விடச் சிறந்தவனா?” என்னைச் சுற்றியிருந்த இருள் உடனே உருகி மறைந்தது. அல்லாஹ் எனக்குப் பலத்தையும், வலியைப் பொறுத்துக் கொண்டு பொறுமையையும் தந்தான். நான் எனது மொத்த சிறை வாழ்க்கையையும் இந்த மனோ பலத்தைக் கொண்டே கழித்தேன்” – முஃப்தி விவரித்தார்.

மேலும் அவர் கூறினார்: “21 வருடங்கள் நான் சிறையிலிருந்தேன். இந்த 21 வருடங்கள் முழுவதும் குளிர் காலத்திலும், வெயில் காலத்திலும் நான் விடாமல் நோன்பிருந்தேன். எனது உணவோ ஒரு ரொட்டித் துண்டும், ஒரு துண்டு வெங்காயமும்தான். ஏனெனில் வேறு சிறை உணவுகள் அனைத்திலும் பன்றியின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் நான் ரகசியமாகவே நோன்பு நோற்க வேண்டியிருந்தது. இது அவர்களுக்குத் தெரிந்தால் என்னைக் கொன்று விடுவார்கள். நான் எனது தொழுகைகளையும் ரகசியமாக நிறைவேற்ற வேண்டியிருந்தது. நடுநிசியிலும், யாரும் காண முடியாத மறைவிடங்களிலுமே நான் தொழ முடிந்தது. நான் தொழுவதை அறிந்தால் எனக்கு மரணம்தான் பரிசாகக் கிடைக்கும். ஒரு துண்டு ரொட்டியையும், ஒரு துண்டு வெங்காயத்தையும் சாப்பிட்டே 21 வருடங்களைக் கழித்தேன். இந்த 21 வருடங்களும் எப்படிக் கழிந்தன என்பது வியப்பாகவே உள்ளது!”

இவரை இவ்வளவு நெஞ்சுரத்தோடு இருக்க வைத்தது எது? ஈமான் எனும் இறைநம்பிக்கைதான்! அதுதான் இந்த நாத்திக ஆட்சியின் கொடுங்கோன்மைகளையெல்லாம் நின்று சமாளிப்பதற்கு அவருக்கு உதவியது.

ஒருவேளை சிறையிலேயே தான் இறந்திருந்தால் நிச்சயம் மறுமையில் ஒரு பெரிய வெற்றி காத்திருக்கிறது என்று உறுதியாக அவர் நம்பினார். ஒரு முஃமினின் (இறைநம்பிக்கையாளரின்) வெற்றி என்பது வல்ல அல்லாஹ்விடம் அவர் காட்டும் நாட்டம் மற்றும் அவனிடம் அவர் வைக்கும் விண்ணப்பங்கள் அடிப்படையில்தான் அமையும்.

அல்லாஹ்விடம் அவர் கோருவது வெற்றிக்கு வழி வகுக்கும். இந்த வெற்றி என்பது உறுதியாகச் சொல்லப்பட்டது. அது ஒரு சூதாட்டமல்ல.

இஸ்லாம் என்றால் என்ன?

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அதற்கு அழகுற பதில் பகிர்ந்தார்கள்: “இறைவனுக்கு இணை வைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், ஜக்காத் கொடுத்து வருவதும், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்.”

ஈமான் என்றால் என்ன?

அல்லாஹ்வை நம்புவதும், மலக்குமார்களை நம்புவதும், வேதத்தை நம்புவதும், தூதர்களை நம்புவதும், மறுமையில் எழுப்பப்படுவோம் என்று நம்புவதும், எல்லாம் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கிறது (கத்ர்) என்று நம்புவதுமே ஈமான் ஆகும்.

இஹ்ஸான் என்றால் என்ன?

இறைவன் நம்மை எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்துடன் நாம் இறைவனைக் காண்பது போல் அவனை அஞ்சி நடப்பதுதான் இஹ்ஸான் ஆகும்.

இது அபூஹுரைரா (ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்ட ஹதீஸ். இந்த ஹதீஸ் புகாரீயிலும், முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.

நாம் எவ்வாறு உண்மையான விசுவாசியாக மாற முடியும்? நாம் அல்லாஹ்வை நேசித்தால்!

நாம் எப்படி அல்லாஹ்வை நேசிப்பவர்களாக ஆக முடியும்? நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசித்தால்!

நாம் எப்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பவர்களாக ஆக முடியும்? அவர்களின் வழிமுறையைப் (சுன்னாவைப்) பின்பற்றி நடந்தால்!

அல்லாஹ் தன் தூதரைப் பார்த்து இவ்வாறு கூறப் பணிக்கின்றான்:
(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்  3:31)

அல்லாஹ் நெருங்க முடியாத, மிகத் தொலைவிலுள்ள ‘யாரோ ஒருவன்’ அல்ல. அவன் மிகவும் அருகில் இருக்கிறான். மனிதனைப் படைத்து அவனுக்கு எந்தத் திசையையும், இலட்சியத்தையும் காட்டாதவன் அல்ல அவன்.

அவன் தெளிவான வழிகாட்டுதல்களையும், நோக்கத்தையும் மனிதனுக்கு அருளியுள்ளான். வல்ல இறைவன் நமக்கு ஓர் அப்பாவித்தனமான இயல்பையும், அதே சமயத்தில் புத்திசாலித்தனத்தையும் கொடுத்துள்ளான்.

அவன் நமக்கு இறைத்தூதர்களை அனுப்பினான். மலக்குகள் வாயிலாக ‘வஹீ’ எனும் இறைவெளிப்பாடு மூலம் இறைத்தூதர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினான். நன்மையையும், தீமையையும் அறிவித்தான். தொட்டிலிலிருந்து மரணக் குழி வரை வழிகட்டினான்.

இறைத்தூதர்கள் இறைவனின் செய்தியை மக்களுக்கு எத்தி வைத்ததோடு உதாரணப் புருஷர்களாகவும் வாழ்ந்து காட்டினார்கள். வெற்றியும், இறை உவப்பும் கிட்டும் பாதையைக் காட்டினார்கள். இதனால்தான் இறைவனை நம்புவதும், கண்ணுக்குத் தெரியாத வானவர்களையும், வேதங்களையும், தூதர்களையும், மறுமையையும், இறைவனின் விதியையும் நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படையாகும்.

ஈமான் எனும் அளவுகோலை வைத்துதான் இந்த  முஸ்லிம் சமுதாயம் வரலாறு நெடுகிலும் வெற்றி அல்லது தோல்வியைச் சந்தித்திருக்கிறது. 13-ம் நூற்றாண்டின் நடுவில் தார்த்தாரியப் படைகள் முஸ்லிம்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். பால்கன் பிரதேசம், புகாரா, பாக்தாத் போன்ற பிரதேசங்களிலெல்லாம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தினார்கள்.

இப்னு அல் அதீர் அவர்களின் வார்த்தைகளில் சொல்வோமேயானால், இந்தப் படுகொலைகளும், அழித்தொழிப்புகளும், அழிச்சாட்டியங்களும், அடாவடிகளும் “மிகக் கொடுமையானவை; மிகப் பெரிய அளவில் நடந்தவை. எந்த இரவும், எந்தப் பகலும் இந்தக் கொடுமைகளைச் சந்தித்ததேயில்லை.”

ஆனால் தார்த்தாரியர்கள் முஸ்லிம்களைக் கொல்வதும், முஸ்லிம் பகுதிகளை ஆக்கிரமிப்பதும் நடந்து கொண்டிருக்கும் அவ்வேளையிலேயே அவர்களுக்கு இஸ்லாமும் அறிமுகமாகியது. இந்த வெற்றியாளர்கள் தங்களது அடுத்த 3 பரம்பரையினராக இஸ்லாத்தை தழுவியது, இஸ்லாத்தின் உண்மைத்தன்மையை பறை சாற்றியது.

எப்படி இந்த அற்புதம் நிகழ்ந்தது? அவர்கள் இஸ்லாத்திற்கு வர யார் காரணம்? T.W. ஆர்னால்டு தனது “இஸ்லாத்தைப் பரப்புதல்” (Preaching of Islam) என்ற நூலில் இதனை விளக்குகிறார்.

தார்த்தாரிய மன்னர் ஹுலாகுவின் பேரன் இஸ்லாத்தைத் தழுவியது பற்றி அவர் விளக்குகிறார். புகாரவைச் சேர்ந்த ஓர் இஸ்லாமிய அறிஞர் ஷேக் ஜமாலுத்தீன் என்பார். இவர் காஷ்கர் பகுதியை ஆண்ட தார்த்தாரிய மன்னர் துக்ளக் தைமூர்கான் (1347-1363) என்பவர் பொழுதுபோக்கும் இடத்தைத் தவறுதலாகக் கடந்து விட்டார்.

அது பாதுகாக்கப்பட்ட இடம். சாதாரண மக்கள் யாரும் அந்த இடத்திற்குச் செல்லக் கூடாது. உடனே அவரைப் பிடித்து கை, கால்களைக் கட்டி, மன்னர் முன் கொண்டு வந்தார்கள். மன்னர் தைமூர்கான் மிகவும் கோபமாக இருந்தார். “இந்தப் பாரசீகன் நாயை விடக் கீழானவன்” என்று கோபத்தில் கொக்கரித்தார்.

அவர் “பாரசீகன்” என்று சொன்னது முஸ்லிமைக் குறிக்கும். ஷேக் ஜமாலுத்தீன் அவர்கள் இதனைக் கேட்டு ஆத்திரப்படவில்லை. அவர்கள் அமைதியாகச் சொன்னார்கள்: “ஆம்! உண்மையான ஈமான் என்னிடம் குடி கொண்டிருக்கவில்லையெனில், நான் கண்டிப்பாக நாயை விடக் கீழானவன்தான்!”

மன்னர் இந்தப் பதிலைக் கேட்டு ஸ்தம்பித்துப் போனார். அந்தப் ‘பாரசீகனிடத்தில்’ அதற்கு விளக்கம் கேட்டார். ஷேக் ஜமாலுத்தீன் அவர்கள் தார்த்தாரிய மன்னருக்கு ‘ஈமான் என்றால் என்ன?’ என்று விளக்கினார்.

T.W. ஆர்னால்டு இந்த நிகழ்வை இப்படிக் குறிப்பிடுகின்றார்: “அந்த மன்னரின் மனம் ஆரம்பத்தில் கல் போன்று இருந்தது. ஆனால் பின்னர் அது மெழுகு போல் கரைந்தது. அந்த மன்னர் தன் தவறுகளை உணர்ந்தார்.”

போஸ்னியாவிலும், ஃபலஸ்தீனிலும், இன்னும் முஸ்லிம்கள் அழித்தொழிக்கப்படும் இடங்களிலும், இதே குருட்டுத்தனம்தான் பின்பற்றப்படுகின்றன. இவர்களைத் திருத்துவதற்கு முஸ்லிம்கள் தங்கள் இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் ஆகியவற்றைத் தங்கள் வாழ்வில் பிரதிபலித்துக் காட்டவேண்டும்.

அப்பொழுதான் இந்த உலகை வெல்ல முடியும்!

M.H. ஃபரூக்கி

தமிழில் : MSAH

No comments:

Post a Comment