Thursday, 28 November 2013

மீடியா உலகில் முஸ்லிம்கள்–17

2002ல் நடந்த குஜராத் இனப்படுகொலை நாடு முழுவதும் காட்டுத் தீ போல் பரவிட அங்குள்ள மீடியா செய்த தவறான பிரச்சாரம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. மார்ச் 16ம் தேதி வதோதராவில் மச்சிப்பித் என்ற இடத்தில் 4 முஸ்லிம் இளைஞர்களைப் போலீஸ் பிடிக்கிறது.

அவர்கள் டாடா சுமோ வாகனத்தில் ஆயுதங்களை வைத்திருந்தார்களாம். ஆனால் இந்தச் செய்தியை சந்தேஷ் நாளிதழில் படிக்கும் ஒருவருக்கு அந்த வாகனம் முழுவதும் ஆயுதங்களை அந்த இளைஞர்கள் கடத்திக்கொண்டு வந்ததாகத் தோன்றும்.

உண்மை என்னவென்றால், அந்த இளைஞர்களில் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். அதற்கான லைசன்சும் வைத்திருந்தார்.

இதே மாதிரி வதோதராவில் உள்ள தண்டல்ஜா என்ற இடம் பற்றிய இன்னொரு செய்தியும் தவறாக வெளிவந்தது. அந்த இடத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கிறார்கள். அத்தோடு அந்த இடத்தில் மிகப் பெரிய நிவாரண முகாமும் உள்ளது. அங்கே நகரத்திலிருந்தும், இன்னபிற இடங்களிலிருந்தும் பயந்தோடி வந்த 5000க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். அந்த இடத்தைப் பற்றி சந்தேஷ் நாளிதழ் வெளியிட்ட  தவறான செய்தி வதந்திகளைப் பரப்பவும், கலவரத்தைப் பரப்பவும் முக்கிய காரணமாக அமைந்தது.

மார்ச் 18 அன்று சாந்தி அப்ஜோவம் என்ற அரசு சாரா அமைப்பு சந்தேஷ் நாளிதழ் வெளியிட்ட ஒரு கட்டுரைக்கு மறுப்பு வெளியிடுமாறு அந்த நாளிதழை வலியுறுத்தியது. தண்டல்ஜாவில் பரபரப்பு நிலவுவதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சந்தேஷ் நாளிதழ் தொடர்ந்து வகுப்புவாத் தீயைக் கொளுந்து விட்டெரிவதற்கான அத்தனை தந்திரங்களையும் செய்து கொண்டிருந்தது. மக்கள் உயிருடன் கொளுத்தப்படுவது போன்ற கோரமான செய்திகளை கொட்டை எழுத்துகளில் வெளியிட்டது. எரிக்கப்பட்ட, சிதைந்துபோன உடல்களின் கொடூரமான படங்கள் தொடர்ந்து முதல் பக்கத்தில் வருகிற மாதிரி அது பார்த்துக்கொண்டது. அல்லது உள்ளூர் செய்திகளுக்கென்று ஒதுக்கப்பட்ட கடைசிப் பக்கத்தில் அவை வருகிற மாதிரி பார்த்துக்கொண்டது.

மாநிலத்தில் இனப்படுகொலை தொடங்கிய முதல் வாரத்தில், சந்தேஷ் நாளிதழ் எரிக்கப்பட்ட கோரக் காட்சிகளின் படங்களை பல வண்ணங்களில் வெளியிட்டது. திரிசூலத்தை ஏந்திக்கொண்டிருக்கும் ‘ராம சேவகர்களின்’ படங்களை முதல் வாரத்தில் முதல் பக்கங்களில் வெளியிட்டது.

இந்தப் படங்கள் முஸ்லிம்களைப் பீதிவயப்படுத்தியது. முஸ்லிம்கள் இந்தப் படங்களைப் பார்த்து கதிகலங்கிப் போனார்கள். அத்தோடு இந்தப் படங்கள் இரு வகுப்பாருக்கிடையில் பகையை வளர்க்க பெரிதும் உதவின.

வகுப்புவாதக் கலவரங்கள் நடக்கும்பொழுது அதில் பங்கெடுக்கும் சமூகத்தாரின் பெயர்களை வெளியிடாமல் இருப்பது பத்திரிகை தர்மம். ஆனால் இந்தத் தர்மத்தை சந்தேஷ் நாளிதழ் மீறியது.

உதாரணத்திற்கு அது வெளியிட்ட ஒரு செய்தி: “மத வெறியர்களின் ஒரு கும்பல் (முஸ்லிம்கள் என்று வாசிக்கவும்) பழங்குடியினப் பெண்களைக் கடத்திக் கொண்டு போனார்கள். இது மக்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.”

இன்னொரு செய்தியை அது இப்படி வெளியிட்டது: “மதவெறியர்கள் (முஸ்லிம்கள் என்று வாசிக்கவும்) ஒரு கோயிலைத் தாக்க முயற்சி செய்தார்கள். இது வதோதரா நகரத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இது பக்தர்களை (ஹிந்துக்கள் என்று வாசிக்கவும்) தங்கள் வழிபாடுத்தலத்தைப் பாதுகாக்கும் முகமாக வீதிக்கு வர வைத்தது.”

No comments:

Post a Comment