Showing posts with label நூலாய்வுரை. Show all posts
Showing posts with label நூலாய்வுரை. Show all posts

Tuesday, 24 March 2026

‘துரோகி’ - நூலாய்வு ஆக்கம்: அமீர் சுல்தான் (சஊதி அரபிய்யாவில் பணியாற்றும் பொறியியல் பட்டதாரி; இலக்கிய ஆர்வலர்)


”துரோகி” என்ற நூலின் தலைப்பே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கின்றது. அதன் முன்னுரையை வாசிக்கும்போது அது நிகழ்காலத்தின் வரலாறு, அதுவும் அமெரிக்க இராணுவ வீரனின் சுயபுராணம் என்பதை அறியும்போது உடனே வாசிக்க வேண்டும் என ஆவல் தோன்றும். பக்கங்களைப் புரட்டப் புரட்ட கீழே வைக்க இயலாத அளவுக்கு ஒரே வாசிப்பில் முடிக்க வேண்டிய புத்தகம் இது.
தனது வாழ்வில் ஏற்படும் சம்பவங்களோடு நம்மையும் அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். நாமும் அருகில் நின்று காணுவதைப்போன்ற ஓர் உணர்வு. அவனின் சுக துக்கங்கள் நம்மை ஆட்கொள்ள வைக்கின்றன. அப்படியொரு நடை.
சரி நூலுக்குள் வருவோம்!
சராசரி அமெரிக்க இளைஞனான டெர்ரி ஹோல்ட் புரூக்ஸ் ”இராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவை புரிய வேண்டும்” என்ற கனவுகளுடன் இராணுவத்தில் சேர்கின்றான். இராணுவத்தில் கொடுக்கப்பட்ட கடுமையான பயிற்சிகளுக்குப் பின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற மனப் பக்குவம் வருகின்றது அவனுக்கு.
அவன் இராணுவப் பணியில் சேர்ந்தபொழுது அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட சமயம் அது. எங்கு நோக்கினும் அது பற்றிய செய்திகளே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அச்செய்திகளில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் மிகைத்திருப்பதை உணர்கின்றான் புரூக்ஸ். ஓர் இனம்புரியாத சோகம் அவனது மனதில் படர்கின்றது. தன் மனதில் பட்ட உண்மைகளை வெளிப்படுத்தும் போது அவனது சக இராணுவத்தினரிடமிருந்தே எதிர்ப்புகளும் வசவுகளும் வருவதைக் கண்டு அதிர்வுறுகின்றான். ஒரு கட்டத்தில் மனதில்பட்ட நடுநிலை கருத்துகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவிக்கின்றான் புரூக்ஸ்.
கூடுதல் பணி நியமனத்திற்காக மேற்கொண்டு பயிற்சிகள் வழங்கும்போதுதான் அங்கு நாட்டுப்பற்றை விட முஸ்லிம் எதிர்ப்புணர்வே பயிற்சியாகவும் செயல்முறை விளக்கமாகவும் அளிக்கப்படுவதைக் கண்டு மனதில் சில நெருடல்கள் ஏற்படுவதை உணர்கின்றான்.
பணி ஆணைக்காக அரசு அலுவகத்தில் ”அவர்களுக்கு தேவையானதை அவசரமாக நாம் செய்துகொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் மிக நிதானமாகத்தான் செய்து கொடுப்பார்கள்” என்று அமெரிக்க அரசுத்துறை நிர்வாகத்தின் வேகத்தை விளக்கும்போது இந்தியாவை ஞாபகப்படுத்துகின்றார்.
ஒருவழியாக கூடுதல் பயிற்சியெல்லாம் முடிந்தபின் அவர் செல்ல வேண்டியது குவாண்டனாமோ சிறைச்சாலைக்கு என்ற பணிநியமன ஆணை கிடைக்கின்றது.
அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறை பற்றி நாம் செய்தித்தாள்களில் வாசிக்கும்போது அது அமெரிக்காவின் எங்கோ மூலையில் அமைந்துள்ள ஒரு பயங்கர சித்ரவதைக் கூடம் என்றே தோன்றியிருக்கும். ஆனால் குவாண்டனாமோ சிறை அமெரிக்காவிற்கு சிப்ப சொப்பனமாக விளங்கிய கியூபாவின் தீவில் உள்ளது என்ற ஆச்சரியமிக்க உண்மை என்பது இப்புத்தகத்தின் வழியே அறிய முடிகின்றது.
கியூபா என்பது பச்சைப் பசேல் என்ற அழகிய தீவு. அதில் குவாண்டனாமோ என்பது மட்டும் சுட்டெரிக்கும் மணலும் மணல் சார்ந்த பாலைவனத் தீவு ஆகும். அந்தத் தீவில் பூனை அளவில் உள்ள பெருச்சாளி, உடும்பு, பெரிய பல்லி, தட்டு அகலத்தில் சிலந்தி என்று ஆபத்தான விலங்குகளும், பூச்சிகளும் நிறைந்திருந்தன. இவற்றின் நடுவில்தான் அந்தச் சிறைக்கொட்டடி அமைந்திருக்கின்றது.
குவாண்டனாமோவிற்குச் சென்ற பிறகுதான் தெரிந்தது, சிறைக்கொட்டடியில் அடைத்திருக்கும் கைதிகளில் பெரும்பாலும் அப்பாவிகள் என்று. அதிலும் கைதிகள் அனைவரும் முஸ்லிம்கள்!
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர இடிப்பிற்குக் காரணமானவர்களை விசாரிப்பதற்காக என்று உருவாக்கப்பட்டதுதான் இந்தச் சிறைக்கொட்டடி. இன்னும் கூடுதல் தகவல் என்னவென்றால் சில நாடுகளிலிருந்து விலை கொடுத்து வாங்கப்பட்ட அப்பாவி கைதிகளும் அடக்கம்.
புரூக்ஸிற்கு கொடுக்கப்பட்ட பணி என்பது சிறைக் கைதிகளைக் கவனிப்பது, விசாரணைக்கு விலங்கிட்டு அழைத்துச் செல்வது, கைதிகளிடையே பிரச்னை ஏற்பட்டால் அவர்களைக் கடுமையாகத் தாக்குவது, மிக மோசமாகத் திட்டுவது போன்றவைதான்.
இராணுவ வீரர்களின் உணவுக்கூடங்களில் எப்பொழுதும் தொலைக்காட்சிப் பெட்டியில் இரத்த வேட்கையைத் தூண்டும் பாடல்களும், அமெரிக்க பலத்தைப் பறைசாற்றும் படங்களும், இரத்தம் சொட்டுவது மாதிரி எழுத்துகளின் எழுத்துருக்களும் அமைந்திருக்கும். ‘பழிவாங்கு’ என்ற சொற்களே ஒளிப்படமாக ஓடிக்கொண்டிருக்கும். இராணுவ வீரர்களின் பழிவாங்கும் எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும் உத்திகள் இவை.
அங்குள்ள கைதிகளை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, தொடர்ந்து தூங்க விடாமல் இடையிடையே விழிக்க வைத்து கொடுமைப்படுத்துவது, கைதிகள் எதிர்த்தால் அவர்கள் மீது மிளகுப்பொடி ஸ்பிரே அடிப்பது, அவர்களின் தாடிகளைச் சிரைப்பது எனச் சித்திரவதைகளில் பல்வேறு முறைகளைக் கையாண்டனர்.
கைதிகளிடம் அத்துமீறி நடப்பதைக் கண்டு புரூக்ஸின் மனம் துடிக்கின்றது. அதன் விளைவாக புரூக்ஸ் கைதிகளுடன் மிகவும் நல்ல முறையில் நடந்துகொள்கிறான், அவர்கள் சொல்வதைக் கேட்கின்றான். இதற்கு கைமாறாக கைதிகளிடமிருந்து கிடைத்தது அல்குர்ஆன்!
அதனைப் படிக்கின்றான். மனதில் சலசலப்புகள் ஏற்படுவதை உணர்கின்றான். ”தீய செயல்களின் ஒவ்வொரு கதவாக அடைத்துக் கொண்டு வரும்போது இறை உதவியின் கதவுகள் ஒவ்வென்றாய் திறக்கின்றன” என்ற அனுபவத்தைப் பகிர்கின்றான். (அதனைப் படிக்கும்போது நம் கண்களிலும் கண்ணீர் கசியும்).
இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகின்றது. அதனைத் தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தான், சிறையின் சூழல் அதற்கு தகுந்தாற்போலில்லை என்ற காரணத்தினால்.
ஒரு கட்டத்தில் இனியும் காலம் தாழ்த்தாது சிறையிலேயே இஸ்லாமை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து, அவன் மிகவும் மதிக்கும் கைதியான அஹ்மத் அர்ரஷாதியின் முன்னிலையில் கலிமாவை மொழிந்து இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறான். சிறையிலேயே அதனை நடைமுறையும் படுத்துகின்றான் புரூக்ஸ்.
இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை இவ்வாறு வர்ணிக்கின்றான் புரூக்ஸ்: ”இதுவரை நான் காணாமற் போயிருந்தேன். ஆனால் இப்பொழுது நான் எங்கிருக்கின்றேன் என்று எனக்குத் தெரிகிறது. நான் பயணிக்க எனக்கென்று ஒரு தெளிவான பாதை கிடைத்திருக்கின்றது”.
ஆனால் கைதிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதன் மூலமும், அவன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதன் விளைவாகவும் சக இராணுவ வீரர்களிடமிருந்து அவனுக்குக் கிடைத்த பெயர் ”துரோகி”!
பின்னர் குவாண்டனாமோவிலிருந்து பணி முடிந்து அமெரிக்காவிற்குத் திரும்ப அழைக்கப்படுகின்றான். அமெரிக்கா வந்ததில் மகிழ்ச்சியாக இருந்தாலும் குவாண்டனாமோவில் நடக்கும் அநீதங்களால் மனம் வெதும்பி அங்கு நடக்கும் அக்கிரமங்களை உலகுக்கு அறிவிக்க முடிவு செய்கிறான் புரூக்ஸ்.
அதனால் ஏற்பட்ட விளைவுகளை நூலின் இறுதி அத்தியாயத்தில் விளக்கியுள்ளான் புரூக்ஸ்.
இந்நூலை அழகுத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் காயல் பன்னூலாசிரியர் சகோதரர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள். ஒரே வாசிப்பில் முடிக்க வைக்கும் நடை. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

Saturday, 19 January 2019

டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் முஸ்தஃபா இல்லை... இல்லை... (துரோகி)யான கதை!

இந்தப் புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் என்னை உடனடியாக படிக்கத் தூண்டிய புத்தகம்தான் "துரோகி".

காரணம்,  அதனுடைய தலைப்பு என்னை கவர்ந்தது. பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் இரண்டே நாளில் வாசித்து முடித்தேன் அந்தப் புத்தகத்தை.

மிக அற்புதமான அனுபவக் கட்டுரையை தந்துள்ளார் 'டெர்ரி ஹொல்ட்புரூக்ஸ்'. தமிழில் அதனை மிக எளிமையாக தந்திருக்கிறார் M.S.அப்துல் ஹமீது அவர்கள்.

கட்டுரையாளர் ஓர் அமெரிக்க இராணுவ வீரர். எதிர்பாராத விதமாக கியூபாவிலுள்ள குவாண்டனாமோ சிறைச்சாலையில் அவர் பணி செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார். அங்கு, தான் கண்ட அனுபவத்தையும், அதனால் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தையும் விவரிக்கும் அற்புதமான பயணம், இறுதியில் இஸ்லாமில் முடிகிறது.

அவரை இஸ்லாமின் பக்கம் இழுத்த காரணிகளில் மிக முக்கியமானது,
முஸ்லிம்கள்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் அவர் கொண்டிருந்த தவறான எண்ணங்களுக்கு, சரியான விளக்கத்தை சிறைக் கைதிகளிடம் காண்பது மட்டுமல்லாமல் நேரடியாக பார்க்கிறார், உணர்கிறார்.

நூலில், குவாண்டனாமோ சிறையையும் அங்கு கைதிகளுக்கு தரப்படும் தண்டனை பற்றிய விவரிப்பும் அதிர்ச்சி ரகம்.

அமெரிக்க மக்களின் ஒட்டுமொத்த சிந்தனைத் தொகுப்பையும் கட்டுரையாளர் மிக அழகாக விளக்குகிறார்.

எழுத்துநடை மிக எளிதாக வேகமாக வாசிக்க தூண்டுகிறது. மொழிபெயர்ப்பு மிக அற்புதம். எல்லோரும் வாசிக்க வேண்டிய நூல்.

கட்டுரையாளர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் கைதிகளிடம் பேசியதாலே  துரோகியாக்கபட்டார் என்பது சுவாரஸ்யமானது. படித்துப் பாருங்கள். நல்ல அனுபவம்.

மொழிபெயர்ப்பாளர் சகோதரர் அப்துல் ஹமீத் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதிகை வசந்தன் (நெல்லை நியாஸ்)

Wednesday, 14 February 2018

“பேராசிரியர் பெருமானார் (ஸல்)” - நூலாய்வுரை




காயல் பட்டினத்தைச் சார்ந்த ஆலிமா சித்தி லரீஃபா அவர்கள் உம்மு நுமைரா என்ற புனைப் பெயரில் எழுதிய நூலே “பேராசிரியர் பெருமானார் (ஸல்)”.

அகிலத்தாருக்கெல்லாம் அழகிய முன்மாதிரியாகத் திகழ்பவர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள். குறிப்பாக ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவர்களே சூப்பர் ஹீரோ. எனவேதான் முஸ்லிம்கள் அண்ணலாரை உயிரினும் மேலாக நேசிக்கின்றனர்.

அகிலத்தாருக்கு அல்லாஹ்வின் அருள்மறையைப் போதிக்க வந்த அண்ணலார் அவர்கள் ஆசிரியராக மிளிர்ந்தார்கள் என்பதில் வியப்பில்லை. ஆனால் அனைத்துத் திறமைகளையும் கொண்ட, கற்றுத் தருதலின் அனைத்து முறைமைகளையும் அக்குவேறு ஆணிவேராக அறிந்திருந்த பேராசிரியராகத் திகழ்ந்துள்ளார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் நூல்தான் “பேராசிரியர் பெருமானார் (ஸல்)”.

“அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஓர் ஆன்மீகத் தலைவராய், சிறந்த ஆட்சித் தலைவராய், வீரமும், விவேகமும் நிறைந்த போர்த் தளபதியாய், உற்ற தோழராய், அன்புக் கணவராய், ஆருயிர்த் தந்தையாய், கண்ணியமிகு மனிதராய் எனப் பல்வேறு பரிமாணங்களில் நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் நாமெல்லாம் அதிகம் அறிந்திராத சிறந்த ஆசிரியராய் அவர்களை உங்களிடம் அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கமாகும்” என்று நூலாசிரியர் எழுதிய முன்னுரையின் முதல் வாசகமே நூலின் நோக்கத்தை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

“சுமார் பதினைந்து ஆண்டுகளாக ஓர் ஆசிரியையாக பணியாற்றிய வகையில், அண்ணலாரின் நடைமுறைகளை நபிமொழிகள் வடிவிலாக நெருங்கி நின்று பார்க்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றதினால் பேராசிரியர் பெருமானார் (ஸல்) அவர்களைப் பார்த்து பிரமித்துப் போனேன். நான் ஆச்சரியப்பட்ட, பிரமித்த, இரசித்த விஷயங்களை உங்களோடும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்நூலை எழுத விழைந்தேன்” என்று நூலாசிரியர் குறிப்பிட்டதைப் படிக்கும்பொழுது நமக்கும் சுவாரசியம் ஒட்டிக் கொள்கிறது.

30 அத்தியாயங்களாக இந்நூலைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர். ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு கற்றல் முறையை அழகுற விளக்குகிறது.

கேட்பவர்களை சடைவடையச் செய்யாதிருத்தல், எளிமையான மொழி நயம், கேட்பவர்களின் அறிவுக்கும், புரிதல் திறனுக்கும் ஏற்றவாறு பேச்சுகளை அமைத்துக் கொள்ளுதல், வினாக்கள் மற்றும் விவாதங்கள் மூலம் புரிய வைத்தல், உதாரணங்களைப் பயன்படுத்தி விளக்குதல், கோடுகள் மற்றும் வரைபடங்கள் மூலமாக விளக்குதல், … என்று நீளும் பொருளடக்கப் பட்டியலைப் படிக்கும்போதே எழும் ஆர்வத்திற்கு அணை போட முடியவில்லை.

நம் எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல் திருப்தியுடன் பூர்த்தி செய்கிறார் நூலாசிரியர். தான் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு தலைப்புக்கும் பொருத்தமான ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய இடங்களில் சரியாகப் பொருத்தியிருக்கிறார்.

“அநாதைகளை ஆதரிப்பவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறு (நெருக்கமாக) இருப்போம்” என்று தமது சுட்டுவிரலையும், நடு விரலையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் காட்டினார்கள்” என்ற நபிமொழியை மையப் பொருளாக வைத்து “கையசைவுகள் மற்றும் சைகைகள் காட்டி விளக்குதல்” என்ற அத்தியாயத்தைத் தீட்டியிருக்கிறார் நூலாசிரியர்.

“அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டை விட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்” என்ற அண்ணலாரின் அருள்மொழியை அடிப்படையாக வைத்து “கண் முன்னால் காணும் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக்கொள்ளுதல்” என்ற அத்தியாத்தை வரைந்துள்ளார் நூலாசிரியர்.

இப்படி ஒவ்வொரு அத்தியாயமும் அழகிய உதாரணங்களாக அண்ணலாரின் அருள்மொழிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

நபிகளார் முக்கியமான சில வார்த்தைகளை ஏன் மூன்று முறை கூறினார்கள், கதைகளையும், முற்கால நிகழ்வுகளையும் அவ்வப்பொழுது ஏன் கூறினார்கள், சிலரிடம் மட்டும் ஏன் தனிக் கவனம் செலுத்தினார்கள் போன்ற கேள்விகளுக்கு தகுந்த விளக்கத்தைத் தருகிறது இந்நூல்.

அவசியமான இடங்களில் அண்ணலார் கோபமும், கண்டிப்பும் காட்டியது, தோழர்களிடம் நிதானமாகவும், மென்மையாகவும் நடந்துகொண்டது, செய்திகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்திக் கூறியது, படிப்படியாகக் கற்றுக் கொடுத்தது, தோழர்களின் திறமைகளைப் பாராட்டியது, அவர்களை உற்சாகப்படுத்தியது, தோழர்களின் அறிவைப் பரிசோதிப்பதற்காக வினா எழுப்பியது, வெட்கப்படக்கூடிய விஷயங்களை கற்பிக்கும்போது நாசூக்காக நளினமாகக் கூறியது, தோழர்களின் தேடுதல் திறனை அதிகரிப்பதற்காக சில விஷயங்களை மூடலாகக் கூறியது என்று பல நிகழ்வுகள் விளக்கங்களுடன் விரிகிறது இந்நூலில்.

“மதிப்பெண்கள் அதிகமாய் எடுப்பவர்களை நல்ல மனன சக்தி உள்ளவர் என்று வேண்டுமானால் கூறலாம். நல்ல அறிவுடையவர் என்று நிச்சயமாய் கூறிவிட முடியாது” என்று ஓரிடத்தில் நூலாசிரியர் நச்சென்று குறிப்பிடுவது இன்றைய கல்வி முறையின் முகத்தில் அறைவது போல் உள்ளது.

“நானும் ஓர் ஆசிரியராகவே அனுப்பப் பட்டுள்ளேன்” என்று உரக்கச் சொன்ன உத்தம நபி (ஸல்) அவர்களின் கற்பித்தல் முறை எவ்வாறெல்லாம் இருந்தது என்பதன் ஒரு வடிவம் மூளைக்குள் முளைத்து விடுகிறது நூலைப் படித்து முடிக்கும்பொழுது.

சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகமதிகம் அவசியம் என்ற காலத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு நூலாசிரியர் இன்னும் பல நூல்களைப் படைத்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிட வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

அச்சுப் பிழைகளின்றி, மிக நேர்த்தியாக அச்சுச்கோர்ப்பு செய்து, அழகிய வகையில் பக்கங்களையும் வடிவமைத்திருக்கிறார்கள் தாருஸ் ஸலாஹ் பதிப்பகத்தார். அவர்கள் எடுத்துக்கொண்ட சிரத்தை ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது. பாராட்டுகள்.

அனைத்து முஸ்லிம்களும் அவசியம் படித்திட வேண்டிய நூல். குறைந்தபட்சம் அனைத்து ஆசிரியர்களும் அவர்களின் தகைமைகளை வளர்த்திட அவசியம் அள்ளிப் பருக வேண்டிய நூல்.

புதிய விடியல், டிசம்பர் 16-31, 2017