Tuesday 21 April 2020

கரீம் ஹாஜியும் கொரோனாவும்

கரீம் ஹாஜி தன் தள்ளுவண்டியோடு கிளம்பினார். சந்தைக்குச் சென்று அப்துல்லாஹ் மச்சானிடம் காய்கறிகளை வாங்கவேண்டும். அவன் தூரத்துச் சொந்தம். சின்ன வயதிலிருந்தே மச்சான் என்று அழைத்து வழக்கமாகி விட்டது.

‘இன்னைக்கு எப்படி இருக்கானோ… நல்ல மூடுல இருந்தா கொஞ்சம் சகாய விலைக்குத் தருவான். கையில நாலு காசு கூட நிக்கும்’ என்று எண்ணியவாறே தள்ளுவண்டியைத் தள்ள ஆரம்பித்தார் கரீம் ஹாஜி.

ஹஜ் செய்திடவேண்டும் என்ற ஆவலில் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி பணத்தைச் சேர்த்தார் கரீம் ஹாஜி. மனைவியின் கொஞ்சம் நகைகளை விற்றும் தனக்கென்று இருந்த ஒரு சிறிய காணி நிலத்தை விற்றும் தேறிய பணத்தை வைத்து எப்படியோ கரீமும் அவருடைய மனைவி ஆயிஷாவும் 20 வருடங்களுக்கு முன்பு ஹஜ் கமிட்டியில் எழுதிப்போட்டு, குலுக்கலில் தேர்வாகி ஹஜ் செய்துவிட்டனர். அதனால் வெறும் கரீமாக இருந்தவர், கரீம் ஹாஜியானார். மற்றபடி ஹாஜியார் என்றவுடன் பணக்காரர் என்று எண்ணிவிடவேண்டாம். அன்றாடங்காய்ச்சிதான்.

“வாங்க மச்சான்… நீங்க ஊருக்குத்தான் ஹாஜி… எனக்கு மச்சான்தான்… என்ன இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வாரிய…?” என்று சிரித்துக்கொண்டே அப்துல்லாஹ் மச்சான் கேட்டான். அவனும் இவரை மச்சான் என்றுதான் அழைப்பான்.

‘ஆஹா… பயபுள்ள நல்ல மூடுலதான் இருக்கான்’ என்று மனதில் கணக்குப் போட்டவாறே தள்ளுவண்டியை நிறுத்திவிட்டு அப்துல்லாஹ்விடம் வந்தார் கரீம் ஹாஜி.

அவனுக்கும் பெரிய கடை ஒன்றும் இல்லை. அந்தச் சந்தையில் ஓர் ஓரத்தில் கிடுகு போட்ட சின்னக் கடைதான். காய்கறி மொத்த வியாபாரம். இவனிடமிருந்து தினமும் காலையில் காய்கறிகளை மொத்த விலைக்கு வாங்கித்தான் கரீம் ஹாஜி தன் பிழைப்பை ஓட்டி வந்தார்.

“பூலாஞ்செண்டு சரியா பழுக்கலையோ… பச்சையா இருக்கு…”

“இன்னைக்கு இதுதான் வந்திச்சு…”

“மச்சான்... ஏதோ கொரோனாவாம். கவனமா இருந்துக்கோங்க. ஆயிஷா மச்சி கிட்டயும் சொல்லி வைங்க...” என்றான் அப்துல்லாஹ்.

“ஆமாமா... சைனாவிலிருந்து வந்திருக்காம். எங்கெல்லாமோ பரவிக்கிட்டு வருதாம்...” என்று தான் கேள்விப்பட்டதையும் சொன்னார் கரீம் ஹாஜி.

காய்கறிகளை தன் தள்ளுவண்டியில் முடிந்தவரை ரகம் வாரியாகப் பிரித்து வைத்தார். சிகரெட் அட்டையில் தேதி போட்டு அப்துல்லாஹ் மச்சான் அன்றைய கணக்கை எழுதித் தந்தான். விலையைக் கொஞ்சம் குறைத்துத்தான் போட்டிருந்தான்.

அதைச் சட்டைப்பையில் வைத்தவாறே தள்ளுவண்டியைத் தள்ள ஆரம்பித்தார். நான்கைந்து தெருக்கள் தள்ளி உள்பக்கமாகச் சென்று கூவ வேண்டும்.

பலருடைய வீடுகளிலும் கரீம் ஹாஜி அன்று கொண்டு வருகிற காய்கறிகளைப் பொறுத்துதான் மதிய உணவே அமையும். இதற்காக ‘கரீம் ஹாஜி இன்னைக்கு நல்ல காய்கறியா கொண்டு வரணும்பா…’ என்று பிரார்த்திக்கிற கணவர்களும் உண்டு.

உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது. நான்காம் தெருவிலுள்ள பள்ளியில் ளுஹர் தொழுத கரீம் ஹாஜி, அசதியில் வெளிப்பள்ளியில் அயர்ந்து உறங்கினார். முழிப்பு வந்தவுடன் பசி வயிற்றைக் கிள்ளியது. எழுந்து முகம், கை கழுகிவிட்டு பள்ளி காம்பவுண்டுக்குள் நிறுத்தியிருந்த தள்ளுவண்டிக்கு வந்தார். தூக்குச் சட்டியில் வைத்திருந்த பழஞ்சோறை ஓரமாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.

சோறும் சாம்பாரும் செய்து தருகிறேன் என்று மனைவி சொல்வாள். ஆனால் வெயிலில் அலைவதால் கெட்டுப்போய் விடும் என்பதால் பழஞ்சோறைத்தான் தரச் சொல்வார். ஊறுகாயைத் தொட்டு உண்டால் அன்றைய மதிய உணவும் முடிந்துவிடும். வயிறும் மனமும் நிரம்பி விடும்.

வெயில் தாழும் வரை பள்ளியிலேயே இருந்தார் கரீம் ஹாஜி. அஸ்ர் தொழுதுவிட்டு தள்ளுவண்டியைத் தள்ள ஆரம்பித்தார். வாழைப்பழங்கள் கொஞ்சம் மீதமிருந்தன. இன்னும் இரண்டு தெருக்களுக்குச் சென்று கூவி விற்க வேண்டும்.

அன்றைக்கு தள்ளுவண்டி காலியாகி விட்டது கரீம் ஹாஜிக்கு திருப்தியை ஏற்படுத்தியது. நேராகச் சந்தைக்குச் சென்றார். அப்துல்லாஹ் மச்சானிடம் சென்று அன்றைய கணக்கை முடித்தார்.

எல்லாம் போக 300 ரூபாய் கையில் தேறியது. அடுத்த நாளுக்கு வேண்டிய மளிகைச் சாமான்களைச் சந்தையில் வாங்கிவிட்டு வீட்டை நோக்கி கரீம் ஹாஜி வண்டியைத் தள்ளினார்.

மறுநாள் சந்தைக்கு வந்தவருக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. ஊரடங்கு உத்தரவாம்… அதனால் கடைகளையெல்லாம் அடைக்க வேண்டுமாம்…யாரும் சந்தைக்கோ கடைத்தெருவுக்கோ வரக்கூடாதாம்… என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

அப்துல்லாஹ் மச்சான் கடை பூட்டிக் கிடந்தது. வீட்டிலுள்ள செலவுகள் மனதில் வந்துபோயின. என்ன செய்வதென்று தெரியவில்லை கரீம் ஹாஜிக்கு.

மீண்டும் வீட்டை நோக்கி வண்டியைத் தள்ளினார். செலவுக்கு என்ன செய்வது… சிந்தனை தடுமாறியது.

வீட்டிலிருந்த ஒருசில மளிகை சாமான்களை வைத்து, மிச்ச சொச்ச காய்கறிகளை வைத்து மூன்று நாட்களை ஓட்டினார்கள் கரீம் ஹாஜியும் ஆயிஷாவும்.

----------------------------------------

கரீம் ஹாஜி தலையில் கை வைத்தவாறு வீட்டில் அமர்ந்திருந்தார். கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு ஐந்து நாட்களாயிற்று. வீட்டிலிருந்த மளிகைச் சாமான்கள், அரிசி, பருப்பு அனைத்தையும் வழித்தாயிற்று. இனி சாப்பாட்டுக்கு என்ன செய்வது?

பானையில் இருந்த சிறிது தண்ணீரை வைத்து தேத்தண்ணி போட்டுத் தந்தாள் ஆயிஷா. அதைச் சூடாகக் குடித்துக்கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தார் கரீம் ஹாஜி.

கரீம் – ஆயிஷா தம்பதியருக்குக் குழந்தைகள் இல்லை. தள்ளு வண்டியில் காய்கறிகளை வைத்துக்கொண்டு தெருத் தெருவாக விற்று தினமும் கிடைக்கும் நூறோ இருநூறோ ரூபாயை வைத்துத்தான் அவர்களின் பிழைப்பு ஓடிக்கொண்டிருந்தது.

உழைத்த கைகள்… யாரிடமும் கையேந்திப் பழக்கமும் இல்லை. உதவுவதற்கு அக்கம் பக்கத்தில் வீடுகளும் இல்லை. ஒன்றும் புரியவில்லை கரீம் பாய்க்கு. ஆயிஷா அப்படியே ஒரு மூலையில் அசைவற்று அமர்ந்திருந்தாள்.

திடீரென்று வாசற்கதவு தடதடவென்று தட்டப்படும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்த கரீம் ஹாஜி அதிர்ச்சியில் அசைவற்று நின்றார். “நீங்கதானே கரீம்… வாங்க பாய்… இன்ஸ்பெக்டர் கூப்பிடுறார்…” என்று முகக்கவசமும் கையுறையும் அணிந்திருந்த நான்கைந்து போலீஸ்காரர்கள் வாசலில் நின்று கூறினர்.

ஆயிஷாவும் சப்தம் கேட்டு இயன்றும் இயலாமலும் எழுந்து வாசலை நோக்கி ஓடி வந்தாள். கரீம் ஹாஜி என்ன கேட்பது, என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும்பொழுதே தயாராக நின்றிருந்த ஆம்புலன்சுக்கு அவரை அழைத்து வந்தனர். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவரை உள்ளே ஏற்றினர். ஆயிஷா அச்சத்தில் அலறுவது ஈனஸ்வரமாக கரீம் ஹாஜியின் காதுகளில் விழுந்தது.

“ஏன் என்னைய புடிச்சுட்டுப் போறீங்க…” என்று கரீம் பாய் பதட்டத்துடன் கேட்டது யார் காதிலும் விழவில்லை. முன் இருக்கையிலிருந்த ஒரு காவலர், “டெல்லி தப்லீக் ஜமாத்துக்குப் போய் வந்தீங்களா பாய்… அங்க போய்ட்டு வந்தவங்க எல்லாத்துக்கும் கொரோனா வந்திருக்காம்… எல்லாத்தையும் புடிச்சு டெஸ்ட் எடுக்க அரசாங்க உத்தரவு வந்திருக்கு…” என்றார்.

“நான் எந்த மாநாட்டுக்கும் போகலீங்க… எனக்கு எதுவும் இல்லீங்க சார்…”

“உங்க பேர் லிஸ்ட்ல இருக்கே...”

கரீம் ஹாஜியின் தாடியையும் ஜிப்பாவையும் வைத்து யாரோ இவரது பெயரையும் லிஸ்டில் ஏற்றிக் கொடுத்துள்ளனர்.

மற்ற காவலர்கள் போலீஸ் ஜீப்பில் ஆம்புலன்சைப் பின்தொடர்ந்து வந்தனர். அதற்குள் அரசு மருத்துவமனை வந்துவிட்டது. மருத்துவமனை வளாகத்திற்குள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்துக்குள் அவரை அழைத்துச் சென்றார்கள். ஏட்டையா வந்து பெயர், வயது, வீட்டு முகவரி என்று எல்லாவற்றையும் சரி பார்த்துக் கொண்டார்.

கரீம் ஹாஜியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியவுடன்தான் காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாதது நினைவுக்கு வந்தது. ஆயிஷா என்ன செய்கிறாளோ என்று மனத்துக்குள் ஆதங்கப்பட்டார்.

மதிலில் சாய்ந்திருந்தவர் அப்படியே விட்டத்தைப் பார்த்துக்கொண்டு சிலையாகக் கிடந்தார். “பாய்… இந்தாங்க டீ சாப்பிடுங்க…” என்று டீயையும் பிஸ்கட்டையும் தரையில் வைத்தார் ஒரு காவலர்.

தேநீரைப் பார்த்ததும் ஏதோ உந்துதல் வந்தவராய் ஒரு கையால் டீயை எடுக்க முனைந்தார். கை நடுங்கியதால் இரண்டு கைகளையும் கொண்டு டீ கிளாசை இறுகப் பற்றிக்கொண்டு எடுத்து ஒரே வீச்சில் குடித்தார். பசியின் கொடுமையில் தேநீரின் சூடு அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை.

தேநீர் உள்ளே சென்றவுடன் நரம்புகளுக்குள் புதிய மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. உடலுக்குள் புதுத் தெம்பு புகுந்தது. பசியால் அடைத்திருந்த காதுகள் திறந்தன. மங்கலாக இருந்த கண்கள் தெளிந்தன. பிஸ்கட்டையும் சாப்பிட்டு முடித்தார்.

‘ஆயிஷா பசிக்கு என்ன செய்கிறாளோ… ஏற்கனவே பலவீனமான உடம்பு அவளுக்கு…’ என்று மனதுக்குள் நினைத்தவுடன் நிறைந்தன கண்கள்.

சிறிது நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மிடுக்காக முகக்கவசமும் கையுறையும் அணிந்திருந்த ஒருவர் உள்ளே வந்தார். ஏட்டையாவும் மற்ற போலீஸ்காரர்களும் எழுந்து சல்யூட் அடித்தார்கள்.

“என்னய்யா… இன்னைக்கு எத்தனை பேரு…?” என்று கேட்டுக்கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தார் அவர்.

“இன்ஸ்பெக்டர் அய்யா… இன்னைக்கு மொத்தம் 11 பேர்… அமெரிக்காவிலிருந்து வந்த 10 பேர்… அவங்கள அல்ரெடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சுட்டோம். ஒருத்தர் தப்லீக் ஜமாத் கேஸ்… இங்க உள்ள இருக்கார்…” என்ற ஏட்டையா நோட்டை இன்ஸ்பெக்டரிடம் நீட்டினார்.

“ஓகே… இவரையும் ஐசோலேஷன் வார்டுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லுங்க…” என்று அந்த நோட்டில் கையெழுத்திட்டார் இன்ஸ்பெக்டர்.

ஏட்டையா காவலர்களிடம் சொல்ல, முகக்கவசம் அணிந்த காவலர்கள் அவரை இரு பக்கமும் பிடித்துக்கொண்டு சென்றனர். வெளியே வந்த கரீம் ஹாஜி அரண்டு விட்டார். நூற்றுக்கணக்கான கேமராக்கள் இவரைப் பார்த்ததும் பரபரப்பாயின. கேமராக்களின் ஃபிளாஷ் வெளிச்சங்களினால் கரீம் ஹாஜியின் கண்கள் கூசின. கரீம் ஹாஜியின் இரு பக்கமும் வந்த காவலர்கள் பெருமிதத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து புன்னகைத்தனர்.

ஐசோலேஷன் வார்டு ஆண்கள் பிரிவில் நின்றுகொண்டிருந்த அமெரிக்காவிலிருந்து வந்த 10 பேரோடு கரீம் ஹாஜியையும் நிறுத்தினர். ஒருவர் வந்து கரீம் ஹாஜியின் முகத்தில் கவசத்தை மாட்டிவிட்டுச் சென்றார்.

மணிக்கணக்காகக் காத்திருந்த பின்னர் மதிய வேளையில் அவர்களை உள்ளே அழைத்துச் சென்று, ஒவ்வொரு ஆளாக தனியறைக்கு அழைத்துச் சென்றனர்.

கரீம் ஹாஜியையும் அதேபோன்று தனியறைக்கு அழைத்துச் சென்று தொண்டையிலிருந்து ஒரு துளி சளியும் விரலைக் குத்தி சிறிது இரத்தமும் எடுத்தனர். பின்னர் அவர்களனைவரையும் ஐசோலேஷன் வார்டிலுள்ள படுக்கைகளுக்கு அனுப்பினார்கள். ஒவ்வொரு படுக்கையும் இரண்டு மீட்டர் இடைவெளியில் போடப்பட்டிருந்தது.

படுக்கையில் சாய்ந்த கரீம் ஹாஜி, எதிரே இருந்த டிவியை அப்பொழுதுதான் கவனித்தார். “டெல்லி தப்லீக் மாநாட்டிற்குச் சென்று வந்த கரீம் என்பவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. பலமுறை அறிவித்தும் வெளிவராமல் வீட்டிலேயே ஒளிந்திருந்த அவரைப் போலீசார் மடக்கிப் பிடித்து அரசு மருத்துவமனையில் தனிமைப் பிரிவில் சேர்த்துள்ளனர்” என்று செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இரு பக்கமும் போலீஸ் சகிதம் கரீம் பாய் அழைத்துச் செல்லப்படும் காட்சி காண்பிக்கப்பட்டது.

“டெல்லி தப்லீக் மாநாட்டுக்குச் சென்று வந்த ஒருவர் பிடிபட்டார். அரசு மருத்துவமனையில் அனுமதி” என்று அதே செய்தி கீழே ஓடிக்கொண்டிருந்தது.

கரீம் ஹாஜிக்குத் தூக்கி வாரிப்போட்டது. டெல்லியே சென்றிராத தன்னை “சந்தேகத்தின் அடிப்படையில் பிடிக்கப்பட்டுள்ளார்” என்றுகூடச் சொல்லாமல் உறுதியாக, தெளிவாகச் சொல்கிறார்களே… என்று உள்ளூர குமைந்து, குலுங்கிக் குலுங்கி அழுதார். எல்லாம் வெறுமையாகத் தெரிந்தன. கண்களை மூடினார்.

“பாய்… இந்தாங்க... இந்த ஜூஸ குடிங்க…” என்று ஒரு நர்ஸ் வந்து எழுப்பியவுடன்தான் அசதியில் தான் அயர்ந்து தூங்கிவிட்டது தெரிந்தது. எழுந்து ஜூஸை வாங்கியவருக்கு ஆயிஷாவின் நினைவு சட்டென்று வந்து ஈரக்கொலையைப் பிழிந்தது. ஜூஸைக் குடித்து முடித்தார்.

---------------------------------

ஆயிஷாவின் கைகள் நடுங்கின. நெஞ்சு படபடத்தது. பசியில் காதுகள் அடைத்தன. மதிலைப் பிடித்து மெல்ல எழுந்தவள் தண்ணீர்ப் பானையை நோக்கி நடந்தாள்.

பானையில் தண்ணீர் அடியில் கிடந்தது. அதனை மொண்டு குடித்தவள், அப்படியே அந்த இடத்தில் சுருண்டு படுத்துவிட்டாள். கண்கள் மங்கின. மூச்சு நின்றுவிடும் போலிருந்தது.

---------------------------------

“பாய்… நீங்க ஒரே நாள்ல ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டீங்க…” என்று பக்கத்து படுக்கையிலிருந்த அமெரிக்காவிலிருந்து வந்தவர் சொன்னார். ‘என்ன?’ என்று கரீம் ஹாஜி கேட்பதற்குள் அவர் அன்றைய மாலை நாளிதழை நீட்டினார்.

கரீம் ஹாஜியின் மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. “தலைமறைவாக இருந்த தப்லீகி கைது! டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்!!” என்று முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் தலைப்புச் செய்தி வந்திருந்தது. கரீம் ஹாஜியும் அவரது இரு பக்கங்களிலும் பெருமிதத்துடன் நிற்கும் போலீஸ்காரர்களின் படமும் பெரிய அளவில் வந்திருந்தது.

கண்கள் நிலைகுத்தி நிற்க, கைகள் நடுநடுங்க, நெஞ்சம் படபடக்க அந்தச் செய்தி முழுவதையும் வாசித்து முடித்தார். முற்றிலுமாக புதிய கதை சொல்லப்பட்டிருந்தது. வேறு யாருடைய செய்தியையோ படிப்பது போலிருந்தது. ஆனால் இடையில் கரீம் என்று பெயர் வருவதை வைத்துத்தான் இது தம்மைக் குறித்த செய்தி என்றுணர்ந்தார்.

நெஞ்சு படபடப்பு குறையவில்லை. அப்படியே கண்கள் மூடிக் கிடந்தார் கரீம் ஹாஜி. தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் கரீம் ஹாஜியின் முகம் வந்துகொண்டேயிருந்தது. கீழே அவரது பெயரில் செய்தி ஓடிக்கொண்டே இருந்தது.

இரண்டு நாட்கள் கழிந்தன.

-------------------------------

“கொரோனா ரிசல்ட் வந்திருக்கு...” என்று மூன்றாவது நாள் காலையில் பரிசோதனை முடிவுகளுடன் வார்டுக்கு வந்த மூத்த நர்ஸ் அறிவிக்கவும் அனைவரும் அலறிப் புடைத்து படுக்கைகளிலிருந்து எழுந்தனர்.

“கரீம் என்பவருக்கு நெகட்டிவ். மீதி 10 பேருக்கும் பாசிட்டிவ்…”

அந்த 10 பேரும் அச்சத்தில் அரற்றினார்கள்.

கரீம் ஹாஜியிடம் வந்த மூத்த நர்ஸ், “உங்களுக்கு கோரோனா இல்லன்னு வந்துட்டுது. நீங்க வீட்டுக்குப் போகலாம்” என்று கூறினார்.

கரீம் ஹாஜி மலங்க மலங்க விழித்தார். அப்ப டிவியிலயும் பேப்பர்லயும் வந்த செய்தி… அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஐசோலேஷன் வார்டு ஆண்கள் பிரிவிலிருந்து மெல்ல வெளியே வந்த கரீம் ஹாஜி, வீதியிலிறங்கி மூன்று மைல் தொலைவிலிருக்கும் தன் வீடு நோக்கி மெதுவாக நடந்தார்.

“இந்தாங்க பாய்… இதுல பிரியாணி இருக்கு… சாப்பிடுங்க…” என்று ஒரு குரல் கேட்டுத் திரும்பினார். அங்கே இலேசாகத் தாடி வைத்திருந்த ஒரு முஸ்லிம் இளைஞன் கையில் ஒரு பொட்டலத்தையும் தண்ணீர் பாட்டிலையும் கரீம் ஹாஜியின் கைகளில் திணித்துவிட்டு ஓடினான்.

கரீம் ஹாஜி அவன் ஓடிய திசையில் நோக்கினார். அங்கே முகக்கவசம் அணிந்து, கையுறை அணிந்த முஸ்லிம் இளைஞர்கள் வீதியில் வருபவர்களுக்கு உணவுப் பொட்டலங்களைக் கொடுப்பதில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தனர்.

இன்னும் இரண்டு மைல் தொலைவிலிருக்கும் வீட்டுக்குப் போகவேண்டுமெனில் இதனைச் சாப்பிட்டால்தான் தெம்பு வரும் என்றெண்ணிய கரீம் ஹாஜி, அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து பிரியாணிப் பொட்டலத்தைப் பிரித்தார்.

அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்பொழுது, “பாய்… இதுல ஒரு மாசத்துக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் இருக்கு… எடுத்துட்டுப் போங்க பாய்…” என்று ஒரு இளைஞன் ஒரு பொட்டலத்தை கரீம் ஹாஜியின் அருகில் வைத்துவிட்டு ஓடினான்.

அந்தப் பொட்டலத்தையும் ஓடிப் போன அந்த இளைஞனையும் பார்த்த கரீம் ஹாஜியின் கண்கள் நனைந்தன. மரத்தடியில் கைகழுவிவிட்டு எழுந்த கரீம் ஹாஜி, அந்தப் பொட்டலத்தையும் எடுத்துக்கொண்டு வீடு நோக்கி நடந்தார். ஆயிஷா என்ன செய்கிறாளோ… என்று மனம் இடைக்கிடையில் கேட்டுக்கொண்டது.

-----------------------------------

“ஆயிஷா… ஆயிஷா…” என்று கூறிக்கொண்டே தன் வீட்டுக் கதவைத் தட்டினார் கரீம் ஹாஜி. கதவு தானாகத் திறந்தது.

உள்ளே புகுந்த கரீம் ஹாஜி முன்னறையில் நோக்கினார். உள்ளறைக்கு ஓடினார். அடுக்களைக்கு ஓடினார். கொல்லைப்புறத்தில் தேடினார். எங்குமே ஆயிஷாவைக் காணவில்லை.

தண்ணீர்ப் பானைக்கு அருகில் வந்தார். அது உடைந்து கிடந்தது. கரீம் ஹாஜியின் தலையில் இடி விழுந்தது போலிருந்து. கண்ணீர் தாரைதாரையாகக் கொட்ட ஆரம்பித்தது.

அரக்கப் பரக்க வெளியே ஓடி வந்தவர் தெருவில், ”குமாரண்ணே... ஆயிஷாவப் பார்த்தீங்களா...?” என்று கேட்டார். ஏதோ பேய், பிசாசைப் பார்ப்பது போல் குமார் கரீம் ஹாஜியை விட்டு விலகி ஓடினார். தெருவில் வருவோர் போவோரிடம் அங்கும் இங்குமாக ஓடி ஆயிஷாவைப் பற்றி விசாரித்தார் கரீம் ஹாஜி. அனைவரும் அவரைப் பார்த்ததும் அலறிப் புடைத்து அகன்று சென்றனர்.

கரீம் ஹாஜிக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நாம் என்ன தவறு செய்தோம்...? ஏன் இப்படி ஓடி ஒளிகிறார்கள்?’

அப்படியே தலையில் கை வைத்து வீட்டு வாசற்படியில் அமர்ந்தார் கரீம் ஹாஜி. வருவோர் போவோரை வெறுமையாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“பாய்… உங்க பொண்டாட்டிய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போய்ட்டாங்க…” என்று குரல் கேட்டு தலையைத் திருப்பினார் கரீம் ஹாஜி. கொஞ்சம் தள்ளியிருக்கும் வீட்டில் வாழும் சலீம் தூரத்தில் நின்று கத்தினார்.

“ஏன் அவள ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனாங்க?”

“உங்களுக்குக் கொரோனா இருக்கிறதால அவங்களுக்கும் தொற்றியிருக்கும்னு சொல்லி ஆம்புலன்சுல கூட்டிட்டுப் போனாங்க…”

வாரிச் சுருட்டிக்கொண்டு தான் வந்த மருத்துவமனை நோக்கி ஓடினார் கரீம் ஹாஜி. மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தவர் ஐசோலேஷன் வார்டு பெண்கள் பிரிவு நோக்கி ஓடினார்.

ஆண்கள் பிரிவில் கரீம் பாய் சேர்க்கப்பட்ட அடுத்த நாள் பெண்கள் பிரிவில் ஆயிஷா சேர்க்கப்படிருக்கிறாள். வெளியே கவலையுடன் நின்றிருந்தவர்களுடன் கரீம் பாயும் சேர்ந்து தன் மனைவியின் வருகையை எதிர்பார்த்து வார்டின் வாசலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

MSAH