ஓடி விளையாடு பாப்பா...
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...
கூடி விளையாடு பாப்பா....
என்று அன்றே விளையாட்டின்
முக்கியத்துவம் அறிந்து பாரதியார் பாடினார்.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில்
உள்ள விளையாட்டு எப்படி என்றால், அது ஒரு
இடத்தில் இருந்தபடியே கண்களுக்கும் கைவிரல்களுக்கும் மட்டுமே அசைவு கொடுத்து (screenல்) மட்டுமே
விளையாடும் விளையாட்டாகத்தான் உள்ளது.
சிறு வயதில் பிள்ளைகளுக்கு
நிலா... காக்கை.. பூனை... என்று காட்டி வீட்டின் பின்புறம் உலாவ விட்டு சாப்பாடு
கொடுத்தது அந்தக் காலம்.
இப்போதுள்ள தாய்மார்கள், பிள்ளைகளுக்கு
அலைபேசியில் விளையாட்டையோ பாட்டையோ போட்டுக் காட்டி தானும் அசையாமல், பிள்ளைகளையும்
அசையாப் பொருட்களாக வளர்த்து வருவது இந்தக் காலம்.
இது கண்களுக்கும், மூளைக்கும் கெடுதலை
ஏற்படுத்தி, மூளை
வளர்ச்சி (Mental
Devolepment) இல்லாமல் ஆகக்கூடிய ஒரு பெரிய பிரச்சினையாக ஆகிறது.
அன்றைய காலக் கட்டத்தில் நாம் ஆடி, ஓடி
விளையாடிய விளையாட்டுகள் எல்லாம் இன்று காணாமலேயே போய் விட்டன.
சோம்பேறித்தனமானவர்களாகவும், மனவளர்ச்சி
குன்றியவர்களாகவும் பருத்த உடலுடையவர்களாகவும், தெம்பில்லாதவர்களாகவும்தான்
பிள்ளைகளை இன்று அதிகமாகப் பார்க்க முடிகிறது.
மனிதனின் உச்சி முதல் பாதம் வரை
அனைத்து உறுப்புகளும் சீராகச் செயல்பட விளையாட்டு அவசியமான ஒன்றாக இருக்கின்றது.
எனவேதான் உடல் நலனும் விளையாட்டும்
ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்று சொல்கின்ற "உலக சுகாதார
அமைப்பு" குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக விளையாட்டுப் போட்டிகளை நடத்த முயன்று
வருகிறது.
நீரிழிவு நோய், உடல் பருமன்
போன்றவை வராமல் தடுக்க குழந்தைகளுக்கு விளையாட்டு அவசியம் என்று மருத்துவர்கள்
கூறுகிறார்கள்.
மனவலிமை, தன்னம்பிக்கை, தோல்விகளைத்
தாங்கும் மனப்பக்குவம்
போன்றவற்றை அடையவும்,
வெற்றிப் பாதைகளை அடையவும் குழந்தைகள் விளையாடுவது கட்டாயத் தேவை என்று உடற்பயிற்சியாளர்கள்
கூறுகிறார்கள்.
அறிவுக்கு கல்வி எப்படி தேவையோ
அது போல உடல்நலனுக்கு
விளையாட்டு முக்கியம் என்பதை உணர்ந்து பள்ளிகளில் குழந்தைகளைக் கட்டாயம் விளையாட
வைக்க வேண்டும்.
இன்றைய புதிய தலைமுறை மாணவர்களிடம்
குறைந்து கொண்டு வரும் பல்வேறு விதமான பலன்களை விளையாட்டும், உடற்பயிற்சியும்
பெற்றுத் தருகின்றன.
நம் குழந்தைகளின் வாழ்வோடு
விளையாட்டு இணைந்திருக்கும்போதுதான், அவர்களுடைய பல திறமைகள் வெளிவருகின்றன. அதனால் வாழ்வில்
ஏற்படும் மாற்றங்கள்,
உடலையும் உள்ளத்தையும் உற்சாகமாக வைக்கின்றன. உடலும் உள்ளமும்
தூய்மையடைகின்றன.
போட்டி மனப்பான்மை, உணர்வுகளைக்
கட்டுப்படுத்துதல், சவால்களை
எதிர்கொள்ளுதல், தோல்விகளைத்
தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் பெறுதல் போன்ற பண்புகள், மாணவர்களுக்கு
எளிதாகக் கிடைக்க விளையாட்டு வழி வகை செய்கிறது.
இவையெல்லாம் பள்ளிகளில்
படிக்கும் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே அவர்கள் குழுவாகச் சேர்ந்து
விளையாடும்போதுதான் கிடைக்க வாய்ப்பாகிறது.
அவர்களின் மனநலமும் சிறப்பாக
ஆவதால், தேர்வுக்காக
தங்களை ஆயப்படுத்திக் கொள்ளுதல்,
பெற்றோரை மதித்தல்,
வீட்டு வேலைகளைச் செய்து கொடுத்தல், சிறியவர்களோடு அன்பாகப் பழகுதல் போன்ற பல
நல்ல பண்புகளைப் பெறுகின்றனர்.
படிப்பில் மட்டுமே கவனம்
செலுத்தும் மாணவனை விட படிப்போடு விளையாட்டிலும் ஈடுபாடு உள்ள மாணவன் எல்லா
விதத்திலும் சிறப்பாகச் செயல்படுவான்.
அவனுக்கு மேடைப் பேச்சு எளிதாக
வரும். தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்காக அவன் அழைக்கப்பட்டால் அவன் அதனைத்
தைரியமாக ஏற்றுக்கொண்டு திறமையாக செய்து முடிப்பான்.
ஏனென்றால் அவன் பல இடங்களுக்குச்
சென்று முன் பின் தெரியாதவர்களோடு குழுவாக விளையாடி வெற்றி பெறவோ, தோற்கவோ
செய்திருப்பான். விளையாட்டின் விதிமுறைகளை,
ஒழுங்குமுறைகளை மதித்து,
நேரத்தைத் தவற விடாமல் இலக்கை அடைந்திருப்பான்.
இதனால் அவன் பணிவு, தன்னடக்கம், தலைமைக்குக் கட்டுப்படுதல், பிறரின்
அறிவுரை கேட்டு மதித்தல்
போன்ற நல்ல பண்புகளைக் கற்றுக் கொண்டிருப்பான். விளையாட்டில் அவன் தலைவரின் (Captain) சொல்லைக்
கேட்டு மதித்து நடந்தே பழகியிருப்பான்.
வகுப்பறையில் கிடைக்காத
ஏராளமான விடயங்கள் விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கு வாகாய் கிடைக்கும்.
தற்கொலை செய்து கொள்ளும்
மனிதர்கள் பெரும்பாலும் விளையாட்டு மைதானம் போகாதவர்களாகத்தான் இருப்பார்கள்.
ஏனென்றால் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் பலமுறை தோற்று அடுத்த முறை வெல்லலாம் என்ற
தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் தோல்வியைக் கண்டு
துவண்டு போக மாட்டார்கள். எந்தக் கல்வியிலும் கிடைக்காத இந்தப் பண்பு விளையாட்டில்
மட்டும்தான் கிடைக்கிறது.
குழந்தைகளைப் பள்ளிகளில் ஏதாவது
விளையாட்டுப் போட்டிகளில் கட்டாயம் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். அப்போதுதான்
பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையும்,
தைரியமும்
தானாக வரும்.
இதன் மூலம் பிள்ளைகளை நல்ல
முறையில் வளர்ப்பதற்கு நாம் செலவழிக்கும் செலவுகளும், நேரங்களும் பலனளிக்கும்.
ஏனென்றால் அவர்கள் இந்தப் பள்ளி விளையாட்டுகளிலேயே இவையனைத்தையும் பெரும்பாலும்
கற்று முடித்திருப்பார்கள்.
இதனால் பல சிக்கல்கள் தீரும். அவர்களுடைய
வாழ்க்கையில் நேரந்தவறாமை (Time Punctuality),
நேர்மறை சிந்தனை போன்ற நற்பண்புகள்
நடைமுறைக்கு வரும்.
எந்தக் கெட்டப் பழக்கத்திற்கும்
அவர்கள் அடிமையாக மாட்டார்கள். சரியான நேரத்தில் சாப்பிடுவார்கள். உரிய நேரத்தில் உறங்குவார்கள்.
இன்று "நீல
திமிங்கலம்" (Blue
Whale) என்று ஒரு புதிய விளையாட்டு மக்களிடையே தவழ்ந்து வருகிறது.
குழந்தைகளின் உயிரையே பறிக்கும் அந்த விளையாட்டில் பல இளைஞர்கள் மூழ்கி, கோழைகளாக ஆகி,
தன் உயிரையே மாய்க்கும் அளவிற்கு அபாயச் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இது போன்ற வீணான, வாழ்க்கையை
நாசமாக்குகின்ற, உடலுக்கும்
உள்ளத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விளையாட்டுகளை இஸ்லாம் தடை செய்துள்ளது.
விளையாட்டு கூட அது வாழ்க்கைக்கு
உயிரோட்டம் உள்ளதாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது. எந்த ஒரு
விளையாட்டும் உயிரினங்களைச் சேதப்படுத்துவதாக அமையக் கூடாது என்றும் கூறுகிறது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அம்பு
எறிதல், குதிரைப்
பந்தயம், ஓட்டப்
பந்தயம் போன்ற வீர விளையாட்டுகளை விளையாடும்படி ஆர்வமூட்டினார்கள். எந்த
விளையாட்டு நம் வாழ்க்கைக்குப் பலனளிக்காதோ அந்த விளையாட்டை இஸ்லாம் ஆதரிக்கவில்லை.
இஸ்லாம் மார்க்கம் உடலை
ஆரோக்கியமாக வைக்கவும்,
தீமைகளையும், தீயவர்களையும்
துணிவுடன் தட்டிக் கேட்கவும் கூடிய ஓர் ஆக்கப்பூர்வமான சமூகத்தை உருவாக்கத்தான் ஊக்கப்படுத்துகிறது.
ஓய்வு எப்படி ஒரு மனிதனுக்கு
தேவையோ அதே போல, மன
அழுத்தம் நீங்க உடற்பயிற்சி தேவையாக இருக்கின்றது.
“பலவீனமான முஃமினை விட பலமான முஃமினே அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இரத்தம், சிராய்ப்பு, வலி போன்ற
எந்தக் கஷ்டத்தையுமே சந்திக்காத மனிதன் பிறருடைய வலியையோ, காயத்தையோ, வேதனையையோ
அறியாதவனாக ஆகிறான்.
இந்தியாவின் விளையாட்டுத்
திறமையை வெளிக்கொண்டு வந்த ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் (Major Dhyan Chand) பிறந்த
நாளை, "தேசிய
விளையாட்டு தினமாக" இந்தியா கொண்டாடி மகிழ்கிறது.
ஒலிம்பிக் விளையாட்டில் தமது
அசாத்திய திறமையால், இந்தியாவின்
பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டுவதற்காக,
அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம்
தேதி தேசிய விளையாட்டு தினமாக (National
Sports Day) கொண்டாடப்படுகிறது.
விளையாட்டின் மூலம் ஓர் ஆரோக்கியமான
சமூகம் உருவாக வேண்டும், விளையாட்டின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும், விளையாட்டை
அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு அனுசரிக்கப்படுவதுதான் இந்த
விளையாட்டு தினம்.
இன்று மருத்துவமனைகள் அதிகமாகி
விட்டன. விளையாட்டு மைதானங்கள் குறைந்து விட்டன.
பள்ளிகளில் விளையாட்டுக்கான
ஆர்வம் குறைந்துக்கொண்டு போவதற்குக் காரணம் படிப்பில் நமது பள்ளியின் பெயர் முதலாவதாக வரவேண்டும் என்ற
எதிர்பார்ப்புதான்.
விளையாட்டுடன் படிப்பிலும்
ஆர்வம் செலுத்தும் மாணவன்,
படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுகிறான்.
“சாதாரண ஒரு மனிதன் 6 மணி நேரம்
செய்கிற வேலையை விளையாட்டு வீரனான மனிதன் (Sportsman) 2 மணி
நேரத்தில் செய்து முடித்து விடுவான்” என்கிறார்கள்.
அவனுக்கு இருக்கும் உடல் வலிமை,
மனவலிமை எல்லாமே உயர்வாக இருக்கும். எப்போதும் அவர்கள் வளைந்து கொடுப்பவர்களாக (flexibility) இருப்பார்கள்.
எனவே, விளையாட்டின்
அருமையை நாடு
முழுவதும் பரப்பி, ஆரோக்கியமான
ஒரு சமுதாயத்தை வார்த்தெடுப்போம்!