Showing posts with label பதிவுகள். Show all posts
Showing posts with label பதிவுகள். Show all posts

Thursday, 22 January 2015

இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்: வாசகர் கருத்துரை - 4


அஹமது யஹ்யா அய்யாஷ்

"நேர நிர்வாகம்"- தமிழ் கூறும் நல்லுலகிற்கு இஸ்லாமிய வரையறைகளை தாங்கி நேர நிர்வாகம் குறித்து இந்நூல் அலசுகிறது.

யதார்த்த மொழிநடை, அழகான சொற்செறிவு, சிந்திப்பூட்டும் உதாரணங்கள், வலியுறுத்தும் குர்ஆன்-ஹதீஸ் என நூல் முழுக்க மிகவும் அவசியமான பக்கங்களாக இந்நூல் நகர்கிறது.

நேர நிர்வாகத்தின் செயல்வடிவத்தை ஏட்டுச்சுரைக்காயாய் அணுகிவிடாமல் தம் வாழ்விலும் பயிற்சி செய்து அதன் அனுபவக் கூறுகளை அழகாய் வடித்துள்ளார் இந்நூலின் ஆசிரியர் காயல்பட்டினம் அப்துல் ஹமீது காக்கா அவர்கள்.

சமூக போராளிகளுக்கான மிக முக்கியமான புத்தகம். இந்நூலில் பயணம் குறித்து அலசுகையில் புத்தகப் பை குறித்து வலியுறுத்துகிறார். வாசிப்பை நேசிக்கும் உள்ளங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

புத்தகத்தை வாசிக்கும், எழுத்தை நேசிக்கும் தோழர்களுக்கு இந்நூல் திறமைகளை மேம்படுத்தும் அழகிய துணுக்குகளை சான்றுகளோடு பேசுகிறது.

நேரம் போதவில்லை, நேரமே இல்லை என புலம்பும் தோழர்களுக்கு இந்நூல் நேரத்தை ஆரோக்கியமாய் பயன்படுத்த அழகிய வழிமுறைகளை கற்றுத் தர காத்திருக்கிறது.

இந்நூல் நிச்சயம் மாற்றம்தனை விதைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பல்வேறு நூல்களை எழுதிய அப்துல் ஹமீது காக்காவின் மிகச் சிறந்த நூல்களில் நேர நிர்வாகம் இன்றியமையாத ஒன்று.

ஆசிரியர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்களுக்கு அல்லாஹ் பேரருள் புரிவானாக!

அஹமது யஹ்யா அய்யாஷ்

Saturday, 18 January 2014

மரணத்தை நோக்கிய பயணம்!


சில மாதங்களுக்கு முன்பு, நான் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். மஸ்ஜிதில் வைத்து நடைபெற்ற அந்தத் திருமண நிகழ்ச்சியில், மவ்லவி குத்பா உரை நிகழ்த்தினார். திருமணம் சம்பந்தமான குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், மணமகனுக்கும், மணமகளுக்கும் பயன்படக்கூடிய உபதேசங்கள், அறிவுரைகள் என்று சொல்லிக் கொண்டே வரும் போது முக்கியமான ஒரு விஷயத்தைக் கூறினார்:

இன்று நாம் திருமண வைபவத்திற்காக ஒன்று கூடியுள்ளோம். திருமண வீட்டார் நமக்கு “கல்யாண அழைப்பு” தந்ததால் வந்துள்ளோம். இதேபோல, வேறு எந்தவித நிகழ்ச்சிகள் யார் வீட்டில் நடந்தாலும், நம்மை அழைத்தால் நாம் செல்வதுண்டு. கல்யாண வீட்டில், மணமக்களின் உற்றார், உறவினர், அண்டை வீட்டார், தெரிந்தவர்கள் என எல்லோரும் நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து, மணமக்களை வாழ்த்தி விருந்துண்டு செல்வர். இன்னும் சிலர், மணமக்களை அலங்கரிப்பர். இன்னும் சிலர் கல்யாண முன்னேற்பாடு வேலைகளில் உதவியாக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பர். இது சந்தோஷமான ஒரு நாளாக இருக்கும்.

ஆனால் இன்னொரு நாளில், அழைப்பில்லாமலேயே அலை அலையாக மக்கள் வருவார்கள். மனிதனின் நடமாட்டம் நின்றுவிடும். அந்த நாள் கவலைக்குரிய நாளாக இருக்கும். அந்த மனிதனின் பெயர் எல்லாம் சொல்லப்படமாட்டாது. அந்த நாள்தான் மரண நாள். இனி அவனது பெயர் “மய்யித்”. மய்யித், மய்யித் என்றே அங்கு பேச்சுகள் அடி படும். இந்த நாளில் அந்த மரண நாளையும் மறந்துவிடக் கூடாது. அதனை எப்போதும் நினைவு கூர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.” இவ்வாறு மவ்லவி தனது உரையில் சொல்லிக் கொண்டே போனார்.

எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது! எவ்வளவு ஆழமான கருத்துக்கள் அந்த மவ்லவியின் உரையில் பதிந்திருந்தது! எவ்வளவு பெரிய உண்மை அது! அதுவும் எத்தகைய சபையில் அவர் அந்த மரண நாளை நினைவூட்டுகிறார்!

மணமுடிக்கும் தம்பதியர் அவர்கள் தங்கள் வாழ்க்கையை துவங்குமுன் இந்த அடிப்படையை ஒரு கணம் நினைவில் வைத்துக் கொண்டு துவங்கினால் அவர்களின் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். ஏன், நம் வாழ்க்கையில் எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டிய முக்கியமான ஒன்றுதான் மரணம்.

நம் எல்லோரையும் மரணம் வந்தடையவே செய்யும். அது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த நிலையிலும் வரலாம் என்பதை எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ் சொல்கிறான்: “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும்.” (அல்குர்ஆன் 3 : 185)

அந்த மரணம் வரும்போது, மலக்குகள் நம் ரூஹை வாங்க வரும்போது நாம் வெறும் கையும், வீசின கையுமாக போனால் என்னவாகும் நம் கதி...? அல்லாஹ் இந்த நிலைமையிலிருந்து நம்மைக் காப்பாற்றுவானாக! அந்த மலக்குகளிடம் நான் இப்பொழுது வரமாட்டேன், கொஞ்ச நாட்கள், மாதங்கள் கழித்து வருகிறேன் என்றாவது சொல்ல முடியுமா?

அல்லாஹ் சொல்கிறான்: “எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனை) பிற்படுத்த மாட்டான்.” (அல்குர்ஆன் 63 : 11)இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம்தான். நம்மில் எல்லோருக்கும் மரண பயம் இருக்கத்தான் செய்கிறது. மறுமையில் நரகத்திலிருந்து தப்பிக்க, சுவனபதி கிடைக்க என்று ஆசைகள் மனதில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதற்கான முன்னேற்பாடுகள்தான் இல்லை. அதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு நமக்கு நேரமில்லை. ஏதோ இருந்தோம்! தொலைவோம்! என்று இருக்கிறோம்.

ஆனால், நம் சத்திய சஹாபாக்கள் வாழ்க்கையைப் பாருங்கள். அவர்கள், தங்களுக்கு சொர்க்கம் கிடைக்க வேண்டுமென்ற இலட்சியம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அதனால், அவர்கள் எத்தகைய தியாகங்களையும் செய்யத் தயங்கவில்லை.நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “சிரமங்களால் சொக்கம் சூழப் பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப் பெற்றுள்ளது.” (முஸ்லிம்)ஆனால் அந்த சொர்க்கம் சும்மா கிடைக்குமா? ஒரு போதும் கிடைக்காது. ஏனெனில் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:

அல்லாஹ் கூறுகிறான்: “உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன. “அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்). (அல்குர்ஆன் 2 : 214)

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால், பொறுமை உடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 155)

எனவே, நாம் துன்பங்கள், கஷ்டங்கள் என்று எந்த சோதனைக்குள்ளாக்கப்படும்போதும், சகித்துக் கொள்ள வேண்டும். ரசூல் (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் அடைந்த சோதனைகள் ஒன்றும் நம்மை அடைந்துவிடவில்லையே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “இறைநம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறைநம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. (முஸ்லிம்)

ஆக, ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு நல்லது ஏற்பட்டாலும், தீங்கு ஏற்பட்டாலும் அவன் பொறுமை காத்தான் என்றால் அவனுக்கு அது நன்மையாக முடிகிறது.

ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “கியாமத் நாளில் 4 விஷயங்களைப் பற்றி கேட்கப்படாமல் மனிதனின் காலடிகள் அசையாது:

1. அவனுடைய ஆயுள் காலம். அதை அவன் எப்படி செலவழித்தான்?
2. அவனுடைய வாலிபம். அதை எதில் தொலைத்தான்?
3. அவனுடைய செல்வம். எங்கிருந்து சம்பாதித்தான்? எதற்காக செலவழித்தான்?
4. கல்வி: அவனுக்கு தெரிந்தவைகளில் எதைக் கடைப்பிடித்தான்?” (திர்மிதி)

ஆக, கியாமத் நாளில் இவ்வகையான கணக்குகளை ஒப்படைக்காமல் அசைய முடியாது.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ஏழு விஷயங்களுக்கு முன்னால் நீங்கள் முண்டியடித்து நற்செயல்களில் ஈடுபடுங்கள்:

1. கடுமையான வறுமை
2. மித மிஞ்சிய பணம்
3. அழிவு தருகிற நோய்
4. மிகத் தள்ளாத வயது
5. (வாழ்க்கை முடிவுற்று) மரணத்தை நோக்கியுள்ள பயணம்
6. தஜ்ஜால் - அது எதிர்பார்க்கப்படுகின்ற மறைவானவற்றில் மோசமானது.
7. மறுமை நாள். (திர்மிதி)

அல்லாஹ் நமக்கு தந்திருக்கின்ற அருட்செல்வங்களைக் கொண்டு நாம் பயனடைய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “மனிதர்களில் அதிகமானோர் கீழ்க்கண்ட அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்: 1. ஆரோக்கியம் 2. ஓய்வு.” (புகாரி)

ஆரோக்கியமும், ஓய்வு நேரமும் கிடைக்கும்போது நன்மையான வழிகளில் செலவழிக்க வேண்டும். நம் நேரத்தைக் கூறு போட்டு நன்மை செய்வதற்கென்று ஒதுக்க திட்டமிட வேண்டும். அப்படி திட்டமிடாவிட்டால், நமக்குக் கிடைத்த இந்த இரண்டு அருட்செல்வங்களை தொலைத்த நஷ்டவாளிகளாகி விடுவோம். நம்மை விட்டு அவை பறி போன பின் அப்பாடா… எப்பாடா… என்று கூறி நிலைகுலைந்து பயனில்லை.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள்! உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள்! அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்.” (முஸ்லிம்)

அத்தகைய மறுமை நாளில் வேதனை மிகுந்த தண்டனையிலிருந்து தப்பிக்க வழி சொல்லும் ஒரு வியாபாரத்தை அல்லாஹ் அழகாக சொல்கிறான்:“நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய ரசூலையும் விசுவாசம் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உங்களுடைய செல்வங்களைக் கொண்டும், சரீரங்களைக் கொண்டும் போரிட வேண்டும். அது உங்களுக்கு நன்மை பயக்கும் - நீங்கள் அறிந்திருந்தால்.” (அல்குர்ஆன் 61 : 11)

நம்முடைய செல்வங்களைக் கொண்டு நாம் எவ்வாறு ஈடில்லா பலனை அடைவது என்பதை எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இங்கே சொல்வதைப் பாருங்கள்:

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “ஒருவர் பரிசுத்தமான சம்பாத்தியத்திலிருந்து ஒரு ஈத்தம்பழம் அளவுக்கு தர்மம் செய்தால் (பரிசுத்தமானதில்லாததை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்) அதை அல்லாஹ் தனது வலது கை கொண்டு (சந்தோஷமாக) ஏற்றுக் கொள்வான். பின்னர், இந்த மனிதருக்காக, அல்லாஹ் உங்களில் ஒருவர் தன்னுடைய குதிரைக் குட்டியை வளர்ப்பது போல அதை வளர்த்துக் கொண்டிருப்பான். அப்படியாக அது மலை போல ஆகிவிடும்.”

மனிதனோடு ஓட்டிப் பிறந்த இரண்டு ஆசைகளை அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் இப்படி குறிப்பிடுகிறார்கள்:

“மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன: 1. பொருளாசை 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.” (முஸ்லிம்)

நாம் உலக ஆசைகளிலிருந்தும் விடுபட வேண்டும். அல்லாஹ் சொல்கிறான்:
“உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமே அன்றி வேறில்லை. பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும். நீங்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டாமா?” (அல்குர்ஆன் 6 : 32)

“செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும். என்றும் 
நிலைத்து நிற்கக்கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மை பலனுடையவையாகவும், (அவனிடத்திலும்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன் 18 : 46)

எனவேதான் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள் இப்படியாக:
“அல்லாஹ்வே! இவ்வுலகத்தை எங்களுடைய முக்கிய நினைப்பாக ஆக்கி விடாதே! எங்களுடைய மொத்த கல்வி ஞானமும் அனாதையாக்கி விடாதே”

இன்னும் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

“அடியான் என் செல்வம், என் செல்வம் என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியதாகும். அவன் உண்டு கழித்ததும், உடுத்திக் கிழித்ததும் அல்லது கொடுத்துச் சேமித்துக் கொண்டதும்தான் அவனுக்குரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக் கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச் செல்லக் கூடியவையுமாகும்.”

சுவர்க்கத்தில் நுழைய வாய்ப்பை இழந்தவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னார்கள்:

“எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ, அவர் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்.” (முஸ்லிம்)
“தமது உள்ளத்தில் கடுகு மணியளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகு மணியளவு அகம்பாவமுள்ள எவரும் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்.”

அப்தில்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும். தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என்று ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன், அவன் அழகையே விரும்புகிறான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

பாழும் நரக நெருப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றி, சுகந்தம் தரும் சுவர்க்கத்தை நம் எல்லோருக்கும் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக.

M.S. மரியம் (என் சகோதரி)

Friday, 3 January 2014

இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்: வாசகர் கருத்துரை - 3


யாஸ்மின் பின்த் முஹம்மத் அலீ

இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) கூறிய வகையில் நேரத்தை எவ்வாறு ஈருலக வாழ்விற்கும் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்று கூறுவதே இப்புத்தகத்தின் நோக்கம். 

நேர நிர்வாகம் குறித்து ஆங்கிலத்தில் பல புத்தகம் வெளி வந்து இருந்தாலும் தமிழில் வெளி வந்த முதல் இஸ்லாமிய நூலாக கருதப்படுவது இப்புத்தகத்தையும், எழுதியவரையும் மென்மேலும் சிறப்பிக்கிறது. 

நேரத்தை பயனுள்ள வகையில் கையாண்டு சமுதாயத்தில் பெரும் பிரளயத்தை உருவாக்கி, இஸ்லாத்தை நிலை நாட்டிய அக்கால முஹம்மது (ஸல்) அவர்கள் முதல் இக்கால மால்கம் எக்ஸும் முன்னோடியாக பதிப்புரையில் குறிப்பிட்டு கூறப்படுவது மேலும் சிறப்பு.

இரண்டு பதிப்பாக வெளி வந்துள்ள இப்புத்தகம், முதல் பதிப்பின் சிறு சிறு குறைகள் சரி செய்யப்பட்டு, சுருக்கமான சில தலைப்புகள் விரிவாக்கப்பட்டும் படிக்கும் வாசகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்துள்ளார் நம்முடைய ஆசிரியர்.

இப்புத்தகத்தில் கூறும் ஒவ்வொரு விசயங்களும் குர்ஆன், ஹதீஸை மூலதனமாக கொண்டு, இவ்வுலக வாழ்வில் மனிதர்களின் நேர வீணடிப்பை சிறு சிறு எடுத்துக்காட்டுகளின் மூலம் பொருத்திக் கூறுவதை படிக்குபோதே பக் என்கிறது. நம் நிலை எதுவென்று சிந்திக்க தூண்டுகிறது.

ஒவ்வொரு எடுத்துக் காட்டையும் நம் வாழ்வோடு ஒப்பிட்டு நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ளும் அளவில் மிக அற்புதமானவை. நம்மை செதுக்கி கொள்ள தூண்டுதலாக அமைகிறது அல்ஹம்துலில்லாஹ்.

இதோ புத்தகத்தில் இருந்து என்னை மிகவும் கவர்ந்த ஒரு சிறு எ.கா சுருக்கமாக உங்களுக்காக:-

ஒரு நாள் இரவு, சிறுவன் ஒருவன் அடர்ந்த காட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருக்கும்பொழுது அவன் காலில் ஒரு பை தட்டுப்படுகிறது. அதை அவன் கையில் எடுத்து தடவி பார்த்தால் பை முழுவதும் கற்கள். இருட்டில் தனிமை பயத்தில் இருந்த அவன் ஒரு இடத்தில் அமர்ந்தான், பையில் கையை விட்டு ஒரு கல்லை எடுத்து வீசினான். 

அருகிலிருந்த ஆற்றில் விழுந்த கல் “ப்ளக்” என்று சத்தம் கொடுத்தது. அந்த சத்தத்தில் ஆறுதல் அடைந்த சிறுவன் ஒவ்வொன்றாக விடியும் வரை வீசிக் கொண்டே இருந்தான். சூரியன் உதயமாகும் தருணத்தில் வீசிய கல் மின்னியதை கண்ட சிறுவன் பையை நோக்கினால், பையில் இருந்த அனைத்தும் மாணிக்க கற்கள்.

இருந்து என்ன பயன், அதில் பெரும்பாலான கல்லை அவன் வீசி எறிந்து இருந்தான். இதனால் இறுதியில் எந்த பயனும் இன்றி கைசேதப்பட்டான் சிறுவன்.

இருள், காடு, மாணிக்க கற்களை நம் வாழ்க்கையுடன் ஒப்பிடும் ஆசிரியர், இந்த இடத்தில் நேரத்தை மாணிக்க கற்களுக்கு ஒப்பிடுகிறார். நம் அறியாமையில் விலை மதிப்பில்லாத நம் நேரம் இவ்வாறு தான் வீணாகிறது என்பதை இச்சிறு எடுத்துக்காட்டு உணர்த்துகிறது. மனதில் மாற்றத்தை தேடுகிறது.

காலம் என்பது பொன் போன்றதல்ல; மாறாக உயிர் போன்றது. காரணம், பொன் போனால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம் - உயிர் இருந்தால். ஆனால் உயிரே போனால்... ஆம்! காலம் உயிரை போன்றதுதான். என்ன விலை கொடுத்தாலும் அதை திருப்பி வாங்க முடியாது என்ற மறுக்க முடியாத உண்மையை பல இடத்தில் நம் தலையில் 'நங்'கென்று ஆணி அடிக்கும் விதமாக புத்தகம் நம்மை பயணிக்கச் செய்கிறது. திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறது, நம் உலக இச்சைகளை கட்டுக்குள் கொண்டு வர.

மேலும் நேரத்தை சேமிக்கும் வழிகள், வேலைகளை எப்படி பிரித்து செய்வது, எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஈருலகிற்கும் பயனுள்ள வகையில் எவ்வாறு செலவழிப்பது என்று பல குறிப்புகளை தருகிறது இப்புத்தகம். அல்ஹம்துலில்லாஹ்.

நேரம் வீணாகிவிட்டதே என்று மரணம் வரும் தறுவாயில் சிந்திப்பதில் பயனில்லை. இனி இருக்கும் காலங்களையாவது பயனுள்ள வகையில் பயன்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்...

படிக்கவே சோம்பேறிபடும் என்னையவே ஒரே சிட்டிங்கில் படிக்க வைத்த புத்தகம், படித்த பின் டைம் டேபிள் போட வைத்த புத்தகம். என் பேவரைட் லிஸ்டில் ஆட் செய்யப்பட்ட புத்தகம்.

மதிப்புரை எழுதுவதற்காக என் வாழ்க்கை சாதனையாக இரண்டாம் முறை படித்த புத்தகம்.

கண்டிப்பாக படிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு மாற்றத்தை இப்புத்தகம் ஏற்படுத்தும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.

அனைவரும் வாங்கி படியுங்கள். காலத்தை கடமையாக வலியுறுத்திய இஸ்லாத்தில் பிறந்த நாம் எவ்வாறு நம் காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோம் என்று நம்மை நாமே நிற்க வைத்து கேள்வி கேட்கும் நிலைக்கு நம்மை இப்புத்தகம் தள்ளிச்செல்லும் என்பதில் ஐயமில்லை.

டிஸ்கி: பல முக்கிய விஷயங்கள் எழுத நினைத்தேன், பட் இன்னும் நீண்டு விடும் என்று குறைத்துக் கொண்டேன்.

யாஸ்மின் பின்த் முஹம்மத் அலீ

Thursday, 3 October 2013

நேரத்திட்டமில்: வெற்றியடைய 10 சுலபமான வழிகள்!


வேகமான இன்றைய உலகில், நாமும் வேகமாவும், விவேகமாவும் இல்லையென்றால் வாழ்க்கை ஓட்டத்தில் மிகவும் பின்தங்கிவிடுவோம் என்பதுதான் நிதர்சனம். இந்தப் புரிதலினால், நம்மில் பலர் இன்று வாழ்வியல் முறைகளில் பலவகையான மாற்றங்களை அவ்வப்போது செய்துகொண்டு, வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறோம்.

வாழ்வியல் முறை மாற்றங்களில் மிக முக்கியமானதும், எளிதில் கைவரப்பெறாததுமாய் ஒன்று இருக்குமென்றால், அது நேரத்திட்டமிடலே என்பது நம்மில் பலர் அறிந்திருக்கும் ஒன்று. நேரத்திட்டமிடல் குறித்த புரிதல்களையும், சில/பல நுணுக்கங்களையும் புத்தகங்கள், துறை வல்லுனர்கள், நண்பர்கள் மூலமாக எனப் பலவாறாக சேகரித்து வைத்திருப்போர் பட்டியலில் நம்மில் பலர் கண்டிப்பாக இருப்போம்!

நேரத்திட்டமிடல் குறித்த திட்டங்கள், ஆயத்தங்கள், முயற்சிகள் என எல்லாம் இருந்தும் சில/பல சமயங்களில் அதில் வெற்றியடைவது என்பது நம்மில் பலருக்கு கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் கதையாய் போய்விடுகிறது!

இதற்குக் காரணம், நேரத்தை நாம் எப்படி அணுகுகிறோம் அல்லது நேரத்துடன் நம்மை நாம் எப்படி தொடர்புபடுத்திக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்!

நேரத்துடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதென்பது கிட்டத்தட்ட முதலீடு செய்வதைப்போல. அதாவது, நேரத்துடனான நம் உறவு/தொடர்பு ஒரு கொடுக்கல்-வாங்கல் போலத்தானாம்?! தொடக்கத்தில் நாம் முதலீடு செய்யும் ஒரு குறிப்பிட்ட கால அளவானது இறுதியாக நமக்கு நல்ல லாபத்தைக் தரும் என்கிறார்கள் உளவியலாளர்கள்!

நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்!

நம் நேரத்தை நன்றாக திட்டமிட்டு செலவு செய்ய, அப்படிச் செய்த பின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கும் 10 முத்தான, அதே சமயம் மிகவும் சுலபமான (?) வழிகளை பின்வரும் பட்டியலில் பார்ப்போம்…..

1. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை நிறுத்துங்கள் (Stop multitasking):

சமீப காலங்களில், பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டி டாஸ்கிங் என்பது. அடிப்படையில், அறிவியல் ரீதியாக பார்த்தால் மல்டி டாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு தாவுவது/மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டி டாஸ்கிங் செய்வது என்பது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது!

2. முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை தேர்வு செய்து கொள்ளுங்கள் (Set your priorities):

ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைக்கப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப் பற்றிக்கொண்ட ஒரு கட்டிடத்தை விட்டு வெளியேறுவதை விட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்கவேண்டுமென்பது முக்கியமானதல்ல!

3. உடற்பயிற்ச்சி செய்யுங்கள் (Exercise):

உங்கள் உழைப்புத் திறனையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்த மனநலம் என்பது மிக அவசியம்! அதனால், புதிய யுக்திகளைக் கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையில் நல்ல காற்றை சுவாசித்து காலாற நடந்துவிட்டு வாருங்கள்!

4. ‘முடியாது’ என்பதைக் கனிவாகச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் (Learn to say ‘no’ with kindness):

நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, அயற்சியைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக “என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை” எனச் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்! இது உங்கள் நேரத்தை சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்!

5. காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்ச்சியுங்கள் (Get up fifteen minutes early):

ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்கும் முன் தியானம் செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக் கொள்ளுங்கள். உடல் நலனைப் போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது!  உடற்பயிற்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்!

6. போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் (Get enough rest):

ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணி நேரம், உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையைக் குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலை செய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்கிறது உளவியல்!

7. எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் (Manage expectations):

உங்கள் அறையைக் குப்பையாக்கி விட்டு, விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்க்கு பதிலாக, குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்துவிட்டால், குப்பையை சுத்தம்செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்!

8. மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தை திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள் (Check email at set times):

மின்னஞ்சல்களை தினசரி சரியாக கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதே மாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களை பார்க்காதீங்க, கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்க!

9. தேவையில்லாதபோது இணையம்/செல்பேசியை அணைத்து விடுங்கள் (Unplug): இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பவதிலுமே காலத்தைக் கழிக்காமல், இரண்டையும் சிறிது நேரம் அணைத்துவிட்டு, உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளுங்கள்!

10. செயல்பட அதிக நேரம் இருப்பதாய் எண்ணிக் கொள்ளுங்கள் (Embrace time-abundant thinking):

ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும்பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, மனதுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு மனதையும் இலேசாக்கி, நேரத்தையும் சரியாக செலவு செய்யவேண்டும்.

நேரத்தை நல்ல முறையில் நம் வாழ்வில் பின்பற்ற சில வழிகள்!


நேரத்தைத் தவற விடுவது, வாழ்க்கையைத் தொலைத்து விடுவதற்கு சமம்.

காலம் கண் போன்றது, கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும்.

இன்றைய இயந்திர உலகில் நேரம் என்பது மிக முக்கியமானது. நீங்கள் நேரத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும்? எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்? என்பதற்கான டிப்ஸ் பற்றி கீழே காணலாம்.

* ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான் என்ற கால அளவு மாறப் போவதில்லை. அதனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

*உங்களுடைய பயனுள்ள நேரம் எங்கு வீணாக செலவிடப்படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். எடுத்துக்காட்டாக சிலர் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசுவார்கள் அல்லது இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பார்கள் அல்லது டி.வி. பார்ப்பதில் நேரத்தை செலவிடுவார்கள். இவற்றில் எவ்வகையில் உங்களுடைய நேரம் வீணாகச் செலவிடப்படுகிறது என்பதை அறிந்து தவிர்த்து விடுங்கள்.

*நீங்கள் சரியான கால அளவைப் பின்பற்றுவதை, இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களது நடத்தையில் மாற்றம் ஏற்படும். உதாரணமாக, நான் காலை 10 மணிக்கு இந்த வேலையைத்தான் செய்ய வேண்டும் என உங்களது நேரத்தை வகுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திட்டம் மட்டும் போடாமல், அதைச் செயல்படுத்த முனையுங்கள்.

*தினமும் எழும் நேரம் மற்றும் உறங்கும் நேரம் முதலானவற்றை சரியான முறையில் வகைப்படுத்திக் கொள்ளுங்கள்.

*மற்றர்வர்கள் கிண்டல் செய்வார்களோ என அஞ்சி, உங்களது கால அளவை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களது வேலையை சரியான நேரத்தில் வழக்கம் போலவே செய்யுங்கள்.

*உங்கள் வேலையே மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும், தேவைற்றை வேலைகள் (Distraction – கவனம் திசை மாறாமல்) செய்யாமல் இருக்க வேண்டும்.

*உங்கள் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ளவது மிகவும் அவசியம். நாம் எந்தப் பாதையில் இருக்கின்றோம், எதை நோக்கிச் செல்கிறோம் போன்ற விஷயங்களை மனதில் வைத்து செயல் பட வேண்டும்.

*நல்ல முடிவுகளை திறம்பட காலச் சூழ்நிலைகளைன் கருதி எடுக்க வேண்டும். எழுச்சியூட்டும் குறிக்கோள்களை அமைத்து, அதை நம் வாழ்நாளில் அடைய பாடுபட வேண்டும்.

*உங்கள் வேலையையும் – வாழ்க்கையையும் சமமாகப் பார்க்க வேண்டும். முழு நேரம் வேலைக்காக செலவு செய்வதன் மூலம் பலன் ஏதும் இல்லை.

*உங்கள் வேலையை ஒரு பழக்கமாக உருவாக்க வேண்டும்.

*உங்கள் வேலைப் பளுவை நிரவகிக்க கற்று கொள்ள வேண்டும்.

*உங்களின் நேரத்தையும் அதன் மதிப்பையும் போற்ற வேண்டும்.

*இறுதியாக, யாருக்காகவும் காத்திருந்து உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள்.