Showing posts with label முகநூல் பதிவு. Show all posts
Showing posts with label முகநூல் பதிவு. Show all posts

Saturday, 17 November 2018

மாவீரன் திப்பு சுல்தான்


மாவீரன் திப்பு சுல்தான் மிகப் பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை இருந்தன. போரில் பீரங்கிகளைப் பயன்படுத்தியுள்ளார். இதைத்தவிர, கடற்பயிற்சிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு, கடற்படையில் பீரங்கிகளையும், ஆங்கிலேயருக்கு நிகராக நவீன ஏவுகணைகளையும் பயன்படுத்தினார். சக்தி வாய்ந்த ராக்கெட்-ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
திப்பு பெண்களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தார். கோயில்களில் நரபலி கொடுப்பதைத் தவிர்த்து, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். திப்பு, இஸ்லாமில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்களும், பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், மத ஒற்றுமையை இறுதிவரை கடைப்பிடித்தார். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்கவேண்டும் எனக் கருதி சட்டப்படியான விசாரணையும், தண்டனையும் அமைய வேண்டும் எனக் கருதினார். விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.

தலைமைத்துவத்தின் இலக்கணம்!

"குறைந்த வாய்ப்புகளைக் கொண்டு, உயர்வான குறிக்கோளை அடைந்து சாதனை படைப்பதுவே மேதைத் தன்மையின் இலக்கணம் என்று உலக வரலாற்றில் எடுத்துக்காட்டு வைக்க வேண்டுமாயின், முஹம்மது நபியின் வாழ்வைத் தவிர வேறு எவருடைய வாழ்வைக் காட்ட முடியும்?" - பிரெஞ்சுப் பேரறிஞர் லாமார்ட்டின்

தலைவரின் தகுதிகள்!

"முஹம்மது என்ற ஒருவரிடத்தில், 
இறைத்தூதர்,
தத்துவ வித்தகர், 
சட்டம் இவற்றுபவர்,
போர் வீரர்,
கருத்தை ஆள்பவர்,
அறிவார்ந்த நம்பிக்கைகளை மீட்டெடுப்பவர்,
பிம்பங்களற்ற
மத நம்பிக்கையின் செயலாக்கம் தருபவர்,
உலக ஆட்சியையையும் உள்ளங்களின் ஆட்சியையும் நிறுவியவர் எனும் பன்முகத் திறமைகள் இருந்தன. இதனால்தான், முழுமையான மனிதத்துவம் என்பதன் அளவீடு எனும்போது, முஹம்மதை விட உயர்வானவர் வேறு எவர் இருப்பார் என்று நாம் பெருமயாகக் கேட்க முடிகின்றது!"
(Source: Historie de le Turquie, Paris 1854, Vol. 11, Pages:276&277)

நபிமார்களின் தேவை

ஒரு வாழ்க்கையைத்தான் இன்னொரு வாழ்க்கை பின்பற்றுகிறது. நம்மை ஈர்ப்பதற்கு நமக்கு உயிருள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.
போராட்டங்கள் நிறைந்த அன்றாட வாழ்க்கையில் சரி எது, தவறு எது என்று சுட்டிக்காட்ட, நம்மிடம் முரண்பட, நம்மிடம் கேள்விகள் கேட்க, நமது கேள்விகளுக்கு பதிலளிக்க, தவறான புரிதல்களைத் திருத்த, நம் கரம் பற்றி அழைத்துச் செல்ல, நமக்கு முன்மாதிரியாக இருக்க உயிருள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.
அதனால்தான் வேதங்களின் எண்ணிக்கையை விட இறைத்தூதர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதாவது, பல நபிமார்கள் புதிய இறைவேதம் வழங்கப்படாமல் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

நம்பிக்கை...

ஜெர்மன் படையினருடன் போரிட்டுக் களைப்படைந்திருந்த போர் வீரன் ஒருவன், வீழ்ந்துபட்ட தன் சகப் போராளியின் வெற்றுடலைப் போய்த் தூக்கி வர அவனுடைய உயரதிகாரியின் உத்தரவை நாடி நின்றான்.

"ஒரு செத்த சடலத்தை, உன் உயிரைப் பணயம் வைத்துப் போய்த் தூக்கி வரப் போகின்றாயா?" என்று அதட்டிக் கேட்டார் அவர். ஆனால் அந்தப் போராளியோ, விட்டபாடில்லை. அடம் பிடித்தான். வேறு வழியின்றி, அந்த அதிகாரி, தன் படைகளிடம் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை நிறுத்தக் கட்டளையிட்டு, அவனுக்கு அனுமதி கொடுத்தார்.

துப்பாக்கித் தோட்டாவைப் போன்று விரைந்து சென்ற அவ்வீரன், சில நிமிடங்களிலேயே தன் தோழனின் உடலைத் தோளில் சுமந்தவனாக எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் வநது சேர்ந்தான்.

"ஆகா, இந்தப் பிரேதத்தை எடுத்து வரவா உன் உயிரைப் பணயம் வைத்தாய்?" என்று கேட்டார் அதிகாரி.

"எஸ், ஸார். எனக்குத்தான் தெரியும் இதன் மதிப்பு. நான் அவனிடம் சென்று பார்த்தபோது, அவன் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. அப்போது அவன் சொன்னான்: "நண்பா... எனக்கு நன்றாகத் தெரியும், நான் சாகுமுன் நீ வருவாய் என்று." உடனே நான் குனிந்து அவனைத் தூக்கித் தோளில் வைத்தேன். அந்தோ... அப்போதுதான் அவனுடைய உயிர்
பிரிந்தது. இப்போது சொல்லுங்கள், நான் உயிரைப் பணயம் வைத்துச் சென்றதில் அர்த்தம் இருக்கின்றதா இல்லையா?"
என்றான் அந்தப் போர்வீரன்.

நம்பிக்கை என்பது கண்மூடித்தனம் என்று யார் சொன்னது?

நம்பிக்கை என்பது, பிறர் கண்ணால் பார்க்க முடியாதவற்றை இதயத்தின் உணர்வால் பார்ப்பதாகும். மக்கள் தாம் நுகரும் நன்மைகளுக்காக, அன்பினாலும் பக்தியினாலும் நன்றிப் பெருக்காலும் பார்ப்பதுதான் நம்பிக்கையாகும்.

(“அண்ணலார் கற்றுத்தந்த தலைமைத்துவம்” நூலிலிருந்து...)

Thursday, 15 March 2018

இதுவும் கடந்து போகும்!

ஒரு ராஜா ஒரு முறை நாட்டிலுள்ள அறிஞர்களை ஒன்று கூட்டி, தான் சோகமாக இருக்கும்போது மகிழ்ச்சியை வரவழைக்கக்கூடிய ஒரு வாசகத்தை ஒரு மோதிரத்தில் எழுதித் தருமாறு ஆணையிட்டார்.

அறிஞர்கள் ஒன்றுகூடி ஆலோசித்து ஒரு வாசகத்தை ஒரு மோதிரத்தில் பொறித்து ராஜாவிடம் பணிவாகக் கொடுத்தனர்.

ராஜா மோதிரத்தில் பொறிக்கப்பட்ட வாசகத்தைப் படித்தார். அவர் முகம் பிரகாசித்தது. அந்த வாசகம் என்ன தெரியுமா?

“இதுவும் கடந்து போகும்!”

ஆம்! என்ன சோகம் வந்தாலும் அதவும் நம்மைக் கடந்து போய், அடுத்த ஒரு கணத்தில் அகமகிழ்ச்சி வரத்தான் செய்யும். ஆழ்ந்த கவலையில்,கொடும் துன்பத்தில், கடும் சிக்கலில் சிக்கியுள்ளவர்கள் “இதுவும் கடந்து போகும்!” என்ற எண்ணத்தை மனதினுள் நிறைத்தால் துன்பமும், சிக்கலும், கவலையும் காணாமற்போகும். வாழ்க்கை என்பது ஒரு சக்கரம்தானே!

“ஆதலின் நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.” (திருக்குர்ஆன் 94: 5, 6)

Saturday, 24 February 2018

ஹாசினியின் தந்தையின் கதறல்



ஹாசினி கொலைவழக்கின் தீர்ப்பைக் கேட்ட பின் அவளது புகைப்படத்தைப் பார்த்து அவளின் தந்தை கதறி அழுததைக் கண்ட பொழுது எனக்கு குஜராத் நினைவுக்கு வந்தது. ஹாசினியையாவது காமக் கொடூரன் தஷ்வந்த் கடத்திக்கொண்டு போய் சீரழித்து கொன்றான். தன் கண் முன்னே நடக்காவிட்டாலும் தன் மகள் எப்படியெல்லாம் துடிதுடித்து இறந்திருப்பாள் என்றெண்ணி ஹாசினியின் தந்தை கதறுகிறார் என்றால் குஜராத்தில் இனப்படுகொலை நடந்தபொழுது தாய், தந்தையர் கண் முன்னே ஹிந்துத்துவ ஃபாசிச பயங்கரவாதிகள் பெண்களைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்து எரித்துக் கொன்றதைப் பார்த்து எப்படி துடிதுடித்திருப்பார்கள் அந்தப் பெற்றோர்கள். இன்று நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் நடுநடுங்குகிறதே... அந்த இனப்படுகொலையைச் செய்ய அனுமதித்து, காவல்துறையின் கைகளைக் கட்டிப்போட்டு, நடப்பவையை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும் என்று உத்தரவு போட்டவர் இன்று அரியணையில்! இப்படிப்பட்ட இழி நிலைக்கு இன்று இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இப்படி நம்பிக்கையிழந்து நெஞ்சம் விம்மும் நேரத்தில்தான் பாப்புலர் ஃப்ரண்ட் சேர்மன் இ. அபூபக்கர் ஸாஹிப் அவர்கள் பிப் 17, 2018 பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் திரூரில் ஆற்றிய உரை செவிகளில் ரீங்காரமிடுகிறது:
“கேரளத்திற்கும் சங்பரிவார்கள் ரதயாத்திரையுடன் வருகிறார்கள். எனினும், இங்கு நான் ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏதேனும் ஒரு சமூகத்தின் அமைதிக்கு மட்டும் பங்கம் விளைவிக்கும் சூழல் கேரளாவில் ஏற்படாது என்று நம்புகிறோம். ஏதேனும் ஒரு பிரிவினரின் ரத்தம் மட்டும் வீதிகளில் ஓடாது என்றும் நம்புகிறோம்” என்ற வார்த்தைகள் வாழும் முஸ்லிம்களுக்கு வலுவான நம்பிக்கையை ஊட்டுகின்றன.

சாஸ்திரி வாங்கிய ஃபியட் கார்



மிகவும் எளிமையாக வாழ்ந்த இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு 1964-65ல் தனது குடும்பத் தேவைக்காக ஒரு கார் வேண்டிய அவசியம் வந்தது. அன்று பெயரும், புகழும் பெற்று விளங்கிய ஃபியட் கார் வாங்குவது என்று முடிவெடுத்தார்.

அன்றைய ஃபியட் காரின் விலை ரூ. 12,000. இவருக்கு வங்கியில் ரூ. 7000 மட்டுமே இருந்தது. மீதிப் பணம் ரூ. 5000ஐ பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடனாக சாஸ்திரி பெற்று ஃபியட் கார் வாங்கினார். கார் எண் DLE 6.

ஆனால் எதிர்பாராவிதமாக 1966ம் ஆண்டு தாஷ்கண்ட் சென்றிருந்தபொழுது சாஸ்திரி இறந்து விட்டார். காருக்கு வாங்கிய கடனை அடைக்காமல் சாஸ்திரி இறந்துவிட்டதால் கடனை அடைக்குமாறு சாஸ்திரியின் மனைவி லலிதா சாஸ்திரிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி நோட்டீஸ் அனுப்பியது.

தனக்கு வந்த பென்ஷன் தொகையை வைத்து லலிதா சாஸ்திரி அந்தக் கடனை அடைத்தார். இதே பஞ்சாப் நேஷனல் வங்கியில்தான் இன்று 11,300 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. அந்தக் கார் இன்று சாஸ்திரியின் நினைவு இல்லத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

என் பெயர் ஆஸாத்!

இந்திய விடுதலைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் 1922ல் சிந்து மாகாணம் மட்லி நகரில் ஒரு சிறுவன் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியைத் தூண்டும் விதத்தில் ஆவேசமாக மக்களிடம் பேசுகிறான். விடுதலை உணர்வைத் தூண்டும் அந்த மழலைக் குரல் ஒலிக்கும் இடமெல்லாம் மக்கள் திரளாகக் கூடினர். தகவல் ஆங்கிலேயருக்கு செல்கிறது. அந்த 11 வயதுச் சிறுவனைக் கைது செய்து இன்று பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் நகர நீதிமன்றத்தில் நிறுத்துகின்றனர். அச்சிறுவன்தான் கைர் முகம்மது.
நீதிமன்ற கூண்டிற்குள் தலை மட்டும் வெளியே தெரியும்படி நின்ற கைர் முகம்மதுவைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நீதிபதி விசாரணையைத் தொடங்குகிறார்.
நீதிபதி: உன் பெயர் என்ன?
கைர்: "ஆஸாத்" ('விடுதலை' என்று பொருள். கைரிடம் இருந்து உறுதியுடன் வெளிவந்த பதில் நீதிபதியை நிமிர்ந்து உட்கார வைத்தது.)
நீதிபதி: சரி... உன் தந்தையின் பெயர் என்ன?
கைர்: "இஸ்லாம்!"
நீதிபதி: உன் ஜாதி எது?
கைர்: "ஒத்துழையாமை!" (கைரின் பதில்களால் சற்றே எரிச்சல் அடைந்த நீதிபதி தொடர்ந்து கேட்கிறார்...)
நீதிபதி: உனது தொழில் எது?
கைர்: "அரசுக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டுவது" (ஒரு முதியோனுக்குரிய கம்பீரத்துடன் பதிலளிக்கிறான். புரட்சியைத் தூண்டுவது (Sedition) என்பது அன்று பெரிய குற்றம், ராஜதுரோகம்.)
நீதிபதி: உன் பிணையாள் (Surety) யார்?
கைர் : "என் பிணையாள் அல்லாஹ் ஒருவன்தான்"
(இப்பதிலைக் கேட்டு அதிர்ந்து போன நீதிபதி சிறுவன் என்பதால் சற்று இரக்கத்துடன்...)
நீதிபதி: உன் செயலுக்கு நீ மன்னிப்பு கோருகிறாயா?
கைர்: "ஒரு குற்றமும் செய்யாத நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் ஓர் இந்தியக் குடிமகன் என்ற நிலையில் என் கடமையைத்தானே செய்தேன்?"
(என்று தார்மீக உணர்வுடன் அவன் நீதிபதியைத் திருப்பிக் கேட்க... மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டதால் கைருக்கு சில மாதங்கள் சிறைத் தண்டனையை நீதிபதி வழங்குகிறார்.)
சிறுவன் கைர் முகம்மதுவின் பதில்களில் வெளிப்பட்ட ஆன்மீகப் பிடிப்பும் விடுதலை உணர்வும் நம்மை ஆச்சரியத்துடன் அள்ளிக்கொண்டு போகிறது.
(டாக்டர் பீ. ஹாமிது அப்துல் ஹை (அபூஹாரிஸ்), நீதி விசாரணை. சிந்தனைச்சரம், அக்டோபர் 1997)

கதர் ஆடை என்ற பெயர் எப்படி வந்தது?




“என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன” என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலீ சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜி பானு என்ற ஃபீயம்மாள் தான், கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர்.
தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, “இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். அன்றிலிருந்துதான் அந்த ஆடைக்கு ‘கதர் ஆடை’ என்ற பெயர் வந்தது.
சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற பெருமை நம் விடுதலைப் போராட்ட வரலாற்றுக்கு உண்டு.