Saturday 17 November 2018

நம்பிக்கை...

ஜெர்மன் படையினருடன் போரிட்டுக் களைப்படைந்திருந்த போர் வீரன் ஒருவன், வீழ்ந்துபட்ட தன் சகப் போராளியின் வெற்றுடலைப் போய்த் தூக்கி வர அவனுடைய உயரதிகாரியின் உத்தரவை நாடி நின்றான்.

"ஒரு செத்த சடலத்தை, உன் உயிரைப் பணயம் வைத்துப் போய்த் தூக்கி வரப் போகின்றாயா?" என்று அதட்டிக் கேட்டார் அவர். ஆனால் அந்தப் போராளியோ, விட்டபாடில்லை. அடம் பிடித்தான். வேறு வழியின்றி, அந்த அதிகாரி, தன் படைகளிடம் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை நிறுத்தக் கட்டளையிட்டு, அவனுக்கு அனுமதி கொடுத்தார்.

துப்பாக்கித் தோட்டாவைப் போன்று விரைந்து சென்ற அவ்வீரன், சில நிமிடங்களிலேயே தன் தோழனின் உடலைத் தோளில் சுமந்தவனாக எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் வநது சேர்ந்தான்.

"ஆகா, இந்தப் பிரேதத்தை எடுத்து வரவா உன் உயிரைப் பணயம் வைத்தாய்?" என்று கேட்டார் அதிகாரி.

"எஸ், ஸார். எனக்குத்தான் தெரியும் இதன் மதிப்பு. நான் அவனிடம் சென்று பார்த்தபோது, அவன் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. அப்போது அவன் சொன்னான்: "நண்பா... எனக்கு நன்றாகத் தெரியும், நான் சாகுமுன் நீ வருவாய் என்று." உடனே நான் குனிந்து அவனைத் தூக்கித் தோளில் வைத்தேன். அந்தோ... அப்போதுதான் அவனுடைய உயிர்
பிரிந்தது. இப்போது சொல்லுங்கள், நான் உயிரைப் பணயம் வைத்துச் சென்றதில் அர்த்தம் இருக்கின்றதா இல்லையா?"
என்றான் அந்தப் போர்வீரன்.

நம்பிக்கை என்பது கண்மூடித்தனம் என்று யார் சொன்னது?

நம்பிக்கை என்பது, பிறர் கண்ணால் பார்க்க முடியாதவற்றை இதயத்தின் உணர்வால் பார்ப்பதாகும். மக்கள் தாம் நுகரும் நன்மைகளுக்காக, அன்பினாலும் பக்தியினாலும் நன்றிப் பெருக்காலும் பார்ப்பதுதான் நம்பிக்கையாகும்.

(“அண்ணலார் கற்றுத்தந்த தலைமைத்துவம்” நூலிலிருந்து...)

No comments:

Post a Comment