Saturday, 17 November 2018

இஹ்ஸான் ஜாஃப்ரியை படுகொலை செய்த அன்று நடந்தது என்ன?


குஜராத் இனப்படுகொலை 2002
பிப்ரவரி 28 2002 அஹமதாபாத்
குல்பர்க் சொஸைட்டி

காலை 10.30 மணியளவில் வார்டு எண் 19ன் காங்கிரஸ் உறுப்பினர் அம்பலால் நாடியா, வார்டு எண் 20ன் உறுப்பினர் கன்னுலால் சோலங்கி ஆகியோருடன் இஹ்ஸான் ஜாஃப்ரியைக் காண வந்தார் காவல்துறை ஆணையர் பி.சி. பாண்டே. போலீஸ் படையை உடனே அனுப்பி வைப்பதாகவும், அவர் முழுவதுமாகப் பாதுகாக்கப்படுவார் என்றும் அவர்கள் இஹ்ஸான் ஜாஃப்ரியிடம் உறுதியளித்தனர்.

காவல்துறை ஆணையர் சென்ற 5 நிமிடத்தில், அதாவது காலை 10.35 மணியளவில், குல்பர்க் சொஸைட்டிக்கு கொஞ்சம் வெளியே இருந்த ஸாஹிர் பேக்கரியும், ஒரு ஆட்டோ ரிக்ஷாவும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

பகல் 11.15-11.30 மணியளவில் குல்பர்க் சொஸைட்டியில் கல்வீச்சு தொடங்கியது. 45 நிமிடங்கள் கழித்து, அதாவது பகல் 12.15-12.30 மணியளவில், குல்பர்க் சொஸைட்டியின் பின்பக்கம் உள்ள கட்டடங்களிலிருந்தும், பங்களாக்களிலிருத்தும் கற்கள், அமில பல்புகள், கண்ணாடிக் குப்பிகள், பெட்ரோல் குண்டுகள் ஆகியவை குல்பர்க் சொஸைட்டி மீது வீசப்பட்டன.

பகல் மணி 12.30க்கும்.12.45க்கும் இடைப்பட்ட வேளையில், ஒரு முஸ்லிமல்லாதவருக்குச் சொந்தமான பங்களாவின் மொட்டை மாடியிலிருந்து கற்களும், பெரும் பாறாங்கற்களும் எறியப்பட்டன. குல்பர்க் சொஸைட்டியின் குடியிருப்பு வளாகங்கள் இதனால் பெருத்த சேதமடைந்தன. இந்த வளாகங்கள் சேதமடையாமல் இருந்திருந்தால் முஸ்லிம்கள் ஒருவேளை தங்களைக் காத்திருக்கலாம்.

பெரும் பெரும் கற்கள், அமில பல்புகள், எரியும் துணிப் பந்துகள் ஆகியவை மதியம் 1-1.15 மணி வரை வீசப்பட்டுக் கொண்டே இருந்தன. மதியம் ஒரு மணியளவில், அந்த சொஸைட்டியில் வசிக்கும் யூசுஃப் என்பவர் வன்முறையாளர்களிடம் பிடிபட்டார். கயவர்கள் அவரைத் துண்டு துண்டாக வெட்டி, தீ வைத்துக் கொளுத்தினர்.

குடியிருப்பில் வசிப்பவர்களிடையே பீதி அதிகமானது. இந்தச் சமயத்தில் இஹ்ஸான் ஜாஃப்ரியின் வீட்டில் 80 நபர்கள் இருந்தனர்.

பிற்பகல் 2.30-2.45 மணியளவில், "குசி ஜாவோ"(உள்ளே செல்லுங்கள்) என்ற கத்தல்களுக்கிடையே, திடீரென்று சொஸைட்டியின்பின்பக்கம், இருப்புப் பாதைக்கு அருகிலுள்ள கதவு உடைக்கப்பட்டது.

பிற்பகல் மணி 2.30க்கும் 2.45க்குமிடையில், வன்முறைக் கும்பலின் குறியான இஹ்சான் ஜாஃப்ரி அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டார். அவர் மிகவும் சிரத்தை  எடுத்துக் கட்டிய அவரது வீட்டின் முன்பு, 45 நிமிடங்களாக, அவர் மிகக் கொடுமையாக துண்டு துண்டாக வெட்டப்பட்டார். இறுதியில் அவரது தலையும் வெட்டப்பட்டது.

அவர் கொல்லப்படுவதற்கு முன்பு ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்வப்பட்டார் "வந்தே மாதரம் ", "ஜெய் ஸ்ரீராம்" என்று சொல்லுமாறு வலியுறுத்தப்பட்டார், ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவரது விரல்களைத் துண்டு துண்டாக வெட்டிய பின், அந்தப் பகுதி முழுவதும் அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டும் வந்தார். அடுத்ததாக அவரது கரங்களும், கால்களும் வெட்டப்பட்டன.

அதன்பின், கூர்மையான ஒரு கருவியை அவரது கழுத்தில் மாட்டி, இழுத்துச் சென்றது அந்தக் கொலைகாரக் கும்பல். பின்னர், அவர் தீயில் வீசப்பட்டார்.

பொதுச் சேவையிலேயே தன் வாழ் அர்ப்பணித்த ஒரு மனிதருக்கு நேர்ந்த கொடூர முடிவு இது. இந்தத் தாக்குதலில், இஹ்சான் ஜாஃப்ரியுடன் அவரது மூன்று சகோதரர்களும், இரண்டு மருமகன்களும் கொல்லப்பட்டனர்.

-oOo-

சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்த முஸ்லிம்கள் பாதுகாப்புக்காக சொஸைட்டிக்கு வந்தனர். குல்பர்க் சொஸைட்டிக்கு பின்பக்கம் ஒரு இருப்புப்பாதை செல்கிறது. அதற்கு அப்புறமுள்ள பணியாளர்கள் குடியிருப்புகளிலிருந்து 5000-6000 பேர் கொண்ட ஒரு வன்முறைக் கும்பல் வந்தது. ஐக்ரூப் சிங் ராஜ்புட் என்பவன்தான் இந்தக் கும்பலுக்குத் தலைமையேற்று வந்தான்.

பாஜக அஹமதாபாத் முனிசிபாலிட்டியில் பெரும்பான்மை பலத்துடன் இருந்தபொழுது, இவன் துணை மேயராக இருந்தான். இந்தக் கும்பலிடமிருந்தும் கல்லெறிதல் தொடங்கியது.

ஆக, குல்பர்க் சொஸைட்டியின் அனைத்துத் திசைகளிலிருந்தும் கல்மழை பொழிந்தது.

இதற்கிடையில் ஜாஃப்ரி 200 தடவைகளுக்கு மேல் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். காவல்துறை ஆணையர் பாண்டே, காந்தி நகரிலுள்ள அமர்சிங் சௌத்ரி, நரேஷ் ராவல், முதலமைச்சர், உள்துறை அமைச்சர் என்று பலரையும் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

ஒரு நேரடி சாட்சி சொல்கிறார்: “பிற்பகல் 2.30 மணியளவில் கதவருகில் கைகளைக் கூப்பியபடி நின்று கொண்டிருந்த ஜாஃப்ரி ஸாஹிபை 4 பேர் வெளியே இழுத்து வந்தனர். அந்த நால்வர் பெயர்கள் வருமாறு: சமன்புராவில் கேபிள் ஆப்பரேட்டராக இருக்கும் நாராயன் கப்ரா,
“பாயாஜி" ரமேஷ் சோட்டி, ராஜஸ்தான் மளிகைக் கடை உரிமையாளரின் மகன் மனிஷ் ஜெய்ன், சம்பாபென் என்பவரின் மகன் கிருஷ்ணா.(காவல்துறையின் புலன் விசாரணைகளின்போது நேரடி சாட்சிகள் கொடுத்த வாக்குமூலங்களிலும் இந்த நால்வரின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டன.)

“ஜாஃப்ரி ஸாஹிபை வெளியே இழுத்து வரும்பொழுதே ஒரு வாளால் அவரை மூன்று துண்டுகளாக வெட்டினர். ஜாஃப்ரி ஸாஹிபை தீ வைத்துக் கொளுத்திய பிறகு, அந்த வன்முறைக் கும்பல் டயர்களை எரிக்கத் தொடங்கியது. அந்தக் கும்பல் ஜாஃப்ரி ஸாஹிப் வீட்டின் அனைத்துக் கதவுகளையும் உடைத்து, எல்லா புறங்களிலும் தீ வைத்தது. உள்ளே 35 குழந்தைகள் இருந்தன. அந்தக் குழந்தைகள் அனைத்தும் கைகளைக் கூப்பியபடி கெஞ்சிக் கூத்தாடின. ஆனால் அக்குழந்தைகளால் வெளியே வர முடியாது. பிற்பகல் 3.15 மணியளவில் ஜாஃப்ரியின் வீடு முழுவதும் புகைமண்டலமாக நிரம்பியது. பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்த அனைவரும் மூச்சு விட முடியாமல் திணறினர்.

வெளியே வந்தால் பாதுகாப்பு தருவோம் என்று சொல்லப்பட்டதன் பேரில் சில பெண்கள் வெளியே வந்தனர். இந்தக் குழுமத்தின் முன் வாக்குமூலம் அளித்த நேரடி சாட்சிகள், கையில் வாளுடன் வந்த தினேஷ் பிரபுதாஸ் ஷர்மா என்பவன் யூஸுஃப் என்பவரைக் கொல்வதை நேரில் கண்டனர்.

ஒரு நேரடி சாட்சியின் மகளின் ஆடைகளை லாதியா என்பவன் கிழித்தெறிந்தான். பின்னர் அந்தப் பெண்ணைக் கற்பழித்து கொலை செய்தான். ஏற்கனவே தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட லாலா மோகன்சிங் தர்பார் என்பவன் வேறொரு பெண்ணைக் கொன்றான்.

மாலை 4.45 மணியளவில், ஒரு சிறிய தோட்டத்தில் சிறு அறையில் ஒளிந்திருந்த ஒரு நேரடி சட்சிக்கு "ஓடு... ஓடு..." என்ற சப்தங்கள் கேட்டன. போலீஸ் வத்திருக்கும் என்று அந்த நேரடி சாட்சி யூகித்துக் கொண்டார்.

மூச்சு முட்டலில் திணறிக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றுமாறு இந்த நேரடி சாட்சி காவல்துறை ஆணையர் டான்டனிடம் கோனார். ஆனால் அவர் அவர்களைக் காப்பாற்ற தயங்கினார்.

இந்தத் தாக்குதல் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஜாஃப்ரியின் வீட்டிலிருந்த தொட்டிகளும், தோட்டத்திலும், அடுத்த வீடுகளிலுமிருந்த தொட்டிகளும் முதலில் காலி செய்யப்பட்டு சொட்டு தண்ணீர் இல்லாமல் ஆக்கினார்கள் கயவர்கள். இதனால் தீயை அணைக்க முடியாமல் ஆக்கினார்கள்.

தீ படு வேகமாகப் பரவியது. ஆனால் அந்தக் காவல்துறை துணை ஆணையாளர் டான்டன் உயிர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை.

போலீஸ் வந்து அரை மணி நேரம் கழித்து, அதாவது மாலை 5.15 மணியளவில், ஜாஃப்ரியின் விட்டிலிருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்தன. தப்பிக்க முடியாமல் உள்ளேயே சிக்கியிருந்த அனைவரும் இறந்தனர். பெண்களும், குழந்தைகளும் எரிந்து சாம்பலாயினர் குர்பர்க் சொஸைட்டியில் நடந்த படுகொலைகளுக்கு முழு உடந்தையாக இருந்த குஜராத் அரசின், அதன் காவல்துறையின் பாதகத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

முதல்வர் (மோடி), உள்துறை அமைச்சர், காவல்துறை ஆணையர் என்று அனைவரையும் ஜாஃப்ரி தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

இந்தத் தாக்குதல் 7 மணி நேரம் நீடித்தது. 5 மணி நேரம் மிகக் கொடூரமான கொலைவெறி தாண்டவமாடியது.

சமன்புராவிலுள்ள குல்பர்க் சொஸைட்டி அமைதாபாத் நகரில் இதயப் பகுதியில் இருக்கிறது. மாநிலத்தில் வேறு எங்கோ தூர தொலைவில் இது இல்லை.

(“மனித இனத்திற்கெதிரான குற்றம்” நூலிலிருந்து...)

No comments:

Post a Comment