Saturday, 24 February 2018

என் பெயர் ஆஸாத்!

இந்திய விடுதலைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் 1922ல் சிந்து மாகாணம் மட்லி நகரில் ஒரு சிறுவன் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியைத் தூண்டும் விதத்தில் ஆவேசமாக மக்களிடம் பேசுகிறான். விடுதலை உணர்வைத் தூண்டும் அந்த மழலைக் குரல் ஒலிக்கும் இடமெல்லாம் மக்கள் திரளாகக் கூடினர். தகவல் ஆங்கிலேயருக்கு செல்கிறது. அந்த 11 வயதுச் சிறுவனைக் கைது செய்து இன்று பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் நகர நீதிமன்றத்தில் நிறுத்துகின்றனர். அச்சிறுவன்தான் கைர் முகம்மது.
நீதிமன்ற கூண்டிற்குள் தலை மட்டும் வெளியே தெரியும்படி நின்ற கைர் முகம்மதுவைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நீதிபதி விசாரணையைத் தொடங்குகிறார்.
நீதிபதி: உன் பெயர் என்ன?
கைர்: "ஆஸாத்" ('விடுதலை' என்று பொருள். கைரிடம் இருந்து உறுதியுடன் வெளிவந்த பதில் நீதிபதியை நிமிர்ந்து உட்கார வைத்தது.)
நீதிபதி: சரி... உன் தந்தையின் பெயர் என்ன?
கைர்: "இஸ்லாம்!"
நீதிபதி: உன் ஜாதி எது?
கைர்: "ஒத்துழையாமை!" (கைரின் பதில்களால் சற்றே எரிச்சல் அடைந்த நீதிபதி தொடர்ந்து கேட்கிறார்...)
நீதிபதி: உனது தொழில் எது?
கைர்: "அரசுக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டுவது" (ஒரு முதியோனுக்குரிய கம்பீரத்துடன் பதிலளிக்கிறான். புரட்சியைத் தூண்டுவது (Sedition) என்பது அன்று பெரிய குற்றம், ராஜதுரோகம்.)
நீதிபதி: உன் பிணையாள் (Surety) யார்?
கைர் : "என் பிணையாள் அல்லாஹ் ஒருவன்தான்"
(இப்பதிலைக் கேட்டு அதிர்ந்து போன நீதிபதி சிறுவன் என்பதால் சற்று இரக்கத்துடன்...)
நீதிபதி: உன் செயலுக்கு நீ மன்னிப்பு கோருகிறாயா?
கைர்: "ஒரு குற்றமும் செய்யாத நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் ஓர் இந்தியக் குடிமகன் என்ற நிலையில் என் கடமையைத்தானே செய்தேன்?"
(என்று தார்மீக உணர்வுடன் அவன் நீதிபதியைத் திருப்பிக் கேட்க... மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டதால் கைருக்கு சில மாதங்கள் சிறைத் தண்டனையை நீதிபதி வழங்குகிறார்.)
சிறுவன் கைர் முகம்மதுவின் பதில்களில் வெளிப்பட்ட ஆன்மீகப் பிடிப்பும் விடுதலை உணர்வும் நம்மை ஆச்சரியத்துடன் அள்ளிக்கொண்டு போகிறது.
(டாக்டர் பீ. ஹாமிது அப்துல் ஹை (அபூஹாரிஸ்), நீதி விசாரணை. சிந்தனைச்சரம், அக்டோபர் 1997)

No comments:

Post a Comment