காயல் பட்டினத்தைச் சார்ந்த ஆலிமா சித்தி லரீஃபா அவர்கள் உம்மு நுமைரா என்ற புனைப் பெயரில் எழுதிய நூலே “பேராசிரியர் பெருமானார் (ஸல்)”.
அகிலத்தாருக்கெல்லாம் அழகிய முன்மாதிரியாகத் திகழ்பவர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள். குறிப்பாக ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவர்களே சூப்பர் ஹீரோ. எனவேதான் முஸ்லிம்கள் அண்ணலாரை உயிரினும் மேலாக நேசிக்கின்றனர்.
அகிலத்தாருக்கு அல்லாஹ்வின் அருள்மறையைப் போதிக்க வந்த அண்ணலார் அவர்கள் ஆசிரியராக மிளிர்ந்தார்கள் என்பதில் வியப்பில்லை. ஆனால் அனைத்துத் திறமைகளையும் கொண்ட, கற்றுத் தருதலின் அனைத்து முறைமைகளையும் அக்குவேறு ஆணிவேராக அறிந்திருந்த பேராசிரியராகத் திகழ்ந்துள்ளார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் நூல்தான் “பேராசிரியர் பெருமானார் (ஸல்)”.
“அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஓர் ஆன்மீகத் தலைவராய், சிறந்த ஆட்சித் தலைவராய், வீரமும், விவேகமும் நிறைந்த போர்த் தளபதியாய், உற்ற தோழராய், அன்புக் கணவராய், ஆருயிர்த் தந்தையாய், கண்ணியமிகு மனிதராய் எனப் பல்வேறு பரிமாணங்களில் நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் நாமெல்லாம் அதிகம் அறிந்திராத சிறந்த ஆசிரியராய் அவர்களை உங்களிடம் அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கமாகும்” என்று நூலாசிரியர் எழுதிய முன்னுரையின் முதல் வாசகமே நூலின் நோக்கத்தை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
“சுமார் பதினைந்து ஆண்டுகளாக ஓர் ஆசிரியையாக பணியாற்றிய வகையில், அண்ணலாரின் நடைமுறைகளை நபிமொழிகள் வடிவிலாக நெருங்கி நின்று பார்க்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றதினால் பேராசிரியர் பெருமானார் (ஸல்) அவர்களைப் பார்த்து பிரமித்துப் போனேன். நான் ஆச்சரியப்பட்ட, பிரமித்த, இரசித்த விஷயங்களை உங்களோடும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்நூலை எழுத விழைந்தேன்” என்று நூலாசிரியர் குறிப்பிட்டதைப் படிக்கும்பொழுது நமக்கும் சுவாரசியம் ஒட்டிக் கொள்கிறது.
30 அத்தியாயங்களாக இந்நூலைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர். ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு கற்றல் முறையை அழகுற விளக்குகிறது.
கேட்பவர்களை சடைவடையச் செய்யாதிருத்தல், எளிமையான மொழி நயம், கேட்பவர்களின் அறிவுக்கும், புரிதல் திறனுக்கும் ஏற்றவாறு பேச்சுகளை அமைத்துக் கொள்ளுதல், வினாக்கள் மற்றும் விவாதங்கள் மூலம் புரிய வைத்தல், உதாரணங்களைப் பயன்படுத்தி விளக்குதல், கோடுகள் மற்றும் வரைபடங்கள் மூலமாக விளக்குதல், … என்று நீளும் பொருளடக்கப் பட்டியலைப் படிக்கும்போதே எழும் ஆர்வத்திற்கு அணை போட முடியவில்லை.
நம் எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல் திருப்தியுடன் பூர்த்தி செய்கிறார் நூலாசிரியர். தான் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு தலைப்புக்கும் பொருத்தமான ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய இடங்களில் சரியாகப் பொருத்தியிருக்கிறார்.
“அநாதைகளை ஆதரிப்பவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறு (நெருக்கமாக) இருப்போம்” என்று தமது சுட்டுவிரலையும், நடு விரலையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் காட்டினார்கள்” என்ற நபிமொழியை மையப் பொருளாக வைத்து “கையசைவுகள் மற்றும் சைகைகள் காட்டி விளக்குதல்” என்ற அத்தியாயத்தைத் தீட்டியிருக்கிறார் நூலாசிரியர்.
“அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டை விட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்” என்ற அண்ணலாரின் அருள்மொழியை அடிப்படையாக வைத்து “கண் முன்னால் காணும் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக்கொள்ளுதல்” என்ற அத்தியாத்தை வரைந்துள்ளார் நூலாசிரியர்.
இப்படி ஒவ்வொரு அத்தியாயமும் அழகிய உதாரணங்களாக அண்ணலாரின் அருள்மொழிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
நபிகளார் முக்கியமான சில வார்த்தைகளை ஏன் மூன்று முறை கூறினார்கள், கதைகளையும், முற்கால நிகழ்வுகளையும் அவ்வப்பொழுது ஏன் கூறினார்கள், சிலரிடம் மட்டும் ஏன் தனிக் கவனம் செலுத்தினார்கள் போன்ற கேள்விகளுக்கு தகுந்த விளக்கத்தைத் தருகிறது இந்நூல்.
அவசியமான இடங்களில் அண்ணலார் கோபமும், கண்டிப்பும் காட்டியது, தோழர்களிடம் நிதானமாகவும், மென்மையாகவும் நடந்துகொண்டது, செய்திகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்திக் கூறியது, படிப்படியாகக் கற்றுக் கொடுத்தது, தோழர்களின் திறமைகளைப் பாராட்டியது, அவர்களை உற்சாகப்படுத்தியது, தோழர்களின் அறிவைப் பரிசோதிப்பதற்காக வினா எழுப்பியது, வெட்கப்படக்கூடிய விஷயங்களை கற்பிக்கும்போது நாசூக்காக நளினமாகக் கூறியது, தோழர்களின் தேடுதல் திறனை அதிகரிப்பதற்காக சில விஷயங்களை மூடலாகக் கூறியது என்று பல நிகழ்வுகள் விளக்கங்களுடன் விரிகிறது இந்நூலில்.
“மதிப்பெண்கள் அதிகமாய் எடுப்பவர்களை நல்ல மனன சக்தி உள்ளவர் என்று வேண்டுமானால் கூறலாம். நல்ல அறிவுடையவர் என்று நிச்சயமாய் கூறிவிட முடியாது” என்று ஓரிடத்தில் நூலாசிரியர் நச்சென்று குறிப்பிடுவது இன்றைய கல்வி முறையின் முகத்தில் அறைவது போல் உள்ளது.
“நானும் ஓர் ஆசிரியராகவே அனுப்பப் பட்டுள்ளேன்” என்று உரக்கச் சொன்ன உத்தம நபி (ஸல்) அவர்களின் கற்பித்தல் முறை எவ்வாறெல்லாம் இருந்தது என்பதன் ஒரு வடிவம் மூளைக்குள் முளைத்து விடுகிறது நூலைப் படித்து முடிக்கும்பொழுது.
சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகமதிகம் அவசியம் என்ற காலத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு நூலாசிரியர் இன்னும் பல நூல்களைப் படைத்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிட வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
அச்சுப் பிழைகளின்றி, மிக நேர்த்தியாக அச்சுச்கோர்ப்பு செய்து, அழகிய வகையில் பக்கங்களையும் வடிவமைத்திருக்கிறார்கள் தாருஸ் ஸலாஹ் பதிப்பகத்தார். அவர்கள் எடுத்துக்கொண்ட சிரத்தை ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது. பாராட்டுகள்.
அனைத்து முஸ்லிம்களும் அவசியம் படித்திட வேண்டிய நூல். குறைந்தபட்சம் அனைத்து ஆசிரியர்களும் அவர்களின் தகைமைகளை வளர்த்திட அவசியம் அள்ளிப் பருக வேண்டிய நூல்.
புதிய விடியல், டிசம்பர் 16-31, 2017
No comments:
Post a Comment