மஹாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒன்று டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என். சாய்பாபா அவர்களுக்கு கடந்த மார்ச் 7ம் தேதி ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் 90% மாற்றுத் திறனாளியான பேரா. சாய்பாபாவுக்கு மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம் என்ற யுஏபிஏ கொடூரச் சட்டத்தின் 13, 18, 20, 38, 39 ஆகிய பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 120பி பிரிவின் கீழும் அந்த அமர்வு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.
நமது புதிய விடியல் சிறப்பு செய்தியாளர் தன்வீர் இக்பால் பேரா. சாய்பாபா அவர்களின் மனைவி திருமதி வஸதா சாய்பாபா அவர்களை நேரில் சந்தித்து உரையாடினார். அந்தப் பேட்டியின் விவரம் வருமாறு:
பு.வி.: பேரா. சாய்பாபா அவர்களுக்கு கட்சிரோலி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு பற்றி என்ன கூறுகிறீர்கள்?
வஸதா: ஆயுள் தண்டனை என்பது அதிர்ச்சியை அளித்தது. முற்றிலும் எதிர்பாராதது. வழக்கு நடந்துகொண்டிருந்த பொழுது அரசுத் தரப்பு வழக்கறிஞரால் சாய்பாபாவுக்கெதிராக மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஒரு ஆதாரத்தைக் கூட கொண்டு வர முடியவில்லை. மஹாராஷ்ட்ரா வரலாற்றிலேயே குற்றம் சுமத்தப்பட்ட அத்தனை பேருக்கும் ஆயுள் தண்டனையின் அத்தனை பிரிவுகளின் கீழும் தண்டனை அளிக்கப்படுவது இதுவே முதல் முறை.
நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 23 சாட்சிகளில் 22 பேர் போலீஸ்காரர்கள். மீதமுள்ள ஒரே ஒருவர் ஒரு நாவிதர். அந்த நாவிதரும் கூட போலீஸின் ஆளே. அதனை அவரே அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் தன்னை சாட்சி சொல்லும்படி போலீஸ்தான் வற்புறுத்தியது என்று கூறினார்.
2014ல் டெல்லி பல்கலைக்கழக வடக்கு வளாகத்திலுள்ள எங்கள் வீட்டில் காவல்துறையின் சோதனை நடந்தது. அப்பொழுது கணிணியின் நிலைவட்டு (ஹார்ட் டிஸ்க்) கைப்பற்றப்பட்டது. அது உட்பட சில மின்னணு ஆதாரங்களையே அதிகபட்ச ஆதாரங்களாகக் கொண்டு சாய்பாபாவுக்கு இந்தத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆதாரம் முத்திரை வைக்கப்படாததால் மிக எளிதாக அதில் மாற்றங்களைச் செய்யலாம். சாய்பாபா மாவோயிஸ்டுகளுடன் பிரகாஷ் என்ற பெயரில் வேலை செய்தாராம். சாய்பாபா பிரகாஷ் என்ற பெயரில் வேலை செய்ததற்கு ஒரு ஆதாரம் கூட சமர்ப்பிக்கப்படவில்லை. மேல்முறையீட்டில் மேல் நீதிமன்றங்களில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
பு.வி.: ஏன் இப்படிப்பட்ட வழக்கு சாய்பாபாவின் மேல் கட்சிரோலி நீதித்துறை எல்லைக்குள் தொடுக்கப்பட்டது?
வஸதா: முதலில் காவல்துறை 2013 செப்டம்பரில் எங்கள் வீட்டை சோதனையிட்டது. மஹாராஷ்ட்ராவில் அஹேரியில் திருடப்பட்ட பொருளைத் தேடியெடுப்பதுதான் அதன் நோக்கமாக இருந்தது. அது நடந்து 9 மாதங்களுக்குப் பிறகு சாய்பாபா கைது செய்யப்பட்டார். 2014ம் ஆண்டு மே 9ம் தேதி டெல்லி பல்கலைக்கழத்தில் ஒரு பரீட்சை மையத்திலிருந்து அவர் திரும்பிக்கொண்டிருந்த பொழுது கைது செய்யப்பட்டார். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டமான யுஏபிஏ சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
2014ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி, பாம்பே உயர்நீதிமன்றம் நாக்பூர் சிறையில் மோசமாகிக்கொண்டு வரும் அவரது உடல்நிலை குறித்த அறிக்கைகளின் அடிப்படையில் மூன்று மாத பிணை வழங்கியது.
பு.வி.: 2014ல் சாய்பாபா கைது செய்யப்பட்டதை ‘அது ஒரு கடத்தல்’ என்று சாய்பாபா வர்ணித்திருந்தார். அதனை விவரிக்க முடியுமா?
வஸதா: மே 9ம் தேதி தவுலத் ராம் கல்லூரியில் அமைந்துள்ள பல்கலைக்கழக மதிப்பீட்டு மையத்தின் தலைமைத் தேர்வு மேற்பார்வையாளராக சாய்பாபா நியமிக்கப்பட்டார். மதிய உணவு இடைவேளையில் தனது காரில் சாய்பாபா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பல்கலைக்கழக விளையட்டரங்கத்தின் அருகிலுள்ள வளைவில் திரும்பும்பொழுது திடீரென்று 45 முதல் 50 பேர் காருக்கு முன்பாக வந்தனர். காரை நிறுத்தினர். சில நொடிகளில், கார் ஓட்டுனரை ஒருவன் இழுத்து வெளியே தள்ளி விட்டு, காரினுள் அமர்ந்தான். சாலை வழிப்பறியாக இருக்கலாம் என்றுதான் சாய்பாபா எண்ணினார். ஆனால் அவர்கள் காரை சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர். சாய்பாபாவை காரிலேயே இருக்கும்படி உத்தரவிட்ட அவர்கள் அவரது கைபேசியைப் பிடுங்கினர். தேர்வு வினாத் தாள்களையும் பிடுங்கினர். அதன்பிறகுதான் அவர்கள் 50 பேரும் காவல்துறை அதிகாரிகள் என்று சாய்பாபாவுக்குத் தெரிய வந்தது. அவர்கள் சாதாரண உடைகளில் வந்த மஹாராஷ்ட்ரா காவல்துறை, ஆந்திரா காவல்துறை, மத்திய உளவுத்துறை, சிறப்புப் பிரிவு காவல்துறை ஆகியவற்றின் அதிகாரிகள்.
சாய்பாபாவை ஒரு மேஜிஸ்திரேட்டின் முன்பு ஆஜர் படுத்தாமல், விசாரணைக்காக விண்ணப்பிக்காமல் அவர் நாக்பூருக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். சாய்பாபாவின் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வந்த பணியாளரின் அலைபேசி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை செல்லும்பொழுது சாய்பாபா எங்களைத் தொடர்பு கொண்டார்.
பு.வி.: சாய்பாபாவின் உடல்நிலை எப்படி உள்ளது? பிணையில் வெளிவரும் முன் சிறையில் எப்படி அவர் சமாளித்தார்?
வஸதா: 2014ல் அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து அவரது இடது கையை அவரால் தூக்கவே முடியாத நிலையில் உள்ளார். நாக்பூருக்குச் செல்லும் வழியில் அவரது சக்கர நாற்காலி உடைந்து விட்டது. அப்பொழுது போலீஸ் கான்ஸ்டபிள்கள் மணல் மூட்டையை அள்ளுவது போல் அவரைத் தூக்கியிருக்கின்றனர். நாக்பூர் சிறையில் அவரது தசைகள் சிதிலமடைந்து வருவதைக் கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு தசைகளுக்கான நரம்பியல்-உடற்கூறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தனர். சிறையில் சாய்பாபாவுக்கு மேலைநாட்டுப் பாணியிலான கழிவறை கொடுக்கப்படவில்லை. காவலர்கள் சாய்பாபாவின் தோள்களைப் பிடித்துக்கொள்ள, அவர் இந்திய கழிவறையை மிகவும் சிரமப்பட்டு பயன்படுத்தினார். இது அவரது எலும்புகளைப் பிணைக்கும் தசைநார்களைப் பாதித்தது. நரம்புகளும் பாதிப்படைந்தன. அவை சிதிலமடையத் தொடங்கின. சாய்பாபாவின் தண்டுவடமும் சேதமடைந்தது. அவரது விலா எலும்புகள் நுரையீரலை உந்தித் தள்ள ஆரம்பித்தன. சாய்பாபாவுக்கு உடனடியாக பித்தப்பையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
பு.வி.: அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் அவரது வேலை என்னவாயிற்று? உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? குடும்பச் செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?
வஸதா: 2014ல் மஹாராஷ்ட்ரா கட்சிரோலி காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் ஆர்.எல்.ஏ. கல்லூரியிலிருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். நாங்கள் மூன்று பேர் அவரைச் சார்ந்து வாழ்கிறோம். நான், சாய்பாபாவின் அம்மா, எங்கள் 19 வயதுடைய மகள் ஆகியோரே அந்த மூவர். சாய்பாபாவை பணியிடைநீக்கம் செய்த பின்னர், டெல்லி பல்கலைக்கழகம் எங்களை எங்கள் வடக்கு கட்டட வளாகத்திலிருந்த வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. ஆதலால் வேறு வழியில்லாமல் நாங்கள் அருகிலுள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். வழக்கு செலவுகளுக்காகவும், இன்னபிற அன்றாடச் செலவுகளுக்காகவும் சில நண்பர்கள் உதவி செய்கிறார்கள். நிறைய கடன்கள் உள்ளன. எங்களது முக்கிய வருமானம் என்பது சாய்பாபாவின் சம்பளமே. இப்பொழுது அவர் பணியிடைநீக்கத்தில் இருப்பதால் மூன்றில் ஒரு பகுதி சம்பளமே எங்களுக்குக் கிடைக்கிறது.
பு.வி.: எந்த நீதிமன்றத்திலாவது அவருக்கு குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் உள்ளனவா?
வஸதா: இந்த வழக்கு தவிர்த்து வேறு எந்த வழக்கும் அவர் மீது இல்லை. அவர் ஒரு பேராசிரியர். அவர் கல்லூரியில் வகுப்பு எடுப்பவர். அநீதிக்கெதிராக அவர் ஜனநாயக வழியில் குரல் கொடுப்பார். ஆனால் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட அசீமானந்தா போன்ற குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஆர்எஸ்எஸ்ஸுடன் பின்னிப் பிணைந்தவர்கள். ஆர்எஸ்எஸ் பாஜக மூலமாக ஒரு பதிலி அரசை இங்கே நடத்திக்கொண்டிருக்கிறது. அந்த அரசோ பெருநிறுவனங்களுக்குச் சாதகமான அரசு. தேசத்தின் கனிம வளங்களை இந்தப் பெருநிறுவனங்கள் சுரண்டுகின்றன.
சாய்பாபாவின் வழக்கை ஏதோ தனிப்பட்ட வழக்காக காண முடியாது. இது ஒரு தொடரின் எச்சமே. இது பினாயக் சிங் முதல் கோபாட் கண்டி வரை தொடர்கிறது. இதற்கு முன் பினாயக் சிங்கைக் கைது செய்தார்கள். அவர் ஒரு மருத்துவர். ஆதிவாசிகளுக்கு நடக்கும் மனிதஉரிமை மீறல்களுக்கெதிராக அவர் குரல் கொடுத்தார். அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்தார். அவரை மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தினார்கள். கோபாட் கண்டி சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் உறுப்பினராக இருப்பதால் அவரை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்தார்கள்.
ஒரு புறம், தடை செய்யப்பட்ட அரசியல் நம்பிக்கைகளைக் கொண்ட தனிப்பட்டவர்களை குற்றமயப்படுத்துவதற்காக காட்டுமிராண்டித்தனமான சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு புறம், அரசின் கொள்கைகளுக்கெதிராக கேள்வி கேட்போரின் குரலை ஒடுக்குகிறார்கள். ஆப்பரேஷன் கிரீன் ஹன்ட் போன்றவை மூலமாக பழங்குடியினரின் மேல் நடைபெறும் மனிதஉரிமை மீறல்களுக்கெதிராக குரல் கொடுப்பவர்களை வேட்டையாடுகிறார்கள். ஆதிவாசிகளை இடம் பெயரச் செய்கிறார்கள். இந்த அநீதிக்கெதிராக குரல் கொடுப்பவர்களை மாவோயிஸ்ட் என்கிறார்கள்.
பு.வி.: சாய்பாபா வழக்கில் வந்துள்ள தீர்ப்புக்கெதிராக மேல்முறையீடு செய்துள்ளீர்களா?
வஸதா: டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி, சத்திகரைச் சார்ந்த மருத்துவர் பினாயக் சென் ஆகியோரின் வழக்குகளில் நமக்கு முன்னோடி உள்ளது. சாய்பாபா மீது குற்றஞ்சாட்டியது போன்றே தேசத்துரோகம் உட்பட பல குற்றச்சாட்டுகள் இந்த இருவரின் மீது சுமத்தப்பட்டன. ஆனால் உயர்நீதிமன்றங்களில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். நாங்கள் நாக்பூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம். சாய்பாபா அனைத்து வழக்குகளிலிருந்தும் குற்றமற்றவராக விடுவிக்கப்படுவார் என்ற முழுமையான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
பு.வி.: தற்போதைய நீதித்துறை பற்றிய தங்கள் கருத்து என்ன?
வஸதா: தற்பொழுது மக்களின் மனங்கள், சிந்தனைகள், பேச்சுகள் முதலியவற்றைக் கட்டுப்படுத்த அரசு விரும்புகிறது. சாய்பாபாவின் வழக்கு மருத்துவர் பினாயக் சென்னின் வழக்கைப் போன்றதே. பினாயக் சென்னின் வழக்கிலும் காவல்துறை உறுதியான ஆதாரங்களைத் தர முடியாமல் தோற்றுப் போனது. மக்கள் விரோத கொள்கைகளை, அரசு இழைக்கும் அநீதிகளை மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டுபவர்களை நீதித்துறையைப் பயன்படுத்தி ஒடுக்கப் பார்க்கிறது. சாய்பாபா 90% இயலாமையில் உள்ளவர். இந்த நிலையில் உள்ளவரால் யாருக்கு என்ன கெடுதி செய்து விட முடியும்? மத்திய பாஜக அரசுக்கெதிராக தங்கள் குரல்களை உயர்த்துபவர்களைக் கண்டு அது அஞ்சுகிறது என்பது தெளிவு. ஆதலால் நீதித்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது. பேரா. சாய்பாபா போன்ற அப்பாவி மக்களை மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தி பொது மக்களின் அனுதாபத்தைப் பெற்று விடாதவாறு மீடியாவின் ஒரு பகுதியும் செயல்படுகிறது.
பு.வி.: சமூகத்திற்கும், தேசத்திற்கும் என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?
வஸதா: பெருநிறுவனங்களின், பன்னாட்டு நிறுவனங்களின் கட்டளைப்படி மக்களுக்கெதிரான, ஜனநாயகத்திற்கு முரணான கொள்கைகளைத் திணிப்பதில் மத்திய மாநில அரசுகள் நீதித்துறைக்கு அதிகமான அழுத்தங்கள் கொடுக்கின்றன. இந்த நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்க மக்களின் குரல்களை ஒடுக்குவதற்கு அரசுகள் முனைகின்றன. மத்திய பாஜக அரசு ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கு நேரடியாகவே காய்களை நகர்த்துகின்றன.
நீதிமன்றத்தை கண்ணியப்படுத்தும் முகமாக, தனது மோசமாகி வரும் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் சாய்பாபா இத்தனை வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். ஒரு மனைவி என்ற அடிப்படையில் அவருக்காக நீதி வேண்டி உயர் நீதிமன்றங்களுக்குச் சென்று நான் போராடுவேன். நான் ஜனநாயகவாதிகள், மக்கள் அமைப்புகள், அறிவார்ந்தவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்து மக்களுக்கும் அரசின் ஜனநாயகத்திற்கு முரணான செயல்களைக் கண்டிக்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.
தமிழில்: MSAH
புதிய விடியல்
No comments:
Post a Comment