Friday, 26 June 2026

போதைப்பொருட்களின் பேராபத்து

அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்காக அருளிய இந்த மகத்தான ஷரீஅத்தை, அவர்களுக்கான பேரருளாகவே ஏற்படுத்தியுள்ளான்.

அதன் மூலம் அவர்களின்:

  • மார்க்கம்

  • உயிர்

  • அறிவு

  • செல்வம்

  • மானம்

ஆகிய ஐந்து அடிப்படை அம்சங்களையும் பாதுகாக்கின்றான்.

இவற்றையெல்லாம் சீரழிக்கும் மிகப் பெரிய ஆபத்துகளில் ஒன்றுதான் போதைப்பொருள்!

அது உயிரைக் குடிக்கும் நஞ்சு. சமூகத்தைச் சீரழிக்கும் சாபக்கேடு.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் ஒருவர், படிப்படியாக அழிவின் பாதையில் தள்ளப்படுகிறார். இறுதியில் அவர் சமூகத்தாலும் மறக்கப்பட்டு, தன்னையும் இழந்தவராக ஆகிவிடுகிறார்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا ۝ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا

"நீங்கள் உங்களையே அழித்துக்கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகுந்த கருணையுடையவன். எவன் அநியாயமாகவும் அத்துமீறியும் அவ்வாறு செய்கிறானோ, அவனை நாம் நிச்சயமாக நரக நெருப்பில் புகுத்துவோம்." (அல்குர்ஆன் 4:29–30)

இந்த வசனம், அல்லாஹ் தடை செய்தவற்றை உட்கொண்டு தன்னைத் தானே அழிவிற்கு இட்டுச் செல்லும் ஒவ்வொருவருக்கும் கடுமையான எச்சரிக்கை.

இதனை வள்ளல் நபி ﷺ அவர்கள் மேலும் வலியுறுத்தி கூறினார்கள்:

مَنْ قَتَلَ نَفْسَهُ بِسُمٍّ؛ فَسُمُّهُ بِيَدِهِ، يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ، خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا

"எவர் நஞ்சைக் குடித்து தன்னைத் தானே கொன்று கொள்கிறாரோ, அவர் அந்த நஞ்சைத் தமது கையில் வைத்தபடியே நரக நெருப்பில் தொடர்ந்து குடித்துக் கொண்டிருப்பார்." (முஸ்னத் அஹ்மத், திர்மிதி)

போதைப்பொருட்கள், மனிதனை அழிக்கும் மிகக் கொடிய நஞ்சுகள்.

எவ்வளவு ஆச்சரியமான நிலை!

ஒருவன் தனது குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் செலவிடத் தயங்குகிறான். ஆனால், தன்னை அழிக்கும் போதைப்பொருளுக்காக தனது செல்வத்தை மனமுவந்து செலவிடுகிறான்.

நாளை மறுமையில் அல்லாஹ் அவனிடம் கேட்கும்போது அவன் என்ன பதில் கூறுவான்?

عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ... وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ، وَفِيمَ أَنْفَقَهُ؟

"அவன் தனது ஆயுளை எவ்வாறு கழித்தான்? தனது செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான்? அதை எதில் செலவிட்டான்?" (திர்மிதி)

அந்தக் கேள்விகளுக்கான பதிலை அவன் தயாராக வைத்திருக்கிறானா?

அல்லாஹ் மனிதனுக்குப் பெருமையாக வழங்கிய அறிவொளியை, அவனே தன் கைகளால் அணைத்துக்கொள்ள எவ்வாறு மனம் ஒப்புகிறது?

தாபிஈ;fகளின் தலைசிறந்த அறிஞரான ஹஸன் அல்-பஸ்ரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:

"அறிவை விலைக்கு வாங்க முடியும் என்றிருந்தால், அதைப் பெற மக்கள் தங்களுக்குள் கடுமையாகப் போட்டியிட்டிருப்பார்கள். அப்படியிருக்க, தனது செல்வத்தைச் செலவழித்து அந்த அறிவையே சீரழித்துக்கொள்பவனின் நிலை எவ்வளவு ஆச்சரியமானது!"

ஒருவன் எவ்வாறு தனது உள்ளத்தின் கடிவாளத்தை போதைப்பொருட்களிடம் ஒப்படைத்து, நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக மாற சம்மதிக்கிறான்?

 அவன்,

لَا يَعْرِفُ مَعْرُوفًا، وَلَا يُنْكِرُ مُنْكَرًا، إِلَّا مَا أُشْرِبَ مِنْ هَوَاهُ

"தனது மனஇச்சைக்கு ஒத்தவற்றைத் தவிர, நன்மையை நன்மையென அறியாதவனாகவும், தீமையைத் தீமையென வெறுக்காதவனாகவும் ஆகிவிடுகிறான்." (முஸ்லிம்)

போதைப்பொருட்கள் மனிதனை முற்றிலும் ஆட்கொண்டு, அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும் அவனை மறக்கச் செய்கின்றன.

அவை அவனது குடும்பத்தின் மீது துன்பத்தையும் வேதனையையும் சுமத்துகின்றன. மகிழ்ச்சியின் இடத்தில் கவலையையும், அன்பின் இடத்தில் பகைமையையும் வெறுப்பையும் உருவாக்குகின்றன.

இதனைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:

إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ

"மது மற்றும் சூதாட்டத்தின் மூலம் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் விதைக்கவும், அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுக்கவும்தான் ஷைத்தான் விரும்புகிறான்." (அல்குர்ஆன் 5:91)

பகுத்தறிவு உடையவன், தன்னைத்தானே அழிவுக்கு உட்படுத்த மாட்டான்; தனது நற்பெயரைக் கெடுத்துக்கொள்ள மாட்டான்; தனது செல்வத்தை வீணடிக்க மாட்டான்; தனது பிள்ளைகளைப் புறக்கணிக்க மாட்டான்; தனது குடும்பத்தைச் சீர்குலைக்க மாட்டான்.

குறிப்பாக நபி ﷺ அவர்கள் கூறிய இந்த எச்சரிக்கையை கேட்ட பிறகு:

كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُضَيِّعَ مَنْ يَعُولُ

"ஒருவன் தன் பொறுப்பில் உள்ளவர்களைப் புறக்கணிப்பதே அவனுக்குப் பெரும் பாவமாகப் போதுமானது." (அபூ தாவூத்)

குடும்பம் என்பது பாதுகாப்பு அரணும், அமைதியின் புகலிடமும் ஆகும்.

பிள்ளைகள் தங்கள் வீட்டில் முன்மாதிரியான பெற்றோர்களையும், இதயத்தை நிரப்பும் அன்பையும், அறிவை வளர்க்கும் பயனுள்ள உரையாடல்களையும் காணாவிட்டால், அவர்கள் தீய நண்பர்களின் சகவாசத்தை நாடத் தொடங்குவார்கள்.

இதனால்தான் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ

"ஒருவன் தனது நெருங்கிய நண்பனின் வழியிலேயே (மார்க்கம், பண்பு, வாழ்க்கைமுறை) இருப்பான்." (அபூ தாவூத்)

எனவே, உங்கள் பிள்ளைகளின் மீது அக்கறை கொள்ளுங்கள்.

அவர்களின் நடத்தைகளைக் கவனமாகக் கண்காணியுங்கள்.

அவர்கள் பேசுவதைப் பொறுமையாகக் கேளுங்கள்.

அவர்களின் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள செயல்களில் ஈடுபடுத்துங்கள்.

அவர்களுக்கு நல்ல கல்வியையும் நற்பண்புகளையும் அளித்து, நேர்வழியில் வளர்க்க உங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுங்கள்.

அவர்கள் உங்கள் தோள்களில் சுமத்தப்பட்ட அமானிதம் (இறைநம்பிக்கை ஒப்படைப்பு); நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய ஒரு மாபெரும் பொறுப்பு.

நோய் வந்த பின் சிகிச்சை செய்வதை விட, அது வராமல் தடுப்பதே சிறந்தது.

Sunday, 21 June 2026

வீரமரணத்தை விரும்பிய வீரமறவர்கள்!

அண்ணலாரின் அருமைத் தோழர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும்பொழுது தங்கள் ஈமானைப் புதுப்பித்துக்கொள்வர்.

அவர்கள் வீரமரணம் அடைவதில் அலாதி ஆர்வம் கொண்டிருந்தனர். இதனை இறைமறை இவ்வாறு இயம்புகிறது:

مِنَ الْمُؤْمِنِیْنَ رِجَالٌ صَدَقُوْا مَا عَاهَدُوا اللّٰهَ عَلَیْهِ ۚ فَمِنْهُمْ مَّنْ قَضٰی نَحْبَهٗ وَمِنْهُمْ مَّنْ یَّنْتَظِرُ ۖؗ وَمَا بَدَّلُوْا تَبْدِیْلًا

முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டனர். அவர்களில் சிலர் (வீரமரணம் அடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தனர். வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை. (சூரா அல் அஹ்ஸாப் 33:23)

அனஸ் பின் நள்ரு (ரழி) என்ற நபித்தோழருக்கு பத்ருப் போரில் பங்கெடுக்க முடியாமற்போனது. அவருக்கு அது குறித்த கவலை எப்பொழுதும் இருந்துகொண்டே இருந்தது.

அவருக்குப் போரில் பங்கெடுக்க அடுத்த வாய்ப்பு வந்தது. வீராவேசத்துடன் உஹதுப் போரில் கலந்துகொண்டார்.

போர்க்களத்தில் அவர் விரைவாக சென்று கொண்டிருந்ததைக் கண்ட ஸஅத் பின் மாலிக் (ரழி) அவரிடம், “எங்கே செல்கிறீர்?” என்று கேட்டார்.

அதற்கு அனஸ் பின் நள்ரு (ரழி) இவ்வாறு பதிலளித்தார்: “சுவனத்தின் வாடையை நுகர்வதற்காக! அதனை உஹதின் அடியிலேயே நான் காண்கிறேன்.”

வீரம் பொங்க வீறு கொண்டு போர்க்களத்தில் உட்புகுந்தவர், எதிரிகளைக் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார். எதிரிகளின் வெட்டுப் பட்டு வீரமரணம் அடைந்தார்.

போர் முடிந்த பின்னர், நபித்தோழர்கள் கொல்லப்பட்டவர்களின் உடல்களைத் தேடியபொழுது இவரை யாரென்று அடையாளம் காண முடியவில்லை. அந்த அளவுக்கு உடல் முழுவதும் வெட்டுப் பட்டுக் கிடந்தார்.

அவருடைய சகோதரிதான் இறுதியில் அவரைக் கண்டுபிடித்தார். அவருடைய கை விரல்களைக் கொண்டு அவரை அடையாளம் கண்டு, நபித்தோழர்களிடம் அறிவித்தார்.

இவர் தொடர்பாகத்தான் மேற்கண்ட இறைவசனம் இறக்கப்பட்டது. இவரைப் போன்று நபிகளாரின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரழி) உட்பட 70 நபித்தோழர்கள் உஹதுப் போரில் வீரமரணம் எய்தினார்கள்.

இந்த அருட்பேறு கிடைக்காத வேறு சிலர் அதனை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அதனைத்தான் அல்லாஹ் அவ்வசனத்தின் பிற்பகுதியில் வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை என்று குறிப்பிடுகிறான்.


Friday, 19 June 2026

மூத்தோரைக் கவனித்தலும், பெரியோரைப் பேணுதலும்!

நம்மைப் படைத்த இறைவன் முதியவர்களைக் கண்ணியப்படுத்துவதை மிக உன்னதமான பண்புகளில் ஒன்றாக ஆக்கியுள்ளான்.

ஒருமுறை அபூபக்கர் (ரலி) அவர்கள் முதியவராக இருந்த தன் தந்தையை நபியவர்களிடம் அழைத்து வந்தார்கள். நபி அவர்கள் அவரைப் பார்த்தபோது, "அவர்களை வீட்டிலேயே நீங்கள் விட்டிருக்கக் கூடாதா? நானே அவர்களைக் காண அங்கு வந்திருப்பேனே!" என்று கூறினார்கள். (அஹ்மத்)

இந்த முன்மாதிரி எவ்வளவு மகத்தானது! இதில், முதியவர்களை மதிக்கவும், கண்ணியப்படுத்தவும், உபசரிக்கவும் நபி அவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள். நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

"உங்களில் சிறந்தவர் யார் என்றால், எவருக்கு நீண்ட ஆயுள் வழங்கப்பட்டு, அவருடைய செயல்களும் அழகியதாக அமைந்ததோ அவரே ஆவார்." (அஹ்மத்)

இறைவனிடம் வயதானவர்களுக்கு இத்தகைய அந்தஸ்து இருக்கும்போது, அவர்களைக் கண்ணியப்படுத்துவது என்பது கண்ணியமும் உயர்வும் மிக்க அல்லாஹ்வை மகிமைப்படுத்துவதன் ஒரு பகுதியாகும். நபி அவர்கள் கூறினார்கள்:

"முதிர்ந்த வயதுடைய ஒரு முஸ்லிமைக் கண்ணியப்படுத்துவது, அல்லாஹ்வை மகிமைப்படுத்துவதன் ஒரு பகுதியாகும்." (அபூ தாவூத்)

எனவே, ஓர் இறைநம்பிக்கையாளர் முதியவர்களின் உரிமைகளைப் புறக்கணிப்பதோ, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கண்ணியத்தையும் மரியாதையையும் குறைத்து மதிப்பிடுவதோ தகாது. நபி அவர்கள் கூறினார்கள்:

"சிறியவர்களிடம் இரக்கம் காட்டாதவரும், பெரியவர்களின் உரிமைகளை அறிந்துகொள்ளாதவரும் நம்மைச் சேர்ந்தவர் அல்லர்." (அபூ தாவூத்)

மேலும், அல்லாஹ் அவர்களுக்குள் பரக்கத்தை (அபிவிருத்தியை) வைத்திருக்கும்போது நாம் அவர்களை எவ்வாறு மதிக்காமல் இருக்க முடியும்? நமது அன்பிற்குரிய நபி அவர்கள் கூறினார்கள்:

"அபிவிருத்தி (பரக்கத்) உங்களிடமுள்ள முதியவர்களுடன்தான் இருக்கிறது. (இப்னு ஹிப்பான்)

எனவே, அவர்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் அவர்களை நீங்கள் இழப்பதற்கு முன்பாக அவர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் அவர்களின் அடக்கத்தலங்களுக்கு அருகில் மட்டுமே அமரக்கூடிய ஒரு நாள் வருவதற்கு முன்பு அவர்களோடு அமர்ந்து பேசுங்கள். அவர்களின் வாழ்க்கை தோழமையுடனும் நிம்மதியுடனும் நிறைவதற்கு, உங்கள் குடும்பங்களிலும் அவர்களின் பேரக்குழந்தைகளுக்கு இடையிலும் அவர்களுக்கு முதன்மையான இடத்தைக் கொடுங்கள்.

அவர்களின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனியுங்கள். உங்கள் கைபேசிகள் அவர்களிடமிருந்து உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப அனுமதிக்காதீர்கள். அவர்கள் பேசும்பொழுது இடையில் நீங்கள் பேசாதீர்கள் அல்லது அவர்களின் பேச்சைத் துண்டிக்காதீர்கள்.

ஒரு கூட்டத்திலிருந்த மிகச் சிறியவர் பேசத் தொடங்கியபோது, நபி அவர்கள், "பெரியவரைப் பேச விடுங்கள், பெரியவரைப் பேச விடுங்கள்" என்று கூறிய வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள். (புகாரீ, முஸ்லிம்)

அதாவது, வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை கொடுத்து, அவரை முதலில் பேச விடுங்கள்; இது பெரியவர்களை மதிப்பதற்கான அழகிய ஒழுக்கமும் வழிகாட்டுதலும் ஆகும்.

இதே அணுகுமுறையைத்தான் நபித்தோழர்களும் தொடர்ந்து பின்பற்றி வந்தனர். இதோ சமுரா இப்னு ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

"நான் நபி அவர்களிடம் (ஹதீஸ்களை) மனனம் செய்யும் சிறுவனாக இருந்தேன். ஆனால், என்னை விட வயதில் மூத்தவர்கள் அங்கிருந்த காரணத்தினால் மட்டுமே நான் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டேன்."(முஸ்லிம்)

உங்கள் முதியவர்களின் மருத்துவத் தேவைகளைக் கவனித்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குச் சிரமமான வழிபாட்டு முறைகளை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அல்லாஹ் அவர்களுக்குச் சலுகைகளை வழங்கி, அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ற சட்டங்களை இறக்கியுள்ளான்.

"மேலும், (வயோதிகம் போன்றவற்றால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக (ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்)." (குர்ஆன் 2:184)

உங்கள் பெரியவர்களிடம் மென்மையாகப் பேசுங்கள். மனிதர்களுக்கு வயது கூடும்போது, அவர்களின் உள்ளங்கள் மிகவும் மென்மையாகவும் உணர்ச்சிவசப்படக்கூடியதாகவும் மாறுகின்றன. எனவே, ஒரு பார்வையின் மூலமாகவோ அல்லது கடுமையான வார்த்தையின் மூலமாகவோ அவர்களின் மனதைப் புண்படுத்தாமல் கவனமாக இருங்கள்.

உங்களைப் படைத்தவனின் கட்டளையைச் சிந்தித்துப் பாருங்கள்:

"அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உங்களிடம் முதுமையை அடைந்துவிட்டால், அவர்களை நோக்கி 'சீ' (என்று வெறுப்பை உமிழும் வார்த்தையைக்கூட) சொல்லாதீர்கள்; அவர்களை அதட்டாதீர்கள்; மேலும் அவர்களிடம் கண்ணியமான வார்த்தையையே பேசுங்கள்." (குர்ஆன் 17:23)

முதியவர்களைக் கண்ணியப்படுத்துவது என்பது அவர்களின் ஞானத்தையும், அனுபவத்தையும் அங்கீகரிப்பதாகும்; இதிலிருந்துதான் அடுத்தடுத்த தலைமுறையினர் தொடர்ந்து பயனடைகின்றனர்.

அவர்கள் வழிகாட்டுதல், ஆலோசனை போன்றவற்றின் பிறப்பிடமாக இருக்கின்றனர். நமது சமூகத்தின் நினைவாற்றலாகவும், (சமூகத்தைக்) கட்டியெழுப்பிய கரங்களாகவும், எந்தவொரு கைம்மாறையோ நன்றியையோ எதிர்பார்க்காமல் தங்களை அர்ப்பணித்த ஆன்மாக்களாகவும் திகழ்கின்றனர்.

நிறைவான நன்றியுணர்வு, கவனிப்பு, அக்கறை, அழகிய முறையில் நடத்துதல் ஆகியவை அவர்கள் நமக்குச் செய்தவற்றுக்கு நாம் செய்யும் கைம்மாறாகும்.

முதியவர்களை மதிப்பது ஒரு மார்க்கக் கடமை மட்டுமல்ல, அது நாம் செலுத்த வேண்டிய நன்றிக்கடன் என்பதையும் நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம். கண்ணியமிக்க நபிகளார் இவ்வாறு கூறினார்கள்:

"உங்களுக்கு எவரேனும் ஒரு நன்மை செய்தால், அவருக்கு நீங்கள் பிரதிபலன் செய்யுங்கள்." (அபூ தாவூத்)

நம்மை வளர்ப்பதற்கும், இந்தச் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கும் தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த நம்முடைய பெற்றோர் செய்த நன்மையை விடப் பெரிய நன்மை வேறு என்ன இருக்க முடியும்?

நபியவர்களின் ஹிஜ்ரத்தும், அருமைத்தோழர்களின் அளப்பரிய அன்பும்!

அருள்மிக்க ஹிஜ்ரத் பயணம் தனது இலக்கை அடைந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் நுழைந்தார்கள். அந்த நாளைப் பற்றி நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

"அந்நகரில் உள்ள அனைத்தும் ஒளிமயமாகிப் போனது." (திர்மிதீ)

நபித்தோழர்கள் தங்களுடைய உண்மையான அன்பால் அண்ணலாரைச் சூழ்ந்திருந்தனர். அதைப் பார்த்த ஒருவர் கூறினார்:

"முஹம்மத் (ஸல்) அவர்களை அவர்களின் தோழர்கள் நேசித்தது போன்ற அன்பை வேறு யாரும் யார் மீதும் கொண்டதை நான் கண்டதில்லை." (ஸீரத் இப்னு ஹிஷாம்)

இவ்வாறு ஹிஜ்ரத், உண்மையான அன்பின் இயல்பை வெளிப்படுத்தியது. அது பின்பற்றுதலையும், இறைநம்பிக்கையையும், தியாகத்தையும் உருவாக்கும் அன்பாகும். அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், தங்கள் செல்வத்தையும் தம் அன்புக்குரிய நபி (ஸல்) அவர்களின் சேவைக்காக அர்ப்பணித்தார்கள்.

இந்த ஹிஜ்ரத் ஆழமான ஈமானியப் பாடங்களையும் உயர்ந்த ஆன்மீக அர்த்தங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமானது நபி (ஸல்) அவர்களின் மீதான அன்பாகும். அந்த அன்பு அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் மிக அழகாக வெளிப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் பற்றித் தெரிவித்தபோது, அபூபக்கர் (ரலி) அவர்கள் உடனே கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதரே! உங்கள் துணை எனக்குக் கிடைக்குமா?"

அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்:

"உமக்கே அந்தத் துணை." (புகாரீ)

பின்னர் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஆனந்தத்தில் ஒருவர் அழ முடியும் என்பதை நான் அறிந்ததில்லை. அந்நாளில் அபூபக்கர் (ரலி) அவர்கள் மகிழ்ச்சியால் அழுவதைக் கண்டபோதுதான் அதை அறிந்தேன்." (முஸ்னத் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்)

இது எத்தகைய அன்பு?

அது ஆபத்துகள் நிறைந்த பயணம் என்பதை அவர் அறிந்திருந்தார். இருந்தாலும் அவருடைய கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நிரம்பின.

அதையும் விட ஆச்சரியமானது என்னவென்றால், அவர் தன்னைப் பற்றிக் கவலைப்பட்டதை விட கண்மணி நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியே அதிகம் கவலைப்பட்டார்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்:

"சில நேரங்களில் எனக்கு முன்னாலும், சில நேரங்களில் எனக்குப் பின்னாலும் தாங்கள் நடப்பதற்குக் காரணம் என்ன?"

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

"நம்மைத் துரத்தி வருபவர்களை நினைக்கும்போது உங்கள் பின்னால் நடக்கிறேன். முன்னால் மறைந்திருக்கும் ஆபத்தை நினைக்கும்போது உங்கள் முன்னால் நடக்கிறேன்."

அப்போது நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்:

"அபூபக்கரே! ஏதேனும் தீங்கு நேர வேண்டியிருந்தால், அது எனக்கு நேர்வதை விட உங்களுக்கு நேர வேண்டும் என்று விரும்புவீரா?"

அதற்கு அவர் பதிலளித்தார்:

"ஆம். உங்களை உண்மையுடன் அனுப்பிய இறைவன் மீது ஆணையாக!"

அவர்கள் குகையை அடைந்தபோது அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இங்கேயே இருங்கள். நான் முதலில் குகையைச் சோதித்துப் பாதுகாப்பானதா என்று பார்த்து விடுகிறேன்." (முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)

அதாவது, உங்களுக்காக அதைப் பாதுகாப்பானதாக மாற்றும் வரை.

பின்னர் ஆபத்து நெருங்கியபோது, நபி (ஸல்) அவர்களுக்காக அஞ்சிய அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

"அவர்களில் யாராவது தமது காலடிக்குக் கீழே பார்த்தால் நம்மைக் கண்டுவிடுவார்கள்."

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"அபூபக்கரே! மூன்றாவதாக அல்லாஹ் இருக்கும்பொழுது இருவரைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" (புகாரீ, முஸ்லிம்)

இதுபற்றியே அல்லாஹ் கூறுகிறான்:

"நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தான். நிராகரிப்போர் அவரை வெளியேற்றியபோது, அவர் இருவரில் ஒருவராக இருந்தார். இருவரும் குகையில் இருந்தபோது அவர் தன் தோழரிடம், 'கவலைப்படாதீர்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்' என்று கூறினார். அப்போது அல்லாஹ் தனது அமைதியை அவர்கள் மீது இறக்கி, நீங்கள் காணாத படைகளால் அவர்களுக்கு உதவி செய்தான்." (அல்குர்ஆன் 9:40)

அதன் பின்னர் அவர்கள் தமது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

"முழு இரவும் நாங்கள் பயணம் செய்தோம். நண்பகல் வெப்பம் வந்தபோது, நிழல் தரும் ஒரு பெரிய பாறையைக் கண்டோம். அப்போது நான் கூறினேன்: 'அல்லாஹ்வின் தூதரே! சிறிது ஓய்வெடுங்கள்.'"

இந்த அன்பின் மகத்துவத்தைச் சிந்தித்துப் பாருங்கள்.

முழு இரவும் அவர் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்தார். பிறகு அவர் தனக்காக ஓய்வைத் தேர்ந்தெடுத்தாரா?

இல்லை.

மாறாக அவர் கூறுகிறார்:

"நான் வெளியே சென்றேன். அப்போது ஒரு மேய்ப்பனைச் சந்தித்தேன். 'எனக்காக பால் கறந்து தருவாயா?' என்று கேட்டேன். அவன் 'சரி' என்றான். பின்னர் அந்தப் பாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். அவர்கள் அருந்தினார்கள். அவர்கள் அருந்துவதைப் பார்த்து நான் திருப்தி அடைந்தேன்." (புகாரீ, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் அருந்தினார்கள்; அபூபக்கர் (ரலி) அவர்கள் மனநிறைவு அடைந்தார்கள். ஏனெனில் உண்மையான நேசன், தான் நேசிப்பவரின் நிம்மதியிலும் நலத்திலும்தான் மகிழ்ச்சியைக் காண்கிறான்.

இதுவே நபி (ஸல்) அவர்களின் மீதான அன்பாகும். அது நெஞ்சங்களை நேர்மையாலும் அர்ப்பணிப்பாலும் நிரப்பி, கீழ்ப்படிதல், விசுவாசம் மற்றும் உண்மையான பின்பற்றுதலை உருவாக்கியது.

Tuesday, 24 March 2026

‘துரோகி’ - நூலாய்வு ஆக்கம்: அமீர் சுல்தான் (சஊதி அரபிய்யாவில் பணியாற்றும் பொறியியல் பட்டதாரி; இலக்கிய ஆர்வலர்)


”துரோகி” என்ற நூலின் தலைப்பே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கின்றது. அதன் முன்னுரையை வாசிக்கும்போது அது நிகழ்காலத்தின் வரலாறு, அதுவும் அமெரிக்க இராணுவ வீரனின் சுயபுராணம் என்பதை அறியும்போது உடனே வாசிக்க வேண்டும் என ஆவல் தோன்றும். பக்கங்களைப் புரட்டப் புரட்ட கீழே வைக்க இயலாத அளவுக்கு ஒரே வாசிப்பில் முடிக்க வேண்டிய புத்தகம் இது.
தனது வாழ்வில் ஏற்படும் சம்பவங்களோடு நம்மையும் அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். நாமும் அருகில் நின்று காணுவதைப்போன்ற ஓர் உணர்வு. அவனின் சுக துக்கங்கள் நம்மை ஆட்கொள்ள வைக்கின்றன. அப்படியொரு நடை.
சரி நூலுக்குள் வருவோம்!
சராசரி அமெரிக்க இளைஞனான டெர்ரி ஹோல்ட் புரூக்ஸ் ”இராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவை புரிய வேண்டும்” என்ற கனவுகளுடன் இராணுவத்தில் சேர்கின்றான். இராணுவத்தில் கொடுக்கப்பட்ட கடுமையான பயிற்சிகளுக்குப் பின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற மனப் பக்குவம் வருகின்றது அவனுக்கு.
அவன் இராணுவப் பணியில் சேர்ந்தபொழுது அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட சமயம் அது. எங்கு நோக்கினும் அது பற்றிய செய்திகளே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அச்செய்திகளில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் மிகைத்திருப்பதை உணர்கின்றான் புரூக்ஸ். ஓர் இனம்புரியாத சோகம் அவனது மனதில் படர்கின்றது. தன் மனதில் பட்ட உண்மைகளை வெளிப்படுத்தும் போது அவனது சக இராணுவத்தினரிடமிருந்தே எதிர்ப்புகளும் வசவுகளும் வருவதைக் கண்டு அதிர்வுறுகின்றான். ஒரு கட்டத்தில் மனதில்பட்ட நடுநிலை கருத்துகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவிக்கின்றான் புரூக்ஸ்.
கூடுதல் பணி நியமனத்திற்காக மேற்கொண்டு பயிற்சிகள் வழங்கும்போதுதான் அங்கு நாட்டுப்பற்றை விட முஸ்லிம் எதிர்ப்புணர்வே பயிற்சியாகவும் செயல்முறை விளக்கமாகவும் அளிக்கப்படுவதைக் கண்டு மனதில் சில நெருடல்கள் ஏற்படுவதை உணர்கின்றான்.
பணி ஆணைக்காக அரசு அலுவகத்தில் ”அவர்களுக்கு தேவையானதை அவசரமாக நாம் செய்துகொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் மிக நிதானமாகத்தான் செய்து கொடுப்பார்கள்” என்று அமெரிக்க அரசுத்துறை நிர்வாகத்தின் வேகத்தை விளக்கும்போது இந்தியாவை ஞாபகப்படுத்துகின்றார்.
ஒருவழியாக கூடுதல் பயிற்சியெல்லாம் முடிந்தபின் அவர் செல்ல வேண்டியது குவாண்டனாமோ சிறைச்சாலைக்கு என்ற பணிநியமன ஆணை கிடைக்கின்றது.
அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறை பற்றி நாம் செய்தித்தாள்களில் வாசிக்கும்போது அது அமெரிக்காவின் எங்கோ மூலையில் அமைந்துள்ள ஒரு பயங்கர சித்ரவதைக் கூடம் என்றே தோன்றியிருக்கும். ஆனால் குவாண்டனாமோ சிறை அமெரிக்காவிற்கு சிப்ப சொப்பனமாக விளங்கிய கியூபாவின் தீவில் உள்ளது என்ற ஆச்சரியமிக்க உண்மை என்பது இப்புத்தகத்தின் வழியே அறிய முடிகின்றது.
கியூபா என்பது பச்சைப் பசேல் என்ற அழகிய தீவு. அதில் குவாண்டனாமோ என்பது மட்டும் சுட்டெரிக்கும் மணலும் மணல் சார்ந்த பாலைவனத் தீவு ஆகும். அந்தத் தீவில் பூனை அளவில் உள்ள பெருச்சாளி, உடும்பு, பெரிய பல்லி, தட்டு அகலத்தில் சிலந்தி என்று ஆபத்தான விலங்குகளும், பூச்சிகளும் நிறைந்திருந்தன. இவற்றின் நடுவில்தான் அந்தச் சிறைக்கொட்டடி அமைந்திருக்கின்றது.
குவாண்டனாமோவிற்குச் சென்ற பிறகுதான் தெரிந்தது, சிறைக்கொட்டடியில் அடைத்திருக்கும் கைதிகளில் பெரும்பாலும் அப்பாவிகள் என்று. அதிலும் கைதிகள் அனைவரும் முஸ்லிம்கள்!
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர இடிப்பிற்குக் காரணமானவர்களை விசாரிப்பதற்காக என்று உருவாக்கப்பட்டதுதான் இந்தச் சிறைக்கொட்டடி. இன்னும் கூடுதல் தகவல் என்னவென்றால் சில நாடுகளிலிருந்து விலை கொடுத்து வாங்கப்பட்ட அப்பாவி கைதிகளும் அடக்கம்.
புரூக்ஸிற்கு கொடுக்கப்பட்ட பணி என்பது சிறைக் கைதிகளைக் கவனிப்பது, விசாரணைக்கு விலங்கிட்டு அழைத்துச் செல்வது, கைதிகளிடையே பிரச்னை ஏற்பட்டால் அவர்களைக் கடுமையாகத் தாக்குவது, மிக மோசமாகத் திட்டுவது போன்றவைதான்.
இராணுவ வீரர்களின் உணவுக்கூடங்களில் எப்பொழுதும் தொலைக்காட்சிப் பெட்டியில் இரத்த வேட்கையைத் தூண்டும் பாடல்களும், அமெரிக்க பலத்தைப் பறைசாற்றும் படங்களும், இரத்தம் சொட்டுவது மாதிரி எழுத்துகளின் எழுத்துருக்களும் அமைந்திருக்கும். ‘பழிவாங்கு’ என்ற சொற்களே ஒளிப்படமாக ஓடிக்கொண்டிருக்கும். இராணுவ வீரர்களின் பழிவாங்கும் எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும் உத்திகள் இவை.
அங்குள்ள கைதிகளை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, தொடர்ந்து தூங்க விடாமல் இடையிடையே விழிக்க வைத்து கொடுமைப்படுத்துவது, கைதிகள் எதிர்த்தால் அவர்கள் மீது மிளகுப்பொடி ஸ்பிரே அடிப்பது, அவர்களின் தாடிகளைச் சிரைப்பது எனச் சித்திரவதைகளில் பல்வேறு முறைகளைக் கையாண்டனர்.
கைதிகளிடம் அத்துமீறி நடப்பதைக் கண்டு புரூக்ஸின் மனம் துடிக்கின்றது. அதன் விளைவாக புரூக்ஸ் கைதிகளுடன் மிகவும் நல்ல முறையில் நடந்துகொள்கிறான், அவர்கள் சொல்வதைக் கேட்கின்றான். இதற்கு கைமாறாக கைதிகளிடமிருந்து கிடைத்தது அல்குர்ஆன்!
அதனைப் படிக்கின்றான். மனதில் சலசலப்புகள் ஏற்படுவதை உணர்கின்றான். ”தீய செயல்களின் ஒவ்வொரு கதவாக அடைத்துக் கொண்டு வரும்போது இறை உதவியின் கதவுகள் ஒவ்வென்றாய் திறக்கின்றன” என்ற அனுபவத்தைப் பகிர்கின்றான். (அதனைப் படிக்கும்போது நம் கண்களிலும் கண்ணீர் கசியும்).
இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகின்றது. அதனைத் தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தான், சிறையின் சூழல் அதற்கு தகுந்தாற்போலில்லை என்ற காரணத்தினால்.
ஒரு கட்டத்தில் இனியும் காலம் தாழ்த்தாது சிறையிலேயே இஸ்லாமை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து, அவன் மிகவும் மதிக்கும் கைதியான அஹ்மத் அர்ரஷாதியின் முன்னிலையில் கலிமாவை மொழிந்து இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறான். சிறையிலேயே அதனை நடைமுறையும் படுத்துகின்றான் புரூக்ஸ்.
இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை இவ்வாறு வர்ணிக்கின்றான் புரூக்ஸ்: ”இதுவரை நான் காணாமற் போயிருந்தேன். ஆனால் இப்பொழுது நான் எங்கிருக்கின்றேன் என்று எனக்குத் தெரிகிறது. நான் பயணிக்க எனக்கென்று ஒரு தெளிவான பாதை கிடைத்திருக்கின்றது”.
ஆனால் கைதிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதன் மூலமும், அவன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதன் விளைவாகவும் சக இராணுவ வீரர்களிடமிருந்து அவனுக்குக் கிடைத்த பெயர் ”துரோகி”!
பின்னர் குவாண்டனாமோவிலிருந்து பணி முடிந்து அமெரிக்காவிற்குத் திரும்ப அழைக்கப்படுகின்றான். அமெரிக்கா வந்ததில் மகிழ்ச்சியாக இருந்தாலும் குவாண்டனாமோவில் நடக்கும் அநீதங்களால் மனம் வெதும்பி அங்கு நடக்கும் அக்கிரமங்களை உலகுக்கு அறிவிக்க முடிவு செய்கிறான் புரூக்ஸ்.
அதனால் ஏற்பட்ட விளைவுகளை நூலின் இறுதி அத்தியாயத்தில் விளக்கியுள்ளான் புரூக்ஸ்.
இந்நூலை அழகுத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் காயல் பன்னூலாசிரியர் சகோதரர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள். ஒரே வாசிப்பில் முடிக்க வைக்கும் நடை. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.