சென்ற தொடரில் குஜராத் இனப் படுகொலையில் மீடியாவின் பங்கு குறித்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் (Concerned Citizens Tribunal) வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதியைக் கண்டோம்.இனி அதன் தொடர்ச்சியைக் காண்போம்.
“இரவு 7.30 மணிக்கு ஆகாஷவாணி வானொலியில், “கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின்னால் ஐ.எஸ்.ஐ.யோ அல்லது ஒரு வெளிநாட்டு சக்தியோ உள்ளது” என்று முதல் முறையாக மோடி அறிவித்தார்.
இது குஜராத் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவும்,பா.ஜ.க.வின் நிலைப்பாடாகவும் வெளிப்பட்டது. அதேபோல் அவரது சங்கப் பரிவாரக் கூட்டாளிகளுக்கு ‘எதிர்வினை’க்கான நியாயப்படுத்துதலாகவும் இது அமைந்தது.
இதில் வேதனையான விஷயம் என்னவெனில்,அரசு இயந்திரம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல், எந்தவித உறுதியான ஆதாரமும் இல்லாமல் ‘வெளிநாட்டு சக்தி’ என்று சொன்னது. அத்தோடு எந்த அடிப்படையில் மோடி அந்த முடிவுக்கு அவ்வளவு விரைவாக வர முடிந்தது என்று எந்தவிதக் கேள்வியும் எழுப்பாமல் அந்த அறிவிப்பை பெரும்பாலான மீடியாக்கள் பரபரப்பாக வெளியிட்டன.
ஏன்,குஜராத் இனப்படுகொலை விஷயத்தில் நடுநிலையாக செய்திகளை வெளியிட்ட ஆங்கிலப் பத்திரிகைகள் கூட கோத்ரா சம்பவத்திற்கும் ஐ.எஸ்.ஐ.க்கும் தொடர்புண்டு என்று மோடி புளுகியதை அப்படியே வெளியிட்டன.
உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம். 2002 மார்ச் மாதக் கடைசி வாரம் கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாக விசாரணை செய்து வரும் அதிகாரிகளின் கூற்றின் அடிப்படையில் கோத்ரா சம்பவம் முன்பே திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. ஆனால் அதே டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை குஜராத் அமைச்சர்கள் சொல்லி வந்த புரட்டுகளின் அடிப்படையிலான அறிக்கைகளை அப்படியே வெளியிட்டது. கோத்ரா சம்பவம் தானாக நடந்ததல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவர்கள் புளுகி வந்ததை அப்படியே வெளியிட்டது.
பின்னர்,அஹமதாபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் தடய அறிவியல் பரிசோதனைக் கூடம் (Forensic Science Laboratory) ஆழமான ஆராய்ச்சியை மேற்கொண்டு எஸ் 6 பெட்டியில் வெளியிலிருந்து பெட்ரோலை ஊற்றியிருக்க வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது.
ஆஜ்தக் தொலைக்காட்சிச் சானல்தான் முதன் முதலில் கோத்ரா மரணங்கள் குறித்த செய்தியைப் பரபரப்பாக வெளியிட்டது. அதன்பின், ஸீ தொலைக்காட்சியின் கேமராமேன் கோத்ராவிலிருந்து தான் எடுத்த காட்சிகளை உடனே அஹமதாபாதிற்கு அனுப்பி வைத்தார். இது அன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பானது.
அதன்பின் தூர்தர்ஷன் உட்பட இன்னபிற தொலைக்காட்சிகள், அஹமதாபாதிலும், வதோதராவிலும், டெல்லியிலும் தங்கள் கேமராமேன்களை அனுப்பி செய்திகளை வெளியிட்டன.
கொடுமை என்னவெனில் அன்று மாலை தொலைக்காட்சிச் சானல்கள் அனைத்தும் கோத்ராவில் எரிந்த ரயில் பெட்டியையும், அதில் எரிந்த பிணங்களின் கோரப் படங்களையும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டே இருந்ததன. காட்சி ஊடகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை மீறி அன்று கோரப் படங்களை தொலைக்காட்சிகள் வெளியிட்டன.
அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் அளித்த அறிக்கையின் தொடர்ச்சியை அடுத்த தொடரில் காண்போம்.
No comments:
Post a Comment