2002ல் நடந்த குஜராத் இனப்படுகொலையில் மீடியா எப்படி தவறாகப் பிரச்சாரம் செய்தது என்பதை நாம் பார்த்து வருகின்றோம்.
இந்த இனப்படுகொலை நடந்து முடியும் வரை சந்தேஷ் நாளிதழ் முஸ்லிம்களை தேச விரோதிகளாகவும், பாகிஸ்தான் ஆதரவாளர்களாகவுமே சித்தரித்தது.
முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பகுதிகளை “குட்டி பாகிஸ்தான்” என்று அது சித்தரித்தது. 2002 மார்ச் 7 அது ஒரு செய்தியை வெளியிட்டது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை கராச்சியோடு தொடர்பு படுத்தி அந்தச் செய்தி வெளிவந்தது. கராச்சியில் கோத்ரா என்ற பெயரில் ஒரு பகுதி இருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மார்ச் 1ம் தேதி அந்த நாளிதழில் வந்த தலைப்புச் செய்தி இப்படிக் கூறியது: நவயார்ட் பகுதியில் ஒரு “குட்டி பாகிஸ்தான்” இருக்கிறது.
இது போன்ற பகுதிகள் நகருக்குள் உருவாக்கப்படுவதாகவும், உத்திரப் பிரதேசத்திலிருந்து இங்கே குடிபெயர்ந்து வந்த பணியாட்களிலுள்ள கிரிமினல்களைப் பற்றி காவல்துறை கவனிக்கவேண்டும் என்றும் அந்தச் செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குஜராத்தில் இன்னொரு முன்னணி நாளிதழாக விளங்குகிறது குஜராத் சமாச்சார். இதுவும் முஸ்லிம் இனப்படுகொலையில் பகைமைத் தீயை மூட்டுவதில் பெரும் பங்கு வகித்தது. ஆனால் சந்தேஷ் நாளிதழ் போல் தொடர்ந்து பகைமைச் செய்திகளை வெளியிடாவிட்டாலும், அவ்வப்பொழுது விஷமச் செய்திகளை வெளியிட்டது குஜராத் சமாச்சார். அத்தோடு வகுப்புவாத நல்லிணக்கம் வேண்டும் என்று வலியுறுத்தியும் அதில் கட்டுரைகள் வெளிவந்தன.
பிப்ரவரி 28 அன்று அந்த நாளிதழில் இப்படி ஒரு தலைப்புச் செய்தி முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் வந்தது: “3-4 இளம் பெண்கள் கடத்தல்!”
இந்தச் செய்திக்கு எந்த ஆதாரத்தையும் அந்த நாளிதழ் வெளியிடவில்லை. அதே தேதியிட்ட நாளிதழில் பக்கம் 10ல் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. 10 இளம் பெண்கள் கடத்தப்பட்டதாக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கவ்ஷிக் படேல் கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதல் பக்கத்தில் 4 பெண்கள் என்றும், பக்கம் 10ல் 10 பெண்கள் என்றும் செய்திகள் வந்திருந்தன. அந்தச் செய்தியை வெளியிட்ட நிருபர் இந்த முரண்பாடுகளைப் பற்றி கவலைப்படவில்லை. இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தி குறித்து அவர் காவல்துறை ஐ,ஜி.யிடமோ, ரயில்வே போலீசிடமோ உறுதி செய்யவுமில்லை.
கடத்தப்பட்ட பெண்களின் பெயர்களும் அந்தச் செய்தியில் வெளியிடப்படவில்லை. கடத்தல் குறித்து வேறு எந்தத் தகவலும் அந்தச் செய்தியில் இடம் பெறவில்லை. பக்கம் 2ல் வந்த இன்னொரு செய்தியில் சுஷ்ரி ஹிடால்பென் என்ற நேரடி பெண் சாட்சி வதோதராவுக்கு ரயில் வண்டி வந்தடைந்தவுடன் கூறியதாக ஒரு தகவல் வந்தது. “அஷ்ரல்வாடி என்ற பகுதியைச் சார்ந்த இளம் பெண்கள் எங்களுடன் ரயிலில் பயணித்தனர். அவர்களைக் காணவில்லை” என்று அவர் அந்தச் செய்தியில் கூறியிருந்தார்.
மார்ச் 6ம் தேதி குஜராத் சமாச்சார் நாளிதழின் கடைசிப் பக்கத்தில் வெளிவந்த ஒரு தலைப்பு இப்படிக் கூறியது: “ஒரு பெட்டியை அல்ல, மொத்த ரயில் வண்டியையும் எரிப்பதற்குத்தான் திட்டம் தீட்டப்பட்டது.”
அதே பக்கத்தில் வந்த ஒரு பெட்டிச் செய்தி இவ்வாறு கூறியது: “இரண்டாவது தாக்குதலுக்கு ஒரு கும்பல் தயாராக இருக்கிறது.”
இங்கேயும் செய்தியின் ஆதாரம் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அந்தச் செய்களின் தொனி அனைத்துமே கவனமாக புலனாய்வு செய்யப்பட்டு வெளியிடப்படுவதாக இருந்தது.
No comments:
Post a Comment