Thursday, 28 November 2013

சமுதாயத்தில் வறுமை ஒரு பலவீனமா?

விடியல் வெள்ளி  பிப்ரவரி 2001 இதழில்
‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை


நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ‘ஹதீஸ்கள்’ என்கின்றோம். அவை இந்த உலக வாழ்க்கையைப் பற்றிய உள்ளார்ந்த பார்வையை நமக்குத் தருகின்றது. உலக வாழ்வைக் குறித்து எச்சரிக்கின்றது. அவர்களது எச்சரிக்கைகள் காலத்தாலும் கட்டுண்டவை அல்ல. ஏதோ அந்தச் சமயத்திற்கு மட்டும் பொருந்துவன அல்ல. அது காலத்தைக் கடந்தது. அனைத்து காலத்திற்கும் பொருந்தக் கூடியது.

முஹம்மது (ஸல்) அவர்களோடு முஸ்லிம்கள் மதீனாவில் வாழ்ந்த காலம் மிகக் கடினமான காலம். மதீனத்து அன்ஸாரிகளே மிகவும் சொற்ப வளத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். இருந்தும் வெறுங்கையுடன் வந்த முஹாஜிர்களை அரவணைத்துக் கொண்டார்கள்; ஆதரித்தார்கள்; தங்கள் சொத்தில், தங்கள் வீட்டில், தங்கள் பொருளாதாரத்தில் பாதியை அவர்களுக்குத் தந்தார்கள்.

அசத்தியத்தை அழிப்பதற்காக, சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக இளைஞர்களை அவர்கள் போர்க்களத்தில் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இவை அவர்களின் ஈமானை அசைத்திட இயலவில்லை; அவர்களின் உறுதியைக் குலைத்திட முடியவில்லை.

அல்லாஹ் அவர்களைக் கண்ணியப்படுத்தினான். சாதராண நகரமாகிய மதீனாவை ‘மதீனத்துர் ரசூலுல்லாஹ்’ - இறைத்தூதரின் நகரமாக அவர்கள் உருவாக்கிக் காட்டினார்கள். ஆதலால் ‘இறைத்தூதரின் தோழர்கள்’ (ஸஹாபாக்கள்) என்ற நற்பெயரையும் அவர்கள் பெற்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழர்களிடம் கொடுத்தவற்றை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். என்னென்ன தியாகங்களெல்லாம் அவர்களிடம் கேட்கப்பட்டதோ அவற்றை அவர்கள் ஆர்வத்துடன் நிறைவேற்றினார்கள்.

பிற்காலத்தில் நபிகளாரின் இந்தக் கடின வாழ்க்கை கொஞ்சம் இலேசானது. சக சமுதாயத்தவருடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்தன. முஸ்லிம்கள் பாதுகாப்பாக வியாபாரம் செய்ய முடிந்தது. அவர்களின் ஒட்டகப் பயணங்களுக்கு எந்தத் தடையும் இப்போது இல்லை.

அந்த அரேபிய தீபகற்பத்தில் சக கோத்திரத்தவருடன் அவர்கள் சகஜமாக வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். நபிகளாருக்கு செல்வத்தை வழங்கியதில் முதலாவதாக பஹ்ரைன் விளங்கியது. பஹ்ரைனிலிருந்து அந்த ஒட்டகக் கூட்டம் இரவின் பிற்பகுதியில் வந்தாலும் செய்தி அனைவரையும் எட்டி விட்டது.

மறுநாள் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அன்சாரிகளும், முஹாஜிர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்பு வந்து அமர்ந்தனர். அண்ணலாரை அனைவரும் சூழ்ந்து கொண்டனர். அண்ணலார் நபித்தோழர்களின் மன ஓட்டங்களை உடனடியாகப் புரிந்துக் கொண்டார்கள். வழக்கம் போல் புன்னகைத்தார்கள். பின்னர் சொன்னார்கள்: “அபூ உபைதா பஹ்ரைனிலிருந்து பொருட்களோடு வந்துள்ளதைத் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.” ‘ஆமாம்’ என்பது போல் நபித்தோழர்கள் தலையாட்டினர்.

நபிகளார் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கிக் கொள்வீர்கள் என்று நான் அஞ்சவில்லை. உங்களுக்கு முந்தைய சமுதாயங்களுக்குக் கொடுக்கப்பட்டது போல் உங்களுக்கு உலக வளம் பெருமளவில் வழங்கப்படுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன். இந்தப் பொருளுக்காக உங்களுக்கு முந்தைய சமுதாயங்களில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொள்வர். அதேபோல் நீங்களும் போட்டி போடுவீர்களோ என்று நான் அஞ்சுகிறேன். இந்தப் பொருள் வளம் உங்களை அழித்து விடும். இப்படித்தான் அது முந்தைய சமுதாயங்களையும் அழித்தது.”

இந்தச் சம்பவம் நபிமொழிப் பேழைகளில் பதிவாகியுள்ளது. திருக்குர்ஆனிலும் இது குறிப்பிடப்படுகிறது. சமுதாயங்களைப் பலவீனப்படுத்துவது வறுமையல்ல. வரலாறுகளைப் புரட்டுவோம். இஸ்லாத்தை நிலைநாட்ட உழைத்த எத்தனையோ மறுமலர்ச்சி இயக்கங்கள் தங்களை முழுவதும் அர்ப்பணித்து வேலை செய்த மக்களாலும், கண்ணியமான, நேர்மையான தலைமையினாலும் நடை போட்டன.

மாறாக, பணத்தால் அல்ல. அந்தத் தலைவர்கள் அவர்களது சமுதாயங்களின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்றிருந்தனர். வளமோ வறுமையோ, ஈமானின் ஜோதி இதயத்தில் ஏற்றப்பட்டால், இலக்கு தெளிவாகி விடும்; அயராது பாடுபட்டு தொடர வேண்டிய இலட்சியமும் தெளிவாகி விடும்.
சாதாரண இலட்சியங்களுக்கும், இந்த இலட்சியத்திற்குமுள்ள வித்தியாசம் என்னவெனில் அழியக்கூடிய பொருளுக்கும், அழிவில்லாத பொருளுக்குமுள்ள வித்தியாசம் ஆகும். ஆனால் உணர்வும், உத்வேகமும் இரண்டுக்கும் ஒன்றுதான்.

மேற்க்கூறப்பட்ட ஹதீஸ் ஆரம்ப கால முஸ்லிம் சமுதாயம் மிகக் குறைந்த வசதிகளை வைத்துக் கொண்டு மிகப் பெரிய சாதனைகளைச் சாதித்ததை விளக்குகிறது. பொருள் வளத்தை அடைய வேண்டும் என்ற மனத் தூண்டுதலைக் குறித்தே நபிகளார் அவ்வாறு எச்சரித்தார்கள். ஏனெனில், அதனை அடைந்தவர்கள கறை படிந்தவர்கள் ஆனார்கள்.

முஆவியா (ரலி) அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் தலைமையை அடைய விரும்பினார்கள். ஆனால் அந்தச் சமுதாயத்தில் தலைமைப் பொறுப்புக்குரிய முழு தகுதியும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்குத்தான் இருந்தது. அவர்களைச் சரிக்கட்ட எண்ணினார் முஆவியா. எனவே அம்ர் பின் அல்-ஆஸ் (ரலி) அவர்களை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் தூதராக அனுப்பினார்.

அம்ர் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் இவ்வாறு வினவினார்: “நீங்கள் ஏன் தலைமைப் பதவிக்குப் போட்டியிடக் கூடாது?” அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “எல்லோரும் இதனை ஏற்றுக் கொள்வார்களா?” என்று திருப்பிக் கேட்டார்கள்.

அம்ர் (ரலி) அவர்கள் சொன்னாகள்: “ஆம். கொஞ்சம் பேரைத் தவிர.” அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: “மூன்று பேர் என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நான் அந்தப் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன்.”
அம்ர் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு கேட்டார்கள்: “பின்னர் ஏன் உங்கள் பதவி ஆசையின்மையை அறிவித்து, முஆவியாவைத் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடாது? முஆவியா உங்களுக்கு நிறைய பொருட்களைத் தருவதாக சொல்கிறார். அதனை வைத்து உங்கள் குழந்தைகளும், உங்கள் பேரக் குழந்தைகளும் கூட நிம்மதியாகச் சாப்பிடலாம்.”

இதனைக் கேட்டதும் கோபம் கொப்பளிக்க அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை நோக்கினார்கள். பின்னர் கூறினார்கள்: “இங்கிருந்து போய் விடுங்கள். என்னிடம் இனி வராதீர்கள். எனது விசுவாசம் விற்பனைக்கல்ல. நான் இந்த உலகை விட்டுப் பிரியும்பொழுது சுத்தமான, கறைபடியாக் கரங்களுடனும், சுத்தமான மனதுடனும் செல்ல விரும்புகிறேன். அதற்காகவே பிரார்த்தித்து வருகிறேன்.”

ஆனால் எல்லோரும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைப் போல் இல்லை. கடந்த காலங்களில் இஸ்லாத்தின் பெயரால் நிறைய இயக்கங்கள் தோன்றியுள்ளன. அவற்றின் தலைவர்கள் அவர்களது ராஜ்யங்களை நிறுவிக் காட்டியுள்ளார்கள்.

வட ஆப்ரிக்கா, ஸஹாராவின் தென் பகுதியிலுள்ள ஆப்ரிக்கப் பகுதி, ஆசியா மற்றும் முஸ்லிம் நாடுகளில் இதனை நாம் காணலாம். ராஜ்யத்தை நிலைநாட்டி, வெற்றிக் கனிகளைப் பறிக்கும் சமயம், அழுகிப் போகுதல் ஆரம்பித்து விடுகின்றது. இலட்சியத்தைக் காக்க வேண்டிய உணர்வு பதவியைக் காப்பதற்குப் பயன்பட ஆரம்பிக்கிறது. ராஜ்யங்களைக் காப்பாற்றப் பயன்படுகிறது.

இதனைக் கொண்டுதான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த கவலையுற்றார்கள். இன்று முஸ்லிம் நாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் உலகிலேயே தனி மனித வருமானம் அதிகம் உள்ள நாடுகளும் உள்ளன. உலகில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 100 கோடியைத் தாண்டுகிறது.

இந்தப் பிரபஞ்சத்தின் கணிசமான பகுதியை முஸ்லிம் நாடுகள் தங்கள் கைகளில் வைத்துள்ளன. நிறைய திறமையான மனிதர்கள் இந்த முஸ்லிம் நாடுகளில் உருவாகியிருக்கின்றனர். இருந்தும் என்ன பயன்? இலட்சியமில்லாமலும் உரிய வாய்ப்புகள் இல்லாமலும் அவர்கள் வாய்ப்புகள் அதிகமுள்ள மேலைநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு பெரிய சமுதாயத்திற்கு வேண்டிய அனைத்து வளங்களும் முஸ்லிம்களிடம் உள்ளன. இருந்தும் என்ன பயன்? அவர்கள் ஒரு பெரிய சமுதாயமாக இல்லை. அறிவியல், பொருளாதாரம், நிதி, இலக்கியம் ஆகிய முக்கியத் துறைகளில் முஸ்லிம்கள் தங்கள் இருப்பை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

அதனால் மிகக் குறைந்த வளமுள்ள ஒரு சிறிய நாடு தாது வளங்களும், எண்ணெய் வளங்களும் அதிகமதிகம் உள்ள முஸ்லிம் நாடுகளைத் தன் கைக்குள் வைத்துள்ளது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை, இந்தத் தடைகள், பின்னடைவுகள் அனைத்தையும் மீறி ஒரு நாள் அது எழுந்து நிற்கும். இது அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்டது.

இது வெற்றுத் தலைவர்களால் கொடுக்கப்படும் வெற்று வாக்குறுதியல்ல. இந்த வெற்றுத் தலைவர்களால் தான் மீண்டும் மீண்டும் இந்த முஸ்லிம் சமுதாயம் பள்ளத்தில் வீழ்ந்து கிடைக்கிறது. ‘அத்தவ்பா’ அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்: “அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)” (அல்குர்ஆன் 9.33)

செய்யது M. தர்ஷ்

தமிழில் : MSAH

No comments:

Post a Comment