Wednesday, 13 November 2013

ஆடை: மறைப்பதற்கா? திறப்பதற்கா?






வீடு என்றால் அது உறைவிடத்தையும், தனிமையையும் தரவேண்டும். உணவு என்றால் அது பசியைப் போக்கவேண்டும்; உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைத் தரவேண்டும்.

உறைவிடத்தையும், தனிமையையும் தராத வீடு இருந்து என்ன பயன்? பசியைப் போக்காத, ஊட்டச்சத்தைத் தராத உணவினால் என்ன பயன்? இதற்காகச் செலவழிக்கப்படும் செலவு வீணல்லவா?

ஆனால் மனிதனுக்கு இன்னொரு அடிப்படைத் தேவையான ஆடை விஷயத்தில் மனிதன் இப்படி யோசிப்பதில்லை. அதிலும் குறிப்பாக பெண்களின் ஆடை விஷயத்தில்!

ஒவ்வொரு வருடமும் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஆடையலங்கார மையங்கள் புதிய புதிய நவீனரக ஆடை வடிவங்களைத் தயாரித்து வெளியிடுகின்றன. இப்படி வெளிவரும் புதிய ஆடை வடிவங்கள் ஆடை அணிவதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறதா? நிச்சயமாக இல்லை.

உடலை எவ்வாறெல்லாம் திறந்து காட்டுவது என்று போட்டி போட்டுக் கொண்டு ஆடை வடிவங்களைத் தயாரிக்கின்றனர். உறைவிடத்தையும், தனிமையையும் தராத வீடு மாதிரிதான் இந்த நவீனரக ஆடைகளும்.

மனிதன் தன் உடலைத் திறந்து காட்ட நினைக்கும்பொழுது ஏன் அவன் இவ்வளவு செலவு செய்து புதிய புதிய ஆடை ரகங்களை வாங்குகிறான்? இங்குதான் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

இரண்டு உந்துதல்களுக்கு இடையில் மனிதன் தள்ளாடுவதை நாம் காணலாம். எல்லா மனிதர்களும் 'ஹயா' எனும் வெட்க உணர்வுடனேயே படைக்கப்பட்டுள்ளனர். அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் பொது இடங்களில் தங்களை ஆடையைக் கொண்டு மறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.

எனினும் நிர்வாணத்தை வலியுறுத்தும் ஒரு கூட்டத்தையும் நாம் காண்கிறோம். மனித இனத்தின் பெரும் பகுதி இந்த இரண்டு உந்துதல்களுக்கிடையில் சிக்கியிருக்கிறது: 1. தன்னை மறைக்க வேண்டும் என்ற 'ஹயா' என்ற வெட்க உணர்வு. 2. தன்னை வெளிக்காட்ட வேண்டும் என்ற உணர்வு. அதாவது, தன்னை மறைப்பதா? திறப்பதா?

இது ஏன்? என்ன நடந்து கொண்டிருக்கிறது? அறிவியல் இதற்கு பதில் கூற முடியாது. அது இந்தச் சிந்தனைகளின் ஊற்றை ஊடுருவிப் பார்க்க முடியாது. மேலும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் அதிகமானவை சார்லஸ் டார்வின் என்பவரின் அடிவருடிகளின் ஆதிக்கத்திலும், ஆளுமையிலுமே இருக்கின்றன.

‘டார்வினிஸம்’ என்பது ஒரு நம்பிக்கை; அது விஞ்ஞானம் அல்ல. அவர்களது நம்பிக்கை ஓர் உண்மையை விளங்க மறுக்கிறது. அனைத்து மிருகங்களும் குளிரிலிருந்தும், வெயிலிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தடிமனான தோல் இருக்கும்பொழுது மனிதர்களுக்கு அது இல்லை.

குரங்குகள் உடலில் துணி இல்லாமல் வாழும்; மனிதனால் அப்படி வாழ முடியுமா? இதெற்கெல்லாம் திருக்குர்ஆன் அழகிய விளக்கங்களைத் தருகிறது. நமது உடல் மிருகங்களைப் போன்று தடிமனான தோலைக் கொண்டிருக்கவில்லை. நமது தோல் மிகவும் மெலிதானது. அதனை மூடி வைத்துப் பாதுகாக்கவேண்டிய அளவுக்கு அது பலஹீனமானது.

அனைத்தையும் படைத்த அந்த அல்லாஹ் எப்பொழுதும் ஆடையைத் தேவையாக்கி மனிதனைப் படைத்துள்ளான். அத்தோடு 'ஹயா' எனும் வெட்க உணர்வுடனும் மனிதனைப் படைத்துள்ளான். இந்த வெட்க உணர்வுதான் மனிதனுக்குத் தனது உடலை மறைக்க வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது.

ஷைத்தானின் முதல் செயலே ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் வழிகெடுத்ததுதான். அதனால்தான் அவர்களின் வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. இதனை திருக்குர்ஆன் இப்படி கூறுகிறது:

இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி அவர்கள் (தங்கள் நிலையிலிருந்தே) கீழே இறங்கும்படிச் செய்தான். அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று. அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர். (அல்குர்ஆன் 7:22)

இரண்டு எதிரெதிர் உந்துதல்கள் இப்படித்தான் தோன்றின. சுருங்கச் சொல்லின், அந்த இரண்டு உந்துதல்களையும் நல்லது, கெட்டது எனப் பிரிக்கலாம். இந்தப் பின்னணியில் ஆடையணிதல் பற்றிய முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்குத் அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும். (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக. (அல்குர்ஆன் 7:26)

இங்கு அல்லாஹ் எல்லா மனிதர்களையும் விளித்து இதனைச் சொல்கிறான். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஆடையணிய அல்லாஹ் இதன் மூலம் வலியுறுத்துகிறான். மேலும் திருக்குர்ஆன் ஷைத்தானின் தீங்குகளை விட்டும் பாதுகாப்பாக இருக்கும்படி நம்மை எச்சரிக்கின்றது.

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து சுவனபதியை விட்டு வெளியேற்றியதுபோல் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக அவனும் அவன் கூட்டாதாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். (அல்குர்ஆன் 7:27)

ஆடையணிதலின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாம், எவ்வாறு அதனை உடுத்துவது, எதை எதை மறைப்பது என்பதைப் பற்றி நம்மைப் படைத்த இறைவன் என்ன சொல்கிறான் என்று பார்க்க வேண்டும்.

திருக்குர்ஆனும், நபிவழியும் இந்த விஷயத்தில் நிறைய வழிகாட்டுதல்களை நமக்கு வழங்கியிருக்கின்றன. அவற்றை நான்கு அம்சங்களாகப் பிரிக்கலாம்:

1. நமது ஆடை நமது உடலை நன்றாக மறைக்க வேண்டும்.

இங்கே இன்னொரு கேள்வி, நன்றாக என்றால் எந்த அளவுக்கு? ஷரீஅத் இதனைத் தெளிவாக உணர்த்துகிறது. அது ‘ஸதர்’ என்ற குறைந்தபட்ச தேவையைச் சொல்கிறது.

ஆண்களுக்கு உடலின் நடுப்பகுதியான தொப்புள் தொட்டு முழங்கால் வரை மறைக்கச் சொல்கிறது. பெண்களுக்கு முகத்தையும், இரு முன்கைகளையும் தவிர உடல் முழுவதையும் மறைக்கச் சொல்கிறது.

இந்தப் பாகங்களை எக்காரணத்தையொட்டியும் பிறருக்குக் கட்டாலாகாது. (முக்கியத் தேவைகளுக்குத் தவிர. உம்: மருத்துவரிடம் காண்பிப்பது) அதே போல் ஆடைகள் ரொம்ப மெலிதாக, உள்ளே இருப்பவை வெளியே தெரியுமாறு இருக்கக்கூடாது; இறுகலாகவும் இருக்கக்கூடாது.

2. நமது ஆடை நமக்கு அலங்கராமாக, அழகைத் தருவதாக இருக்க வேண்டும்.

அது நமக்கு மரியாதையான ஒரு தோற்றத்தைத் தரவேண்டும். ஆண்களுக்கு ‘ஸதர்’ என்னும் குறைந்தபட்சத் தேவைக்கு மேல் முழு உடலையும் மூடுவது மரியாதை தரும் செயலாகும். பெண்களுக்கு அவர்களுடைய ஆடை அவர்களைக் கண்ணியமான முறையில் அடையாளப்படுத்திக் கொள்வதாக அமையவேண்டும். அவர்களைக் தொல்லைப்படுத்துவதாக அமையக் கூடாது. அத்தோடு ஹிஜாப் என்பது பிற ஆடவரின் நிலைத்த பார்வையை விட்டும் அவர்களைப் பாதுகாக்கின்றது.

3. நமது ஆடை நமது இஸ்லாமிய அடையாளத்தைப் பிரதிபலிப்பதாக அமையவேண்டும்.

குறைந்தபட்சம் அது நாம் பிற மதத்தைப் பின்பற்றுபவர்களல்ல என்பதையாவது உறுதிப்படுத்தவேண்டும். ஆனால், கூடுதலாக, நாம் முஸ்லிம்கள் என்பதை அது உணர்த்துவதாய் இருக்கவேண்டும்.

மேலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆடைகளில் வித்தியாசம் இருக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரி ஆடை கூடவே கூடாது.

4. நமது ஆடை மிகவும் பகட்டாகவும், கர்வத்தைக் காட்டுவதாகவும் அமையக் கூடாது.

ஒரு நபிமொழி வருமாறு: "உங்களுக்கு விருப்பமானதை உண்ணுங்கள், உங்களுக்கு விருப்பமானதை உடுத்துங்கள். ஆனால் வீண்விரயம், கர்வம் இரண்டு விஷயங்களை விட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள்" (புஹாரீ)

இந்த நபிமொழியிலிருந்து இன்னொரு விஷயம் விளங்க வருகிறது. ஆண்கள் தங்கள் ஆடைகளை தங்கள் கெண்டைக் கால்களுக்குக் கீழே விடக் கூடாது. ஆனால் தற்பொழுது நிறைய விஷயம் தெரிந்த முஸ்லிம்கள்கூட இது மிகச்சிறிய விஷயம் என்று தட்டிக்கழிக்கின்றனர். இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர்.

அபூதாவூதில் இடம்பெறும் ஜாபிர் பின் ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஒரு நபிமொழியைக் கேட்டால் இது எவ்வளவு பெரிய தவறு என்பது தெரிய வரும். அந்த ஸஹாபி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் சில உபதேசங்களை வேண்டி நின்றார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 6 அம்சங்களை உபதேசித்தார்கள். அதில் ஒன்று: "உமது ஆடையை கெண்டைக்காலுக்குக் கீழே ஒருபோதும் விடாதீர். ஏனெனில் அது கர்வத்தின் ஓர் அடையாளமாகும். அல்லாஹ் கர்வத்தை விரும்பமாட்டான்."

இன்னொரு உபதேசம் என்னவெனில், "ஒருபோதும் ஒரு நல்ல விஷயத்தை விட்டுவிடாதீர்."

இஸ்லாம் ஒரு குறிப்பிட்ட ஆடை பாணியைச் சொல்லவில்லை. நம் தேவைகளுக்கேற்ப, சூல்நிலைகளுக்குத் தக்கவாறு, விருப்பத்திற்கேற்ப ஆடைகளை அணிவதற்கு அனுமதியளிக்கிறது.

ஆனால் இஸ்லாம் சொல்லும் வரையறைக்குள் அந்த ஆடை அமைந்திருக்க வேண்டும். இதுவே நிரந்தர வெற்றிக்கு வழிகோலும்.

ஆம்! நிரந்தர வெற்றி இஸ்லாம் மார்க்கத்தில் மட்டுமே உள்ளது!

ஃகாலித் பெய்க்

தமிழில்: MSAH


விடியல் வெள்ளி  ஜூலை 2000 (இம்பாக்ட் பக்கம்)

1 comment: