2002ல் நடந்த குஜராத் இனப் படுகொலையின் பொழுது அங்குள்ள சில நாளிதழ்கள் எவ்வாறெல்லாம் பொய்ச் செய்திகளை வெளியிட்டு கலவரத் தீயை மூட்டின என்று பார்த்து வருகின்றோம்.
மார்ச் 7 அன்று குஜராத் சமாச்சார் நாளிதழின் கடைசிப் பக்கத்தில் வெளிவந்த ஒருபெட்டிச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது: “ஐ.எஸ்.ஐ, குஜராத்தில் பிரச்னைகளை உருவாக்குகிறது. கலோட்டாவும், அவருடன் பணி புரிபவர்களும் இதில் முக்கிய தொடர்புள்ளவர்கள். கொல்கத்தாவில் கைதான HUJI என்ற அமைப்பின் துணைத் தளபதி இந்தச் சதித் திட்டத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.”
இந்தச் செய்தியில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியில் பெரும் துயரத்தை உண்டுபண்ணிய அந்த நாளில் பயணித்தவர்களை “ராம பக்தர்கள்” என்று பல தடவை குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 6ம் தேதி இப்படி ஒரு செய்தி வெளிவந்தது: “கோத்ரா ரயில் பெட்டியை எரிப்பதற்கு முற்கூட்டியே திட்டம் தீட்டப்பட்டது. ரயில் பெட்டியின் வேக்யூம் குழாய்களை எப்படி துண்டிப்பது என்று ஒரு ரயில்வே அதிகாரி மூலம் கலோட்டா தெரிந்து கொண்டார்.”
ஆனால் இந்தச் செய்திக்கு எந்த ஆதாராத்தையும் அந்த நாளிதழ் குறிப்பிடவில்லை.
மார்ச் 16ம் தேதி நாளிதழில் பக்கம் 1ல் இவ்வாறு ஒரு செய்திக்கு தலைப்பிடப்பட்டிருந்தது: “ஃபதேஹ் கஞ்ச் மஸ்ஜிதிலிருந்து பயங்கர துப்பாக்கிச் சூடு!”
ஆனால் இது முற்றிலும் பொய்யாகப் புனையப்பட்ட செய்தி.
முஸ்லிம்கள் ஹிந்துக்களைத் தாக்குவதற்காக பெருமளவில் ஒன்று சேர்ந்து கொண்டிருந்ததாக பலப்பல கதைகள் செய்திகளாக வந்தன.
சமீப காலங்களாக நடந்து வரும் இனப் படுகொலைகளை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால் நமக்கொரு உண்மை விளங்க வரும். அதாவது மீடியாவில் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டவர்களைத் தாக்குதல் புரிபவர்களாகவும், அநியாயமாகத் தாக்கி அக்கிரமம் புரிபவர்களை பாதிப்படைந்தவர்களாகவும் சித்தரிக்கும் ஒரு தந்திரத்தைக் கையாண்டு வருவதை நாம் உணரலாம்.
மார்ச் 24ம் தேதி குஜராத் சமாச்சார் நாளிதழில், பக்கம் 1ல் வெளிவந்த ஒரு செய்திக்கு இவ்வாறு தலைப்பிடப்பட்டிருந்தது: “சாட் கைவால் கோயிலுக்கு ஆபத்து. சர்சா கோவிலும், பாடசாலாவும் ஆபத்தில் இருக்கின்றன. அவை ரிமோட் கண்ட்ரோல் மூலம் தகர்க்கப்படும் அபாயத்தில் உள்ளன.”
அதே நாளிதழில் பக்கம் 2ல் வெளிவந்த ஒரு செய்திக்குத் தலைப்பு இது: “பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குவதற்கு வாய்ப்பு. உளவுத் துறையினருக்குக் கிடைத்த செய்தி. மத, கல்வி நிறுவனங்களுக்குக் குறி. அனைத்து மாவட்ட துணை கண்காணிப்பாளருக்கும் எச்சரிக்கை.”
மார்ச் 26ம் தேதி, குஜராத் சமாச்சார் நாளிதழில் கடைசிப் பக்கத்தில் இவ்வாறு ஒரு செய்தி வந்திருந்தது: “சபர்மதி எக்ஸ்பிரஸ் சம்பவம் முற்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டது. நிறைய இளைஞர்கள் கொடும் குற்றங்களைப் புரிவதற்கு தயார் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் பிலாலின் உத்தரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.”
இந்தச் செய்திகளுக்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை. இப்படி பொய்ச் செய்திகளை அங்குள்ள நாளிதழ்கள் பரப்பிக் கொண்டே இருந்தன.
[Concerned Citizens Tribunal (அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம்) வெளியிட்ட Crime Against Humanity என்ற நூலிலிருந்து. இந்தநூலின் முதல் பாகத்தை "மனித இனத்திற்கெதிரான குற்றம்" என்ற பெயரில் இலக்கியச் சோலை தமிழில் வெளியிட்டுள்ளது.]
இந்திய மீடியா உலகம் வேண்டுமென்றே சொல்லும் பொய்களையும், புரட்டுகளையும் நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆயுதங்களைக் கடத்துதல் என்ற பொய்ச் செய்தியாகட்டும், ஹவாலா பயங்கரவாதிகளின் தாக்குதல் போன்ற செய்திகளாகட்டும், அந்தச் செய்திகளின் பாணி ஒரே மாதிரியாக இருக்கும். காவல்துறை கூறும் கதைகள் அப்படியே வாந்தி எடுக்கப்பட்டு உண்மை போல் செய்திகளாக வெளிவரும். இதுதான் இந்திய மீடியாவின் இன்றைய நிலை.
ஆனால் இந்த மீடியாவை நாமும் எதிர்கொள்ளலாம். ஆக்கபூர்வமாக சில பணிகளைச் செய்யலாம். பாதிப்புகளை ஓரளவு தடுக்கலாம். அது எப்படி என்று இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் காண்போம்.
No comments:
Post a Comment