Thursday, 28 November 2013

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 16

2002ல் நடந்த குஜராத் இனப்படுகொலையில் அங்குள்ள மீடியாக்களின் பாரபட்சமான பங்கு குறித்து நாம் பார்த்து வருகின்றோம். குஜராத் இனப்படுகொலை குறித்து நேரடிக் கள ஆய்வு செய்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் என்ற மனித உரிமை அமைப்பு “மனித இனத்திற்கெதிரான குற்றம்” என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக அறிக்கைகளை வெளியிட்டது. அந்த அறிக்கையில் குஜராத் இனப்படுகொலை குறித்து வெளிவந்த செய்தியைத்தான் நாம் இப்பொழுது பார்த்து வருகின்றோம்.

அந்த அறிக்கையின் தொடர்ச்சி வருமாறு:

மீடியாவில் வந்த செய்திகளை வைத்தும், இந்தக் குழுமத்திற்குக் கிடைத்த ஆவணங்களை வைத்தும் பார்க்கும் பொழுது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குக் காரணம் என்று சொல்லப்பட்டவர்கள் “தேசவிரோத பாகிஸ்தானிகள்” என்று அழைக்கப்பட்டார்கள். இப்படி அழைக்கப்படுவதற்கு குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஸடாஃபியா தான் காரணம், இவர்தான் “தேசவிரோத பாகிஸ்தானிகள் தான் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குக் காரணம்” என்று பொய்ச் செய்தியைப் பரப்பியவர். இவர் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவரும் ஆவார்.

அவர் கூறுகிறார்: “கொல்கத்தாவிலுள்ள அமெரிக்கன் சென்டரின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல் போல கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் ஒரு பயங்கரவாத நடவடிக்கையே. இந்த இரண்டு சம்பவங்களிலும் குற்றவாளிகள் ஒரே ஆள் தான்.”

இப்படிச் சொல்லிவிட்டு அவர் இவ்வாறு தைரியமாக மிரட்டுகிறார்:
“இந்தச் செயலைச் செய்தவர்களுக்கு நாம் தக்க பாடம் புகட்டுவோம். யாரும் இதிலிருந்து தப்பிக்க முடியாது. மேலும் இந்தச் செயலைச் செய்த சக்திகள் இனி ஒரு பொழுதும் இதுமாதிரி திரும்பச் செய்ய தைரியம் வராத அளவுக்கு நாம் உறுதிப்படுத்துவோம்.”

மார்ச் 7 அன்று சந்தேஷ் நாளிதழ் மோசமான தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. ஹஜ் கிரியையை முடித்துவிட்டு திரும்ப வரும் இந்திய முஸ்லிம்கள் ஹிந்துக்களுக்கெதிரான “பயங்கரவாதிகளாக” இருக்க வாய்ப்பு உள்ளது என்பதே அந்தச் செய்தியின் சாராம்சம். அந்தச் செய்தியின் தலைப்பு இதுதான்: “ஹிந்துக்களுக்கு ஆபத்து! அவர்கள் மேல் பயங்கரவாதிகளின் ஆதரவுடன் தாக்குதல் நடக்கலாம்! திரும்ப வரும் ஹாஜிகளிடம் நடுங்க வைக்கும் தாக்குதல் திட்டம்!”

அந்தச் செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகள் அந்நிய நாட்டுப் பொருளாதார உதவியுடன் வாங்கப்பட்ட ஆர்.டி.எக்ஸ். குண்டுகளைப் பயன்படுத்துவார்கள். அல்லது குண்டுகளை எறிவார்கள். அல்லது விமானங்களைக் கடத்துவார்கள்.
கோத்ராவில் கரசேவகர்களின் மேல் தாக்குதல் தொடுத்தது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.தான் என்று புலனாய்த்துறை நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இந்தத் தேசவிரோதிகள் தற்பொழுது தலைமறைவாகிவிட்டார்கள். ஆனால் தாக்குதலுக்காக தகுந்த தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஹஜ் முடித்துவிட்டு ஹாஜிகள் சவூதி அரேபியாவிலிருந்து திரும்ப வந்த பிறகு இந்தத் தாக்குதல்கள் நடக்கலாம். ஹாஜிகள் பாதுகாப்பாக திரும்பி வருவதற்காகவே இந்தத் தாக்குதல்கள் தள்ளிப்போடப்பட்டுள்ளன. 1993ல் மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகள் போல் மிகப் பிரம்மாண்டமாக இந்தத் தாக்குதல்கள் நடைபெறும் என்று உளவுத்துறையின் எஸ்.பி. சஞ்சீவ் பட் கூறுகிறார்.

கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து குறிப்பிடும் பெரும்பாலான அனைத்துச் செய்திகளும் இப்படியே துவங்கின: “காட்டுமிராண்டித்தனமான கோத்ரா ரயில் எரிப்புக்கு எதிர்வினையாக நடந்த வகுப்புக் கலவரத்தில்…”

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு அவர்கள் கொடுக்கும் உணர்வைத் தூண்டும் அடைமொழிகள் அதன் பிறகு மிகவும் கொடூரமாக நடத்தப்பட்ட இனப்படுகொலையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கொடுக்கப்படுவதில்லை.
குஜராத் முழுவதும் கொடூரமாக நடத்தப்பட்ட இனப்படுகொலையை குஜராத் அரசு கூறுவது போலவே சந்தேஷ் நாளிதழும் கோத்ரா சம்பவம் நடந்ததன் எதிர்வினை தான் என்று தெளிவாகக் கூறிவந்தது.

இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் காண்போம்.

No comments:

Post a Comment