Monday, 11 November 2013

எல்லாம் அல்லாஹ்வுடையதே!


“பேரீச்சம் பழம், ரொட்டி, இறைச்சி…” – அப்பொழுது சாப்பிட்டு முடித்த உணவுகளின் வகைகளை அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

அபூபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் ஆச்சரியத்துடன் அண்ணலாரை நோக்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் என்ன சொல்லப் போகிறார்கள்? அதிகம் யோசிக்கும் முன்பே அண்ணலார் தொடர்ந்தார்கள்:
“பேரீச்சம் பழம், ரொட்டி, இறைச்சி… என் ஆத்மா எவன் கையிலிருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, இவையெல்லாம் இறைவனின் அருட்கொடைகள். இவை குறித்து நாளை மறுமையில் கணக்கு சொல்ல வேண்டும்.”

மதீனாவில் பஞ்சம் நிலவிய காலம் அது. பயங்கரமான வெயில் வேறு மக்களை வாட்டியெடுத்தது. அந்தச் சமயத்தில் உச்சி வெயிலில் பசி தாங்க முடியாமல் வெளியே வந்தார்கள் அபூபக்கர் (ரலி) அவர்கள். வழியில் உமர் (ரலி) அவர்களைக் கண்டார்கள். இருவருக்கும் ஒரே பிரச்னை என்பதை இருவரும் பரஸ்பரம் கேட்டறிந்து கொண்டார்கள். சிறிது நேரத்தில் அண்ணலாரும் அவ்வழியே வந்தார்கள்.

“இரண்டு பேரும் இந்த உச்சி வெயிலில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று அண்ணலார் கேட்டார்கள். கொஞ்சம் தயங்கினாலும் இருவரும் உண்மையைச் சொல்லி விட்டார்கள். அண்ணலாருக்கும் அதே பசிப் பிரச்னைதான்.

இருவரையும் அழைத்துக்கொண்டு அண்ணலார் மஸ்ஜிதுக்கு அருகிலுள்ள அபூஅய்யூபுல் அன்சாரீயின் (ரலி) வீட்டுக்குச் சென்றார்கள்.

அபூஅய்யூப் (ரலி) தோட்டத்தில் ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருந்தார். அண்ணலாரும், அன்புத் தோழர்கள் இருவரும் தன் வீட்டை நோக்கி வருவதை தூரத்திலிருந்தே கவனித்து விட்டார் அபூஅய்யூப் (ரலி). அத்தோடு அவர்களது வருகையின் நோக்கத்தையும் புரிந்துகொண்டார்.

கையில் ஒரு குலை பேரீச்சம் பழங்களுடன் அவர் விருந்தாளிகளை வரவேற்பதற்கு ஓடோடி வந்தார். அந்தக் குலையில் காயும், பழமும், பாதி பழுத்ததும் என்று அனைத்தும் இருந்தன.

“பழுத்ததை மட்டும் பறித்தால் போதுமே…” என்றார்கள் அண்ணலார். “தங்களுக்கு எல்லாம் இருக்கட்டுமே என்று நான் நினைத்தேன்” என்றார் அபூஅய்யூப் (ரலி).

அபூஅய்யூபுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அவர் கூறினார்: “தாங்கள் இங்கே இருங்கள். நான் ஓர் ஆட்டை அறுத்து உணவு தயாரிக்கிறேன்.”

அபூஅய்யூபும், அவரின் மனைவியும் உணவு தயாரிக்கத் தொடங்கினார்கள். ரொட்டியும், இறைச்சியும் தயாரானது.

உணவுகளைக் கொண்டு வந்து விருந்தினரின் முன் வைத்தார் அபூஅய்யூப் (ரலி). அதிலிருந்து சிறிது எடுத்து அபூஅய்யூபின் கையில் கொடுத்து அண்ணலார் சொன்னார்கள்: “இதைக் கொண்டு போய் என் மகள் ஃபாத்திமாவிடம் கொடுங்கள். இப்படியொரு உணவை அவள் உண்டு பல நாட்கள் ஆகிவிட்டன.”

அனைவரும் வயிறாற விருந்துண்டார்கள். பசி அடங்கியவுடன் அண்ணலார் அவர்களிடம் சொன்னார்கள்: “இவையெல்லாம் அல்லாஹ்வின் அருட்கொடைகள். இவை குறித்து நாளை மறுமையில் நாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.”

சில நாட்கள் பட்டினி கிடந்த பிறகு கிடைத்த ஒரு சிறிய உணவு குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தைகள்தான் இவை. உமர் (ரலி) அவர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியது. “இது குறித்துமா நாளை கணக்கு கொடுக்கவேண்டும்?” என்று கேட்டார்கள்.

“ஆம்” என்று அண்ணலார் உறுதியாகக் கூறினார்கள்.

வங்கியில் ஏதாவது விண்ணப்பம் நிரப்ப வேண்டி வரும்பொழுது பேனாவுக்காக பிறரிடம் கை நீட்டுவார்கள். அப்பொழுது அன்பொழுக பவ்யமாகக் கேட்பார்கள். எழுதி முடித்த பின் மரியாதையோடு திருப்பிக் கொடுப்பார்கள். அதற்காக நன்றி சொல்வார்கள். இது சாதாரண பேனாதான். ஆனாலும் பயன்படுத்துவதற்குத் தந்ததற்கான நன்றிக் கடன் அது. இதே மனோபாவம் எல்லா காரியங்களிலும் இருக்கவேண்டும்.

பொருளாதாரம் அல்லாஹ் தருவது. அதனைப் பயன்படுத்தி மனிதன் உணவுகளைத் தயாரிக்கின்றான். பொருட்களை வாங்குகின்றான். ஆனால் அதற்கு உடைமையாளன் அவனல்ல என்ற எண்ணம் எப்பொழுதும் அவனிடம் இருக்கவேண்டும். எல்லாம் அல்லாஹ் அருளியவை என்ற எண்ணமே ஈடேற்றத்தைக் கொடுக்கும்.

தமிழில் : MSAH



இக்கட்டுரை விடியல் வெள்ளி  அக்டோபர் 2012 இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக வெளிவந்தது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment