Thursday, 7 November 2013

அல்லாஹ்வின் திருப்பெயரால்...!

விடியல் வெள்ளி ஜூன் 2000 இதழில் 'இம்பாக்ட் பக்கம்' பகுதியில்
இடம் பெற்ற கட்டுரை



பிஸ்மில்லாஹ் – ‘அல்லாஹ்வின் திருப்பெயரால்’ என்று துவங்கும் காரியங்கள் அனைத்தும் நன்மை பயக்கும் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

ஒரு முஸ்லிமின் வாழ்வில் அல்லாஹ்வின் மேலுள்ள நம்பிக்கை ஊடுருவி, பரவி நிற்கின்றது. அவனுடைய சமூக, கலாச்சாரப் பழக்கவழக்கங்களில் அது பிரதிபலித்து நிற்கின்றது. அது அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளில் ஆனாலும் சரி, மனித உறவுகளானாலும் சரி, உண்பதானாலும் சரி, உடுத்துவதானாலும் சரி, கால்நடைகளை அறுப்பதானாலும் சரி.

இதன் காரணமாகத்தான் ஒரு காரியத்தைச் செய்யுமுன் முஸ்லிம்கள் “பிஸ்மில்லாஹ்” என்று கூறுகின்றனர். அதேபோல் வாக்குறுதிகளைக் கொடுக்கும்பொழுது, எதிர்கால ஏற்பாடுகளைச் செய்யும்பொழுது “இன்ஷா அல்லாஹ்” (அல்லாஹ் நாடினால்) என்று கூறுகின்றனர்.

இஸ்லாமியக் கலாச்சாரம் ஒரு மனிதனை அல்லாஹ்வின் பெயராலேயே அனைத்துக் காரியங்களையும் துவங்கிடுமாறு கோருகிறது. ஒருவர் இதனை உணர்வுபூர்வமாகவும், நேர்மையாகவும் செய்தால் அது மூன்று விதமான நல்ல விளைவுகளை நிச்சயமாக ஏற்படுத்துகின்றது.

முதலாவது பிஸ்மில்லாஹ் அவரைத் தீய சக்திகளிடமிருந்து தூரமாக்கி வைக்கிறது.

இரண்டாவது, பிஸ்மில்லாஹ் என்று கூறும்பொழுது அது அவரது சிந்தனையில் சரியான போக்கை உருவாக்குகிறது. அவரைச் சரியான திசையில் வழிநடத்திச் செல்கிறது.

மூன்றாவது, அவர் அல்லாஹ்வின் உதவியையும், அருளையும் பெறுவார். ஷைத்தானியத் தூண்டுதல்களிலிருந்து  பாதுகாக்கப்படுவார்.

யார் அல்லாஹ்வின் பக்கம் திரும்புகிராறோ அவர் பக்கம் அல்லாஹ் திரும்புவான்.

இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் – “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...” என்றுதான் திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் துவங்குகின்றன. ரஹ்மான், ரஹீம் ஆகிய இரு அரபி வார்த்தைகளையும் “அளவற்ற அருளாளன்”, “நிகரற்ற அன்புடையோன்” என்று மொழிபெயர்க்கிறோம். இந்த இரு வார்த்தைகளும் அல்லாஹ்வின் கருணையை அனைத்து விதமாகவும் விளக்குகின்றன.

அர்-ரஹ்மான், அர்-ரஹீம் ஆகிய இரு வார்த்தைகளும் அல்லாஹ்வின் அருங்குணங்களை அருமையாகப் பறை சாற்றுகின்றன. அந்த அரபி வார்த்தைகளின் பிற மொழிபெயர்ப்புகள் இந்த அளவுக்கு பொருள் தரவல்லவையல்ல. அவைகள் இதர படைப்பினங்களோடு ஒப்பிட்டு இந்தப் பொருள்களைத் தருகின்றன.

ஆனால் அல்லாஹ்வைப் போன்று எந்தப் படைப்பினமும் இல்லை. அவனது அருள் மழையை, கருணையை படைப்பினங்களின் கருணைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

அவனே அனைத்தையும் படைத்தவன். படைப்பினங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவன்.

கருணை என்பது துயரம், நீண்டநாள் துயரம், பொறுமை, மன்னிப்பு ஆகியவற்றின்அடிப்படையில் உருவாகுவது. ஒரு பாவிக்கு அல்லாஹ்வின் கருணை தேவைப்படுகிறது. அல்லாஹ்வும் அவனுக்கு அருள்பாலித்து அவனது பாவங்களை மன்னிக்கின்றான்.

தேவைப்படும்பொழுது மட்டுமல்லாமல் தேவையில்லாத வேளையிலும் அல்லாஹ்வின் கருணை வெளிப்படும்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் நம்மிடம் வேண்டுவது எல்லாம் அவனை நினைவு கூர்வதையும், நன்றி நவில்வதையும், அவனது எல்லையில்லா அன்புக்கு பிரதிபலிப்பையும்தான்.

நமது அனைத்துக் காரியங்களின் துவக்கத்திலும் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று கூறுவது ஒரு வகையில் அவனை நினைவு கூர்வதுதான். அதே போல் காரியங்களின் முடிவில் “அல்ஹம்துலில்லாஹ்” (எல்லாப் புகழும், நன்றியும் அவனுக்கே!) என்று கூறுவது அவனுக்கு நன்றி நவில்வதுதான்.

அல்லாஹ்வின் எல்லையில்லாக் கருணையை மனதிலிறுத்தி, இவைகளெல்லாம் அந்த அளவற்ற அருளாளனின், நிகரற்ற அன்புடையோனின் அற்புதங்கள் என்று உணர்வதே அதன் பிரதிபலிப்பு ஆகும்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், இன்ஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் ஆகிய பதங்களைச் சொல்வது ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கையின் சமூக வெளிப்பாடாகும்.

இஸ்லாமிய அடிப்படையில் சொல்லப் போனால், அந்த அரபிப் பதங்கள் அனைவரையும் படைத்த அந்த ஒருவனைப் பணிவதற்குரிய பிரகடனங்கள்தாம்.

ஒருவருடைய உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்துவதற்கு இஸ்லாம்இன்னும் நிறைய பதங்களை எடுத்தியம்புகின்றது.

உதாரணமாக, ஒருவரைப் புகழ்வதற்கு "ஸுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்!) என்றும், "மாஷா அல்லாஹ்" (அல்லாஹ் நாடினால்!) என்றும் கூறுகிறோம்.

அதே போல் ஒரு முஸ்லிம் தும்மினால் "அல்ஹம்துலில்லாஹ்" (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்று சொல்வார். அருகிலிருப்பவர்கள் அதனைக் கேட்டால் "யர்ஹமுகல்லாஹ்" (அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக!) என்று சொல்வார்கள்.

யாரவது ஒருவர் இறந்து விட்டால் ஒரு முஸ்லிம், "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்" (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காவே இருக்கிறோம்; நிச்சயமாக நாம் அவனிடமே மீளப் போகிறோம்!) என்று கூறுவார்.

ஒரு முஸ்லிம் அவர் விரும்பாதவற்றைப் பார்த்தாலோ, கேட்டாலோ "நவூதுபில்லாஹ்" (நாம் அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றோம்!) என்றும், அல்லது "லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் சக்தி இல்லை!) என்றும் கூறுவார்.

இஸ்லாம் உருவாக்கித் தந்துள்ள இந்தப் பதங்கள் மிகச் சுருக்கமாகவும், நறுக்கென்றும் இருக்கலாம். ஆனால் அவற்றின் பொருளும், முக்கியத்துவமும் வானத்திற்கும், பூமிக்குமுள்ள தூரத்தைப் போல் பரந்து விரிந்தது. பொருள் பொதிந்தது.

அவைகளின் அர்த்தங்களுக்கு எல்லையே இல்லை. இந்தப் பதங்களைத் தியானத் தலங்களில்பயன்படுத்துவது வானத்திற்கும், பூமிக்கும் இடையிலுள்ள இடைவெளியை நிரப்பும் அளவுக்கு நன்மைகளை அள்ளித் தரும் என்று அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள் அழகுறச் சொன்னார்கள்.

திருக்குர்ஆன், "அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" (அகிலங்களனத்தையும் படித்துப் பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!) என்ற வாக்கியத்துடனேயே துவங்குகின்றது.

இது ஒரு சாதாரண வாக்கியமல்ல. அளவில்லாப் பொருட்கள் பொதிந்த மகத்துவமிக்க வாக்கியம் இது. இந்த வாக்கியம் முடிவின்மையை உணர்த்துகிறது.

நாம் இந்த வாக்கியத்தை முணுமுணுக்கும்பொழுது கீழ்க்கண்டவாறு பொருள் கொள்கிறோம்: இந்த அண்ட சராசரங்கள், அவற்றின் படைப்பினங்கள் அனைத்தும் தோன்றுவதற்கும் முன்பாக உள்ளமையாயிருந்த இறைவனே அனைத்துப் புகழுக்கும் தகுதியானவன்.

அதேபோல் அனைத்துப் படைப்பினங்களும் ஒரு காலத்தில் அழியும். அவை அழிந்த பின்னும் அந்த அல்லாஹ்வே புகழுக்கும் நன்றிக்கும் உரித்தவன்;  தகுதியானவன்; அவனே அனைத்துப் புகழுக்கும் சொந்தக்காரன். இறைத்தூதர்கள், வானவர்கள், அந்த அல்லாஹ்வையே புகழ்கின்றனர். படைப்பினங்கள் அனைத்தும் அந்த அல்லாஹ்வையே புகழ்கின்றன.

அரபியில் 3 வார்த்தைகள் உள்ளன: 1. ஹம்த். 2. மத். 3. ஷுக்ர்.

ஹம்து, மத் என்றால் புகழ், ஷுக்ர் என்றால் நன்றி. ஆனால் இந்த 3 வார்த்தைகளும் அதனதன் அர்த்தங்களால் மாறுபடுகின்றன.

அரபி மொழி ஓர் ஈடிணையற்ற மொழி. அதிகப் பொருள் தரக்கூடிய, சுருங்கிய வார்த்தைகளுக்கு அது பெயர் பெற்றது.

உதாரணத்திற்கு ஹம்த், மத், ஷுக்ர் – இந்த 3 வார்த்தைகளை எடுத்துக் கொள்வோம். இந்த வார்த்தைகள் வெளிப்படையாகப் பார்க்கும்பொழுது ஒரே பொருளைத் தந்தாலும், உண்மையில் அதன் அர்த்தங்கள் பெரிய அளவில் வித்தியாசப்படுகின்றன.

அரபி மொழியாளர்களும் அரபல்லாத பிற மொழியாளர்களும் இதன் அர்த்தங்களை விரிவாக அலசி ஆராய்ந்துள்ளனர்.

'மத்' என்பது உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

'ஹம்த்' என்பது உயிருள்ள பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பயன்படுத்துவதால் ஒரு நற்கூலியைப் பெறலாம். அல்லது பெறாமலும் இருக்கலாம்.

'ஷுக்ர்' என்பது ஒருவர் நற்கூலியைப் பெற்ற பின் பயன்படுத்துவது.

ஆதலால் "அல்ஹம்துலில்லாஹ்" (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்பது "அஷ்ஷுக்ர்லில்லாஹ்" (எல்லா நன்றியும் அல்லாஹ்வுக்கே!) என்பதை விடச் சிறந்ததாகும். ஏனெனில் 'ஹம்த்' என்பது புகழையும் நன்றியையும் குறிக்கிறது.

ஆனால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் நமது வாழ்நாள் முழுவதையும் அல்லாஹ்வின் அருளுக்காக, அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகச் செலவழித்தாலும் நாம் முழுமையாக, பூரணமாக அவனுக்கு நன்றி செலுத்த இயலாது.

பாரசீகக் கவிஞர் ஷேக் ஸஅதீ கூறுகிறார்: ஒரு மனிதன் தனது வாழ்நாளின் ஒவ்வொரு மூச்சிலும் நன்றி செலுத்தினாலும் அவன் அல்லாஹ்வுக்கு முழுவதுமாக நன்றி செலுத்திவிட முடியாது. ஏனெனில் ஒவ்வொரு மூச்சிலும் அல்லாஹ்வின் இரண்டு அருள்கள் அந்த மனிதனுக்கு உள்ளன. ஒன்று – அவன் மூச்சிருப்பதால்தான் உயிர் வாழ்கிறான். மற்றொன்று – மூச்சிருப்பதால்தான் அவன் அனைத்து வசதிகளையும் பெறுகிறான்.

வானங்களிலும், பூமியுலுமுள்ள அனைத்துப் படைப்பினங்களும் அல்லாஹ்வைத் துதித்துப் பெருமைப்படுத்துகின்றன.

ஆம்! அவன்தான் மகா சக்தி வாய்ந்தவன், அவன்தான் நுண்ணறிவாளன் – வஹுவல் அஸுஸுல் ஹக்கீம்.

செய்யது நியாஸ் அஹமது

தமிழில்: MSAH


இதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

1 comment: