விடியல் வெள்ளி, செப்டம்பர் 2000 இதழில்
‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் வெளியான கட்டுரை
திருக்குர்ஆன் அதன் மூல வடிவில் அப்படியே பாதுகாக்கப்படுகிறது என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். அத்தோடு முஸ்லிம்களுக்கு இன்னொரு அருளும் கிடைத்துள்ளது. அதுதான் முஹம்மது (ஸல்) அவர்கள்!
அவர்களது வாழ்வும், வாக்குகளும், செயல்பாடுகளும் (ஸுன்னா) நமக்குக் கொடுக்கப்பட்ட அருள்.
இந்த இரண்டு மூல ஆதாரங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவை. திருக்குர்ஆன் இப்படி பிரகடனப்படுத்துகிறது:
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன்: 33:21)
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ரஸூல் (ஸல்) அவர்களின் வாழ்க்கை எவ்வாறாக இருந்தது?” என்று வினவப்பட்ட போது, “அவர்களது வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது!” என்று பதில் பகர்ந்தார்கள்.
இது அனைவரும் அறிந்த, பிரபலமான ஒரு ஹதீஸ். குர்ஆனைத் தெளிந்த முறையில் புரிந்து கொள்ள ஸுன்னா உதவுகிறது. அதே போல் குர்ஆனும் அண்ணலாரின் வாழ்க்கையையும், ஆளுமையையும் நமக்கு பறை சாற்றுகின்றது.
இஸ்லாமிய அறிஞர் குர்ஷித் அஹமத் அவர்கள் அப்துல் ஹமீத் ஸித்தீக்கி அவர்கள் எழுதிய “முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை” என்ற நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். அதில் ஓர் இடத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்:
”திருக்குர்ஆனின் செய்தியும், உத்தம நபியின் உதாரணமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை, பிரிக்க முடியாதவை.”
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்போமேயானால், அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் குர்ஆனோடு தொடர்புடையதாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதை அறிய முடியும்.
திருக்குர்ஆனில் நம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுமதிகளையும், திருத்தங்களையும், நம்பிக்கையையும், உறுதிகளையும் அல்லாஹ் அளிப்பதைக் காண்கிறோம். வல்ல இறைவன் தனது தூதருக்குப் பேசும் உரையை நாம் பார்வையாளராய்ப் பார்க்கின்றோம். அது நமக்கு இறைத்தூதரின் மேல் ஓர் அச்சம் கலந்த மரியாதையைத் தோற்றுவிக்கிறது. குர்ஆனும் நம்மோடு நெருங்கி வருகிறது.
உதாரணத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியைப் பாருங்கள்.
‘அல்-முத்தஸிர்’ என்ற அத்தியாயம் இறங்கிய கையோடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். வஹீ வந்த நடுக்கம் அவர்களிடத்தில் தெரிகிறது. பூமிக்கும், வானத்திற்கும் இடையில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறார்.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அஞ்சி நடுங்கியவர்களாக ஓடோடி வீட்டுக்குள் வந்து ‘என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்’ என்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன் மனைவியிடம் வைத்த கோரிக்கை கவனிக்கப்படாமல் போகவில்லை. அது தன் தூதரிடம் அல்லாஹ் காட்டுகின்ற அபரிமிதமான அன்பை வெளிப்படுத்தியது. சிறிது நகைச்சுவையும் கூட.
அடுத்த அத்தியாயத்தின் முதல் வசனம் இப்படி ஆரம்பித்தது: “ஓ! போர்த்திக் கொண்டிருப்பவரே!” (அல்குர்ஆன் 73:1)
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு எப்படி குர்ஆனோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம். அதே போல் கண்டிப்பும் உண்டு. முஹம்மது (ஸல்) அவர்கள் சில குறைஷித் தலைவர்களிடம் இஸ்லாத்தை எத்தி வைத்து உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது ஒரு கண் தெரியாத நபித்தோழர் அண்ணலாரிடம் வந்தார். ஸலாம் சொன்னார். அவர் இப்னு உம்மி மக்தூம்.
அப்பொழுது அண்ணலார் அந்த நபித்தோழரைப் பார்த்து இலேசாக கடுகடுத்தார்கள். உடனே குர்ஆன் வசனங்கள் இறங்கின:
அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார். அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது, (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா? அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம். (அல்குர்ஆன் 80:1-4)
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் இப்னு உம்மி மக்தூமின் மேல் அளப்பரிய அன்பு காட்டலானார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் கண்ணோட்டத்தோடு பார்த்தால் நிறைய வசனங்கள் அதனோடு பொருந்திப் போவதைக் காணலாம்.
குர்ஆன் கூறும் செய்தியைப் படிப்பதும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்க்கையின் பாடங்களைப் படிப்பதும்தான் முஸ்லிம்களுக்கு பயிற்சியின் அடிப்படையாய் அமைகின்றது.
இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் வரலாற்றில் தனிப்பட்ட முறையிலும், ஆன்மீக ரீதியிலும் மட்டும்தான் படிப்பினைகள் கிடைக்கும் என்றில்லை. மாறாக, அது ஒருங்கிணைந்த ஓர் இயக்கமாக வெளிப்படும். அரசியல், பொருளாதார, இதர சமூகப் பிரச்னைகளுக்கும் அது வழி காட்டும்.
இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ் ஹிஜ்ரி 10-ம் ஆண்டு துல்ஹஜ் மாதம் 9 மற்றும் 10-ம் நாட்களில் (கி.பி. 632) நடந்தது. அப்பொழுது அரஃபாப் பெருவெளியில் அண்ணலார் ஓர் உருக்கமான உரை நிகழ்த்தினார்கள். அந்த உரை தெளிவான ஒரு சமூக அறிக்கையைச் சமர்ப்பித்தது.
“மக்களே! நான் கூறுபவற்றைக் கவனத்துடன் செவி தாழ்த்திக் கேளுங்கள். அவன் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டான். தன் அடிமையாகிய எனக்கு உதவி புரிந்தான். இனி நீங்களும் நானும் இங்கே ஒன்று கூடுவோமா என்பதை நான் அறியமாட்டேன்.
மனிதர்களே! இந்த மாதமும், இந்த நாளும், இந்த நகரமும் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றனவோ, அவ்வாறே உங்களின் உயிர்களும், உடைமைகளும், கண்ணியமும் புனிதமாகவும் பாதுகாப்புடனும் இருந்து வரச் செய்வது உங்கள் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அவ்வாறே எக்காலத்தும் இருந்து வர இறைவன் அருள் பாலிப்பானாக!
நீங்கள் இறைவனைச் சந்திக்கும் நாள் நெருங்கிக் கொண்டு வருகிறது. அந்த நாளில் உங்களின் செயல்களைப் பற்றி அவன் உங்களிடம் கணக்குக் கேட்பான்.
கொலைக்குப் பழி வாங்கும் பழக்கம் இன்றோடு ஒழிக்கப்பட்டு விட்டது. குற்றம் செய்தவனே அக்குற்றத்திற்குப் பொறுப்பாளி. தந்தையின் குற்றத்திற்குத் தனயனும், தனயனின் குற்றத்துக்குத் தந்தையும் பொறுப்பாளி அல்ல. நீங்கள் தவறு செய்யாதீர்கள். பிறரும் உங்களுக்கு அநீதி இழைக்கமாட்டார்கள்.
முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உடன்பிறந்த சகோதரர்களாவர். அரபிகளும், அரபியரல்லாத அஜமிகளும் அந்தஸ்தில் சமமானவர்களேயாம். உங்கள் எல்லோரின் உரிமைகளும் ஒரே விதமானவையே. இதில் பாகுபாடு, ஏற்ற இறக்க வித்தியாசம் எதுவும் கிடையாது.
மக்களே! உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் தந்தையும் ஒருவரே. நீங்களனைவரும் ஆதமின் பரம்பரையில் வந்தவர்கள். ஆதமோ மண்ணினால் படைக்கப்பட்டார்.”
அப்துல் ஹமீது ஸித்திக்கி எழுதிய
“முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு”
என்ற நூலிலிருந்து
ஒரு முஸ்லிமை இஸ்லாத்தின் முன்மாதிரியாக வைப்பது இந்த உபதேசங்கள். அவனது வாழ்க்கையைப் புடம் போட்ட தங்கமாக மாற்றிக் காட்டுவது இந்தப் போதனைகள்.
இந்தப் போராட்டத்தில் அமுல்படுத்த வேண்டிய வழிமுறை தெளிவாக உள்ளது: “நான் உங்களிடத்தில் அல்லாஹ்வின் வேதத்தையும், எனது வழிமுறையான ஸுன்னாவையும் விட்டுச் செல்கின்றேன். இவைகளை நீங்கள் இறுகப் பற்றிக் கொண்டால் ஒரு போதும் வழி தவறவே மாட்டீர்கள்.”
அன்றைய மதீனாவின் சமூக வாழ்க்கையை உருவாக்க நினைப்பவர்களுக்கு நல்ல பல பாடங்கள் இந்த இரண்டிலும் கிடைக்கும்.
இந்த இரண்டையும் விட்டு விடுபவர்களிடம் எதிரிகள் உருவாகி விடுவர். உள்ளே உள்ள எதிரிகள்; வெளியே உள்ள எதிரிகள்.
உள்ளே உள்ள எதிரிகள்தாம் அதிக ஆபத்தானவர்கள். இதற்கு நமது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலே நிறைய சான்றுகள் கிடைக்கும்.
முனாஃபிக்குகள் எனும் நயவஞ்சகர்கள் குறித்து திரும்பத் திரும்பக் கூறும் வசனங்கள் என்றென்றைக்கும் நமக்குப் பாடமாகவும் அமையும்.
மீண்டும் ஒரு முறை கீழ்க்கண்ட வசனத்தை நினைவு கூர்வோம்:
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)
M.A. ஷெரீஃப்
தமிழில் : MSAH
No comments:
Post a Comment