விடியல் வெள்ளி மார்ச் 2001 இதழில்
‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை
பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 2 : 222)
‘தவ்பா’ என்னும் மனம் வருந்துதலும், இஸ்திஃக்ஃபாரும் (அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருதல்) இறை நம்பிக்கையாளர்களிடமுள்ள சிறந்த பண்பாகும். ‘தவ்பா’ என்றால் நமது செயல்பாடுகள் குறித்து மனவருத்தம் கொள்ளுதல் ஆகும். ‘இஸ்திஃக்ஃபார்’ என்றால் அந்த மனவருத்தங்களை வார்த்தைகளில் வடித்தெடுத்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி, கெஞ்சுவதாகும்.
பாவம் செய்தாலோ, அல்லது இறைக் கட்டளையை மீறி நடந்தாலோ மட்டும்தான் தவ்பாவும், இஸ்திஃக்ஃபாரும் செய்ய வேண்டுமென்பதில்லை. நமது குறைகளுக்காகவும் செய்யலாம். அல்லாஹ் நமக்குச் செய்துள்ள அருட்கொடைகளைக் கணக்கிடும்பொழுது, நாம் அவனுக்குச் செய்யும் நன்றியும், வணக்கமும் போதாதவையே என்பது தெள்ளத் தெளிவு.
நமக்கு அல்லாஹ் செய்துள்ள சிறப்புகளையும், மகோன்னதங்களையும் உணர்ந்தால், நமது கீழ்ப்படிதல் கடுகளவுதான் என்பதை நாம் உணர முடியும். நம்மிடம் ‘தக்வா’ எனும் இறையச்சம், பயபக்தி, இறையுணர்வு எந்த அளவுக்கு அதிகமாக உள்ளதோ, அந்த அளவுக்கு நம்மிடம் அல்லாஹ்வுக்கு நாம் கடுகளவுதான் நன்றி செலுத்துகிறோம் என்ற உணர்வும் அதிகமாக இருக்கும்.
இதனால்தான் அனைத்து இறைத்தூதர்களும் தவ்பாவையும், இஸ்திஃக்ஃபாரையும் தாங்களும் செய்தார்கள்; பிறருக்கும் செய்யும்படி ஏவினார்கள். இறைத்தூதர்கள் தவ்பாவும், இஸ்திஃக்ஃபாரும் செய்தார்கள் என்பதால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்று பொருளில்லை. அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களும் தூய்மையானவர்கள்; பாவங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை இந்த மனித குலத்திற்கு முன்மாதிரிகளாக அல்லாஹ் அனுப்பியுள்ளான். அல்லாஹ் குறையுள்ள, பாவம் செய்கிற முன்மாதிரிகளை இந்த உலகிற்கு அனுப்பவில்லை.
நபிமார்களின் நாயகராக, இறைத்தூதர்களின் தலைவராகத் திகழ்கிறார்கள் எங்கள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள். நபிகளார் மிஃராஜ் பயணத்திற்காகப் புறப்பட்டு முதலில் பைத்துல் முகத்தஸ் வந்தார்கள். அங்கு அனைத்து நபிமார்களும் ஆஜராகி இருந்தனர். அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் தொழ வைத்தார்கள். இதுவே அவர்கள் அனைத்து நபிமார்களுக்கும் தலைவர் என்பதை உணர்த்துகிறது.
நபிமார்களுக்கெல்லாம் தலைவரான - இமாமான முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் என்ன செய்வார்கள் தெரியுமா? ‘அஸ்ஃதக்ஃபிருல்லாஹ் ‘ என்று 3 தடவை சொல்வார்கள். (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருகிறேன்.)
இந்த ‘இஸ்திஃக்ஃபார்’தான் இறையச்சத்தின் உயர்ந்த நிலையாகும். அவர்கள் செய்தது போல் நம்மையும் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இஸ்திஃக்ஃபார் கேட்கச் சொன்னார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தடைவகள் அல்லாஹ்விடம் பிழை பொறுக்க மன்றாடுவார்கள் என்று நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர்.
இஸ்திஃக்ஃபார் என்பது இன்னொரு விதமாகவும் பயன்படுகின்றது. அது அல்லாஹ்வின்பால் உள்ள அச்சத்தை அதிகப்படுத்த உதவுகின்றது. நாம் நமது மனவருந்துதலுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் செல்லப் போவதில்லை. நாம் நமது தவறுகளை, குற்றங் குறைகளை, தோல்விகளை, பாவங்களை அவனிடமே - அவனிடம் மட்டுமே வாக்குமூலமாக கொடுக்கிறோம். (இதற்கு மாறாக கிறிஸ்தவ மதம் ஒரு பெரிய தவறைச் செய்கின்றது. அது கிறிஸ்தவ பாதிரிமார்களிடம் வாக்குமூலம் கொடுக்கச் சொல்கிறது).
நாம் அல்லாஹ்விடமே நமது பாவமன்னிப்பைக் கோருகின்றோம். அவன் மட்டுமே நமது அனைத்து காரியங்களையும், எண்ணங்களையும் அறிந்தவன் என்பதை நாமறிவோம். அவன் மட்டுமே நமது பாவங்களை மன்னிக்க முடியும்; அவன் மட்டும் நமது செயல்பாடுகளின் பின்விளைவுகளிலிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும்.
இஸ்திஃக்ஃபார் என்பது அல்லாஹ்வுடன் நாம் செய்யும் உரையாடல் என்பது இதன் மூலம் புலனாகிறது. மேலும் அந்த உரையாடலின் போது நாம் அடக்கத்தின் எல்லைக்கே செல்கின்றோம். தவ்பாவும், இஸ்திஃக்ஃபாரும் அல்லாஹ்விற்குத் தாழ்ந்து, பணிந்து வணகுவதற்கே நம்மை இட்டுச் செல்லும் என்பதை நாம் அப்பொழுது உணரலாம்.
நமது மனதைப் பரிசுத்தப்படுத்துவதற்கு இஸ்திஃக்ஃபார் தேவைப்படுகிறது. நாம் பாவத்தில் பிறந்தவர்கள் இல்லை; நாம் பலவீனத்தில் பிறந்தவர்கள். இந்த உளத்தில் நமக்கு பல விஷயங்கள் சோதனைகளாக ஆக்கப்பட்டுள்ளன. நாம் பலவீனத்தால் படைக்கப்பட்டுள்ளதால் இந்தச் சோதனைகளுக்கும் நாம் மிக எளிதாக இரையாகலாம்.
நாம் அதற்கு இரையாகி, ஒரு பாவத்தைச் செய்யும்பொழுது, நமது இதயத்தில் ஒரு கரும்புள்ளி பதிகிறது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற ஒரு பிரபலாமன நபிமொழி இதனை விளக்குகிறது. அந்தக் கரும்புள்ளி ஏற்பட்ட மனிதன் மனம் வருந்தி, மன்றாடும்பொழுது அந்தக் கரும்புள்ளி நீங்குகிறது.
இல்லாவிடில் அந்தக் கரும்புள்ளி அங்கேயே நிலைத்து நிற்கும்; ஒவ்வொரு பாவமும் அதிகரிக்கும்பொழுது இந்தக் கரும்புள்ளியும் பெரிதாகிக் கொண்டே வரும். ஒரே நேரத்தில் அவனது இதயம் முழுவதும் அந்தக் கரும்புள்ளி படர்ந்து விடும்.
இதனை நாம் மனிதர்களிடம் கண்கூடாகக் காணலாம். கொஞ்சம் கொஞ்சமாக கரும்புள்ளி அதிகமாகும் மனிதர்கள் பாவ காரியங்களில் முன்னேறிக் கொண்டிருப்பார்கள். துவக்கத்தில் அவர்களிடம் சில தடைகள் இருக்கும். தவறான காரியங்களை அவர்கள் தயக்கத்துடனேயே செய்வார்கள்; தவறு செய்கிறோம் என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கும்.
அவர்கள் மனம் வருந்தி, திருந்தி நேரான பாதைக்கு வரவில்லையெனில், அந்தத் தவறுகள் அவர்களுக்குப் பழக்கமாகிப் போகும்; சாதாரணமாகிப் போகும். அடுத்து ஒரு நிலை வரும். நல்லொழுக்கங்கள் தீமையாகவும், தீய காரியங்கள் நல்லவையாகவும் மாறிவிடும். அவர்கள் தாங்கள் செய்யும் தீய காரியங்களை ஆதரித்துப் பேசுவார்கள். அதனைத்தான் செய்ய வேண்டும் என்பார்கள். நன்மையான காரியங்களை எதிர்த்துப் பேசுவார்கள்.
இன்றைய காலகட்டத்தில், துரதிர்ஷ்டவசமாக, நம்மைச் சுற்றி இது மாதிரி நிறைய மனிதர்களைக் காண்கிறோம். இந்தப் பின்-நவீனத்துவ உலகில், நல்லனவும், தீயனவும் குழம்பிப் போய்க் கிடைக்கின்றன.
ஆங்கில மொழியில் பாவம் (sin) என்ற வார்த்தை ஆடம்பரமான, கவர்ச்சிகரமான, வேடிக்கையான, அதிகம் விரும்பக் கூடிய பொருளாக மாறி வருவது ஒன்றும் வியப்பல்ல. இருப்பினும், நம்பிக்கையோடு இருப்பவர்களுக்கு நல்ல முடிவு காத்திருக்கிறது.
நாம் எவ்வளவு கறை படிந்தவர்களாக இருந்தாலும் சரி, நமது பாதையை அப்படியே திருப்பிக் கொள்ளலாம். நம்மைப் படைத்த இறைவனிடம், கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனிடம் மனம் வருந்தி, மன்னிப்புக் கேட்கலாம். உள்ளபடியே அவன்பால் முகம் திரும்பி, அபயம் தேடும் அடியானை மன்னித்து, அருள் பாலிபப்தற்கு அவன் தயாராக இருக்கின்றான்.
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53)
மேலும் நபிமொழி ஒன்று பறை சாற்றுகிறது: “ஒரு மனிதன் ஒரு பாவத்தை செய்து, அதற்காகத் திருந்தி விட்டான் என்றால், அவன் அந்தப் பாவாத்தை ஒரு போதும் செய்யாதவனைப் போல் ஆகிவிட்டான்.”
கண்மணி நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் நமக்கு இது குறித்து நிறைய பிரார்த்தனைகளைக் கற்றுத் தந்துள்ளனர். நாம் அவற்றைக் கற்று, புரிந்து, பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.
அவைகளுள் மிக முக்கியாமனது “செய்யிதுல் இஸ்திஃக்ஃபார்”!
ஒரு நபிமொழி இதன் அதிமுக்கியத்துவத்தை இப்படிக் குறிப்பிடுகின்றது: “ஓர் இறைநம்பிக்கையாளர் முழு நம்பிக்கையுடனும், மன சுத்தியுடனும் காலையில் இந்த (செய்யிதுல் இஸ்திஃக்ஃபார் என்ற) பிரார்த்தனையைச் செய்து மாலைக்குள் இறந்து விட்டால், அவர் சுவனம் புகுவார்.”
இவ்வளவு சக்தி படைத்த இந்தப் பிரார்த்தனை நாம் அல்லாஹ்வுக்கு தினசரி கொடுக்கும் உறுதிமொழியாகும். நாம் இந்தப் பிரார்த்தனையை அரபியில் மனனம் செய்ய வேண்டும். இந்தத் துஆவைக் கூறாமல் ஒரு இரவாவது, ஒரு காலைப் பொழுதாவது நம்மை விட்டுச் செல்லாமல் நாம் பார்த்துக் கொள்வோம்.
இந்தத் துஆவின் பொருள் வருமாறு: “யா அல்லாஹ்! நீதான் எனது இரட்சகன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீதான் என்னைப் படைத்தாய். மேலும் நான் உனது அடியான். என்னால் முடிந்தவரை நான் உன்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் உறுதிமொழியையும் கடைப்பிடிப்பேன். என்னால் ஏற்படும் தீங்குகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். உனது அருளை என் மீது சொரிவாயாக. நான் எனது பாவங்களை ஒப்புக்கொள்கிறேன். அதனால் என்னை தயைகூர்ந்து நீ மன்னித்து விடு. உன்னைத் தவிர எனது பாவங்களை வேறு யாராலும் மன்னிக்க முடியாது.
ஃகாலித் பெய்க்
தமிழில் : MSAH