ஹுதைபியா உடன்படிக்கை செய்து முடித்து ஒரு வருடம் ஆயிற்று. உடன்படிக்கையின் படி முஸ்லிம்கள் இப்பொழுது மக்காவுக்குச் சென்று உம்ரா செய்யலாம். அதற்குரிய காலம் வந்தபொழுது தாமதிக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ரா பயணம் புறப்பட்டார்கள்.
60 ஒட்டகங்களை குர்பானீ கொடுப்பதற்காக அண்ணலார் எண்ணியிருந்தார்கள். சமாதான ஒப்பந்தம் நிலவில் இருந்தபொழுதும் குறைஷிகளின் குறைதீராப் பகை குறித்து அண்ணலார் அலட்சியமாக இருந்திடவில்லை.
உம்ராவுக்குத்தான் புறப்பட்டார்கள் என்றாலும் போருக்கான ஆயத்தங்களையும் அண்ணலார் செய்தார்கள். 100 குதிரைகள் முஸ்லிம் படையில் தயார் செய்யப்பட்டன.
கடந்த வருடம் உம்ரா பயணம் மேற்கொண்டபொழுது போருக்கான ஆயத்தங்கள் எதனையும் அண்ணலார் செய்திருக்கவில்லை. அப்பொழுது சண்டை போடுவதற்காக வரவில்லை என்பதைப் பறை சாற்றும் விதமாக குர்பானீ ஒட்டகங்களை பயணக் குழுவின் முன் நிறுத்தி பயணம் புறப்பட்டார்கள்.
ஆனால் அன்று குறைஷிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அதுவே ஹுதைபியா உடன்படிக்கைக்குக் காரணமானது.
ஆனால் இந்த முறை அப்படியல்ல. பலி மிருகங்களைப் பின்னால் நிறுத்தி குதிரைகளை முன்னிறுத்தினார்கள் எம்பெருமானார் (ஸல்) அவர்கள்.
போர் செய்யக்கூடாது என்ற ஒப்பந்தம் இருக்கவே அண்ணலார் இப்படிச் செய்ததை ஒரு சிலர் விமர்சிக்காமல் இருக்கவில்லை.
முஸ்லிம்கள் மக்காவுக்கு வரும்பொழுது கையில் ஆயுதங்கள் இல்லாமல் வரவேண்டும் என்று குறைஷிகள் குறிப்பிட்டு நிபந்தனை வைத்திருந்தார்கள். “ஆயுதங்கள் எடுக்கமாட்டோம் என்று நாம் ஒப்பந்தம் செய்துவிட்டு இப்பொழுது எடுத்திருக்கிறோமே…” என்று அவர்கள் அங்கலாய்த்தார்கள்.
அண்ணலாரின் அடுத்திருந்த ஒரு நபித்தோழர் இதனை அண்ணலாரிடம் கேட்கவும் செய்து விட்டார். அதற்கு அண்ணலார் இவ்வாறு பதிலளித்தார்கள்: “ஆயுதங்கள் தரித்து நாம் ஹரமுக்குள் நுழைய மாட்டோம். ஆனால், நமக்கு அருகில்தான் அவை இருக்கும். நம்மை யாரும் சீண்டினால் நாம் அவற்றைப் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம்.”
குறைஷிகள் வஞ்சகம் செய்தால் ஹரமின் எல்லையில் கூட அவர்களுடன் பொருதுவது என்பதுதான் எம்பெருமானாரின் நிலைப்பாடாக இருந்தது. ரத்தம் சிந்தக்கூடாத புனிதத் தலம் மக்கா என்ற நிலையிலும், குறைஷிகளுடன் சமாதான ஒப்பந்தம் நிலவில் இருந்தபொழுதிலும் தற்காப்பு என்ற தயாரிப்பிலிருந்து தாஹா நபி பின்மாறவில்லை.
முஸ்லிம்களின் வருகையைக் கண்ட குறைஷிகள் கதிகலங்கி நின்றார்கள். உம்ராவுக்கு வருபவர்கள் குதிரைப் படையை முன்னிறுத்தியிருக்கிறார்கள். சிலர் அண்ணலாரைக் கண்டு தங்கள் ஆதங்கத்தை இவ்வாறு தெரிவித்தார்கள்:
“முஹம்மதே, சிறு வயது முதல் தங்களை எங்களுக்குத் தெரியும். தாங்கள் இதுவரை வஞ்சகம் செய்ததில்லை. நமக்கிடையேயுள்ள ஒப்பந்தத்தை இதுவரை தாங்கள் முறித்திடவும் இல்லை. பின் ஏன் இந்தப் போர் ஏற்பாடுகள்?”
அண்ணலார் அவர்களிடம் இவ்வாறு பதிலளித்தார்கள்:
“ஆயுதங்கள் தரித்து நாங்கள் ஹரமுக்குள் நுழையமாட்டோம்.”
ஓங்கியடித்தாற்போல் ஒரே பதில்! ஆயுதங்கள் இல்லாமல் வர அவர்கள் சம்மதிக்கவில்லை. ஆயுதங்கள் அவர்களுடன் இருக்கும். தற்காப்பை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க அவர்கள் தயாரில்லை.
ஆம்! இறுதியில் தங்கள் பலத்தைப் பறைசாற்றிக் கொண்டுதான் முஸ்லிம்கள் மக்காவுக்குள் நுழைந்தார்கள். உம்ராவின் சடங்குகளிலும் அது பிரகடனமாயிற்று.
புனித கஅபா ஆலயத்தை வலம் வரும்பொழுது முதல் மூன்று சுற்றுக்களை முடிந்த அளவு அதிவேகமாகக் கடக்க வேண்டும் என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் அருமைத் தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
நாங்கள் இப்பொழுதும் துடிப்புடன்தான் இருக்கிறோம், எங்களைக் களைப்பு எந்த நிலையிலும் பாதித்திடவில்லை என்பதைத் தெளிவுபடுத்துவதுதான் அதன் நோக்கம்.
உம்ராவுக்காக சிறப்பு ஆடை அணியும்பொழுதும் அண்ணலார் சில மாற்றங்களைச் செய்தார்கள். வலது தோள் வெளியே தெரியும் வண்ணம் மேலாடை அணியுமாறு அண்ணலார் ஆணையிட்டார்கள்.
முஸ்லிம்களின் புஜ பல பராக்கிரமத்தைப் புறம் காட்டுவதே இதன் நோக்கம். மக்காவைச் சார்ந்த சிலர் இதனைக் காணவும் செய்தனர். மக்காவின் முக்கிய பிரமுகர்கள் இந்தக் காட்சிகளைக் காணாமல் இருக்க முற்கூட்டியே மக்காவை விட்டு வெளியேறிவிட்டனர்.
அமைதி ஒப்பந்தம் நிலவில் இருந்தபொழுதும், மக்கா குறைஷிகளுடன் சகோதரத்துவமும், மிதமான அணுகுமுறையும் காட்டியிருக்கலாம் என்ற நிலையிலும் அண்ணலார் இப்படியொரு கடுமையான நிலைப்பாடு எடுத்தது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
எதிர்ப்பையும், பகைமையையும் காட்டுகிறவர்களின் முன்னிலையில் பிரகடனப்படுத்தவேண்டியவை எவை என்பதைத் தெளிவுபடுத்துவதுதான் இதன் நோக்கம். அதேபோல் எந்நிலையிலும் தற்காப்புத் தயாரிப்பைக் கைவிடக் கூடாது என்பதும் இதன் மூலம் கிடைக்கும் தெளிவு.
இக்கட்டுரை விடியல் வெள்ளி ஏப்ரல் 2013 மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக வெளியானது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.
No comments:
Post a Comment