அடிமைகளாய் ஆக்கப்பட்டார்கள் ஒரு பெரும் கூட்டம் மக்கள் உலகில். காரணம், அவர்கள் நிறத்தால் கறுப்பர்கள் என்பதே!
அவர்களை அடிமைகளாக ஆக்கியவர்கள், அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையில் உயர்ந்தார்கள். காரணம், அவர்கள் நிறத்தால் வெள்ளையர்கள்.
இந்த நிறவெறிக் கொடுமைகளுக்கெதிராகப் போராடிய மாவீரரே மால்கம் X என்ற மாலிக் அல் ஷாபாஸ் ஷஹீத்.
மால்கம் X இஸ்லாத்தை முன்வைத்து கறுப்பர்களின் விடுதலைக்காகப் போராடியவர். பல லட்சம் கறுப்பர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் காரணமாக அமைந்தவர்.
மால்கம் X தன்னுடைய வேகமான இஸ்லாமிய பிரச்சாரத்தின்போது, “கறுப்பர்களின் சொந்த நாடு அமெரிக்கா அல்ல, அஃது ஆப்ரிக்கா!” என்ற வாதத்தை முன்வைத்தார். இதில் வரலாற்றிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டினார்.
அவரது ஆதாரங்கள் நிறைந்த உரைகள் மக்களைப் பெரிய அளவில் கவர்ந்தன.
இந்த ஆதாரங்களின் உண்மைத் தன்மைகளை சோதிக்க விரும்பினார் அலெக்ஸ் ஹேலி.
பல வினாக்களை மால்கம் Xஐ நோக்கி வீசினார். மலைக்கும் அளவில் மால்கம் X பதில்களைத் தந்தார்.
வரலாற்றில் மால்கம் Xக்கு தன்னை விட அதிக அறிவு இருப்பதைக் கண்டார் அலெக்ஸ் ஹேலி. ஆகவே, வரலாற்று ஆசிரியர்களைக் கொண்டே மால்கம் Xஐக் கேள்வி கேட்டார்கள். மால்கம் X அவர்கள் அதிரும்படி ஆதாரங்களை அள்ளிச் சொரிந்தார்.
பின்னர் அலெக்ஸ் ஹேலி மால்கம் X கூறும் வரலாற்று இடங்களை தானே நேரில் சென்று கண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார். அது அவரது சொந்த பூர்வீகத்தைக் கண்டெடுக்கும் பெரும் சாதனைப் பயணமாக முடிந்தது. அதாவது, அவரது வேரை அவர் காணும் நல்ல முயற்சியாக முடிந்தது.
தனது பயணத்தை, ஆராய்ச்சியை புதினமாக வடித்தார்.
பல லட்சம் வாசகர்களைக் கவர்ந்தார். அது திரைப்படமாக வந்தது. அது பல லட்சம் கறுப்பர்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்தது.
இவற்றையெல்லாம் என்னிடம் நேரிலும், மால்கம் X நூல் மூலமும் கேட்டுக் கொண்டிருந்தார் தம்பி அப்துல் ஹமீது. அவர் நான் நடத்தும் விடியல் வெள்ளி மாத இதழின் துணை ஆசிரியர். அவர் இந்த வரலாற்றில் அதிகமான ஆர்வம் காட்டினார்.
இதனைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தர வேண்டும் என்றேன். கடினமாக உழைத்து நம் மனக் கோட்டைகளை நிதர்சனமாக்கி இருக்கின்றார்.
பெரும் பணி இது. சளைக்காமல் செய்திருக்கின்றார்!
அல்லாஹ் அவருக்கு நிரம்ப நற்கூலிகளை நல்கிடுவானாக!
இதுபோன்ற இலக்கியங்களை அடிமைகள் விடுதலையில் ஆர்வம் கொண்ட சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தமிழில் கொண்டுவரத் தயாராக இருந்தாலும் இந்தப் பணிகள் இஸ்லாமிய வட்டங்களிலிருந்து வந்திட வேண்டும்.
அந்தப் பணியைச் சமுதாயத்தின் சார்பில் சாதித்திருக்கின்றார் தம்பி அப்துல் ஹமீது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
இந்த நூல் இலக்கியச்சோலை வெளியீடாக வருவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
இலக்கியச்சோலையின் இலக்கியப் பணிகளும், இஸ்லாமியப் பணிகளும் தொடர்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்.
வழக்கம் போல் வாசகர்கள் தங்கள் ஆதரவைத் தந்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இவண், சென்னை
மு. குலாம் முஹம்மத் 12.12.2005
நூல் : வேர்கள்
மூலநூல் : Roots : The Saga of an American Family
மூல ஆசிரியர் : Alex Haley
தமிழில் : எம்.எஸ். அப்துல் ஹமீது
விலை : ரூ. 100
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
25, பேரக்ஸ் சாலை
பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி : +91 44 25610969
தொலைநகல் : +91 44 25610872
மின்னஞ்சல் : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com
No comments:
Post a Comment