இஸ்லாத்தை ஆரம்பகாலத்தில் ஏற்றுக்கொண்ட பெண்மணிகளில் கவ்லா பின்த் ஹக்கீமும்(ரலி) ஒருவர். கற்களையும், சிலைகளையும் வணங்கிக்கொண்டு இணைவைப்பின் இருளில் சிக்கியிருந்த கவ்லா பின்த் ஹக்கீம் (ரலி) ஏகத்துவத்தை இதயத்தில் ஏந்திய பின் எழுச்சி மிக்க பெண் ஆனார்.
இஸ்லாம் அவரது வாழ்க்கையை வாகாய் புரட்டிப் போட்டது. அண்ணலாரின் குடும்பத்தாருடன் மிக நெருக்கமானார். அண்ணலாருக்குப் பணிவிடை செய்வதில் அலாதி ஆனந்தம் அடைந்தார். மக்காவில் முஸ்லிம்கள் இருந்த சமயத்தில் கதீஜா அம்மையாரை அடிக்கடி சந்தித்து அளவளாவுவார்.
நபிகளாருக்கு இறைச்செய்தி துவங்கிய 10வது வருடம் அன்னை கதீஜா அம்மையார் மறைந்தபொழுது அவரது இழப்பால் ஏற்பட்ட வெற்றிடத்தை உடனே நிரப்ப வேண்டும் என்று கவ்லா உணர்ந்தார். 25 ஆண்டுகளாக அனைத்து வகையிலும் அண்ணலாருக்கு அரும்பெரும் துணையாக இருந்த கதீஜா அம்மையாரின் மறைவு அண்ணலாருக்குப் பெரும் சோகத்தை உண்டாக்கியிருந்தது. அண்ணலார் திரும்பவும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கவ்லா அண்ணலாரிடம் வலியுறுத்தினார்.
அத்தோடு அண்ணலாருக்குப் பொருத்தமானவர் யார் என்பதையும் அவர் மனதில் வைத்திருந்தார். நபிகளார் கவ்லாவிடம் யாரை மணமுடிக்கலாம் என்று கேட்டபொழுது, “நீங்கள் விரும்புவது கன்னிப் பெண்ணையா, முதிர்ந்த பெண்ணையா?” என்று கவ்லா கேட்டார்.”இருவரது பெயரையும்சொல்லுங்கள்” என்று அண்ணலார் கேட்டார்கள்.
அதற்கு கவ்லா (ரலி) இவ்வாறு பதிலளித்தார்: “கன்னிப் பெண் ஆயிஷா. முதிர்ந்த பெண் ஸவ்தா.” இருவரையும் பெண் கேட்குமாறு அண்ணலார் கேட்டுக்கொண்டார்கள்.
கவ்லா(ரலி) அந்த இருவரிடமும் சென்று, “அல்லாஹ் உங்களுக்கு ஒரு கண்ணியத்தை நாடுகிறான்” என்று சொன்னார். அந்த இருவருமே அண்ணலாரை மணமுடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். அண்ணலார் முதலில் மக்காவில் இருக்கும் பொழுதே ஸவ்தா(ரலி) அவர்களைத் திருமணம் முடித்தார்கள். மூன்று வருடம் கழித்து மதீனாவில் வைத்து ஆயிஷா(ரலி) அவர்களை மணமுடித்தார்கள்.
மதீனாவுக்குப் புலம்பெயர்ந்த பிறகும் கவ்லா(ரலி) அண்ணலாரின் வீட்டுக்குத் தொடர்ந்து செல்பவர்களாக இருந்தார்கள். அண்ணலாரின் மனைவிமார்களும் கவ்லா வரும்பொழுதெல்லாம் அவரை வரவேற்று உபசரிப்பார்கள். ஒரு தடவை கவ்லா மிகவும் கவலையாகக் காணப்பட்டார். பழைய ஆடைகள் அணிந்து, அணிகலன்கள் எதுவும் அணிந்துகொள்ளாமல், தன்னை அலங்கரித்துக் கொள்ளாமல் வெறுமையாகக் காட்சியளித்தார். அவருடைய கணவர் வசதியானவராக இருந்தும் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று முஃமின்களின் தாய்மார்கள் வினவியபொழுது அவர் இவ்வாறு பதிலளித்தார்:
“அவர் அவருக்கே உரிய ஓர் உலகில் வாழ்ந்து வருகிறார். தினமும் நோன்பு நோற்கிறார். ஒவ்வொரு இரவும் நின்று வணங்குகிறார்.”
அண்ணலாரிடம் அவர்களின் மனைவிமார்கள் இது குறித்து முறையிட்டார்கள். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) கவ்லாவின் கணவரான உதுமான் இப்னு மஸ்ஊன் (ரலி) அவர்களை அழைத்து, “நீங்கள் பின்பற்ற வேண்டிய நபர் நான்தானே” என்று கேட்டார்கள். உதுமான் இதனைக் கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனார்.
அவரது இரவு வணக்கம் குறித்தும், நோன்பு குறித்தும் அவரிடம் கேட்டு உறுதிப்படுத்திய நபிகளார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “அவ்வாறு செய்யாதே. உன் கண்களுக்கு உன் மேல் உரிமை உண்டு. உன் உடலுக்கு உன் மேல் உரிமை உண்டு. உன் குடும்பத்துக்கு உன் மேல் உரிமை உண்டு. இரவு வணங்கவும் செய். உறங்கவும் செய். சில நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். சில நாட்கள் நோன்பை விடு.”
உதுமான் இப்னுமஸ்ஊன்(ரலி) அண்ணலாரின் கட்டளைக்கிணங்க நடந்துகொண்டார். அதன்பிறகு நபிகளாரின் மனைவிமார்களிடம் வந்த கவ்லா தன்னை அலங்கரித்துக்கொண்டு, நல்ல ஆடைகள் அணிந்து மகிழ்ச்சியாக மணப்பெண்போல் காட்சியளித்தார்.
இந்த உதுமான் இப்னுமஸ்ஊன் (ரலி) அவர்கள்தான் மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களில் முதன்முதலில் மதீனாவில் மரணித்தவர். அவரைப் பற்றி கவ்லா (ரலி) ஓர் அழகிய கவிதை ஒன்றை எழுதினார். அது அதிக இலக்கியச் செறிவுடன் உயர்ந்த நடையில் அமைந்திருந்தது.
இப்படி மாதர் குலத்தின் மாதிரி வடிவமாகத் திகழ்ந்த கவ்லா (ரலி) அவர்களிடமிருந்து நாம் இஸ்லாமிய ஈடுபாட்டையும், ஈர்ப்பையும் பாடமாகப் பெறலாம்.
இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக வெளியானது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.
No comments:
Post a Comment