Wednesday, 2 October 2013

நபித்தோழர்களின் பேணுதல்கள்!


“எனக்கு சில அடிமைகள் இருக்கிறார்கள். அவர்கள் பல நேரங்களில் பொய் சொல்கிறார்கள். கொடுத்த வேலைகளைச் செய்யாமல் ஏமாற்றுகிறார்கள். ஏதாவது சொன்னால் எதிர்த்துப் பேசுகிறார்கள்.”

-இது புகார் அல்ல. அண்ணல் நபிகள் (ஸல்) அவர்களிடம் சந்தேகம் கேட்க வந்த ஒரு நபித்தோழர் கூறிய வார்த்தைகள்.

அடிமைகளுடன் தனக்குள்ள பிரச்னையை அவர் அண்ணலாரிடம் எடுத்துக் கூறினார். தன்னுடைய அடிமைகளுடன் கடினமாக நடந்து கொள்வதால் அவர் அமைதியின்றி தவித்தார். அவர் அண்ணலாரிடம் தொடர்ந்தார்:

“அவர்களிடம் கடுமையாகப் பேசவேண்டி வருகிறது. சில சமயங்களில் வரம்பு மீறிய வார்த்தையும் என்னிடமிருந்து வந்து விடும். கட்டுப்படுத்த முடியாத கோபம் வரும்பொழுது அடிக்கவும் செய்வேன். நான் இப்படி நடந்துகொள்வது சரியா?”

அன்றாடவாழ்வில் அடிக்கடி நடக்கும் இந்த நிகழ்வுகள் தன்னுடைய நல்ல குணத்தைப் பாதிப்பது போல அவர் உணர்ந்திருக்க வேண்டும். இதற்கொரு மாற்றம் வேண்டும் என்று கருதித்தான் அவர் அண்ணலாரைக் காண வந்திருந்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
“நாளை மறுமையில் இறுதித் தீர்ப்பு நாளில், உங்களுக்கும், அடிமைகளுக்கும் இடையில் நடந்த நிகழ்வுகள் குறித்து கணக்கெடுக்கப்படும். அடிமைகள் தங்களை ஏமாற்றி மோசடி செய்ததும், பொய் சொன்னதும், உங்களுக்கெதிராக வேலை செய்ததும் தராசின் தட்டில் வைக்கப்படும். தாங்கள் அவர்களிடம் நடந்துகொண்டதும், ஏசியதும், பேசியதும், அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்ததும் இன்னொரு தட்டில் வைக்கப்படும். இரண்டும் சமமாக இருந்தால் யாருக்கும் ஒன்றும் இல்லாமல் பிரச்னை தீரும். நீங்கள் அளித்த தண்டனை அவர்களின் எதிர் செயல்களைவிட குறைவாக இருந்தால், அவர்களிடமிருந்து நஷ்டப் பரிகாரம் எடுத்து உங்களுக்குத் தரப்படும். தண்டனை அதிகம் என்றால் உங்களிடமிருந்து நஷ்டப் பரிகாரம் எடுக்கப்பட்டு அவர்களுக்குக் கொடுக்கப்படும்.”

அந்த நபித்தோழருக்கு அச்சம் தோன்றிவிட்டது. அந்த இடத்தை விட்டகன்ற அவர் அழ ஆரம்பித்து விட்டார். இதனைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்று கீழ்க்கண்ட இறைவசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்:

இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும். (ஸூரா அல் அன்பியா 21 : 47)

இத்தனையையும் கேட்டுக்கொண்டிருந்த அந்த நபித்தோழர் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் கொடுக்கல்-வாங்கல்களை நிறுத்துவது நல்லது என்று எண்ணினார். மேலும் பிரச்னைக்குரிய அடிமைகளை விடுதலை செய்வதே தனக்கும், அவர்களுக்கும் நல்லது என்று எண்ணினார்.

இந்த முடிவை அவர் அப்பொழுதே அண்ணலாரிடம் அறிவித்தார். உன்னத நபியின் உண்மைத் தோழர்கள் தங்கள் வாழ்வில் எவ்வளவு பேணுதலை மேற்கொண்டார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம் மட்டுமே!


இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக வெளிவந்தது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment