Wednesday, 2 October 2013

வெறுப்புக்கு என்ன காரணம்?


பாதையோரத்தில் ஒரு சிலர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை ஓர் ஆள் கடந்து சென்றார். அவர்களைக் கடக்கும் பொழுது முறையாக ஸலாம் சொல்லிவிட்டே சென்றார் அவர். நின்றவர்கள் அவரது ஸலாமுக்கு பதில் கூறினார்கள்.

அவர் கொஞ்ச தூரம் கடந்து சென்றவுடன் கூட்டத்திலிருந்த ஓர் ஆள் சொன்னார்: “அந்த மனிதரைக் கண்டால் எனக்கு வெறுப்பு தோன்றுகிறது.”
அங்கே கூடியிருந்தவர்கள் அவர் பேசியதை விரும்பவில்லை. “என்ன காரணம்?” என்று அவர்கள் எரிச்சலுடன் கேட்டனர். அவர் பதிலளிக்கும் முன்பே இன்னொரு ஆள் இவ்வாறு சொன்னார்: “அல்லாஹ் உண்மையானவன். இது குறித்து நான் சம்பந்தப்பட்ட அந்த ஆளிடம் சொல்லாமல் விடமாட்டேன்.”

மற்றவர்களும் அதனை ஆதரித்தார்கள். இந்த உரையாடலை அறிந்த சம்பந்தப்பட்ட அந்த மனிதர் அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்து புகார் அளித்தார்.

மக்களுக்கிடையில் தன்னைக் குறித்து இப்படிப் பேசியவரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று அவர் அண்ணலாரிடம் கோரினார். “என்னை அவர் வெறுப்பதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரிய வேண்டும்” என்று அவர் அண்ணலாரிடம் சொன்னார்.

அவர் மேல் தனக்கு வெறுப்பு இருக்கிறது என்று சொன்ன அந்த நபித்தோழரை அண்ணல் நபிகளார் அழைத்தார்கள். “அங்ஙனம் சொன்னீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கவர் “ஆமாம்” என்றார். “தங்கள் வெறுப்பிற்கு என்ன காரணம்?” என்று நபிகளார் கேட்டார்கள்.

அவர் சொன்னார்: “அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மனிதரின் அண்டை வீட்டுக்காரன். இவரை எனக்கு நன்கு தெரியும். கடமையான கூட்டுத் தொழுகைகளைத் தவிர அவர் தனியாகத் தொழுது நான் பார்த்ததேயில்லை.”
குற்றஞ்சாட்டப்பட்ட மனிதர் சொன்னார்: “அண்ணலாரே! கடமையான தொழுகைகளை நான்  என்றைக்காவது தொழாமல் விட்டிருக்கின்றேனா, நேரம் தவறி நான் என்றைக்காவது தொழுதிருக்கின்றேனா என்று இவரிடம் கேட்க வேண்டும்.”

அப்படி ஒன்றும் இல்லை என்றார் அவர். ஆனால் புதிய குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார்:
“அல்லாஹ்வின் தூதரே! நான் இவரின் அண்டை வீட்டுக்காரனல்லவா, ஆதலால் இவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். கடமையான ஜக்காத்தை இவர் கொடுக்கிறார். ஆனால் ஒரு தடவை கூட அவர் ஓர் ஏழைக்கு உணவு கொடுப்பதையோ, உதவுவதையோ நான் பார்த்ததில்லை.”

குற்றஞ்சாட்டப்பட்டவர் மீண்டும் தன் பதிலைத் தொடங்கினார் இவ்வாறு:
“அண்ணலாரே! ஜக்காத் கேட்டு வந்தவர்களை என்றைக்காவது நான் ஜக்காத் கொடுக்காமல் வெறுங்கையுடன் திருப்பி அனுப்பியிருக்கின்றேனா என்று தாங்கள் இவரிடம் கேட்கவேண்டும்.”

அப்படி ஒன்றும் இல்லை என்றார் அவர். ஆனால் மூன்றாவதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார் அவர். அந்தக் குற்றச்சட்டு இதுதான்:
“அல்லாஹ்வின் தூதரே! ரமலான் மாதம் எல்லோரையும் போல இவரும் நோன்பு நோற்கிறார். ஆனால் ரமலானல்லாத காலங்களில் இவர் நோன்பு நோற்று நான் ஒருபோதும் கண்டதில்லை.”

குற்றஞ்சாட்டப்பட்ட அந்த மனிதர் கூறினார்: “அண்ணலாரே! நோயோ, பிரயாணமோ காரணமாக இல்லாமல் ரமலானில் நான் நோன்பு நோற்காமலிருந்ததை இவர் கண்டாரா என்று தாங்கள் கேட்கவேண்டும்.”
இல்லை என்றார் குற்றச்சாட்டை வீசியவர்.

இறுதியில் இறுதித் தூதர் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் இவ்வாறு இயம்பினார்கள்:
“தன் அண்டை வீட்டுக்காரர் தன்னை மாதிரியே வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். தன் எதிர்பார்ப்புக்கேற்ப அவர் உயர வேண்டும் என்று விரும்பினார். இது நடக்காததால் அவருக்கு தன் அண்டை வீட்டுக்காரர் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.”


இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக வெளிவந்தது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment