ஸஃபா மலைக்குன்றின் மேலிருந்து ஒரு சப்தம். ஆபத்திலிருக்கும் ஒருவர் உதவி கேட்டு கூக்குரலிடுவதைப்போல் அந்த சப்தம் வந்தது. மக்கள் காதைக் கூர்மையாக்கிக் கேட்டார்கள். அது முஹம்மத்தின் குரல்.
சொந்த பந்தங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மலைக்குன்றின் சரிவுக்கு வருமாறு அழைத்தார்கள். முஹம்மதுக்கு என்னவோ ஆபத்து வந்துள்ளது என்றெண்ணி அவர்கள் குன்றை நோக்கி ஓடி வந்தார்கள். உறவினர்கள் அனைவரும் வந்து கூடியபொழுது அண்ணலார் பேச ஆரம்பித்தார்கள்:
“இந்தக் குன்றின் பின்னால் ஒரு படை வந்து உங்களைத் தாக்கத் தயாராக நிற்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?”
அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் நம்புவோம். தங்களை நம்பாமலிருக்க எங்களிடம் ஒன்றும் இல்லை. தாங்கள் இதுவரை எங்களிடம் பொய் பேசியதில்லை.”
அண்ணலார் தொடர்ந்தார்கள்: “அப்படியென்றால் அதனை விட ஒரு முக்கியமான செய்தியை நான் உங்களுக்குக் கூறப் போகிறேன். அல்லாஹ்வின் தண்டனை இதோ உங்களுக்கு அருகில் வந்துவிட்டது. இதுகுறித்து என் சொந்தபந்தங்களுக்கு விவரம் தெரிவிக்க அவன் எனக்கு கட்டளை பிறப்பித்திருக்கிறான். வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சொல்வதைத் தவிர நான் உங்களைக் காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை.”
அனைவரும் முஹம்மத் என்ன சொல்ல வருகிறார் என்று கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர். அண்ணலார் தொடர்ந்தார்கள்:
“இவ்வுலகுக்கும், மறுவுலகுக்கும் வெற்றியைத் தரக்கூடிய ஒரு செய்தியைத்தான் இதோ நான் கூறுகிறேன். அரபிகள் அனைவரும் ஒரே அணியில் உங்களுக்குக் கீழ் நிற்பார்கள். அரபிகள் அல்லாதோரும் உங்களுக்குக் கீழ்ப்படிவார்கள்.”
அந்தக் கூட்டத்தின் முன்வரிசையில் அபூலஹப் நின்றுகொண்டிருந்தார். முஹம்மதின் பேச்சை மக்கள் மிகுந்த மதிப்பளித்து ஆர்வமாகக் கேட்பதை அவர் கண்டார். இப்பொழுது குறுக்கிடாவிட்டால் முஹம்மத் அனைத்தையும் சொல்லி விடுவார். இவரை இப்பொழுது கொச்சைப்படுத்திவிட வேண்டும்.
அபூலஹப் அல்லாஹ்வின் தூதரைப் பார்த்து இவ்வாறு கத்தினான்: “உனக்கு நாசம் உண்டாகட்டும். என்றென்றைக்கும் நாசம் உண்டாகட்டும். இதைச் சொல்லத்தான் எங்களை இங்கே இவ்வளவு அவசரமாக அழைத்தாயோ?”
அண்ணலார் அதிர்ந்து நின்றார்கள். திடீரென்று இப்படியொரு எதிர்ப்பை அண்ணலார் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய மனம் எதிலோ மையப்படுவது போல் அண்ணலாருக்குத் தோன்றியது. உடல் வியர்த்தது. சில இறைவசனங்கள் இதயத்தினுள் மீண்டும் மீண்டும் வந்து போனது. அது ஒரு கட்டத்தில் அண்ணலாரின் நாவுகளிலிருந்து ஆவேசமாக வெளிப்போந்தது.
“அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக. அவனும் நாசமாகட்டும். அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). (சூரா லஹப் 111:1-5)
குடும்பத்தில் மூத்த உறுப்பினரான அபூலஹபை என்றென்றைக்கும் எதிரியாக மாற்றும் இந்த இறைவசனங்களை குரலெழுப்பிக் கூறுவதற்கு அண்ணலார் எந்தத் தயக்கமும் காட்டிடவில்லை. எதிர்பார்த்தது போல்தான் நடக்கவும் செய்தது. அபூலஹபின் விரோதத்திற்கு எல்லையில்லை என்றானது. அந்த அளவுக்கு கொடுமைகள் புரியத் துவங்கினான்.
அண்ணலாரின் இரண்டு பெண் மக்கள் அவனது வீட்டில் இருந்தார்கள் – அபூலஹபின் மகன்களான உபை, உதைபா ஆகியோரின் மனைவிகளாக. அவர்களை விவாகரத்து செய்யவேண்டும் என்று அபூலஹப் சொன்னான். தந்தையின் சொல்லைத் தட்டாமல் உடனே அவர்கள் தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்தார்கள். உதைபா அண்ணலாருடன் மிக மோசமாக நடந்துகொண்டான்.
”உம்முடைய மார்க்கம் எனக்கு வேண்டாம். உம் மகளும் எனக்கு வேண்டாம். இந்த விடயங்களைக் கூறி என்னைத் தொல்லைப்படுத்தாதீர்” என்று அவன் எகத்தாளமாகக் கூறினான். இந்தப் பேச்சுக்கிடையில் அவன் அண்ணலாரின் ஆடையை இழுத்து கிழிக்கவும் செய்தான். காட்டு மிருகத்தைப் போல் நடந்து கொண்ட அவனுக்கெதிராக அண்ணலார் இவ்வாறு பிரார்த்தித்தார்கள்: “இறைவா, இவன் மீது ஒரு காட்டு நாயை ஏவுவாயாக.”
இந்த நிகழ்வு நடந்து ஒரு சில நாட்களில் உதைபா சிரியாவுக்குச் செல்லும் ஒரு வாணிபக் கூட்டத்தோடு வியாபார நிமித்தமாக சிரியா புறப்பட்டான். ஓரிரவு அவன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபொழுது ஏதோ ஒரு விலங்கின் நடமாட்டம் தெரிந்தது. அது அந்தக் குழுவைச் சுற்றிச் சுற்றி வருவது போல் இருந்தது. தன்னைத்தான் அது இலக்காக வைத்து வந்துள்ளது என்றொரு எண்ணம் உதைபாவுக்குத் தோன்றியது. மனம் முழுவதும் பீதி பரவியது. அச்சத்தால் அழத் துவங்கினான். “அல்லாஹ்வே சத்தியம். இந்த மிருகம் நிச்சயமாக என்னைக் கடித்துக் குதறாமல் விடாது. என்னை வதைப்பது முஹம்மதுதான். அவர் அங்கே மக்காவிலும் நான் இங்கே சிரியாவில் இருந்தாலும் சரியே” என்று புலம்ப ஆரம்பித்தான்.
அன்று பொழுது விடியும் முன்பு அந்த மிருகம் அவனைக் கடித்துக் குதறி தனக்கு இரையாக்கியது. (ஆதாரம் : ஹயாத்துஸ் ஸஹாபா)
இக்கட்டுரை விடியல் வெள்ளி செப்டம்பர் 2013 மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக வெளிவந்தது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.
No comments:
Post a Comment