இஷ்ரத்
ஜஹானின்
தாயார்
ஷமீமா
கவ்ஸர் கேள்வி!
போலி என்கவுண்டரில் சுடப்பட்டு உயிரற்ற உடலாகக் கிடக்கும் இஷ்ரத் ஜஹான் |
மும்பையில் வாழும் இஷ்ரத் கவ்ஸரின் தாயார் ஷமீமா கவ்ஸர் ஜூன் 18, 2013 அன்று வெளியிட்ட உருக்கமான அறிக்கை வருமாறு:
கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த என் மகள் இஷ்ரத் ஜஹான் அவள் தந்தையின் மறைவுக்குப் பிறகு அவளின் சகோதர, சகோதரிகளைக் காப்பாற்றுவதற்காக படித்துக்கொண்டே வேலைக்கும் சென்றாள். அவள் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட அந்த நாளிலிருந்து நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என் மகள் அப்பாவி என்று. அவளுக்கு எந்தத் தீவிரவாதத் தொடர்போ, குற்றச் செயல்களோ, குற்றப்
பின்னணியோ கிடையாது.
2004
ஆகஸ்டில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவிலும் நான் இதையே குறிப்பிட்டுள்ளேன். என் மகள் நிரபராதி என்று நிரூபிக்கப்படவும், அவளைக் கொன்றவர்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவும் மத்திய புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ.) விசாரணை வேண்டும் என்று நான் அந்த மனுவில் கோரியிருந்தேன்.
இஷ்ரத் ஜஹானின் தாயாரும், சகோதரியும் பத்திரிகையாளர் சந்திப்பின் பொழுது... |
கடந்த 9 நீண்ட
வருடங்களாக குஜராத் அரசு இந்தக் கொடுங் குற்றம் குறித்த விசாரணைக்குத் தடைகள் போடுவதற்காகவும், என் மகளைக் கொன்ற மாபாதகர்களை சட்டத்தின் பிடியிலிருந்து மறைப்பதற்காகவும் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றது. ஆதலால் அந்த மாபாதகர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து வருகின்றார்கள்.
குஜராத் அரசும், அதன் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளும் அற்பத்தனமான, அலைக்கழிக்கும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். சாட்சிகளைக் கட்டாயப்படுத்துகின்றனர். சட்டவிரோதமாக பல காரியங்களை அரங்கேற்றுகின்றனர். என் வழக்கறிஞர்கள் ஒவ்வொரு சவாலையும் உறுதியுடன் எதிர்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வரப் பாடுபடுகின்றனர்.
மாஜிஸ்திரேட் எஸ்.பி. தமங்க் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நீதித்துறை விசாரணையின் அறிக்கை 2009 செப்டம்பரில் சமர்ப்பிக்கப்பட்டது. என் மகள் எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி என்றும், குஜராத் போலீசார் அவளை அநியாயமாகக் கொன்றுவிட்டனர் என்றும் அந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.
இஷ்ரத் ஜஹானின் தாயாரும், சகோதரியும், சகோதரனும். உள்படம்: இஷ்ரத் ஜஹான் |
திரு. ஆர்.ஆர். வர்மா தலைமையில் குஜராத் உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) கடந்த 2011ம் ஆண்டு தன் அறிக்கையைச் சமர்ப்பித்தது. இஷ்ரத் பிடிக்கப்பட்டு காவலில் (கஸ்டடியில்) வைத்தே கொல்லப்பட்டார் என்றும், என்கௌண்டரில் வைத்து அவள் கொல்லப்படவில்லை என்றும் அந்த அறிக்கை தெளிவாகக் குறிப்பிடுகிறது.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த விசாரணை மத்திய புலனாய்வுத் துறைக்கு 2011ம் ஆண்டு மாற்றப்பட்டது. அத்தோடு படுகொலைக்கும், இன்னபிற கொடுங்குற்றங்களுக்கும் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) தாக்கல் செய்யப்பட்டது.
சி.பி.ஐ. என் மகளும், இன்னும் 3 பேரும் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையை குஜராத் உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. வழக்கு விசாரணையின் நிலவரங்கள் அவ்வப்பொழுது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.
நான் எனது முழு நம்பிக்கையை நீதிமன்றத்தில் வைத்துள்ளேன்.
நீதியை வெளிக்கொணரும் எனது அனைத்து முயற்சிகளும் வீண் போகாது என்று நான் மனமாற நம்புகின்றேன். சி.பி.ஐ. விசாரணையின் விளைவாக பல மூத்த குஜராத் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தக் கொடூர போலி என்கௌண்டரில் ஈடுபட்டது போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்ல, வேறு சிலரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்று சி.பி.ஐ. விசாரணை கண்டறிந்துள்ளது.
கடந்த ஜூன் 14ம் தேதி கடைசியாக உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் சி.பி.ஐ. சேகரித்த ஆதாரங்களைச் சமர்ப்பித்தது. அதில் வெளிவந்த அதிர்ச்சி என்னவென்றால் இந்தக் கொலைக்கு இவர்கள் மிகப் பெரிய சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளார்கள். மூத்த ஐ.பி. உளவுத்துறை அதிகாரி ராஜேந்திர குமார் இந்தச் சதித்திட்டத்தில் பங்கு பெற்றுள்ளார்.
இஷ்ரத் ஜஹானின் உடலை வாங்கும்பொழுது... |
சி.பி.ஐ. வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் கூறும்பொழுது ஐ.பி. உளவுத்துறை அதிகாரி ராஜேந்திர குமாருக்கு என் மகளின் போலி என்கௌண்டர் குறித்து முற்கூட்டியே தெரியும் என்பது மட்டுமல்ல, அவர்தான் இந்தக் கொடூரத்தை வழிநடத்தியிருக்கிறார் என்று சி.பி.ஐ.யின் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்ற அதிர்ச்சிகர தகவலைத் தெரிவித்தார்.
ஆனால் இந்த ராஜேந்திர குமாரைக் கைது செய்வதையும், சி.பி.ஐ.யின் காவலில் வைத்து விசாரிப்பதையும் தடுப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். அத்தோடு இன்னொரு விஷயமும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இன்றைய ஊடகங்கள் இந்த சி.பி.ஐ. விசாரணையை ஏதோ ஐ.பி. நிறுவனத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகச் சித்தரிக்கின்றன.
ஐ.பி.
மாதிரி உயர்ந்த துறைகளில் பணி புரியும் அதிகாரிகள் தங்கள் பதவியையும், செல்வாக்கையும் தங்கள் வகுப்புவாத, அரசியல் இலாபங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தினால், அது நாட்டின் பாதுகாப்புக்கே குந்தகம் விளைவிப்பதாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா? அல்லது நடவடிக்கை எடுக்க முடியாதா?
இப்படிப்பட்டவர்கள் ஐ.பி. துறையிலிருந்து களை எடுக்கப்பட்டால் அது நாட்டு மக்களின் பாதுகாப்புக்கே நலனாக முடியும்.
சி.பி.ஐ.யின் விசாரணை தெளிவாக சரியான திசையில் செல்கிறது. ஆனால் அதனைத் திசை திருப்புவதற்காக ஈனத்தனமான ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. சில ஒலிப் பதிவுகள் போலியாகத் தயார் செய்யப்பட்டு ஹெட்லைன்ஸ் டுடே என்ற தொலைக்காட்சி சானலில் மீண்டும் மீண்டும் ஒலிபரப்பப்பட்டது.
ஜூன் 14ம்
தேதி என் மகளின் வழக்கு விசாரணை வருவதற்கு ஒரு நாள் முன்பாக ஜூன் 13ம் தேதி இந்தப் போலி ஒலிப்பதிவு நாடக ஒலிபரப்பு அரங்கேற்றப்படுகிறது. பொய்யான தகவலை, அவதூறுச் செய்தியை அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் வெளியிட்டமைக்காக என் வழக்கறிஞர்கள் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கவுள்ளார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இஷ்ரத் ஜஹானின் தாயாரும், சகோதரியும் பத்திரிகையாளர் சந்திப்பின் பொழுது... |
ஜூன் 14ம்
தேதி குஜராத்தின் கூடுதல் அரசுத்தரப்பு வழக்கறிஞர் இந்த ஒலிநாடாவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் உண்மைத்தன்மையில் இவ்வளவு ஓட்டைகள் உள்ளதைக் கண்டுபிடித்த உயர்நீதிமன்றம் அந்த ஒலிப்பேழை ஆதாரத்தை நிராகரித்தது. அத்தோடு குஜராத் அரசுக்கும் சூடு போட்டது. அரசின் குடிமக்களைப் பாதுகாப்பதற்கான கடமை குஜராத் அரசுக்கு உள்ளது என்று நினைவூட்டியது. அத்தோடு இந்தப் போலி என்கௌண்டரின் விசாரணைக்கு தொடர்ச்சியாகத் தடை போட்டு வரும் அரசை எச்சரிக்கவும் செய்தது.
என் மகள் பயங்கரவாதி என்று சொல்லப்படுவதற்கோ, பயங்கரவாத அமைப்பில் தொடர்புள்ளவர் என்பதற்கோ வைக்கப்படும் அனைத்து ஆதாரங்களையும் நான் உறுதியாக நிராகரிக்கிறேன், எதிர்க்கிறேன். கடந்த காலங்களில் அநியாயமாகக் கொல்லப்பட்ட என் அபலை மகளின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முகமாக பல போலியான, இட்டுக்கட்டப்பட்ட, எந்தவித அடிப்படையும் இல்லாத செய்திகள் பரப்பப்பட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதில் வியப்பு என்னவென்றால் நீதிமன்ற, பாரபட்சமற்ற, துறைசார் விசாரணைகள் அனைத்தும் என் மகள் அப்பாவி என்பதையே உயர்த்திப் பிடிக்கின்றன.
குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு கேட்புரையின் போதும் சி.பி.ஐ. விசாரணையைச் சீர்குலைக்கும் விதமாகவே தனது வாதத்தை எடுத்து வைக்கின்றது. வழக்கு விசாரணையின் வளர்ச்சியை முழுவதுமாகக் கவனித்து வரும் எனக்கு கீழ்க்கண்ட கேள்விகள் எழுகின்றன:
இந்த வழக்கு விசாரணையைச் சிறப்பாகச் செய்து வரும் சதீஷ் வர்மா ஐ.பி.எஸ். அதிகாரியை ஏன் குஜராத் அரசு நீக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது?
இந்த விசாரணை நேர்மையாக நடந்தால் வெளியாகும் உண்மை குறித்து ஏன் குஜராத் அரசு அஞ்சுகிறது?
குஜராத் அரசு எந்தெந்த நபர்களையெல்லாம் காப்பாற்ற நினைக்கிறது?
என் மகளைக் கொன்றவர்கள் யார்?
அவளது கொலைத் திட்டத்தை மூளையாக இருந்து செயல்படுத்தியது யார்?
எனக்கு இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிய அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. நீதியைப் பூர்த்தியாக்க வேண்டிய உரிமை எனக்கிருக்கிறது.
அது நடக்கவேண்டுமெனில், மொத்தச் சதித் திட்டமும் தோண்டியெடுக்கப்பட வேண்டும். அப்பாவி இளம் பெண்ணையும், இன்னும் மூன்று பேரையும் கொடூரமாகச் சுட்டுக்கொன்ற அத்தனை பேரையும், அதற்குக் காரணமாக இருந்தவர்களையும், அதற்கு உடந்தையாக இருந்தவர்களையும், அவர்கள் யாராக இருந்தாலும், எத்தகைய உயர்பதவிகளில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும், நீதிவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இக்கட்டுரை விடியல் வெள்ளி ஜூலை 2013 மாத இதழில் வெளியானது.
No comments:
Post a Comment