பகைமையின் வேர்கள்
முன்பெல்லாம் இரு நாடாளும் அவைகளிலும் (பாராளுமன்றம், ராஜ்யசபை) என்ன பேசப்பட்டதோ, விவாதிக்கப்பட்டதோ, முடிவெடுக்கப்பட்டதோ அவைதான் மீடியாவில் செய்திகளாக வெளிவரும். ஆனால் இப்பொழுது மீடியாவில் என்ன செய்திகளாக வெளிவருகின்றனவோ அவையே நாடாளும் அவைகளில் விவாதப் பொருளாக மாறுகின்றன.
மீடியாவுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதற்கு இது ஒன்றே சாட்சி.
இன்று தகவல்களின் உலகம் (World of Information) என்பது அபார வேகத்தில் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. “அறிவே பலம்” (Knowledge is Power) என்ற தத்துவத்தை யாரெல்லாம் உதாசீனம் செய்கிறார்களோ அவர்களெல்லாம் தெருவில் நிற்கவேண்டியதுதான். அவர்கள் இந்தக் காலத்திற்கு ஒவ்வாதவர்கள்.
பலம்(Power) பெறுவதற்கு மிக முக்கியமானவை தகவல்களே. பலம் பெற விரும்பவில்லையென்றாலும் சமூகத்தில் வாழ்வதற்கு, நம் பிழைப்பைக் கொண்டு செல்வதற்கு தகவல்கள் மிக அவசியம்.
இந்தியாவில் சிறுபான்மையினரைப் பொறுத்தவரை, குறிப்பாக முஸ்லிம்களைப் பொறுத்தவரை, வாழ்வது (Survival) ஒன்றுதான் மிக மிகப் பிரதானமான விஷயமாக இப்பொழுது இருக்கிறது. ஏனெனில், ஒட்டுமொத்த உலகம் முழுவதும் ஒரு மனப்பான்மை இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுதான் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகப் பார்க்கப்படுவது, முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக நடத்தப்படுவது.
இதில் கொடுமை என்னவெனில், முஸ்லிம்கள் முன்பெல்லாம் இந்த மறைமுகத் தாக்குதலை உணர்ந்து கொண்டதாகவே தெரியவில்லை.
அல்ஹம்துலில்லாஹ், இப்பொழுது முஸ்லிம்களிடம் இதுகுறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது.
முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக நடத்தப்படுவதற்கும், பயங்கரவாதத்திற்கெதிரான போர் (War on Terror) என்றெல்லாம் அழைக்கப்படுவதற்கும் பின்னால் ஒன்று இருக்கிறது. அதுதான் நீண்டகாலத் திட்டங்கள்! அதாவது, இவையெல்லாம் ஏதோ எதேச்சையாக நடப்பதல்ல.
தொலைநோக்குப் பார்வையுடன் துல்லியமான திட்டங்கள் தீட்டப்பட்டுத்தான் நடத்தப்படுகின்றன.
இந்தத் திட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது மீடியா. அச்சு ஊடகமும், மின்னணு ஊடகங்களும் மிக நீண்ட வருடங்களாக, மிகக் கடினமாக உழைத்துதான் முஸ்லிம்கள் மேல் இப்படியொரு பிம்பத்தை உருவாக்கி இருக்கின்றன. அவர்கள் ஏதோ எளிதில் செய்கிறார்கள் என்று நாம் எண்ணி விடக்கூடாது. அவர்கள் கடினமான பல முயற்சிகளை முன்னெடுத்துத்தான் இன்று இந்த நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆக, முஸ்லிம்களுக்கெதிராக என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு சமூக, அரசியல் சக்திகளின் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் நன்கு ஆழமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் மத்திய ஆசியா முழுவதும் இஸ்லாமிய மயமாக இருந்தது. ஜெருசலம் ஒரு முஸ்லிம் நகரமாக இருந்தது.
அன்றிலிருந்து மேற்குலகம் இஸ்லாத்தின் மேல் தாக்குதல்களைத் தொடுத்துக்கொண்டே வருகின்றது. அது இஸ்லாத்தின் உண்மையான தத்துவத்தைப் புரிந்துகொள்ள மறுத்தே வருகின்றது.
இஸ்லாத்தின்பால் அவர்களது அணுகுமுறை என்பது பகையை உண்டுபண்ணும் விதமாகவே (antagonistic) எப்பொழுதும் இருக்கிறது. இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் அவர்கள் தொடுக்கும் தாக்குதல்கள் அனைத்தும் சிலுவைகளின் (Crusades) அடிப்படையிலே அமைந்திருக்கிறது.
யார் இந்தச் சிலுவைகள்? அடுத்த தொடரில் காண்போம்.
No comments:
Post a Comment