அணிந்துரையின் சுருக்கம்
2500 பேர் கொல்லப்பட்டு, இரண்டுட லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்ட குஜராத் கொடூரம் குறித்த முழுமையான தரவுகளும், விவரங்களும் இப்போது ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டு விட்டன.
2002 பிப்ரவரி இறுதியில் தொடங்கிய அந்த இன அழிப்பு அடுத்த சில நாட்களில் எங்கெங்கு, எவ்வெவ்வாறு நடைபெற்றன, எவ்வளவு பேர் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் கொன்று எரிக்கப்பட்டனர், அவர்களின் விவரங்கள், எவ்வாறு அந்தக் கொடூரம் நிகழ்ந்தது, யார் அவற்றைத் தலைமை தாங்கி நடத்தியது, இன்று அவ்வழக்குகள் தொடர்பான நிலை என்ன, கொலையாளிகள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் முதலான எல்லா விவரங்களும் இப்போது நம்மிடமுள்ளன.
இந்தக் கொடூருங்கள் அம்பலப்படுத்தப்பட்டதிலும், ஆவணப்படுத்தப்பட்டதிலும் மனித உரிமையாளர்கக, ஆங்கில ஊடகங்கள் ஆகியவற்றின் பங்கு இங்கே நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டிய ஒன்று. சக மனிதர்களின் துயரம் கண்டு கசியும் மனங்கள், கசிவதோடு நில்லாமல், உயிரையும் பணயம் வைத்து நியாயம் கோரி இறுதி வரை நிற்கும் திட உள்ளங்கள் இன்றும் உள்ளன என்பதொன்றே நமக்கிருக்கும் ஒரே ஆறுதல்.
இந்தக் கொடூரங்கள் பத்திரிகைகளில் வரத் தொடங்கி அடுத்த கணமே இன்னும் எரிந்து முடிந்திராத குஜராத்திற்கு விரைந்து உண்மைகளை உலகத்திற்கு வெளிச்சமிட்டுக் காட்டின சுமார் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட உண்மையறியும் குழுக்கள்.
மும்பையிலிருந்து செயல்படக்கூடிய சப்ரங் கம்யூனிகேஷன்ஸ் அண்ட் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் என்னும் ஃபாசிச எதிப்பு அமைப்பு வெளியிட்டு வரும் இருமாத இதழாகிய கம்யூனலிசம் காம்பட் என்கிற முக்கிய இதழ் ‘இன அழிப்பு - குஜராத் 2002’ என்னும் சிறப்பிதழை (மார்ச் - ஏப்ரல் 2002) உடனடியாகக் கொணர்ந்தது.
டபுள் டெம்மி அளவில் 150 பக்கங்களில் வெளிவந்த அந்த இதழ் கலவரம் நடந்த பகுதிகள், கொல்லப்பட்டோர் விவரங்கள், அழிக்கப்பட்ட சொத்துகள், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் பெயர்கள், தப்பிப் பிழைத்தோரின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை அன்றைக்குக் கிடைத்த தகவல்கள் வரை தொகுத்து ஆவணப்படுத்தியிருந்தது. அதில் பிரசுரிக்கப்பட்டிருந்த சுமார் 40 வண்ணப் படங்களைப் பார்ப்பதற்கு மன உறுதி வேண்டியிருந்தது.
.................
கடமையைச் செய்யத் தவறி கலவரக்காரர்களுக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் இன்று உயர் பதவிகளில், நேர்மையாக இருந்தவர்கள் ஓரங்கட்டப்பட்ட நிலை, தங்களை அழித்தவர்கள் இன்று தங்கள் முன் தலைவர்களாக வெற்றி நடை போடுவதைப் பார்க்கும் பாதிக்கப்பட்ட மனம் எப்படி உணரும்?
மரண வியாபாரி நரேந்திர மோடி தமிழகத்திற்கு ஜெயலலிதாவின் விருந்தினராக வர இருக்கும் சூழலில் இந்நூல் வெளிவருகிறது. இந்நூலை வெளியிட்டுள்ள இலக்கியச்சோலை வெளியீட்டகம் இதுபோன்ற அரசியல் முக்கியத்துவம் மிக்க ஏராளமான நூற்களை வெளியிட்டுள்ளது.
மொழிபெயர்த்துள்ள எம்.எஸ். அப்துல் ஹமீது, “வேர்கள்” உள்ளிட்ட புகழ்பெற்ற நூற்களை மொழிபெயர்த்த அனுபவம் மிக்கவர். நிரடலற்ற இயல்பான நடையில் இதைப் பெயர்த்துள்ளார். ஃபாசிசத்தின் கோர முகத்தை அடையாளம் காண விரும்புவோருக்கு உதவக் கூடிய முக்கிய ஆவணமாக இது அமைந்துள்ளது.
இந்தக கொடுமைகளை ஊரறிய, உலகறியச் செய்த மனித உரிமைப் போராளிகள் என்றென்றும் நமது நன்றிக்குரியவர்கள்.
அ. மார்க்ஸ்
நூல் : மனித இனத்திற்கெதிரான குற்றம் - குஜராத் இனப்படுகொலை 2002 (Crime Against Humanity - Gujarat Genocide 2002)
மூலம் : அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் (Concerned Citizens Tribunal)
தமிழில் : M.S. அப்துல் ஹமீது
விலை : ரூ. 100
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
25, பேரக்ஸ் சாலை
பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி : +91 44 25610969
தொலைநகல் : +91 44 25610872
மின்னஞ்சல் : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com
No comments:
Post a Comment