கணக்கிற்கும் எனக்கும் பிணக்குண்டு அதற்காக
வாழ்வில் நான் போட்ட (மனக்) கணக்கெல்லாம் தப்புக்
கணக்காய்ப் போக வேண்டுமென்பது தலையெழுத்தா என்ன?
நண்பர்கள் என எண்ணிய ஒரு சிலர் என் காசை
உண்பவர்கள் என ஆகிப் போனதேன்!
சொந்த-பந்தங்கள் என எண்ணியவர்கள்
தீப்பந்தங்களாய் மாறிப் போனதேன்!
நெருங்கியவர்கள் என எண்ணியவர்கள் என் கழுத்தை
நெருக்கியவர்கள் என ஆகிப் போனதேன்!
நம்பியவர்கள் எ(ன்)னை வெம்ப வைத்ததேன்!
விதி வலியது - இல்லை இல்லை என் விஷயத்தில்
விதி வலி அது!
குத்துவதற்கென என்னில் இடம் தேடி அலைபவர்களே
குத்துவதற்கென இனி என் முதுகில் இடமில்லை!
ஆகவே
குத்துவதாய் இருந்தால் இனி என் நெஞ்சில் குத்துங்கள்!
இறக்கும் முன்பாவது குறைந்தபட்சம்
குத்தியது யார் என அறிந்து கொள்வேன்!
No comments:
Post a Comment