Wednesday, 2 October 2013

அற்புதங்களிலெல்லாம் அற்புதம்!




இன்னும் (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்தச் சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் (உதவியாளர்களை எல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்துக்) கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால் – அப்படிச் செய்ய திண்ணமாக உங்களால் முடியாது. மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு இறைவனையும் அவன் வேததத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்கு சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (சூரா அல் பகரா 2: 23, 24)

புனித ரமலான் நம்மைத் தழுவிச் சென்று கொண்டிருக்கிறது. இம்மாதத்தில்தான் அகிலத்திற்கு அல்லாஹ்வின் அருள்மறை வந்திறங்கியது.

அருள்மழை பொழியும் இம்மாதத்தில் இரவுகள் தோறும், உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து இறையில்லங்களிலும் திருக்குர்ஆன் ஓதும் சப்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். அந்த அழகிய ரீங்காரம் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

முஸ்லிம்கள் ரமலானில் இரவு நேரத் தொழுகைகளில் நிற்கும்பொழுது, இமாம் இந்தக் குர்ஆனைப் பாராமலேயே ஓதுவார்.

இப்படி குர்ஆனை மனனம் செய்து கொண்டவர்கள் கொஞ்சநஞ்சமல்ல, இலட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் உள்ளனர்.

உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானோருக்கு அரபியில் பேசத் தெரியாது. இருந்தும் சிரமப்பட்டு இந்தக் குர்ஆனைக் கற்கின்றனர். அதன் ஒவ்வொரு வார்த்தைகளையும் பிழையின்றி உச்சரிக்க பயிற்சி எடுக்கின்றனர்.

இது ஏதோ மதத்தின் பெயரால், உணர்ச்சியின் உந்துதலினால் திடீரென்று ஏற்பட்ட ஒன்று அல்ல.

குர்ஆன் இறங்க ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே அது மனனம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த முதல் நாளிலிருந்தே அதனை மனனம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களிடம் நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகின்றது.

‘கடவுளின் வார்த்தைகள்’ என்று கூறிக் கொண்டு பிற மதங்களும் தங்கள் வேதங்களை பிரஸ்தாபிக்கின்றன. அனால் திருக்குர்ஆன் மக்களை உருவாக்கிய அளவுக்கு வேறு எந்த வேதங்களும் மக்களை உருவாக்கியதாகச் சரித்திரம் இல்லை.

திருக்குர்ஆன் ஒன்றுதான் உலகிலேயே அதிகமாகப் படிக்கப்பட்டு வரும் கிரந்தம்! திருக் குர்ஆன் ஒன்றே அதன் உள்ளடக்கம் முழுவதும் மனனம் செய்யப்பட்ட வேதம். வேறு எந்தக் கிரந்தங்களிலும் அதன் உள்ளடக்கம் முழுவதும் மனனம் செய்யப்படுவதில்லை.

உலகிலேயே அதிகமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்ட ஒரு வேதம் என்றால் அது திருக்குர்ஆன் தான்!

இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட திருக்குர்ஆன் இன்னும் சில அற்புதங்களையும் கொண்டுள்ளது.

அரபி மொழியில் வந்த முதல் நூலே திருக்குர்ஆன்தான்! 14 நூற்றாண்டுகள் கழிந்து விட்டன. இருந்தும் என்ன...? அதன் மொழிநடை, அது வெளிவந்த பொழுது உள்ள அதே வீச்சில் இன்றும் வீற்றிருக்கின்றது.

அரபி மொழியில் வந்த முதல் நூல் மட்டும் அல்ல, இன்று வரை அரபி மொழியில் வெளிவந்துள்ள நூல்கள் அனைத்தை விடவும் மிகச் சிறந்த நூல் திருக்குர்ஆன்தான். உலகம் அழியும் வரை இதே நிலைதான். இதில் எள்ளளவும் மாற்றம் ஏற்படப் போவதில்லை.

காலம் எப்பொழுது முடியும்? அது முடியும் வரை திருக்குர்ஆன் இந்த மனித குலத்திற்கு கட்டளையிட்டுக் கொண்டேயிருக்கும். வழிகாட்டிக் கொண்டேயிருக்கும்.

அதன் மொழிநடை, இலக்கிய நடை ஒப்பிட முடியாத அழகு கொண்டது. 14 நூற்றாண்டுகள் கழிந்தும் அதன் மொழிநடையில், இலக்கிய நடையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. அதன் அழகு குலையவே இல்லை.

அதன் உள்ளடக்கம் எள்ளளவும் மாறவில்லை. இதுதான் இறைமறையின் தனிச் சிறப்பு. அற்புதங்களிலெல்லாம் அற்புதம் திருக்குர்ஆன் என்பதற்கு இதை விடச் சான்றுகள் வேண்டுமோ...!

அது கூறும் விஞ்ஞான உண்மைகள் பலவற்றை பல நூற்றாண்டுகள் கழித்து இன்று அறிவியலாளார்கள் உண்மை என்று நிரூபிக்கின்றனர். அது கூறிய எந்தக் கூறுகளும் இதுவரை மறுக்கப்படவில்லை.

அது பண்டைய கால வரலாறுகளை வரிசையாகக் கூறுகிறது. அரேபியப் பாலைவனத்தில் அழிந்து பட்ட ஆது சமூகத்தாரைப் பற்றிக் கூறுகிறது. வேறு எந்தவொரு வரலாற்று நூலும் இதுவரை அவர்களைப் பற்றிக் கூறிடவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, அது நம்பிக்கைகளின் தொகுப்பாக மிளிர்கிறது. வாழ்க்கை வழிகாட்டியாக திகழ்கிறது.

திருக்குர்ஆன் காலத்தைக் கடந்தது என்று விசுவாசிகளுக்குத் தெரியும். ஏனெனில் இது காலத்தைப் படைத்த அந்த வல்ல நாயனின் வார்த்தை. மேலும் அந்த வல்ல ரஹ்மானே இது காலத்தைக் கடந்துதான் வாழும் என்று வாக்களித்திருக்கிறான்.

திருக்குர்ஆனில் என்னதான் உள்ளது என்று அறிய விழைபவர்கள் இன்னும் கூடுதலாகச் சில உண்மைகளைத் திருக்குர்ஆனிலிருந்து அறியலாம்.

அகிலத்திற்கெல்லாம் அருட்கொடையாக வந்துதித்த அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்கள் எந்தப் பள்ளிக்கும் சென்று பயிலவில்லை. எந்த ஆசிரியரிடமும் கல்வி கற்கவில்லை. எப்படிப் படிக்க வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று கூட அவர்களுக்குத் தெரியாது.

அவர்கள் காலத்தில் கவிதைக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்தும் அவர்களுக்குக் கவிதையில் ஆர்வம் இல்லை. பின்பு எப்படி அது நிகழ்ந்தது...?

தங்களது 40வது வயதில் இந்த அற்புதக் குர்ஆனின் வார்த்தைகளை அழகுற ஓத ஆரம்பித்தார்கள்...!

அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்களின் வார்த்தைகளை ஹதீஸ்கள் என்கிறோம். அவைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அனால் திருக்குர்ஆனின் வார்த்தைகள் ஹதீஸ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கின்றது.

நபிமொழிகளும் அளந்தெடுத்த வார்த்தைகளில் இலக்கிய நடையில் இருக்கும். அனால் அது வேறு பாணி. இது வேறு பாணி. மேலும், தெளிவாக ஹதீஸ்கள் ஒரு மனிதரின் வார்த்தைகளே.

ஹதீஸ்களில் மனித உணர்ச்சிகள் இழையோடக் காணலாம். சூழ்நிலைகளின் தாக்கங்கள் அவைகளில் பிரதிபலிக்கக் காணலாம்.

அனால் அல்லாஹ்வின் அருள்மறை மனித உணர்ச்சிகள், சூழ்நிலைகள், இன்ன பிற காரணங்களின் தாக்கங்களிலிருந்து அப்பாற்பட்டது.

இறைமறை இருபத்தி மூன்று வருட காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அருளப்பட்டது. அது விரிவான பல தலைப்புகளில் பேசுகிறது. பல  பிரச்னைகளைத் தொடுகிறது.

அதிகமான தலைப்புகளை ஒரே நூல் பேசும்பொழுது அதில் சில முரண்பாடுகள் தோன்றலாம். ஆனால் அல்லாஹ்வின் அருள்மறையில் எந்தவித முரண்பாடும் இல்லை.

அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களது 23 வருட தூதுத்துவ வாழ்க்கையைத் தனிமையில் கழிக்கவில்லை. அவர்கள் ஒரு குகையில் ஒதுங்கி, தனிமையில் இருந்து இந்த அற்புதத்தைப் படைக்கவில்லை.

அவர்களுக்கு நபிப் பட்டம் கிடைப்பதற்கு முன் அவர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை ஹிரா குகையில் தனிமையில் இறைவனைத் தியானித்துக் கழித்தார்கள்.

அனால் தூதுத்துவம் அவர்களுக்குச் சாட்டப்பட்ட பின்பு, அவர்களது வாழ்க்கையே ஒரு போராட்டம் ஆனது. முதலில் மக்கத்து அரபிகளிடமிருந்து தொல்லைகள். பின்னர் யூதர்களிடமிருந்து தொல்லைகள்.

இதற்கிடையில் போர்கள், அத்தோடு இஸ்லாத்தைப் பிறருக்கு எத்தி வைத்தல், அன்றாட வாழ்க்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல், அப்பப்பா... எத்தனையெத்தனை வேலைகள்!

இவ்வளவு வேலைகளுக்கிடையில்தான் வஹீ மூலம் திருக்குர்ஆன் வசனங்கள் அவர்களுக்கு இறக்கப்பட்டு, பின்னர் தொகுக்கப்பட்டன.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இந்தக் குர்ஆனால் மிகவும் கவரப்பட்டார்கள். நடு இரவில் தனிமையில் மணிக்கணக்கில் நின்று தொழுவார்கள். தொழுகையில் மெய் மறந்து திருக்குர்ஆனை ஓதிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று வணங்குவார்கள்.

அற்புதங்களிளெல்லாம் அற்புதம் இந்தத் திருக்குர்ஆன் என்று அறிஞர்கள் பாகம், பாகமாக எழுதுகிறார்கள்.

இந்த வேதத்தைத் திறந்த மனதுடன் படிப்பது என்பது இதனை விசுவாசிப்பது ஆகும்.

உண்மையை உண்மையாகவே தேடுபவர்களுக்கு இந்தக் குர்ஆன் வழிகாட்டும்; அவர்களது கேள்விகளுக்கு விடைகள் சொல்லும்; அவர்களது குழப்பங்களை நீக்கும்; அவர்களது பிரச்னைகளைத் தீர்க்கும்!

முதல் வசனத்திலிருந்து முடிவு வரை ஒவ்வொரு வசனமும் ‘இது இறைவனின் வார்த்தைதான்’ எனப் படிப்போருக்குப் பறை சாற்றுகிறது.

இதனை அலட்சியம் செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையையே அலட்சியம் செய்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

ஃகாலித் பெய்க்



இக்கட்டுரை விடியல் வெள்ளி ஜனவரி 2000 மாத இதழில் நடுப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment