Sunday, 27 October 2013

என்று முடிவுக்கு வரும் இந்தச் சிறுபான்மை வேட்டை?



“அரசுக்கு எதிராக வேலை செய்பவர்கள், கலவரத்தில் ஈடுபடுபவர்கள், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்பவர்கள், பெண்களையும், குழந்தைகளையும் சித்திரவதை செய்பவர்கள் இந்த நாட்டில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் தண்டிக்கப்படவில்லை. நான் ஒரு முஸ்லிம் என்பதனாலேயே இங்கே துன்பப்படுகின்றேன்.”

- முர்துஸா (29), மகாராஷ்ட்ராவில் ஜவுளி ஏற்றுமதி முகவர், ரகசிய காப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். (மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸோஷியல் சைன்சஸ் என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சிக் குழுவிடம் இவர் தெரிவித்தது.)

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதற்காக தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தியதை அறிந்து அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். அதன் பின்பாவது மீடியாவின் ஒரு பிரிவினராலும், புலனாய்வுத்துறையினராலும் முஸ்லிம்களை ‘பயங்கரவாதிகள்’, ‘அடிப்படைவாதிகள்’ என்றழைப்பது நின்று போகும், உண்மையான சவாலான காவி பயங்கரவாதத்திற்கெதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முஸ்லிம்கள் நம்பினார்கள்.

ஆனால், அவர்களின் நம்பிக்கையில் மண் விழுந்தது. மாறாக, நேரெதிரான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் இதனையே சுட்டிக்காட்டுகின்றன. காவல்துறையோ, புலனாய்வுத் துறையோ, நுண்ணறிவுப் பிரிவோ கடந்தகால நிகழ்வுகளிலிருந்து பாடம் பயின்றதாகத் தெரியவில்லை.

ஓர் அறிவிக்கப்படாத அவசரநிலை (எமர்ஜன்சி) இன்று அமுலில் உள்ளது. முஸ்லிம்கள், பழங்குடியினர், ஏழை எளிய மக்கள் ஆகியோரே இதில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள். இப்படி தொடுத்து நடத்தப்படும் சித்திரவதைகளையும், பாகுபாட்டையும் நீதித்துறை கூட கண்டுகொள்ளத் தவறிவிட்டது.

கதீல் சித்தீக்கி, ஃபஸீஹ் மஹ்மூத்

கதீல் முஹம்மத் சித்தீக்கி என்பவர் புனேயிலுள்ள ஏர்வாடா சிறையில் கஸ்டடியில் வைத்து கொல்லப்பட்டுள்ளார். சட்டத்திற்குப் புறம்பாக அரசே நடத்தும் தொடர் கொலைகளின் தற்போதைய நிகழ்வு இது.
அதிக பாதுகாப்புள்ள அறையில் வைத்து அதே சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு கிரிமினல் குற்றவாளிகளால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார் கதீல்.

முன்னதாக கதீல் டெல்லி காவல்துறையின் சிறப்பு செல்லினால் கைது செய்யப்பட்டு, மும்பை போலீசின் பயங்கரவாதத்திற்கெதிரான படையின் காவலில் இருந்தார்.

இஷ்ரத் ஜஹான், ஜாவித் ஷேக், பிரஜாபதி, சொஹ்ரபுத்தீன் ஷேக் போன்றோர் குஜராத் போலீசின் போலி மோதல்களில் கொல்லப்பட்டதும், டெல்லி பாட்லா ஹவுசில் ஆதிஃப் அமீன், முஹம்மத் ஸாஜித் ஆகியோர் கொல்லப்பட்டதும் அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறக்க முடியாது.

ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு அடிப்படை உரிமைகளை மறுத்து வருகிறது என்று ஏற்கனவே இந்திய ஜனநாயகத்தின் பெயர் கடுமையாக கெட்டுப் போகும் அயாயத்தில் இருக்கிறது. ஆனால் அதனை உணராமல் தனது மதச்சார்பற்ற தன்மையைத் தக்க வைக்கத் தவறி வருகிறது அரசு.

சிறுபான்மையினரை வேட்டையாடும் அடுத்த கட்டமாக பீகாரைச் சார்ந்த ஃபஸீஹ் மஹ்மூத் என்ற பொறியாளர் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நுண்ணறிவுப் பிரிவினரால் ஃபஸீஹ் கைது செய்யப்பட்ட விதமும், அதனைத் தொடர்ந்து அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்று யாருக்கும் தெரியாததும் மர்மக் கதையாகவே உள்ளன.

அவரின் குடும்பத்தார் தைரியமாக எடுத்த சில முயற்சிகளினால் உச்சநீதி மன்றம் ஃபஸீஹின் இருப்பிடம் குறித்து மத்திய அரசிடம் வினவியது. இது இந்திய நுண்ணறிவுப் பிரிவினரால் செய்யப்பட்ட வேலையே என்று ஃபஸீஹின் குடும்பத்தார் தகுந்த ஆதாரங்களுடன் உறுதியாகக் கூறுகின்றனர்.
மொத்த நாட்டையுமே சூறையாடுபவர்களையும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடும் படு பயங்கரமான கிரிமினல்களையும் சுதந்திரமாகத் திரிய விடும் நுண்ணறிவுப் பிரிவும், பாதுகாப்புப் பிரிவுகளும் ஏன் இப்படி மர்மமான முறையில் நடக்க வேண்டும் என்று யாருக்கும் புரியவில்லை.

வலதுசாரி ஹிந்துத்துவா கொள்கையுடன் அனுசரித்துப் போகும் நமது பாதுகாப்புக் கொள்கைகள்தான் இம்மாதிரி இமாலயப் பாகுபாட்டுக்கு முக்கிய காரணம்.

சட்டவிரோதக் காவல், கொட்டடி சித்திரவதைகள் என்று கண்ணீர்க் கதைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

டெல்லியைச் சார்ந்த 32 வயது முஹம்மத் ஆமிரின் கதை அப்பேற்பட்டதுதான். அவர் ‘பயங்கரவாத’ குற்றம் சுமத்தப்பட்டு 1998ம் ஆண்டு அவருக்கு 18 வயதாக இருக்கும்பொழுது கைது செய்யப்பட்டார். ஆனால் ஆமிருக்கு அப்பொழுது தெரியாது தான் நீண்ட 14 வருடங்களுக்கு திஹார் சிறையில் அடைபட்டுக் கிடக்கப்போகிறோம் என்று. அதுவும் தன் மீது என்ன குற்றம் சாட்டப்பட்டது என்றே தெரியாமல்.

அவர் மீது மொத்தம் 20 வழக்குகள் போடப்பட்டிருந்தன. 18 வழக்குகளில் அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டு விட்டார். மீதி இருக்கும் இரண்டு வழக்குகளிலும் குற்றங்களை நிரூபிப்பதற்கு காவல்துறைக்கு இவருக்கெதிராக எந்த ஆதாரமும் இல்லை.

இப்படி ஆயிரக்கணக்கான இளைஞர்களின் இளமை வாழ்க்கை அரசால் அழிக்கப்பட்டு விட்டது. ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ நடக்கும் வேளையில் பக்கவாட்டில் நடக்கும் பாதிப்பு என்று இதனை ஒதுக்கிவிட முடியாது.

அதிர்ஷ்டமில்லாத விசாரணைக் கைதியான அப்துந் நாசர் மஃதனி குற்றம் ஒன்றும் செய்யவில்லை என்று விடுவிக்கப்படுவதற்கு 9 வருடங்கள் கோவை சிறையில் அடைபட்டுக் கிடக்க வேண்டியிருந்தது.

ஆனால், அவர் விடுதலையானவுடனேயே, மீண்டும் அதே விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் - இம்முறை கர்நாடகா போலீசால்! விசாரணைக் காவல் என்ற பெயரில் இரண்டு வருடங்கள் ஓடி விட்டன.

உடலில் பல நோய்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு மார்க்கப் பண்டிதரான மஃதனியின் பிணை மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றன. கர்நாடகாவை ஆளும் ஹிந்துத்துவா அரசு மஃதனியை விடுவிக்கும்படி மனித உரிமை ஆர்வலர்கள் விடுக்கும் கோரிக்கையைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி நிராகரித்து வருகின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவிகள் என்று விடுவிக்கப்பட்ட பின்பும் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன. அவர்கள் எப்பொழுதும் கண்காணிக்கப்படுகின்றனர். சமூகம் எப்படி இவர்களைப் பார்க்கிறது அல்லது சமூகத்தை இவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும் மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

இளைஞர்களைக் கைது செய்வதிலும், துன்புறுத்துவதிலும் மிக வேகமாக இருக்கும் அரசு, அவர்கள் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள் என்று நிரூபிக்கப்பட்ட பின் சட்டவிரோதக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டால் அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைக் கொடுப்பதில் மிகவும் தயக்கமும், தாமதமும் காட்டுகிறது.

சிறைகள் : முஸ்லிம்கள் அதிகப் பிரதிநிதித்துவம் கொண்ட ஒரே இடம்

மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சைன்சஸ் என்ற நிறுவனத்தின் குற்றவியல் மற்றும் நீதிக்கான மையத்தின் ஆய்வாளர்கள் சமீபத்தில் ஓர் ஆய்வை மேற்கொண்டார்கள். அந்த ஆய்வறிக்கை மகாராஷ்ட்ராவில் முஸ்லிம்களின் அதிர்ச்சிகர நிலையை எடுத்துரைக்கிறது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மகாராஷ்ட்ரா முஸ்லிம்களுக்கு எந்தவிதக் குற்றப் பின்னணியும் இல்லை என்று இந்த ஆய்வறிக்கை கூறுகின்றது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தோர் என்ற ஒரே காரணத்திற்காக பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்த அளவுக்குக் கடுமையான பாரபட்சம் போலீசாரிடம் நிலவுவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகின்றது.

மகாராஷ்ட்ராவில் ஆர்தர் சாலையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் 19 வயது நிரம்பிய அப்பாவி ஜலால் போன்று பல சிறைவாசிகளுக்கு அவர்கள் மேல் என்ன வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை.
தங்கள் மக்கள்தொகைக்கு அதிகமாக சிறைகளில் பிரதிநிதித்துவம் உள்ள முஸ்லிம்களின் நிலை மகாராஷ்ட்ராவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதே நிலைதான்.

சச்சார் கமிட்டியின் கருத்துப்படி, கல்வியிலும், அரசு வேலைகளிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருக்கிறது. அதேசமயம், சிறைகளில் மட்டும் அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக இருக்கிறது.

29.10.2006 தேதியிட்ட தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம் சிறைவாசிகளின் நிலை குறித்து சச்சார் கமிட்டியின் கண்டுபிடிப்புகளைக் கொண்ட புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அது வருமாறு:

மீண்டும் ஒன்றுகூடும் சிமி கதை

அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001 அன்று தாக்குதல் நடந்தபின் அதனைச் சாக்காக வைத்து அன்றைய பா.ஜ.க. அரசு சிமியைத் தடை செய்தது. இன்று இளைஞர்களை போலீஸ் சட்டவிரோதமாகக் கைது செய்வதற்கு அவர்களுக்கு மிகவும் உதவுவது இந்த சிமி கதைதான். கைது செய்யப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட சிமியைச் சார்ந்தவர்கள் என்று எளிதாக போலீஸ் சொல்லி விடுகிறது.

இந்தச் சட்டவிரோதக் கைதுகளை நடுத்தர வர்க்கத்திடம் நியாயமானதுதான் என்று திணிப்பதற்கு பாரபட்சமுள்ள மீடியாவுக்கும் இந்த சிமி கதை உதவுகின்றது.

சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக உழைக்கும் எந்த ஒரு முஸ்லிம் அமைப்பையும் அல்லது நிறுவனத்தையும் களங்கப்படுத்துவதற்கும், ஒடுக்குவதற்கும் இந்த சிமி கதை பயன்படுத்தப்படுகிறதோ என்ற பலமான சந்தேகம் நிலவுகிறது.

முஸ்லிம் தீவிரவாதிகளைப் பிடிக்கின்றோம் என்ற பெயரில் 15 கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட பலமான முஸ்லிம் சமுதாயம் ஒட்டுமொத்தமாக களங்கப்படுத்தப்படுகின்றது. இந்தச் சட்டவிரோத ஈனச் செயலில் ஈடுபடும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவது மிகவும் குறைவு.

மாறாக, சில வேளைகளில் பாட்லா ஹவுஸ் படுகொலையில் நடந்த மாதிரி அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றது. மனித உரிமை மீறல்களில் நாம் மிகவும் முன்னணியில் உள்ளோம். காவல்துறையினரும், பாதுகாப்புத் துறையினரும் மிகவும் ஆபத்தான சிந்தனைப் போக்கில் பணி புரிகிறார்கள்.

கறுப்புச் சட்டங்களும், கறுப்பு ஆடுகளும்!

ஓர் அறிவிக்கப்படாத அவசரநிலைப் பிரகடனத்தை அமுல்படுத்துவதற்கு கருவியாக அரசு பயன்படுத்துவது AFSPA, UAPA போன்ற அதிக அதிகாரம் படைத்த கொடூரக் கறுப்புச் சட்டங்களைத்தான். அதேபோல் சில மாநிலங்களில் இதேபோன்ற கறுப்புச் சட்டங்கள் போலீசுக்கும், பாதுகாப்புத் துறையினருக்கும் அதிக அதிகாரத்தைக் கொடுக்கின்றது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் நீதித்துறையும் இம்மாதிரி சட்டவிரோதக் கைதுகளைக் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறிவிடுகின்றது. வேகமான, வெளிப்படையான நீதி விசாரணை நடந்தால் இந்த மண்ணில் நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கை நிலை நிற்கும்.

போலீசையும், புலனாய்வுத் துறையையும் முழுவதுமாகச் சுத்தப்படுத்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். சட்ட ஒழுங்கு, பாதுகாப்பு, புலனாய்வு, நுண்ணறிவு போன்ற துறைகளில் முஸ்லிம்களின், இன்னபிற சிறுபான்மையினரின் உரிய பிரதிநிதித்துவம் நிலைநிறுத்தப்பட அரசு தக்க நடவடிக்கைகளை உடனே எடுக்கவேண்டும்.

பல ஆண்டுகள் சிறையில் வைத்து பின் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்கவேண்டும். தவறு செய்த அதிகாரிகளுக்குத் தக்க தண்டனை அளிக்கவேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற சிறுபான்மை துன்புறுத்தல்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கப்படும்.

நீதித்துறையும் இதில் விழிப்பாக இருக்கவேண்டும். நாட்டில் எந்த ஒரு குடிமகனும் அவன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவன் என்பதனால் மட்டுமே சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்படாமல் நீதித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிடில் இந்தச் சமூகம் அன்னியப்படுத்தப்பட்டு, தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாக்கப்ட்டுக்கொண்டே இருக்கும்.

நீதிக்காக எழுந்திருங்கள்!

காராக்கிருகத்தில் காலாகாலமாக எந்தக் குற்றமும் செய்யாமல் தங்கள் காலத்தைக் கழிக்கும் அப்பாவிகளுக்காகக் குரல் கொடுப்பது ஒட்டுமொத்த தேசியக் கடமையாகும். அனைத்துக் குடிமக்களின் தார்மீகப் பொறுப்பாகும்.
சட்டவிரோதமான கைதுகள் நிறுத்தப்படுவதற்கான போராட்டத்தை பொது சமூகம் பலப்படுத்துவதற்கான உரிய தருணம் இது. விசாரணைக் கைதிகளுக்கு பிணை வழங்கப்படுவதில் எந்தவிதத் தாமதமும் ஏற்படக் கூடாது. சட்டவிரோதமாக சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் நீண்ட நாட்கள் வைப்பதற்கு ஏதுவான எல்லா கறுப்புச் சட்டங்களும் பின்வாங்கப்பட வேண்டும்.

அப்பாவிக் கைதிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்குத் தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகளையும், காவல்துறையினரையும் தண்டிப்பதற்குண்டான சட்டங்களும் இயற்றப்படவேண்டும்.

சிறுபான்மை வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கிடவும், நீதியின் அடிப்படையில் நம் தேசத்தைக் கட்டியெழுப்பிடவும் தேசிய அளவில் ஒர் இயக்கம் கம்பீரமாக எழும்பிட வேண்டும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெளியிட்ட துண்டறிக்கையின் தமிழ் வடிவம்.

தமிழில் : MSAH

No comments:

Post a Comment