தி ஹிந்து ஆங்கில நாளிதழின் துணை ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் அவர்கள் வழங்கிய முன்னுரையின் சுருக்கம்
அடுத்த தடவை ஒரு அமைச்சரோ அல்லது அரசியல்வாதியோ, ஒரு போலீஸ்காரரோ அல்லது படைவீரரோ, ஓர் அதிகாரியோ, நீதிபதியோ, ஏன், ஒரு பத்திரிகையாளரோ என்னிடம் வந்து சட்டத்தின் ஆட்சியை நான் கவனத்தில் எடுக்கிறேன் என்று சொன்னால், என்னிடம் இரண்டே இரண்டு வார்த்தைகள்தான் உள்ளன : இஃப்கிகார் ஜீலானி.
இந்தப் புத்தகம் சொல்லும் அதிர்ச்சியான விஷயங்கள் சலன புத்தியுடைய, கொடுங்கோன்மையான அதிகாரத்தையோ, அல்லது இந்திய அரசின் மானக்கேடான செயல்களையோ மட்டும் குற்றஞ்சாட்டிடவில்லை. ஒரு சமூகத்தின் தூண்கள் என்று கருதப்படும் - பத்திரிகைத்துறை என்ற நான்காவது தூண் உட்பட - அனைத்தும் எப்படி ஓர் அநியாயமான காரியத்திற்கு அணி சேர்ந்து கொண்டன என்பதன் தொகுப்புதான் இந்நூல்.
.........
இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ள தொடர் நிகழ்வுகளைப் படிக்கும்பொழுது பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி அரசுக்கு ஏழு மாதங்களாக திகார் சிறையில் வாடி வதங்கும் இஃப்திகார் நிரபராதி என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தே இருக்கிறது என்பது அறிய வரும்.
இருந்தும். தேசிய பாதுகாப்பின் பொறுப்பாளர்களான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வேண்டுமென்றே அவரைக் கம்பி எண்ண வைத்தனர்.
..........
இஃப்திகார் இன்று ஒரு சுதந்திர மனிதர். ஆனால் அவர் கைது செய்யப்பட்டதற்கும், சிறையில் அடைக்கப்பட்டதற்கும் காரணமான விஷயங்கள் இன்னும் தொடப்படாமல் அப்படியே இருகின்றன.
அரசின் தேசிய பாதுகாப்பு இயந்திரங்கள் யாரை வேண்டுமானாலும் தங்கள் பிடிக்குள் கொண்டு வரலாம் என்பதை அவரது விவகாரம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
............
இஃப்திகாருக்கு ஆதரவாக பத்திரிகையாளர்கள் ஒன்று திரண்டு பிரச்சாரம் மேற்கொள்ளும் செய்தி சுருக்கமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஜூன் 10 இதழில் வெளியானது. இதனைக் காவல்துறையினராலும், ஐ.பி.யாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைவதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்றுணர்ந்தார்கள்.
விளைவு - “தான் ஒரு ஐ.எஸ்.ஐ. ஏஜண்ட்” என்று இஃப்திகாரே ஒப்புக்கொண்டதாக ஒரு கட்டுக் கதையைக் கட்டவிழ்த்து விட்டார்கள், நீட்டா ஷர்மா என்ற பெண் செய்தியாளர் மூலம்.
...............
பத்திரிகையாளர்கள்தான் தங்கள் தொழில் தர்மத்திலிருந்து விலகிவிட்டார்கள் என்றால் எல்.கே. அத்வானியின் உள்துறை அமைச்சகம் செய்த செயல்கள் அதனை விட வெட்ககரமானதும், வேதனையானதும் ஆகும். உள்துறை அமைச்சகம் செய்த தவறுகளை பத்திரிகையாளர்களோடு ஒப்பிட்டால், பத்திரிகையாளர்கள் தவறு சிறிதுதான் என்றறியலாம்.
..................
கண்ணியமான மனிதரான இஃப்திகார் அவரது துக்ககரமான கதையை, இந்நூலில் சிறிது கூட கண்ணியக் குறைவு இல்லாமல் சொல்லியிருக்கிறார். அங்கேதான் தான் ஒரு கண்ணியமான பத்திரிகையாளர் என்ற முத்திரையைப் பதித்திருக்கிறார் இஃப்திகார்.
இந்நூலில் நெஞ்சை உருக்கும் சம்பவங்களும் உண்டு. நகைச்சுவையும் உண்டு. தனது பத்திரிகை அனுபவத்தைப் பயன்படுத்தி தனது பாதிப்புகளை மட்டும் எழுதாமல், இந்த மொத்த அமைப்பில் பலியான பிறரின் அவல நிலைகளிலும் கவனத்தைக் கொண்டு வருகிறார் இஃப்திகார்.
................
சித்தார்த் வரதராஜன்
1 பிப்ரவரி 2005
நூல் : சிறையில் எனது நாட்கள்
மூலநூல் : My Days in Prison by Iftikhar Gilani
ஆசிரியர் : இஃப்திகார் ஜீலானி
தமிழில் : M.S. அப்துல் ஹமீது
விலை : ரூ. 60
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
25, பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி : +91 44 25610969
தொலைநகல் : +91 44 25610872
மின்னஞ்சல் : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com
No comments:
Post a Comment