Thursday, 22 January 2015

காந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு – 1

ஏ.ஜி. நூரானி இதுவரை வெளிவராத உண்மைளை விளக்குகிறார்!

கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் அன்று மாலை ஸ்வபன் தாஸ் குப்தா தொலைக்காட்சியில் ஓர் உண்மையை வெளிப்படுத்தினார். வி.டி. சாவர்க்கருக்கு மகாத்மா காந்தியின் படுகொலையில் பங்குண்டு என்றும், ஆனால் அவர் தப்பித்து விட்டார் என்றும் மொரார்ஜி தேசாய் சொன்னதாக எல்.கே. அத்வானி தன்னிடம் கூறினார் என்பதுதான் அந்தச் செய்தி.

அன்றைய பாம்பே மாகாணத்தின் உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் ஒருமுறை இவ்வாறு கூறினார்: “காந்தியின் படுகொலை குறித்த புலன் விசாரணை பாம்பே மாகாணத்தில் நடந்து வருகிறது. அதில் நான் நேரடியாகத் தொடர்பு வைத்து கேட்டு அறிந்து வருகிறேன்.”

அவருக்கு உண்மை என்ன என்று தெரியும். பாம்பே குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) சிறப்புக் கிளையின் துணை கமிஷனராக இருந்த ஜாம்ஷெட் நகர்வாலாவுக்கும் அது தெரியும். அவர் உள்துறை அமைச்சர் மொரார்ஜிக்கு மிக நெருங்கியவராக இருந்தார்.

1948ம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று மத்திய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு இவ்வாறு எழுதியனுப்பினார்:

“காந்தியின் படுகொலை வழக்கு விசாரணையின் முன்னேற்றத்தை நான் தினமும் கவனித்து வருகிறேன். சாவர்க்கரின் கட்டுப்பாட்டிலுள்ள ஹிந்து மகாசபாவின் தீவிரவாதப் பிரிவுதான் இந்தப் படுகொலைக்கான சதித் திட்டத்தைத் தீட்டி, அதனை நிறைவேற்றியது.” (Sardar Patel’s Correspondence, Volume 6, Page 56)

அன்றைய மத்திய அமைச்சரவையில் ஓர் அங்கமாக இருந்த சியாம பிரசாத் முகர்ஜி சாவர்க்கருக்காக பட்டேலிடம் பொருத்தமற்ற முறையில் வக்காலத்து வாங்கி வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினார். சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்ட அதே நாளில் சாவர்க்கரின் சார்பில் முகர்ஜி பட்டேலிடம் பேசினார். சியாம பிரசாத் முகர்ஜிதான் சாவர்க்கருக்கு அடுத்தபடியாக ஹிந்து மகாசபாவின் தலைவரானார்.

பட்டேல் சியாம பிரசாத் முகர்ஜிக்கு இவ்வாறு பதிலனுப்பினார்:
“இந்த வழக்கின் பொறுப்பாளரான பாம்பேயின் அரசுத் தரப்பு வழக்கறிஞர், இன்னபிற சட்ட வல்லுனர்கள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆகியோர் என்னை டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் சந்தித்தனர். நான் அவர்களிடம் ஒன்றைத் தெளிவாகச் சொன்னேன். சாவர்க்கரை இந்த வழக்கில் சேர்ப்பது என்பது முழுக்க முழுக்க சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றின் நிலைப்பாட்டைப் பொறுத்துதான்.

இந்த விவகாரத்தில் அரசியல் வந்து விடக்கூடாது. சாவர்க்கரை வழக்கில் சேர்க்கவேண்டும் என்ற கருத்திற்கு அவர்கள் வருவார்களேயானால் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அதற்கான ஆவணங்கள் என் மேஜைக்கு வரவேண்டும் என்று நான் மீண்டும் அவர்களுக்குத் தெளிவு படுத்தி விட்டேன்.

ஹிந்து மகாசபா ஓர் அமைப்பு என்ற ரீதியில் காந்தி படுகொலையின் சதிக்குக் காரணமில்லை என்பதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன். ஆனால் அதே வேளை, அதன் கணிசமான உறுப்பினர்கள் காந்தி படுகொலை நடந்தவுடன் இனிப்பு வழங்கி கொண்டாடியதையும் நாம் கவனிக்காமல் கண் மூடி இருந்துவிட முடியாது. இந்த (இனிப்பு வழங்கப்பட்ட) விவகாரம் தொடர்பாக நம்பகமான தகவல்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்துள்ளன. அத்தோடு ஆபத்தான இன்னொன்றும் உள்ளது. அது தீவிரவாத வகுப்புவாதம்.

மகந்த் திக்விஜய் நாத், பேரா. ராம் சிங், தேஷ்பாண்டே போன்ற ஹிந்து மகாசபாவின் பேச்சாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்த மதவெறி பிடித்த தீவிரவாத வகுப்புவாதத்தைப் பிரச்சாரம் செய்து வந்தனர். இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெருத்த ஆபத்தை உண்டு பண்ணும் என்பதையும் நாம் மறுக்க முடியாது. இதே ஆபத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்தும் உள்ளது. இராணுவ நடவடிக்கைகள் அல்லது பகுதி இராணுவ நடவடிக்கைகளை அது மறைமுகமாக நடத்தி வருகிறது.” (Sardar Patel’s Correspondence, Volume 6, Pages 65-66)

பட்டேல் முகர்ஜிக்கு மீண்டும் எழுதினார்:
“காந்திஜியின் படுகொலை குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்தப் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து மகாசபா ஆகிய இரு அமைப்புகளின் பங்கு குறித்து நான் இப்பொழுது கருத்து கூறக்கூடாது. ஆனால் ஒன்றை எனக்குக் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த இரண்டு அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகளின் விளைவால், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகளின் விளைவால், நாட்டில் ஒரு சூழல் உருவானது. எப்படிப்பட்ட சூழல் என்றால் இப்படிப்பட்ட கொடூரக் கொலைகள் நடப்பதற்கு சாத்தியப்படக்கூடிய அளவுக்கு மோசமான சூழல் உருவானது.

ஹிந்து மகாசபாவின் மதவெறி பிடித்த தீவிரவாதப் பிரிவுதான் இந்தப் படுகொலையைச் செய்தது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகள் அரசின் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அது தடை செய்யப்பட்ட பின்பும், அதன் இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்று எனக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. மாறாக, உண்மையில் சொல்லவேண்டும் என்றால், அதன் கீழறுப்பு நடவடிக்கைகள் அதிகமாகத்தான் ஆகியிருக்கின்றன.” (Sardar Patel’s Correspondence, Volume 6, Page 323)

“மகாத்மா காந்தியின் வாழ்வும், மரணமும்” (The Life and Death of Mahatma Gandhi) என்ற நூலை ராபர்ட் பெய்ன் (Robert Payne) என்பவர் எழுதி 1969ல் வெளியிட்டார். அதில் சாவர்க்கர் குறித்து அவர் இவ்வாறு எழுதுகிறார்:

“காந்தி படுகொலை செய்யப்பட்டு 8 மணி நேரத்துக்குள் சாவர்க்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர்தான் இந்தப் படுகொலையின் முதல் சந்தேகத்திற்குரியவர். ஆனால் ஆச்சரியப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் ஆரம்பத்தில் கைது செய்யப்படவில்லை. அவர் லண்டனில் வசித்திருந்தால் உடனே அவர் மீது சந்தேகம் பாய்ந்திருக்கும்.

நாதுராம் வினாயக் கோட்சேதான் சதித் திட்டம் தீட்டுவதற்கு ஒருங்கிணைப்பு செய்தவர் என்று காட்டுவதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு எந்தக் கஷ்டமும் இருந்திடவில்லை.

ஆனால் சாவர்க்கர் நேரடியாக இதில் ஈடுபட்டார் என்பது நிரூபிக்கப்படுவதற்கு மிகுந்த கஷ்டம் இருந்தது. படுகொலை நடப்பதற்கு முன்பாக பல மாதங்கள் தான் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும், சொற்ப நபர்களே தன்னை வந்து சந்தித்ததாகவும், கோட்சேயோ, நாராயண் டி. ஆப்தேயோ தன்னை ஒரு வருடத்திற்கும் மேலாக சந்திக்கவேயில்லை என்றும் சாவர்க்கர் கூறினார்.

காந்திப் படுகொலைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அதாவது ஜனவரி 17ம் நாள், திகாம்பர் பாட்கே என்பவர் கோட்சேவையும், ஆப்தேவையும் பாம்பேயில் சாவர்க்கர் இல்லத்திற்கு காலை 9 மணிக்கு அழைத்துச் சென்றார். பாட்கே கீழ்த்தளத்தில் காத்திருக்க, தங்கள் அரசியல் குருவான சாவர்க்கரை கடைசியாக ஒரு முறை பார்க்கவும், இறுதிக் கட்ட அறிவுரைகளைக் கேட்டு விட்டுப் போகவும் கோட்சேவும், ஆப்தேவும் மேல் தளத்திற்குச் சென்று சாவர்க்கரைச் சந்தித்தனர்.

ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள் கோட்சேவும், ஆப்தேவும் திரும்பி கீழ்த்தளத்திற்கு வந்தனர். அவர்களுடன் சாவர்க்கரும் வந்தார். “வெற்றியுடன் திரும்பி வாருங்கள்” என்று சாவர்க்கர் அவர்களிடம் சொன்னார். இந்தப் படுகொலைக்கு தார்மீக ரீதியான அதிகப் பொறுப்பு சாவர்க்கருக்கே உள்ளது.” (Sardar Patel’s Correspondence, Volume 6, Page 323)

1975ம் ஆண்டு லாரி காலின்ஸ், டொமினிக் லேப்பியர் ஆகியோர் எழுதிய மிகப் பிரபலமான “நள்ளிரவில் சுதந்திரம்” (Freedom at Midnight) என்ற நூல் வெளிவந்தது. அந்த நூல் காவல்துறை ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. மேற்கு பாகிஸ்தானிலிருந்து இங்கே வந்த அகதியான மதன்லால் கே. பஹ்வா 1948ம் ஆண்டு ஜனவரி 20 அன்று காந்தி பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒரு குண்டை வெடிக்கச் செய்தான். அவனுடன் கூட வந்த கோட்சேயும், இன்னும் சிலரும் தப்பி ஓடி விட்டனர்.

அடுத்த நாள், இந்த வழக்கு விசாரணையை பாம்பே மாகாண உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் காவல்துறை அதிகாரி நகர்வாலாவிடம் ஒப்படைத்தார். “நள்ளிரவில் சுதந்திரம்” நூலில் அதன் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்:

“நகர்வாலா மதன்லாலைப் பிடிக்க அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டார். காந்தியைக் கொல்ல முனைந்தவர்கள் பனை மரங்களுக்கிடையில் அமைதியாக இருந்த வீடுகளைக் கடந்து பாம்பேயின் கெலுக்சர் சாலையில் அமைந்துள்ள சாவர்க்கரின் வீட்டிற்குச் சென்றார்கள் என்பதைக் கண்டறிய அந்த இளம் அதிகாரிக்கு வெகு நாட்கள் பிடிக்கவில்லை. மதன்லால் அந்தக் கொலை முயற்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சாவர்க்கரை அவரது வீட்டில் வைத்து சந்தித்ததை அடிப்படையாக வைத்து சாவர்க்கரைக் கைது செய்ய நகர்வாலா மொரார்ஜியிடம் அனுமதி கேட்டார்.

மொரார்ஜி கோபத்துடன் அதற்கு மறுத்ததுடன் இவ்வாறு அந்த அதிகாரியிடம் எரிந்து விழுந்தார்: “உமக்கென்ன பைத்தியமா? இந்த மொத்த மாகாணமும் தீக்கிரையாகிப் போக வேண்டும் என்று நீர் எண்ணுகிறீரா?”

நகர்வாலாவால் சாவர்க்கரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால்தான் போட முடியவில்லை. ஆனால் ஒரு காரியம் செய்தார். பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட அதிபுத்திசாலிப் பிரிவான ‘கண்காணிப்பாளர் பிரிவு’ (Watchers’ Branch) என்ற பிரிவுக்கு சாவர்க்கரைக் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைக்க முடிந்தது.” (நள்ளிரவில் சுதந்திரம், பக். 417)

சாவர்க்கர் தீவிரக் கண்காணிப்பின் கீழ் வந்தார். ”ஜிம்மி நகர்வாலாவின் பாம்பே புலன் விசாரணை முதல் 48 மணி நேரத்தில் கொஞ்சம் புதிய செய்திகளைக் கொண்டு வந்தது. பாம்பே கண்காணிப்பாளர் பிரிவு சாவர்க்கர் சதான் என்னும் சாவர்க்கர் இல்லத்தின் முன்பு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டது. ஆனால் அதிபுத்திசாலியான சாவர்க்கர் தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்தவில்லை. சில ஆபத்தான மர்ம அலை அந்த இல்லத்திலிருந்து வெளிவருவது போலிருந்தது.

சாவர்க்கரின் வீட்டைச் சுற்றி அவரின் சீடர்களின் நடமாட்டங்களில் நகர்வாலாவுக்கு சந்தேகம் பிறந்தது. அவரது போலீஸ் மூளை ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போவது குறித்து அவருக்கு எச்சரிக்கை விடுத்தது. டெல்லி காவல்துறைத் தலைவரிடம் நகர்வாலா இவ்வாறு கூறினார்: “ஏன் என்று கேட்காதீர்கள். இன்னொரு கொலை முயற்சி நடக்கவிருக்கிறது. இங்கு நிலவும் சூழ்நிலையை வைத்து நான் இதனை உணர்கிறேன்.”
(நள்ளிரவில் சுதந்திரம், பக். 429-430)

நன்றி : Frontline
தமிழில் (சுருக்கம்) : MSAH

விடியல் வெள்ளி  மார்ச் 2013

No comments:

Post a Comment