இந்த நாளில் ஓர் ஆமெரிக்க இளம் பெண் ஃபலஸ்தீன
மண்ணில் யூத இனவெறியர்களால் கொல்லப்பட்டாள்!
ஏன் அவளை யூத இனவெறியர்கள் கொன்றனர்? ஏன் அவள்
ஃபலஸ்தீன மண்ணுக்குச் சென்றாள்?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இந்த உண்மைச்
சிறுகதையைப் படிக்கும்பொழுது அறிவீர்கள். 8 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
இதே மார்ச் மாதம் ரச்சேல் கோரி என்ற அந்த 23 வயது
இளம் பெண் அநியாயமாகக் கொல்லப்பட்டாள். அவளது ரத்தக் கறைகளை அவளின்
நினைவுகளோடு இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது புனித ஃபலஸ்தீன மண்!
நாமும் அவளின் நினைவுகளில் கலப்போம். - ஆசிரியர்
ரணபூமியில் ரத்தம் சிந்திய ரச்சேல்!
ரச்சேல் கோரி (Rachel Corrie) தன் தோழிகளுடன் சர்வதேச
ஒற்றுமை இயக்கக் (International Solidarity Movement - ISM) கூட்டங்களில் பேசிக்கொண்டதை நினைத்துக்கொண்டாள்.
யானையின் காலில் நசுங்கும் எறும்புகள் போல் நித்தம்
நித்தம் யூதக் குண்டுகளுக்கு இரையாகி வருகின்றனர் ஃபலஸ்தீனர்கள். அவர்கள்
நினைத்த மாத்திரத்திலேயே அவளது கண்ணிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் சொரிந்தது.
சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு, அந்த
மண்ணிலேயே சாகும் அபலைகளுக்குக் குரல் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான்
இந்த சர்வதேச ஒற்றுமை இயக்கம்.
இந்த இயக்கம் யூத வெறி பிடித்த இஸ்ரேல் அரசையும், அதற்குத்
துணை நிற்கும் அமெரிக்க அரசையும் எதிர்க்கும் ஓர் அமைப்பு.
வாஷிங்டனில் பிறந்து வளர்ந்த ரச்சேல் முதலில்
ஃபலஸ்தீனைப் பற்றிய செய்திகளைக் கேட்டபோது அனைத்தும் பொய் என்றே எண்ணினாள்.
இப்படியும் நடக்குமா என்று அவளின் தோழிகளிடம்
கேட்டுக் கேட்டு ஓய்ந்தாள்.
மிருக பலம் கொண்ட மீடியாவை தனது முரட்டுக் கைகளுக்குள்
வைத்திருக்கும் ஏகாதிபத்திய நாடுகளையும் மீறி, அதே மீடியாவில்
ஃபலஸ்தீனைப் பற்றி சில உண்மைச் செய்திகளும் வரத்தான் செய்கின்றன.
இவற்றைக் கேட்டுத்தான் ரச்சேல் நம்ப முடியாமல்
தவித்தாள். இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இப்படியும் நடக்குமா? இந்த
விஞ்ஞான யுகத்தில் இது சாத்தியமா? மனித உரிமைகள் மலை போல் உறுதியாக உருவாகிவிட்ட
இந்தக் காலத்தில் இது முடியுமா?
ஃபலஸ்தீன மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை
வாஷிங்டனில் இருந்து கொண்டே இந்த இயக்கத்தவர்கள் எதிர்க்க ஆரம்பித்தார்கள்.
ஒவ்வொரு எதிர்ப்புக் கூட்டத்திலும் ரச்சேல் தவறாமல் பங்கெடுத்தாள்.
ஒரு கூட்டத்தில் அவள் மிகவும் உணர்ச்சி வயப்பட்டு
காணப்பட்டாள். இவளோடு இன்னும் 6 பேர் எழுந்து நின்றனர்.
கூட்டத்தின் அனைத்து கண்களும் இவர்களையே மொய்த்து
நின்றன. என்ன சொல்லப் போகிறார்கள் இவர்கள்? எல்லோரும் ஆவலாய் இவர்களையே
பார்த்துக்கொண்டிருந்தனர்.
ரச்சேல்தான் பேச அரம்பித்தாள்: “நாங்கள் ஃபலஸ்தீன
மண்ணுக்குப் போகப் போகின்றோம். அங்கே நடக்கும் அநியாயங்களை நேரில் கண்டு,
அவற்றை
எதிர்க்கப் போகின்றோம்.”
கூட்டத்தில் ஒரு சிலர் அதனை ஆமோதிப்பது போல்
தலையை ஆட்டினர். ஒரு சிலருக்கு இது நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அது அவர்களின்
கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவர்களை ரச்சேல் ஏளனமாகப் பார்த்தாள்.
.....................
ரஃபா என்ற சிற்றூரில் அந்த 7 பேரும்
வந்திறங்கினார்கள்.
ரச்சேலோடு அவளுடைய தோழிகளும், அமெரிக்காவைச் சேர்ந்த சில இளைஞர்களும், பிரிட்டனைச்
சேர்ந்த சில இளைஞர்களும் வந்திருந்தார்கள். அவர்களும் ரச்சேலைப்போலவே
இஸ்ரேலிய பயங்கரவாதத்தைக் கடுமையாக எதிர்ப்பவர்கள். அதற்குத் துணை நிற்கும்
தங்கள் நாடுகளையும் (அமெரிக்கா, இங்கிலாந்து) எதிர்ப்பவர்கள்.
ஃபலஸ்தீனில், காஸா பகுதியிலுள்ள ஒரு
சிற்றூர்தான் ரஃபா.
தான் அமெரிக்காவில் இருந்தபோது தொலைக்காட்சியில்
கண்டதை, கேட்டதை விட மோசமாக இருந்தது அவ்வூர்.
நித்தம் நித்தம் யூத வெறி டாங்குகள் அங்கே கொலைவெறியோடு
சுற்றிச் சுற்றி வருகின்றன. எங்கு பார்த்தாலும் இடிந்த வீடுகள். இடிந்த வீடுகளின்
கற்களின் நடுவில் வாழும் ஏழை அபலைகளின் அவல வாழ்க்கை.
அந்த ஏழைக் குடும்பங்களுடன் இந்த ஏழு இளைஞர்களும்
தங்கினார்கள். ரச்சேலுக்கு அந்த வாழ்க்கை முதலில் கஷ்டமாகத்தான் இருந்தது.
ஆனால் போகப் போகப் பழகிவிட்டது.
அந்த மக்களைப் பார்க்கும்போது வினோதமாக இருந்தது. யூதக் கொலைவெறி டாங்குகள் முன், மரணத்தின் வாயிலில் நின்று கொண்டு விளையாடும்
சிறுவர்கள்!
இதோ டாங்குகள் அவர்களை நோக்கி முன்னேறுகின்றன.
ஆனால் அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில் எந்தப் பயமும் இல்லை. மலர் போன்ற அவர்களின்
வதனங்களில் எந்தக் கவலையும் இல்லை. இன்னுயிரைத் தவிர இழப்பதற்கு அவர்களிடம்
இப்போது என்ன இருக்கிறது?
சாவைச் சற்றும் சலனமில்லாமல் சந்திக்கத்
தயாராக இருக்கும் அந்தக் குழந்தைகளையே ரச்சேல் உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.
அந்தச் சிறார்கள் கற்களை எடுத்து டாங்குகள்
மேல் வீசினர். டாங்குகள் இவர்களை நோக்கித் திரும்பும்பொழுது சிரித்துக்கொண்டே
ஓடி ஓளிந்தனர். ஓ இதுதான் ஓடிப் பிடித்து விளையாடும் மரண விளையாட்டோ...?
எவ்வளவு தைரியம் இவர்களுக்கு? இந்த தைரியம்
இந்த மண்னோடு ஒட்டிப் பிறந்ததா? ரச்சேல் அமெரிக்காவில் இவற்றைக் கேள்விப்படும்
பொழுது நம்ப முடியாமல் தவித்திருக்கிறாள். ஆனால் இன்று நிதர்சனமாக நேரில் அவற்றைக்
காண்கிறாள்.
ரச்சேலும், அவளின் நண்பர்களும் அந்த
ஊரை வலம் வந்தனர். இடிந்த வீடுகளின் இடிபாடுளின் இடையிலிருந்து கரும் புகை
எழுகிறது. ஆம்! அந்த மக்கள் இடிந்த வீடுகளின் கற்களிடையே சமைக்கிறார்கள் தங்கள் வயிற்றைக் கழுவுவதற்காக.
இவர்களைக் கண்டவுடன் அன்போடு அவர்களுக்கும்
உணவு தருகின்றார்கள். இஸ்லாம் கற்றுத் தந்த விருந்தோம்பல் அல்லவா இது!
பசித்திருந்தாலும்
பகுத்துண்ணும் பழக்கம் கண்டு ரச்சேலும், அவளின் தோழர்களும் அதிசயித்துப் போனார்கள்.
அந்த மக்களோடு மக்களாக ஐக்கியமானார்கள்.
அமெரிக்காவில் நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை
வாழ்கிறோம். இந்த மக்கள் இங்கே என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்! ரச்சேலின் கண்கள் குளமாயின.
.........................
ஆயிற்று. ரச்சேல் ரஃபா வந்து இரண்டு வாரங்கள்
ஆயிற்று.
அன்றிரவு ரச்சேலுக்கு உறக்கம் வரவில்லை. எழுந்து அமர்ந்தாள். அமெரிக்காவிலிருக்கும்
தன் பெற்றோர்களுக்கு தான் நேரில் கண்டவற்றை, தன் ரத்தத்தில் உறைந்த உணர்வுகளை
மின்னஞ்சலில் எழுத ஆரம்பித்தாள்.
அன்புள்ள என் தாய், தந்தையரே!
நான் ஃபலஸ்தீனுக்கு வந்து சரியாக இரண்டு வாரங்களும் ஒரு மணி நேரமும் ஆகிவிட்டது.
ஆனால் நான் இங்கே காண்பதை விவரிக்க, அதாவது அமெரிக்காவுக்குப் புரிய வைக்க வார்த்தைகள்
கிடைக்காமல் தவிக்கின்றேன்.
குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டுச் சுவர்கள், கழுகுப்
பார்வையால் கண்காணிக்கும் யூத ஆக்கிரமிப்பு இராணுவம் - இவையிரண்டும் இல்லாத
ஒரு வாழ்க்கையை இங்குள்ள குழந்தைகள் வாழ்ந்ததேயில்லை. இருப்பினும் வாழ்க்கை
என்பது எல்லா இடங்களிலும் இந்த மாதிரி இல்லை என்பதை இங்குள்ள சின்னஞ்சிறு
பிள்ளைகள் கூட புரிந்து வைத்திருக்கிறார்கள்.
நான் இங்கே வந்து இறங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு
முன்பு ஒரு 8 வயதுச் சிறுவனை இஸ்ரேலிய இராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. அவன் பெயர்
அலீ என்று கிசுகிசுக்கிறார்கள் இங்குள்ள குழந்தைகள்.
ஷேரோன் யார், புஷ் யார்
என்று அரபியில் அவர்கள் கேட்க, ஷேரோன் ஒரு கிறுக்கன், புஷ் ஒரு
பைத்தியம் என்று நானும் எனக்குத் தெரிந்த அரபு மொழியில் பதில் சொல்கிறேன்.
அரபு மொழியை இப்படித்தான் எனக்குக் கற்றுத் தருகிறார்கள் இந்தச் சிறுவர்கள்.
உலக அரசியலின் அதிகாரம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நான் முன்னர்
புரிந்து வைத்திருந்ததைக் காட்டிலும் இங்கே இருக்கும் எட்டு வயது வாண்டுகள்
தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.
புத்தகங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள், செய்திப்
படங்கள் போன்ற பல வழிகளில் ஃபலஸ்தீனைப் பற்றி நான் சேகரித்த அறிவு அனைத்தையும்
விஞ்சுகிறது இங்குள்ள யதார்த்தம். நேரில் பார்த்தாலொழிய நீங்கள் இதனைப்
புரிந்துகொள்ளவே முடியாது. ஒரு வேளை நேரில் வந்து அனுபவித்தாலும் முழுமையாகப்
புரிந்து விட்டதாக நான் சொல்லிக் கொள்ள முடியாது.
என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். இங்குள்ள கிணறுகளை
மூடினாலும் தண்ணீர் வாங்கிக் குடிக்க என்னிடம் பணம் இருக்கிறது. உடனே அமெரிக்காவுக்குத்
திரும்பி விடலாம். என் குடும்பத்தினர் யாரையும் இராணுவம் ராக்கெட் வீசிக்
கொன்றதில்லை.
எனக்கொரு வீடு இருக்கிறது. நான் ஆற அமர கடலைக் கண்டு ரசித்திருக்கின்றேன்.
பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் வழியில் இராணுவத்தால் கொல்லப்படுவேனோ
என்ற அச்சமின்றி மகிழ்ச்சியாக நான் வீடு திரும்பியிருக்கிறேன்.
எனவேதான் இக்குழந்தைகள் வாழும் உலகத்திற்குள்
கால் வைத்த மறு கணமே, இந்தக் கொடூரங்களைக் கண்ணால் கண்ட மறு கணமே
என் ரத்தம் கொதிக்கிறது. ஒரு வேளை ஒரு ஃபலஸ்தீனச் சிறுவன் அமெரிக்கா எனும்
என்னுடைய உலகத்தை வந்து பார்த்தால் அந்தப் பிஞ்சு மனம் எப்படித் துடிதுடிக்கும்
என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.
இவர்களைப் போலன்றி நான் வேறோரு வாழ்க்கையை வாழ்ந்து
பார்த்திருக்கிறேன். அமைதியான இடத்தில் வசித்திருக்கிறேன். கிணற்றை மூடி, குடிக்கும்
தண்ணீரை இராணுவம் பறித்து விடும் என்று நான் கற்பனையில் கூட எண்ணி அஞ்சியதில்லை.
இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது வீட்டின் சுவர்கள் உட்புறமாக இடித்துத்
தள்ளப்பட்டு நான் பதறி விழித்ததில்லை. தன் சொந்தங்களை இராணுவத்திற்குக்
காவு கொடுத்த யாரையும் நான் அமெரிக்காவில் சந்தித்ததில்லை.
என்னுடைய வீட்டை
நாற்புறமும் இராணுவக் கோபுரங்கள் கொலைவெறியுடன் குறி பார்க்கவில்லை.
ஆனால் இந்த ஃபலஸ்தீன சிறுவர்கள் நாம் வாழும் அமைதியான வாழ்க்கையை அறிந்ததே இல்லை. எண்ணிப் பாருங்கள். உங்கள் குழந்தைப் பருவம் முழுவதும் உயிர் வாழ்வதற்காக
மட்டுமே நீங்கள் போராடிக்கொண்டிருந்தால் எப்படி இருக்குமென்று!
உலக வல்லரசின் ஆதரவுடன், உலகின்
நான்காவது பெரிய இராணுவம் உங்களையும் உங்கள் வீட்டையும் துடைத்தெறிவதற்கு
மூர்க்கத்தனமாக முனைந்து கொண்டேயிருக்க, அதை எதிர்த்து நீங்கள் போராடிக்கொண்டேயிருக்க
வாழ்க்கை என்பதே இதுதான் என்றால் அதனால்தான் எனக்கு இப்படித் தோன்றுகிறது.
இந்த ஃபலஸ்தீனக் குழந்தைகள் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை உண்மையிலேயே
நேரில் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.
ரச்சேலும், அவளுடைய தோழர்களும் வீட்டை
விட்டு வெளிக் கிளம்பினர். அதோ ஒரு புல்டோசர் வருகிறது. இஸ்ரேலிய இராணுவத்தின்
புல்டோசர் அது. இன்று எந்தெந்த வீடுகளை அது காவு கொள்ளப் போகின்றதோ என்று ரச்சேல்
பதறினாள்.
அவளும், தோழர்களும் அந்த புல்டோசரை நோக்கி ஓடினார்கள்.
புல்டோசர் இடிக்க வந்த வீட்டின் முன்பாக நின்றார்கள் - அதனை மறிக்கும் முகமாக.
ஆனால் அந்த புல்டோசரை ஓட்டியவன் கிஞ்சிற்றும்
கவலை கொள்ளவில்லை. அவன் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அவன் புல்டோசரின்
மண் வாரியால் இவர்களை அள்ளி வீசினான். இவர்கள் வீட்டின் ஒரு பக்கம் போய் விழுந்தார்கள்.
புல்டோசரை ஓட்டியவன் வீட்டின் மறுபக்கத்தை
இடித்துக் கொண்டிருந்தான்.
வீட்டின் கற்கள் ஒவ்வொன்றாகச் சிதறிக் கொண்டிருந்தன.
மாறாக, ரச்சேலின் மனமோ பாறை போல் இறுகிக் கொண்டிருந்தது.
அன்றிரவு அவளுக்கு உறக்கம் பிடிக்கவில்லை.
தன் பெற்றோருக்கு மீண்டும் மின்னஞ்சலில் இவ்வாறு எழுதினாள்:
அன்பு நிறைந்த என் பெற்றோரே! நிராயுதபாணிகளான
ஃபலஸ்தீன மக்களைச் சுட்டுத் தள்ளுகிறது இஸ்ரேல் இராணுவம். ஆனால் நிராயுதபாணியான
ஓர் அமெரிக்கக் குடிமகளைச் சுட்டுத் தள்ளும் தைரியம் அவர்களுக்கு இருக்குமா?
பேதைப் பெண்ணுக்கு யூத ஃபாசிஸ்டுகளைப் பற்றித்
தெரியவில்லை. ஷாப்ரா, ஷத்தீலா அகதிகள் முகாம்களில் பச்சிளங்குழந்தைகள், பெண்கள், முதியோர்கள்
எனப் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றவன் இந்த ஏரியல்
ஷேரோன். ஈவு, இரக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மனம் படைத்தவர்கள் இந்த ஏரியல்
ஷேரோனும், இவனைச் சார்ந்தவர்களும். இவர்களின் ஃபாசிஸப் போக்கிற்குக் குறுக்காக
வரும் எவரையும் இந்த யூத வெறி நாய்கள் விட்டு வைப்பதில்லை.
ரச்சேலும், அவளுடைய தோழர்களும் புல்டோசரை
மறிப்பதும்,
அவர்கள் வீசப்படுவதும் அன்றாட நடவடிக்கை ஆகிவிட்டன.
ஒவ்வொரு தடவை வீசப்படும்போதும் ரச்சேலின் மனம் இறுகிக் கொண்டிருந்தது. இதற்கெதிராக
ஏதாவது செய்தாக வேண்டும்.
இந்தக் கொடுமைகள் உலகுக்குத் தெரிய வேண்டும்.
உலக மக்களின் மவுனத்தைக் கலைக்க வேண்டும். தனது அமெரிக்க அரசின் நயவஞ்சகத்தனம்
வெளிச்சத்திற்கு வரவேண்டும். உலக மக்கள் அனைவரும் சேர்ந்து இஸ்ரேலின் மீது
காறித் துப்ப வேண்டும். அந்த உமிழ்நீரின் வெள்ளத்திலேயே இந்தக் கொலைவெறி யூத
ஃபாசிஸ்டுகள் மூழ்கிச் சாக வேண்டும்.
ரச்சேல் ஒரு முடிவுக்கு வந்தாள். இந்தக் கொடுமைகளுக்கு
ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியாவிட்டாலும், ஓர் இடைப் புள்ளியாவது
(கமா) வைக்க வேண்டும் என்று நினைத்தாள் - தனது இரத்தத்தால்!
----------------
மார்ச் 16, 2003
ரச்சேலின் தோழன் எங்கிருந்தோ கொண்டு வந்த
பூ ஒன்று மாடத்தில் இருந்தது.
வழக்கம் போல் ரச்சேலும், அவளுடைய
தோழர்களும் வெளிக் கிளம்பினர். ரச்சேல் எதேச்சையாக அந்த மாடத்தைப் பார்த்தாள்.
அந்தப் பூ அவளைப் பார்த்து அழுவது போல் இருந்தது.
ரஃபாவின் பாதி வீடுகள் இடிந்து கிடக்கின்றன.
மீதி வீடுகளை விட்டு வைப்பானேன்? இஸ்ரேலிய இராணுவத்தின் புல்டோசர்கள் வெறி
கொண்டலையும் நாய்களைப் போல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன.
ஒரு வீட்டை நோக்கி ஒரு புல்டோசர் வந்து கொண்டிருந்தது.
ரச்சேல் தீர்க்கமாக அந்தப் புல்டோசரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
வேக வேகமாகச் சென்று, அந்தப்
புல்டோசர் குறி வைக்கும் வீட்டின் முன் மண்டியிட்டு அமர்ந்தாள். மற்ற தோழர்கள்
புல்டோசரை நோக்கி, இடிக்காதே... இடிக்காதே... என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர்.
புல்டோசரின் வேகமோ இன்னும் அதிகரித்தது.
உடலில் மனித இரத்தம் ஓடுபவர்களுக்கு மனிதாபிமானம், சூடு, சொரணை
இருக்கும். இந்த இஸ்ரேலிய யூத வெறியர்கள் உடல்களில் மிருக இரத்தம் அல்லவா
ஓடுகிறது.
தோழர்களின் காட்டுக் கத்தல் அந்த புல்டோசரை
ஓட்டியவனின் காதில் விழவேயில்லை. ரச்சேலுக்குப் புரிந்து விட்டது. அந்தக்
கணம் நினைத்திருந்தாலும் அவள் பக்கவாட்டில் பாய்ந்து தப்பித்திருக்கலாம்.
ஆனால் அவள் முடிவெடுத்து விட்டாள். நித்தம் நித்தம் அடித்துச் செதுக்கிய அம்மி
போல் இறுகி விட்ட அடி மனதின் முடிவு அது. அதனை யாராலும் மாற்ற முடியாது.
ரச்சேலின் இரத்தம் இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்குப்
பக்கபலமாக இருக்கும் அமெரிக்காவுக்குச் சாவுமணி. இன்று அமெரிக்க அரசை
எதிர்த்து அமெரிக்காவிலேயே நிறைய ரச்சேல்கள் உருவாகி விட்டார்கள். இனி அமெரிக்காவுக்கு
தங்கள் இரத்தங்களால் அவர்களே பாடம் புகட்டுவார்கள். இவர்கள் விழ விழ எழுவார்கள்.
ஒன்று விழ ஒன்பதாய் எழுவார்கள்.
ரஃபாவின் வீதியில் ரச்சேலின் இரத்தம் சிதறிக்
கிடந்தது. தோழர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். (ரச்சேல் கோரி பற்றிய
முழுமையான செய்திகளை அறிய http://www.rachelcorrie.org/ என்ற வலைத்தளத்தைக் காண்க.)
விடியல் வெள்ளி மார்ச் 2011
No comments:
Post a Comment