Friday, 9 January 2015

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 31

சென்ற தொடரில் ஊடகம் தொடர்பான எந்தப் புதிய திட்டத்திலும் நாம் இறங்குவதற்கு முன்பாக இரண்டு பொன்னான விதிகளை நினைவில் கொள்ளவேண்டும் என்று பார்த்தோம்.

அவைகளாவன:

1. இடைவெளிகளை (Gaps) நிரப்ப வேண்டும். ஏற்கனவே ஒன்றிருக்க திரும்பச் செய்வது (Duplications) தவிர்க்கப்படவேண்டும்.

2. தரம் (Quality) நமது தாரகமந்திரம். அளவைப் (Quantity) பார்த்து தரத்தைக் குறைத்துவிடக் கூடாது.

நமது திட்டம் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் நாம் இந்த இரண்டு விதிகளையும் பின்பற்றவேண்டும்.

நாம் எந்தத் திட்டத்தை ஆரம்பித்தாலும் அது மக்களுக்குப் புதிதல்ல என்பதனை  முதலில் மனதிற்கொள்ளவேண்டும். நிறைய மக்கள் நாம் செய்யப் போவதை ஏற்கனவே செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அனைத்துப் பகுதிகளும் விடுபடாமல் முழுமையாகச் செய்யப்படுகிறதா என்றால் இல்லை என்று ஆணித்தரமாகக் கூறலாம்.

மீடியாவில் எத்தனையோ விஷயங்கள் விடுபட்டிருக்கின்றன. மக்களுக்குத் தேவையான எத்தனையோ விஷயங்கள் மறக்கடிக்கப்பட்டிருக்கின்றன; மறைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் நிறைய விஷயங்கள் அலட்சியப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

அந்த விஷயங்களை நாம் கையில் எடுக்கவேண்டும். இன்றைய மீடியாவால் உதறித் தள்ளப்பட்டிருக்கும் விஷயங்களை மக்களின் மனங்களில் ஏற்ற வேண்டும்.

இப்படிச் செய்வதனால் நமது இருப்பையும் நிலைநிறுத்திக் கொள்ளலாம். இன்றைய மீடியா ஏற்படுத்தியிருக்கும் இடைவெளிகளையும் (Gaps) நிரப்பலாம். திரும்பச் செய்வதையும் (Duplications) தவிர்க்கலாம்.

மீடியாவில் கால் பதிக்கப் போகிறோம் என்று கூறிக்கொண்டு கற்றுக்குட்டித்தனமாக எதையாவது நாம் செய்து வைத்து விடக்கூடாது. இது விளையாட்டல்ல.

ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பது என்பது எளிதானது. ஆனால் அதனைத் தொய்வின்றி தொடர்ந்து நடத்துவது என்பதுதான் கடினமானது. பராமரிப்பு, தொடர்ச்சி, வளர்ச்சி என்பவை இருந்தால்தான் ஒரு நிறுவனத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

உர்துவிலோ, பிரதேச மொழிகளிலோ முஸ்லிம் பத்திரிகைகளுக்கு எந்தக் குறைவுமில்லை. ஆனால் அவற்றில் ஒரு சில பத்திரிகைகள்தான் தரம் மிக்கதாக இருக்கின்றன. அதிகமான பிரதிகளும் விற்பனையாகின்றன.

நாளிதழ்கள்

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தும் ஒரு ஆங்கில நாளிதழ் கூட இல்லை. உர்து, மலையாளம் தவிர இன்னபிற மொழிகளில் உருப்படியாகச் சொல்லிக் கொள்ளுமளவுக்கு ஒரு நாளிதழ் கூட இல்லை.
ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும், அனைத்து பிராந்திய மொழிகளிலும் முஸ்லிம்களுக்கென்று குறைந்தது ஒரு நாளிதழாவது இருக்கவேண்டும்.

நாளிதழ்கள் என்றதும் அது அதிகாலையில்தான் வெளிவர வேண்டும் என்றில்லை. மாலையிலும் நாளிதழ்களை வெளியிடலாம். தமிழகத்தில் முன்னணி நாளிதழ்கள் ஒரு செய்தியை தங்கள் மாலை நாளிதழ்கள் மூலம் அன்று மாலையும் விற்று, தங்கள் காலை நாளிதழ்கள் மூலம் அடுத்த நாள் காலையும் விற்று விடுகிறார்கள். இப்படி ஒரு செய்தியை இரண்டு தடவை விற்று இரட்டை லாபம் அடைகிறார்கள்.

ஆக, மாலை நாளிதழ் மூலமும் நாம் மக்களைச் சென்றடையலாம். அதேபோல் வார இதழ்கள் மூலமும் நல்ல பல செய்திகளை மக்களுக்கு அளித்து அவர்களின் கவனத்தை ஈர்க்கலாம். இப்பொழுது வாரமிருமுறை இதழ்கள் பிரபலமாகி இருக்கின்றன. நாமும் வாரமிருமுறை இதழ்கள் நடத்தி மக்களிடம் செல்வாக்கு செலுத்தலாம்.

வார இதழ்கள், வாரமிரு இதழ்கள் நடத்துவதற்கு பெரிய மனிதவளம் ஒன்றும் தேவையில்லை. அதிகமான பணபலமும் அவசியமில்லை. ஆதலால் அந்தந்தப் பகுதியைச் சார்ந்தவர்களே, உள்ளூர் குழுக்களே அவற்றை நடத்தலாம்.

இனி பருவகால இதழ்கள் (Periodicals), தொலைக்காட்சிச் சானல்கள், ஆன்லைன் செய்தித் தளங்கள், வானொலி நிலையங்கள் போன்றவற்றை நடத்துவது பற்றி அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ் காண்போம்.

No comments:

Post a Comment