Saturday, 17 January 2015

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 39

சமீபத்தில் நமது தேசத்தின் தலைநகராம் புது தில்லியில் சில முஸ்லிம் அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடினர். எட்டு மாநிலங்களிலிருந்து கலந்துகொண்ட இவர்களின் ஒரே நிகழ்ச்சித் திட்டம் : “ஆங்கில ஊடகத்தின் அவசியமும், முக்கியத்துவமும்”.

அந்தக் கூட்டத்தின் இறுதியில் அவர்கள் அனைவரும் ஏகோபித்த ஒரு கருத்தில் ஊன்றி நின்றனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமாக ஓர் ஆங்கில ஊடகம் அவசர, அவசியமாக துவங்கப்பட வேண்டும் என்பதே அந்த ஏகோபித்த கருத்து.

இந்திய அளவிலும், உலக அளவிலும் ஆட்சியாளர்களுக்கும், சமூகத்திற்கும் நம் சமுதாயத்தின் குரல் போய்ச் சேர வேண்டும் என்றால் அதற்கு ஆங்கில ஊடகம் அவசியம் இருக்க வேண்டும் என்ற கருத்து அங்கே அறுதி வரை நிலவியது.  இந்தக் கூட்டத்திற்கு உயிர் மூச்சாய் இருந்து ஏற்பாடு செய்த ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் 2014ல் இன்ஷா அல்லாஹ் ஓர் ஆங்கில நாளிதழ் ஆரம்பிக்கப்படும் என்று கூட்டத்தில் உறுதியளித்தார்.

கூட்டத்தில் நடந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட மேற்கு வங்காளத்தைச் சார்ந்த உமர் கான் இவ்வாறு கூறினார்: “இந்தியாவிலும், உலகிலும் மூலை முடுக்கெங்கிலும் நமது குரல் கேட்க வேண்டும் என்றால் நமக்கு ஆங்கில ஊடகம் அவசியம். இன்று ஆங்கில ஊடகம் முஸ்லிம்கள் குறித்த தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றது. முஸ்லிம்களிடம் ஆங்கில ஊடகம் இல்லாததால் இவற்றிற்கு தகுந்த பதிலை நம்மால் கூற முடியவில்லை.”

மத்திய பிரதேச மாநில எஸ்.டி.பி.ஐ. தலைவர் வழக்கறிஞர் ஸஜ்ஜாத் அந்தக் கலந்துரையாடலில் இவ்வாறு கூறினார்: “அமைச்சர்களுக்கு, ஆட்சியாளர்களுக்கு, தலைவர்களுக்கு நமது செய்திகளை எடுத்தியம்புவதற்கு நம்மிடம் தகுந்த ஊடகம் இல்லை. எனவே அரசியலில் குதிப்பதற்கு முன்னால் நாம் ஊடகத்தில் கால் பதிக்க வேண்டும். ஏனெனில் ஊடகம் இல்லையெனில் நாம் அரசியலில் வெற்றி பெற முடியாது.”

உர்து பத்திரிகையாளரும், கட்டுரையாளருமான ஆபித் அன்வர் தனது துவக்க உரையில் இவ்வாறு கூறினார்: “இன்று ஊடகம் அனைத்துத் துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால் அதன் முக்கியத்துவம் இன்று பன்மடங்காக உயர்ந்துள்ளது.”

இந்தக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஷேக் அப்துர் ரஹ்மான் ஓர் ஆங்கில நாளிதழைக் கொண்டு வரவேண்டும் என்ற கனவைக் கொண்டவர். “கடந்த காலத்தில் ஆங்கில நாளிதழ் துவங்குவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் எடுபடவில்லை. அந்தக் கனவு நனவாகவில்லை. இன்ஷா அல்லாஹ் 2014க்கு முன்பாக ஓர் ஆங்கில நாளிதழ் துவங்கப்படும்” என்று அவர் கூறினார்.

நாமும் அந்த நன்னாளுக்காகக் காத்திருப்போம். அவர்களின் கனவுப்படி ஓர் ஆங்கில நாளிதழ் உருவாகட்டும். அல்லாஹ் அதற்கு உதவி புரிவானாக.

No comments:

Post a Comment