தொலைக்காட்சியில் நடக்கும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் நம்மால் எளிதாகத் தலையிட முடியும். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நபர்களை நிகழ்ச்சித் தயாரிப்பாளரால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. இதுதான் நமக்கு அனுகூலம். கலந்துகொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தால் அதனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
கேமராவின் முன்பாகப் பேசுவதற்கு சில திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். திறமைகள் என்றதும் பயந்துவிடவேண்டாம். சாதாரண விஷயங்கள்தாம். கேமராவின் முன்பாக அமைதியான மனநிலையுடன் காட்சியளிக்க வேண்டும். படபடப்பாகக் காணப்படக்கூடாது. இன்முகத்துடன், இனிமையாகப் பேசவேண்டும்.
நிதானமாக, தெளிவாகப் பேசவேண்டும். நேரடி ஒளிபரப்பின் நடுவில் நிகழ்ச்சித் தயாரிப்பாளரால் ஒரு வார்த்தையைக் கூட வெட்ட முடியாது. இது நமக்கு சாதகமானது. தொலைக்காட்சிச் சானல்களில் நடக்கும் விவாதங்கள் நிறைய பேரைத் தூக்கி விட்டுள்ளது. சிலரை அமுக்கியும் விட்டுள்ளது.
அமெரிக்காவில் நடந்த வாட்டர்கேட் ஊழல் மிகப் பிரபலமானது. அது சம்பந்தமாக அமெரிக்க தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் மிகவும் தளர்ந்து, சோர்ந்து காணப்பட்டாராம். அதுவே மிகப்பெரிய விவாதப்பொருளாகி அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டி வந்தது என்று கூறுவார்கள்.
கேபிள் டிவி
இன்று கேபிள் டிவிக்கள் மிகப் பரவலாகிவிட்டன. கேபிள் ஆப்பரேட்டர்கள்தாம் இன்று ஸ்டுடியோவுக்கும் நேயர்களுக்கும் இடையில் உள்ளவர்கள். அத்தோடு கேபிள் ஆப்பரேட்டர்கள் அவர்களாகவே பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அவர்களோடும் நமது தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ளவேண்டும். நீங்கள் கேபிள் ஆப்பரேட்டராக இருந்தால் கேபிள் ஆப்பரேட்டர் சங்கத்தில் இணைந்துகொள்ளுங்கள். நமது நிகழ்ச்சிகளை அவர்களும் ஒளிபரப்பிட ஆவன செய்யுங்கள்.
தணிக்கை வாரியம் (Censor Board)
திரைப்படங்களையும், வீடியோக்களையும் தணிக்கை செய்வதற்காக சட்டரீதியாக உருவாக்கப்பட்ட அமைப்புதான் தணிக்கை வாரியம். அதில் நாம் அழுத்தம் கொடுப்பது மூலம் தீய விஷயங்களைப் பரவ விடாமல் தடுக்கலாம். இன்று முஸ்லிம்களுக்கெதிராக பல திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆபாசங்கள், வன்முறைக் காட்சிகள் இல்லாத படங்களே இல்லை எனலாம். இதெல்லாம் எதனால் ஏற்படுகிறது? தணிக்கை வாரியம் சரியாகச்செயல்படாததனால் வந்த விளைவே இது.
நாம் இதில் பலமான அழுத்தத்தைக் கொடுக்குமளவுக்கு நமது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள வேண்டும். சில சமயம் தனி மனிதனால் இதனைச் சாதித்திட முடியாமல் போகலாம். அவ்வேளை அமைப்புகள் மூலம் அதற்கு அழுத்தங்கள் கொடுக்கவேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்ல விஷயங்கள் கிடைக்கும். ஆபாசம் ஓரளவாவது கட்டுப்படுத்தப்படும்.
No comments:
Post a Comment