Saturday, 17 January 2015

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 33

ஆவணப் படங்கள் (Documentaries)

வீடியோ தயாரிப்புகளும், குறுந்தகடு நகலெடுப்பும் (CD Copying) இன்று மிகவும் பிரபலமாகி விட்டன. மிகவும் எளிதாகிவிட்டன. ஒரு தனிப்பட்ட நபரே இந்த வீடியோ தயாரிப்புகளில் ஈடுபடலாம்.

சமூகத்தின் மீதான சரியான பார்வையும், ஊடகம் தொடர்பான அறிவும், வீடியோ தொழில்நுட்ப அறிவும், தேவையான கணிணி வசதிகளும் கொண்ட ஒரு தனி நபராலேயே இதில் ஈடுபட முடியும்.

இப்படிப்பட்ட சில தனி நபர்கள் சேர்ந்து ஆவணப் படங்களைத் தயாரிக்கலாம். இந்தப் படங்கள் வீடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் எல்லா வீடுகளிலும் இன்று மின்னணு சாதனங்கள் சர்வ சாதாரணமாகப் புழங்கப்படுகின்றன.

ஆன்லைன் பருவகால இதழ்கள் (Online Periodicals)

இணையதள உலகில் நாம் பருவகால இதழ்களையும் நடத்தலாம். அதாவது மாத இதழோ, மாதமிரு இதழோ, வார இதழோ, வாரமிரு இதழோ நடத்தலாம். அச்சு இதழ்களுக்குத் (Printed Magazines) தேவையான பெரும்பாலான முயற்சிகள் இதற்குத் தேவையில்லை. பெரிய பொருட்செலவு இல்லை. அச்சடிக்கத் தேவையில்லை. வினியோகிப்பதற்கு முகவர்கள் தேவையில்லை. விற்பனையாகாத பிரதிகள் திரும்ப வந்து குவியும் தொல்லை இல்லை.

சந்தா சேகரிப்பு ஆன்லைனிலேயே நடக்கும். பணம் வரவு இணையதள வங்கிகள் மூலம் நடைபெறும். இதழ்களை கணிணியில் தயார் செய்த மறு நிமிடமே ஆன்லைனில் அனைத்து சந்தாதாரர்களுக்கும் அனுப்பி விடலாம்.

இன்னும் சொல்லப்போனால் சந்தா சேகரிப்பு, அனுப்புதல், இன்னபிற பராமரிப்பு போன்றவற்றை ஒரு தனி நபரே செய்யலாம்.

மின்னஞ்சல் குழுக்கள் (Email Groups)

இதல்லாமல் ஆன்லைனில் மின்னஞ்சல் குழுக்களை (Email Groups) உருவாக்கலாம். இதன் மூலம் சமுதாயத்திற்குத் தேவையான நல்லபல விவாதங்களை நடத்தலாம். சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இது அமைய வேண்டும்.

ஆனால் இன்று முஸ்லிம்களால் நடத்தப்படும் சில மின்னஞ்சல் குழுக்கள் முஸ்லிம்களுக்குள்ளே பிளவுகளை உண்டுபண்ணும் வேலைகளைச் செய்து வருகின்றன. காண்போர் அருவருக்கும் வண்ணம் தனிநபர்களை விமர்சித்தும், நாலாந்தர வார்த்தைகளைப் பயன்படுத்தியும் கொச்சையாக மின் மடல்கள் இங்கும் அங்குமாக மாறி மாறி அனுப்பப்படுகின்றன.


இதனால் சமுதாயத்திற்கு எந்தப் பலனும் இல்லை என்பதை ஏன்தான் இவர்கள் உணர மறுக்கிறார்களோ தெரியவில்லை.

No comments:

Post a Comment