Sunday, 17 May 2015

அவசரமும், நிதானமும்!



இன்றைய அவசர உலகில் மனிதனுக்கு எதற்கும் நேரம் இல்லை. எல்லாமே அவசரம். எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதனை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற ஆவேசம். அதனை நிதானமாக செய்ய வேண்டும் என்ற பொறுமை இல்லை.

மனிதன் இயற்கையிலேயே அவசரக்காரனாவான் என்று அல்லாஹ் கூறுகிறான்: “மனிதன் (பொறுமை இழந்த) அவசரக்காரனாகவே இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 17:11)

வாகனம் ஓட்டும் போதும் அவசரம். அவசரம் ஆபத்தில் கொண்டு போய்ச் சேர்க்கிறது. அதே போன்று கிடைத்த செய்தியை ஆராயாது அதனைப் பரப்புவதில் அவசரம். வாட்ஸ்அப், முகநூல் போன்ற வலைத்தளங்களில் செய்திகளை ஷேர் செய்யும் போது அவசரம் காட்டுகிறோம். அது உண்மையான செய்திதானா என்று ஆராய்வதற்கு முன்பே ஷேர் செய்து விடுகின்றோம்.

தலாக் சொல்வதில் அவசரம். மனைவியைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் தங்கள் மனைவி பற்றி கிடைத்த தகவலை வைத்து, தாயகம் சென்று தீர ஆராயாமல் அங்கிருந்துகொண்டே அவசரப்பட்டு தலாக் சொல்லும் அவலங்கள் நடக்கின்றன.

தொழுகைக்கு வந்தால் கடைசி நேரத்தில் முட்டி மோதி ஓடும் நிலை. எதையும் முற்கூட்டியே திட்டமிட்டு, தயார் படுத்தி, நிதானமாக செய்யும் நிலையில் மனிதன் இல்லை.

அவனது விலை மதிக்க முடியா நேரங்கள் எல்லாம் வேறு எதிலோ தொலைந்து போய்க்கொண்டிருக்கின்றன. இதைப் பற்றி அவன் சிந்திப்பதும் இல்லை. நாம் செலவழிக்கும் பயனுள்ள நேரங்கள் எவை, நாம் வீணாக்கும் நேரங்கள் எவை என்று கூட அவனுக்குத் தெரிவதில்லை. எதிலும் ஊன்றிக் கவனிக்க முடியாத அவசர உலகில் அவனது வாழ்க்கை.

அவசரத்தனத்தால் சுவர்க்கத்தை இழந்தவர்களும் உண்டு. அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு.

ஒரு மனிதருக்குக் காயம் ஏற்பட்டது. (அதன் வேதனை தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். “என் அடியான் தன் விஷயத்தில் அவசரப்பட்டு விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன்” என்று அல்லாஹ் கூறி விட்டான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி),   நூல்: புகாரீ)

இஸ்லாம் எல்லாவற்றிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. எதிலும் நடுத்தரத்தை மேற்கொள்ளச் சொல்கிறது.

“நிதானம் அல்லாஹ்விடத்திலிருந்து உள்ளதாகும். அவசரம் ஷைத்தானிடமிருந்து உள்ளதாகும்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்: திர்மிதீ)

முக்கிய வணக்கமாகிய தொழுகைக்குச் செல்லும்பொழுது கூட நிதானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது இஸ்லாம். மாறாக மனிதன் தொழுகைக்கு ஓடுகின்றான். அமைதியாக, நிதானமாக தொழ வேண்டிய தொழுகையை அவசரம் அவசரமாக தொழுகின்றான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்." (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம், இப்னுமாஜா, நஸாயி, அபூதாவூத்)

இப்படி அனைத்து காரியங்களிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லும் இஸ்லாம், சிலவற்றில் மட்டும் விரைவு காட்ட வேண்டும் என்று சொல்கிறது. நன்மையைச் செய்வதில், தீமையைத் தடுப்பதில், நோன்பு துறக்கும்பொழுது, ஏழைக்கு உணவளிப்பதில், ஜனாஸாவை அடக்கம் செய்வதில், கடனை திரும்பக் கொடுப்பதில், பாவமன்னிப்பு செய்வதில் அவசரம் காட்ட வேண்டும் என்று இஸ்லாம் இயம்புகின்றது.

புதிய விடியல்  ஏப்ரல் 2015

3 comments:

  1. இன்றைய அவசர உலகில் மனிதனுக்கு எதற்கும் நேரம் இல்லை. எல்லாமே அவசரம். எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதனை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற ஆவேசம். அதனை நிதானமாக செய்ய வேண்டும் என்ற பொறுமை இல்லை

    latha

    ReplyDelete
  2. அருமையான பகிர்வுக்கு நன்றி...
    Joshva

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete