Thursday, 5 December 2013

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்!

விடியல் வெள்ளி  மே 2001 இதழில்
‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை


அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப் பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால், (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.

இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) (அல்குர்ஆன்  17: 23 -26)

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன்  17: 31 -32)

குடும்பம் என்பது மனித சமுதாயத்தில் நிறுவப்பட்ட ஒரு நிறுவனம்; அன்பு, அரவணைப்பு, உபசரிப்பு, கவனிப்பு - இவைகளடங்கிய ஒரு நிறுவனம். அது சமூகத்தில் வளர்ச்சியை, வளத்தை, அமைதியை, சாந்தியைக் கொண்டு வருகிறது. அது சமூக மதிப்பீடுகளை வழங்குகின்றது. அது மனிதர்களை நாகரிகமடையச் செய்கின்றது.

ஓர் ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் என்னும் பந்தத்தால் இணைகின்றனர். அவர்கள் திருமண ஒப்பந்தம் செய்து மணவாழ்க்கையில் மகிழ்கின்றனர். இங்கொரு புதிய குடும்பம் பிறக்கிறது. இங்கொரு புதிய பரம்பரை உருவாகிறது.இந்தக் குடும்ப அமைப்பு முறை சொந்தங்கள் எனும் உறவுகளை உருவாக்கி, பாசக் கயிற்றால் சமுதாயத்தைக் கட்டிப் போடுகின்றது. அதுவே மிகப் பெரிய சமுதாயமாக விரிகின்றது.

இந்தக் குடும்பம் எனும் நிறுவனம் பரம்பரைகளை உருவாக்குகின்றது. தங்களுக்குப் பின் வரும் அடுத்த பரம்பரையினர் தங்களை விட சிறந்தவர்களாக இருக்க வேண்டும்; குடும்பப் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்று இந்தப் பரம்பரையினர் விரும்புகின்றனர்.

தங்கள் பிள்ளைகள் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, கல்விமான்களாக, மனிதப் புனிதர்களாக இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர். இஸ்லாம் குடும்ப அமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது.

மேற்குலகை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் குடும்பம் எனும் நிறுவனம் அங்கே அலங்கோலமாகத் தத்தளிக்கின்றது.

அமெரிக்காவில் பிறக்கும் 50% குழந்தைகள் திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்டு தகாத உறவுகளில் பிறக்கின்றன. இது மனித வரலாற்றில் முன் எப்பொழுதும் நிகழ்ந்திராதது.

அமெரிக்காவில் ‘குடும்ப வன்முறை’ என்பது கற்பனைக்கெட்டாத தூரத்தில் வளர்ந்திருக்கிறது. அங்கே குழந்தைகளை அன்பு செலுத்தி அரவணைத்து, பராமரிக்க ஆளில்லை. அங்கே தம்பதிகளிடையே விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லை. அங்கே முதியோர்களைக் கவனிப்பார் யாருமில்லை.

ஆனால் இந்த அவல நிலைகளைக் கண்டு அங்கே உள்ளம் குமுறுவோருக்கும் குறைவில்லை. அவர்கள் உறுதியான குடும்ப அமைப்பு முறை திரும்ப உருவாகுவதை விரும்புகின்றார்கள். அந்த நல்லுள்ளங்கள் அழகான, அமைதியான குடும்பத்திற்காக அல்லும் பகலும் ஏங்குகின்றன.

ஆனால் அது கனவாகவே இருக்கின்றது. சீரழிந்து போன குடும்பங்கள் சீர் இழந்தே நிற்கின்றன. அழுகிப் போன குடும்பங்கள் அந்த அவல நிலையிலேயே இருக்கின்றன. நல்ல குடும்பங்கள் அங்கு மிளிர வேண்டும் என்ற நல்லெண்ணமும், அதற்கான பிரச்சாரமும் மட்டும் அங்கே நல்ல நிலையை உருவாக்க முடியாது. அங்குள்ள மொத்த சமூகமுமே ஒழுக்க விழுமியங்களைப் பற்றிப் பிடிக்க வேண்டும்.

இறையுணர்வுகள், நல்லொழுக்கங்கள், நீதி நெறிகள் அங்குள்ள மக்களின் மனங்களில் ஊடுருவ வேண்டும். நல்ல சிந்தனைகள் அவர்களின் மூளைக்குள் முளை விட வேண்டும். நீதிமிக்க சட்டங்கள் அந்தச் சமுதாயத்தில் நிறுவப்பட வேண்டும்.

அப்பொழுதுதான் அங்கே குடும்பச் சீரழிவுகள் அழியும். ஒழுக்கக் கேடுகள் தொலையும்; நல்ல குடும்பங்கள் மலரும். இதற்கு நடைமுறையில் சில மாற்றங்கள் அங்கே கொண்டு வரப்பட வேண்டும்.

முதலில் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் அனைத்து ஆபாச அம்சங்களையும் தடை செய்ய வேண்டும். - அரைகுறையாக, ஆபாசமாக ஆடையணிதல், மது, போதைப் பொருட்கள், ஆபாசப் பத்திரிகைகள், ஆபாச நூல்கள், ஆபாசத் திரைப்படங்கள், இன்னும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும்.

பெற்றோர்கள் குடும்பத்திற்காக அதிக நேரம் கொடுக்க வேண்டும். குடும்பத்தாருடன் அதிக நேரத்தைக் கழிக்க வேண்டும். குடும்பத்தினரின் தேவைகளை அதிகமதிகம் கவனிக்க வேண்டும்.

வேலைப் பளுவின் காரணமாகவும், வியாபார ‘பிஸி’யின் காரணமாகவும் வீடுகள் இன்று ‘மோட்டல்’ களாக - தங்கும் விடுதிகளாக மாறியுள்ளன. தங்கும் விடுதிகளில் மக்கள் இரவு வந்து தூங்கிவிட்டுச் செல்வர். நிறைய குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் சாப்பிடுகின்றனர்.

அதேபோல் குடும்பத்தாரிடையே ஒருவருக்கொருவர் மிகவும் குறைவாகவே பேசிக் கொள்கின்றனர். நிறைய இளைஞர், இளைஞிகள் தங்கள் பெற்றோருடன் பேசுவதேயில்லை.

இப்படி ஒருவருக்கொருவர் அதிகமாகப் பேசிக் கொள்ளாததால், குடும்ப உறுப்பினர்கள் தங்கள் ஓய்வு நேரங்களை, விடுப்பு காலங்களை வெளியில் தங்கள் நண்பர்களுடன் கழிக்கவே ஆர்வம் கொள்கின்றனர்.

தற்காலங்களில் குடும்பங்கள் மிகச் சிறியதாக ஆகி வருகின்றன. கணவன், மனைவி, குழந்தைகள். இதுவே ஒரு தனிமைப் போக்கை ஏற்படுத்துகிறது. பணச் சிக்கலான நேரங்களிலும், கவலையான நேரங்களிலும், சுகவீனமான நேரங்களிலும் இந்தத் தனிமை அழுத்தத்தை அதிகரிக்கிறது.

அதேபோல், கணவன்-மனைவிக்கிடையே, பெற்றோர்கள்-பிள்ளைகளுக்கிடையே பிரச்னைகள், கருத்து மோதல்கள் ஏற்பட்டால், அவர்களது பிரச்னைகளைத் தீர்த்து வைக்கவோ, அவர்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ, தகுந்த ஆளில்லாமல் தவிக்கின்றனர்.

இதற்காகவே குடும்பங்கள் அனைத்தும் ஒன்றாக வாழ வேண்டும். அன்புக்கும், அரவணைப்புக்கும் மேல் இஸ்லாம் குடும்ப அமைப்புகளில் ஒரு அதிகாரத்தையும், சில சட்ட விதிகளையும் தருகிறது. குடும்பத் தலைவனாக கணவனை அங்கீகரிக்கிறது. குடும்பத்தைக் கட்டுப்பாடோடு பரமாரிக்கும் பொறுப்பை அவனிடம் தருகின்றது.

இஸ்லாம் எப்பொழுதுமே கட்டுப்பாடில்லாத, தலைமை இல்லாத குடும்ப அமைப்பை அனுமதித்ததே இல்லை.

குடும்பத்தைப் பரமாரிக்கும் அதிகாரத்தைக் கணவனிடம் கொடுத்திருக்கிறது என்பதற்காக ஒரு கொடுங்கோல் ஆட்சியாளரைப் போல் - சர்வாதிகாரியைப் போல் குடும்பத்தை ஒடுக்குவதற்கு அவருக்கு இஸ்லாம் அனுமதி வழங்கிடவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்கள் மனைவியரிடத்திலும், குழந்தைகளிடத்திலும் யார் சிறந்தவராக இருக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியரிடையே சிறந்தவனாக இருக்கின்றேன்.”

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தந்த இந்த அதிகாரம், அன்பும், அரவணைப்பும் கலந்த அதிகாரம்.

ஒரு குடும்பம் அமைதியாக, சஞ்சலமற்றுச் செல்ல வேண்டுமெனில், மனைவி தன் கணவனின் சொல்லைக் கேட்டு நடக்க வேண்டும். கணவனும், மனைவியும் கலந்தாலோசிக்க வேண்டும். அவளது கருத்தைக் கணவன் கேட்டறிய வேண்டும்.

அதேபோல் குழந்தைகள் பெற்றோரது சொல்லைக் கேட்கவேண்டும். அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

பெற்றோர்களும் பிள்ளைகள் மேல் முழு அன்பைச் சொரிய வேண்டும். அவர்களது உணர்வுகளை மதிக்க வேண்டும். அவர்களது கருத்துக்களையும் கேட்கவேண்டும். அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் அனைத்து குழந்தைகளும் - ஆண், பெண் குழந்தைகளை - சரிசமமாக நடத்த வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகள் மேல் அன்பைக் காட்டினால்தான், பிள்ளைகளும் பெற்றோர்களிடம் அன்பாக இருப்பார்கள்.
பெற்றோர்கள் பிள்ளைகளை மதித்தால்தான் பிள்ளைகளும் பெற்றோர்களை மதிப்பார்கள். அதே போல் நாம் நமது பெற்றோர்களை மதித்தால்தான், நமது பிள்ளைகள் நம்மை மதிக்கும்.

இஸ்லாம் விவாகரத்தை அனுமதித்துள்ளது. ஆனால் அதை ஊக்குவிக்கவில்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விவாகரத்தை பற்றிக் கூறுகிறார்கள்: “விவாகரத்து அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுதான் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்பான செயல்!”

விவாகரத்திற்கு அனுமதி என்பது விஷயம் கை மீறிப் போய்விட்ட பிறகுதான். எல்லா குடும்பங்களிலும் ஒரு நேரம் இல்லாவிட்டாலும் இன்னொரு நேரம் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்.

அதற்காக எடுத்ததற்கெல்லாம் விவாகரத்து செய்ய முடியாது. விவாகரத்து என்பது கடைசிப் புகலிடமாக இருக்க வேண்டும். வேறு வழியே இல்லை என்னும் தருணத்தில்தான் அதனைப் பயன்படுத்த வேண்டும். அதனைப் பயன்படுத்தும் பொழுது அதன் பின்விளைவுகளை முழுமையாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

பிரச்னைகள் வரும்போது, கஷ்டங்கள் வரும்போது குடும்பத்திலுள்ள இளையவர்கள், பெரியோர்களிடம், முதியோர்களிடம் ஆலோசனைகள் பெறுவதற்குத் தயங்கிடக் கூடாது. அடுத்தவர்களுக்காக தனது நலனைத் தியாகம் செய்யாத மனநிலை, ஒருவருக்கொருவர் சரியாக மதிக்காதிருத்தல், இஸ்லாம் சொல்லும் இறையச்சம் கொள்ளாதிருத்தல் இவைகளாலேயே பெரும்பாலான இடங்களில் விவகாரத்து ஏற்படுகின்றது.

எவரது வாழ்வில் ‘தக்வா’ எனும் இறையச்சம் மிளிர்ந்து நிற்கின்றதோ அவர்கள் தங்கள் குடும்பங்களை நல்லதொரு பல்கலைக் கழகங்களாக சமைக்கிறார்கள்.

ஆம்! இறையச்சமுள்ள, விட்டுக் கொடுக்கும் தன்மையுள்ள ஒருவரையொருவர் மதிக்கக் கூடிய, குடும்பத் தலைவனுக்கு அனைவரும் கட்டுப்படக் கூடிய நல்லதொரு குடும்பம்தான் பலகலைக்கழகம்!

Dr. முஸம்மில் H. ஸித்தீகி

தமிழில் : MSAH

1 comment:

  1. நல்ல சிறப்பான கட்டூரை. சமூகத்திற்கு தேவையான அம்சங்களால் நிறைந்திருக்கிறது. இம்பாக்ட் பக்கம்.

    ReplyDelete