விடியல் வெள்ளி, ஜூன் 2001 இதழில்
‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை
ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்த பொழுது அடுத்த கலீஃபாவுக்கு அறிவுரைகள் தருவதற்காக ஓர் உயில் எழுதச் சொன்னார்கள். அந்த உயிலின் இறுதி வரிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
அது கூறுகிறது: “அல்லாஹ்வின் பெயராலும், அவன் தூதர் (ஸல்) அவர்களின் பெயராலும் பாதுகாப்பு கொடுக்கப்பட்ட மக்களுக்கு, (இவர்களைத்தான் ‘திம்மிகள்’ என்பர். அதவாது, இஸ்லாமிய ஆட்சியில் உள்ள முஸ்லிமல்லாத சிறுபான்மையினர்.) அவர்களது ஒப்பந்தத்தை நாம் நிறைவேற்ற வேண்டும். அவர்களைப் பாதுகாப்பதற்காக நாம் போராட வேண்டி வந்தாலும், அதனையும் செய்து நாம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களது சக்திக்கு மீறி அவர்கள் மீது நாம் சுமைகளைச் சுமத்தக் கூடாது.”
இந்த வார்த்தைகளை ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் எப்பொழுது கூறுகிறார்கள் பார்த்தீர்களா? தொழுது கொண்டிருந்த கலீஃபா அவர்களை விஷம் தோய்ந்த கத்தியால் ஒரு முஸ்லிமல்லாதவன் குத்தி விடுகிறான். அந்தக் காயம் ஏற்படுத்திய வலியோடு மரணம் நெருங்கும் வேளையில் அவர்கள் இந்த வார்த்தைகளைக் கூறுகின்றார்கள்.
ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் அன்றைய பாரசீகத்திலிருந்து எகிப்து வரை பரந்து விரிந்த நிலத்தின் தலைவராக இருந்தார்கள். ஒரு முஸ்லிமல்லாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவன்தான் அவர்களைக் கத்தியால் குத்தினான். அவர்கள் நினைத்திருந்தால் அவனைப் பழிக்குப் பழி வாங்கியிருக்கலாம்.
இன்று ஒரு கொலை நடந்து விட்டது என்று சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் சரி... அல்லது ஒரு சதி நடக்கிறது என்று இலேசாக செய்தி வந்தாலும் சரி... இன்றைய நவீன ஆட்சித் தலைவர்கள் உடனே செய்வது ஏவுகணைகளையும், குண்டுகளையும் எறிவதுதான். அது அப்பாவி குடிமக்கள் பல ஆயிரம் பேரைக் காவு கொண்டாலும் சரி... அவர்களுக்குக் கவலையில்லை.
ஓர் ஆட்சியின் தலைமைக்கு மன்னிப்பது, மறப்பது என்பது பெருந்தன்மை. ஆனால் சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டும், அவர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கட்டளையே இட்டால்...? இதைத்தான் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் செய்தார்கள்.
கலீஃபா உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில்தான் இஸ்லாம் மிக வேகமாகப் பரவியது. அது புதுப்புது பகுதிகளைத் தொடத் தொட கலீஃபா அவர்கள் அங்குள்ள மக்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்துக் கொண்டிருந்தார்கள். ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் காட்டித் தந்த இந்த முன்மாதிரி இன்று முஸ்லிம் உலகம் முழுவதற்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.
அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களிடமிருந்து கலீஃபா அவர்கள் எதனைக் கற்றுக் கொண்டார்களோ அதனை அப்படியே செயல்படுத்தினார்கள்.
ஓர் இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத சிறுபான்மையினரின் உயிர், உடமை, மதச் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பது என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய கடமை.
ஒரு முஸ்லிமால் ஒரு ‘திம்மி’ பாதிக்கப்பட்டிருந்தால், அந்த திம்மிக்காக நாளை மறுமையில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நியாயம் கேட்பார்கள்.
இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் என்பது இல்லை. முஸ்லிம்கள் தங்கள் நண்பர்களிடத்தும், பகைவர்களிடத்தும் நீதியோடு நடந்து கொள்ள வேண்டும்.
சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டும், அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லாத அந்தக் காலத்தில்தான் இஸ்லாம் மதச் சகிப்புத்தன்மை என்ற தத்துவத்தைப் பாடமாக இந்த உலகுக்கு அளித்தது.
இது மாத்திரமல்ல, முஸ்லிம் உலக வரலாற்றில் சிறுபான்மையினருக்கெதிரான அடக்குமுறைகள், கொடுமைகள், உரிமைகள் பறிப்பு, மதச் சுதந்திரமின்மை போன்றவைகளை எங்கும் காண இயலாது. மாறாக, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தங்கள் சிறுபான்மையினரைப் பிறர் அடக்குமுறைகளிருந்து பாதுகாத்தனர்.
அவர்கள் யூதர்களைக் கிறிஸ்தவர்களிடமிருந்து பாதுகாத்தார்கள். ஸ்பெயினில் உமய்யாக்களின் ஆட்சியின் போதும், பாக்தாதில் அப்பாஸிய கலீஃபாக்களின் ஆட்சியின் போதும் கிறிஸ்தவர்களும், யூதர்களும் மதச் சுதந்திரத்தை அனுபவித்தனர். ஆனால் அவர்கள் தங்களில் ஒருவருக்கொருவர் என்றுமே மதச் சுதந்திரத்தை அனுமதித்ததில்லை.
இந்த உன்னத மதச் சகிப்புத்தன்மை என்பது இஸ்லாத்தோடு பின்னிப் பிணைந்தது.
இஸ்லாத்தின் மொத்த செய்தியும் இதுதான்: இந்த உலகம் என்பது ஒரு சோதனைக் களம். நிரந்தர மறுவுலகில் சொர்க்கத்தை அல்லது நரகத்தைத் தேர்ந்தெடுக்கும் ஒரு களம்.
இறைத்தூதர்கள் சுவர்க்கத்தைப் பற்றி சுபச் செய்தி சொல்லவும், நரகத்தைப் பற்றி எச்சரிக்கவுமே அனுப்பப்பட்டனர். அவர்கள் வலுக்கட்டாயமாக நேரிய வழியில் மக்களை வற்புறுத்தி அழைப்பதற்காக அனுப்பப்படவில்லை.
முஸ்லிம்களின் கடமையும் இதுதான். அவர்கள் இவ்வுலக மாந்தருக்கு இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைக்க வேண்டும். அவர்கள் எதை எதை அறிந்தார்களோ அவைகளைப் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
அவர்கள் அந்தச் செய்தியை மிகவும் கவர்ச்சிகரமாக ஆக்கி சொல்லவும் தேவையில்லை. மிகவும் வற்புறுத்தி கட்டாயப்படுத்தவும் தேவையில்லலை. உள்ளதை உள்ளபடி சொன்னால் போதும்.
மேலும் மறுமையில் நமக்குக் கிடைக்கும் வெற்றி அல்லது தோல்வி என்பது இம்மையில் நம்மிடம் இருக்கும் இறைநம்பிக்கையைப் பொறுத்ததாகும். இறைநம்பிக்கையில்லாவிடால் எந்த நற்செயல்களும் வீணே!
இறைநம்பிக்கை என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. அதனை யாரும் கொண்டு வந்து திணிக்க முடியாது.
மேற்குலகம் சமூகத்தில் நல்லிணக்கம் வர வேண்டுமெனில் மதம் தலையிடக் கூடாது என்று மதத்தைப் பொது நலத்திலிருந்து தூர வைத்தது. ஐரோப்பாவும், அமெரிக்காவும் இந்தச் சிந்தனையைப் புகுத்தியதற்காக பெருமை கொண்டன.
இஸ்லாம் காட்டித் தந்த மதச் சகிப்புத்தன்மைக்கும், இவர்கள் சொல்லும் நல்லிணக்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆனால் மேற்குலகம், அது சொல்லும் நல்லிணக்கத்திலாவது ஒழுங்காக இருந்ததா? இல்லை.
இஸ்லாமிய ஆட்சிக் காலத்தில், அதன் கீழ் வாழ்ந்த முஸ்லிமல்லாத சிறுபான்மையினரின் தனியார் சட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. அவற்றிற்கே உரிய கண்ணியங்களை அவை பெற்றிருந்தன. ஆனால் இன்றும் மேற்குலகம் முஸ்லிம் தனியார் சட்டத்தை அங்கீகரிக்கவில்லை.
அதேபோல் ஐரோப்பிவிலும், அமெரிக்காவிலும் நிறைய இடங்களில் தொழுகைக்காக அழைக்கப்படும் ‘அதான்’ (பாங்கு) ஒலிபெருக்கிகளில் சொல்ல அனுமதியில்லை. மாறாக, இஸ்லாமிய ஆட்சிக் காலத்தில் சிறுபான்மை கிறிஸ்தவர்களின் ஆலயங்களில் எந்நேரமும் மணியோசை கேட்டுக் கொண்டிருக்கும்.
மேற்குலகில் இன்று இஸ்லாத்திற்கெதிரான பிரச்சாரம் மீடியாக்களில் முடுக்கி விடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சிறுபான்மையினருக்கெதிரான துர்ப்பிரச்சாரங்கள் இஸ்லாமிய ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் செய்யபடவில்லை.
மேற்குலகில் இன்று முஸ்லிம்களுக்கெதிராக நடக்கும் குற்றங்கள் சர்வசாதாரணமாகி விட்டன. உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம். அமெரிக்காவில் கடந்த 7 வருடங்களில் பள்ளிவாசல்களுக்கெதிராக நடந்த காட்டுமிராண்டித்தனங்கள் 24 ஆகும். தனிப்பட்ட முஸ்லிம்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது என்பது நூற்றுக்கணக்கில் நடக்கிறது. இதுமாதிரி குற்றங்கள் நடப்பதற்கெதிராக வலுவான சட்டங்களும் மேற்குலகில் இல்லை.
உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம். 1999ம் ஆண்டு அமெரிக்காவின் கீழ்சபையிலும், மேல்சபையிலும் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்காக கருத்துக்கு விடப்பட்டன. இந்தத் தீர்மானத்தின் தலைப்பு: “முஸ்லிம்களோடு மதச் சகிப்புத்தன்மையுடன் இருப்பதை ஆதரித்தல்.”
கீழ்சபையில் இந்தத் தீர்மானம் ஒருவழியாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் மேல்சபையில் அது நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்றப்பட முடியவில்லை. சில பல கிறிஸ்தவ, யூத அமைப்புகள் கொடுத்த அழுத்தத்தால் அது கிடப்பில் கிடக்கின்றது. அமெரிக்கா தவிர மற்ற மேற்குலக நாடுகளிலும் இதே கதைதான்.
இஸ்லாமிய மதச் சகிப்புத்தன்மைக்கு சமீபத்தில் ஓர் உதாராணத்தைக் கூறலாம். ஆப்கானிஸ்தானில் புத்தர்கள் யாரும் வாழவில்லை. சிலை எழுப்புவதை எதிர்த்தவர் புத்தவர். இருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்த புத்தர் சிலைகளை தாலிபான் அரசு இடிக்க முனைந்த பொழுது இஸ்லாமிய அறிஞர்கள் அதனை எதிர்த்தனர். இதுதான் இஸ்லாம் காட்டும் மதச் சகிப்புத்தன்மை.
இஸ்லாம் மதச் சகிப்புத்தன்மையோடு வாழ வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு வெறுமனே கூறவில்லை; கட்டளையிடுகிறது.
ஃகாலித் பெய்க்
தமிழில் : MSAH
No comments:
Post a Comment