Tuesday, 31 December 2013

2013 : இன்னொரு இன்னல் வருடம் கடக்கிறது!


சிறுபான்மை  மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அதிக துயரம் தந்து இன்னொரு வருடம் கழிகிறது. ஆம்! இந்திய வரலாற்றின் பல கறுப்புப் பக்கங்களை தாங்கி 2013 நம்மிடமிருந்து விடை பெறுகிறது.

இந்திய நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய அவலமாகக் கருதப்படுவது நரேந்திர மோடி தலையெடுத்தது. அவரை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்ததுதான் 2013ன் உச்சகட்ட கொடூரம்!

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின் எப்படி இந்தியா உலக அரங்கில் தலை குனிந்து நின்றதோ, அதே மாதிரி இந்தியாவை இன்னொரு தடவை தலை குனிய வாய்த்த நிகழ்வுதான் குஜராத் 2002 இனப்படுகொலை. இதனை முன்னின்று நடத்தி இந்தியாவுக்குத் தலைகுனிவை ஏற்ப்படுத்திய மோடி நாட்டின் பிரதமரானால் நாடு என்னவாகும்? நினைக்கும்போதே குலை நடுங்குகிறது.

சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட மக்கள் என்று ஒட்டுமொத இந்திய மக்களுக்கும் கேடு விளைவிக்கும் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்குபோழுதே நாட்டில் நீதியின் கரங்கள் முறிய ஆரம்பித்திருக்கின்றன. ஆம்! கடந்த டிசம்பர் 13ம் தேதி வந்த தீர்ப்பு இதனை உறுதிப்படுத்துகிறது.

நரோடா பாட்டியா வழக்கிலிருந்து மோடியும், இன்னும் 59 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பட்டப்பகலில் காவிக் கயவர்களால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இஹ்சான் ஜாப்ரி.

அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் (Concerned Citizen's Tribunal) வெளியிட்டுள்ள "மனித இனத்திற்கெதிரான குற்றம்" (Crime Against Humanity) என்ற நூலில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிருடன் தப்பிய நேரடி சாட்சிகள் சொல்லும் செய்தி மிகத் தெளிவாக ஒன்றைச்  சொல்கிறது. அது, நரேந்திர மோடிக்கு நரோடா பாட்டியாவில் நடந்த கொடூரம் அத்தனையும் தெரியும் என்பதுதான்!

கூப்பிடு தூரத்தில் அஹ்மதாபாதில் இருந்த மோடியை பல முறை இஹ்சான் ஜாப்ரி தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. இறுதியில் தன்னிடம் அடைக்கலம் தேடி வந்த மக்களைப் பாதுகாப்பதற்காக தன்னையே தந்தார். ரத்தக் கறை படிந்த காவிகள் கண்டம் துண்டமாக வெட்டினார்கள் அவரை.

இன்னும் 4, 5 மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அடுத்து இந்த வருடத்தின் மிகப் பெரிய சோகம் முஸஃபர்நகர் கலவரம். இன்று வரை பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பிப் போக முடியாமல் அக்கிரமக்காரர்களுக்கு அஞ்சி அகதிகள் முகாமில் அடங்கிக் கிடக்கிறார்கள் என்றால், அங்கேயும் நிம்மதி இல்லை அவர்களுக்கு.

ஒரு பக்கம் அகிலேஷ் யாதவ் அரசின் அலட்சியப் போக்கு. மறுபுறம் கடும் குளிர். இந்தக் குளிரைத் தாங்க முடியாமல் அவர்களின் குழந்தைகள் மடிந்து வருகின்றன. இதுவரை 40 குழந்தைகள் மரணமடைந்து விட்டன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளூர் அதிகாரிகள் அவர்களை லோய் போன்ற பகுதிகளிலிருந்து விரட்டி வருகிறார்கள்.

முஸஃபர் நகரில் கலவரம் தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படுவதில் தாமதம் ஏற்படுவது குறித்து தேசிய சிறுபான்மை கமிஷன் கவலை தெரிவித்தது.

முஸஃபர் நகரில் உள்ள நிவாரண முகாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாருமில்லை என்று சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறியதற்கு கடும் கண்டனம் எழுந்தது.

பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பாதிக்கப்பட்ட மக்கள் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். தங்களுக்கு அரசு எந்த உதவியையும் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

கடந்த நவம்பர் மாதம் கலவரத்திற்கு இரையாகி துயர் துடைப்பு முகாமில் தங்கியிருந்த இளம் பெண்ணை இரண்டு காமவெறி கொண்ட ஃபாசிஸ்டுகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமும் நிகழ்ந்தது.

அதே நவம்பர் மாதம் பாட்னாவில் நரேந்திர மோடி கலந்து கொண்ட பேரணியில் குண்டு வெடித்தது. வழக்கம் போல பழியை முஸ்லிம்கள் மேல் போட்டார்கள். பின்னர் ஹிந்து கயவர்களை பிடித்தார்கள். இது நரேந்திர மோடியின் சூழ்ச்சியே என்பது அம்பலமானது. முதலில் குய்யோ முறையோ என்று கத்திய ஊடகங்கள் பிடிபட்டது ஹிந்துக்கள், மோடியின் சூழ்ச்சி அம்பலம் என்றதும் அடக்கி வாசித்து, அப்படியே அதனை அமுக்கி விட்டன.

முஸஃபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தொடர்பு கொண்டதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசினார். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கடந்த அக்டோபர் மாதம் வகுப்புக் கலவரத் தடுப்புச் சட்ட மசோதாவை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த  அரசு தயாராகி வருவதாக மத்திய  உள்துறை  அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார். ஆனால் பாசிஸ்டுகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து 2013 இச்சட்டத்திற்கு சாட்சியாக முடியவில்லை.

இந்தியாவில் இவ்வாண்டு நடந்த வகுப்புக் கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இவ்வாண்டு நிகழ்ந்த வகுப்புக் கலவரங்களில் 107 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 66 பேர் முஸ்லிம்கள்!

இப்படி பல கொடுமைகளை சந்தித்து 2013 நம்மை விட்டு கடந்து செல்கிறது. புதிதாகப் பிறக்கும் 2014வது மக்களுக்கு  பாதுகாப்பையும், சுபிட்சத்தையும் தரட்டும்.

இன்னும் 4, 5 மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல்  வரவிருக்கிறது. இதில் நல்லாட்சி மலரவும், நாட்டுக்கு சுபிட்சம் கிடைக்கவும் பிரார்த்திப்போமாக.

2014ம் வருடம் வளம் மிக்க வருடமாக, அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி பொங்கும் வருடமாக மலரட்டும்.

MSAH

No comments:

Post a Comment